செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்


சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். காவல்துறை, காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, "செனட் சபை' என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு.

இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது. தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் வரலாறுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு வகையில் அமெரிக்க டொலரின் நிலையும் டோக்கன் போலாகி விட்டது.
 
 நடைமுறையில் இல்லாத, "அரசகரும மொழி தமிழ்' என்கிற விடயமும் ஒரு டோக்கன்தான். இப்போது இலங்கை  இந்திய ஒப்பந்தத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு, "பிளஸ்' என்ற இணைப்பைச் சேர்த்து அதுதான் "செனற் சபை' என்கிறார் அரசின் பேச்சாளர் கெஹகலிய ரம்புக்கவல.

எல்லாச் சீட்டுகளையும் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழர் தரப்பு நிராகரித்து விட்டது.  எம்மோடு பேசி தீர்வொன்றினை எட்டாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுப் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டோமென கூட்டமைப்பு உறுதிபடக் கூறிவிட்டது. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்ற மாற்று டோக்கன் ஒன்றினை மேசையில் போட முயல்கிறது அரசு. எட்டப்படும் தீர்வினை நடைமுறைப்படுத்தும் போது செனட் சபையானது அதற்கு துணையாக இருக்கலாமென்பதுதான் சம்பந்தனின் பதில்.

ஆனால் இந்த "செனட் சபை' டோக்கனின் பின்னால் ஒளிந்திருக்கும் சூத்திரம் விசித்திரமானது. அமெரிக்க செனட் சபை போன்றதொரு மேல் சபையை இலங்கையில் நிறுவி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போமென ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக விசில் ஊதி துயில் எழுப்பும் விக்கிலீக்ஸ் கேபிள், ஆதாரங்களை வெளியிடுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பிரச்சினைகளை பேசித் தீர்க்குமிடமாக இச்சபை இருக்குமென்று கூற முற்படும் அரசு, சுயாட்சி அதிகாரம் கொண்ட நிர்வாகத்தை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாகவிருப்பதைக் காணலாம்.

அதேவேளை சிங்கள அரசறிவியலாளர்கள் தற்போதைய தீர்வு குறித்தான விவாதங்கள் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டால், செனட் சபை டோக்கனின் சூத்திரத்தை புரிந்து கொள்ளலாம். 13+ தருவோமென ஜனாதிபதி கூறியது, இரண்டாவது சபையான "செனட் சபை' யைத்தான் என்று நம்புகின்றார்கள். தமது விருப்பின் மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை மீது காதல் கொள்வது, மகாவம்ச கருத்தியலாளர்களின் விருப்பத் தெரிவாக எப்போதும் அமைந்து விடுகிறது. இதனடிப்படையில் 13+ என்பது, செனட் சபையாக மட்டும் இருக்க வேண்டுமென நம்புகிறார்கள்.

அடுத்ததாக சிங்களத்தின் உளவியலில், நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் தெரிவுக் குழு என்பது, தமது பெரும்பான்மைப் பலத்தை தக்க வைக்கும் அரங்கமாக எப்போதும் திகழும் என்கிற நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருக்கிறது. காணி அதிகாரம் குறித்த விடயம் மத்திய, மாகாண சபைகள் இணைந்த பொறுப்புமிக்க கூட்டு மையத்தால் கையாளப்பட வேண்டுமெனவும், அதனை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் விவாதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது. அதேவேளை, காணி தொடர்பான தெளிவான கொள்கை ஒன்றின் உருவாக்கத்தினை, மத்திய மற்றும் மாகாணப் பிரதி நிதிகளை உள்ளடக்கிய செனட் சபையானது மேற்கொள்ளலாமெனவும் இந்த சிங்கள அரசறிவியலாளர் கூறுகின்றார்கள்.

ஆகவே காணி அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத்தை நாடாளுமன்றத் தெரிவுக் குழு அல்லது செனட் சபையிடம் கையளிப்பதே பொருத்தமானதென பெருந்தேசியவாதிகள் கருதுவது போல் தெரிகிறது. ஆனாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவினை நிராகரித்தது போன்று செனட் சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள மறுத்தால், இதை வைத்து தீர்வு முயற்சியில் கூட்டமைப்பிற்கு நம்பிக்கையில்லை என்கிற பரப்புரையில் ஈடுபடலாமென அரசு திட்டம் போடுகிறது.

செனட் சபையா அல்லது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவா என்கிற இரண்டிலொரு விரலைத் தொடும் பொறிக்குள் கூட்டமைப்பை மாட்ட வேண்டுமென்பதே சிங்களத்தின் திட்டம். இருப்பினும் தம்மோடு பேசியே, எந்தத் தீர்வினையும் எட்ட வேண்டுமென்கிற கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து, எதிர்மறையான கருத்தினை வெளிப்படுத்த முடியாத கையறு நிலையில் சர்வதேசம் இருப்பதையும் சிங்களம் நன்குணரும். ஆகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் முடிவுறும் வரைக்கும், செனட் சபை போன்று வேறு பல டோக்கன்களை, கூட்டமைப்பிற்கு இலங்கை அரசு விநியோகித்துக் கொண்டிருக்கும். 

இவை தவிர காணி அதிகாரத்தோடு பரவலாக உரையாடப்படும் இன்னொரு விவாதப் பொருளும் இருக்கிறது. அதுதான் காவல் துறை உரிமை. இதற்கும் சிங்கள இறைமையைத் தக்க வைக்கும் தீர்வு டோக்கன் ஒன்றை வைத்திருக்கிறார்கள் சிங்கள ஆய்வாளர்கள். அதாவது இலண்டன் மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இன்று நடைமுறையிலுள்ள சமூகப் பொலிஸ் பிரிவு (Community Police Division) ஒன்றினை உருவாக்கி, காவல் துறை அதிகாரத்திற்கும் ஒரு டோக்கன் கொடுக்கலாமென்பதே இவர்களின் திட்டம்.

குறிப்பாக இந்த சமூகப் பொலிஸின் கரங்களில் ஆயுதம் இருக்காது. மத்திய அரசின் நேரடி வழி நடத்தலில் உள்ள ஆயுதம் ஏந்திய மாகாண மட்டப் பொலிஸாரின் கீழ் இவர்கள் பணியாற்றுவார்கள். வேறுவிதமாக் கூறுவதாயின், ஆயுதம் ஏந்தாத ஊர்காவல் படைஎன்றும்சொல்லலாம். சைக்கிள்களில் வீதி உலா வருவதே இவர்களின் வேலை. சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து, பொலிஸாரிடம் தகவல் சொல்வார்கள், யாரையும் கைது செய்யும் உரிமையும் இவர்களுக்கில்லை.

சொல்லப் போனால், 13+ என்கிற டோக்கனில், செனட் சபை ஊடாக மேற்கொள்ள உத்தேசித்துள்ள காணி மற்றும் காவல்துறைக்கு வழங்கவிருக்கும் அதிகாரங்கள் இவ்வாறாக அமையுமென்பதே உண்மை. அதிகாரங்களின் வீரியத்தை ஐதாக்கும் பொறிமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்பது குறித்து, சிங்கள "புத்திமத்' கள் (தமிழில் புத்திஜீவி) சிந்திக்கத் தலைப்படுவது, பண்டா செல்வா ஒப்பந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.

ஆகவே மத்திய பெருந்தேசிய இனவாதத்தின் அரசியல் அதிகாரத்தோடு இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்தி, தன்னாட்சி என்கிற பெயரில் செனட் சபையை ஏற்றுக் கொள்வதோ அல்லது காணி விவகாரங்களைக் கையாள கூட்டு ஆணைக்குழுக்களை அமைப்பதோ, நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்காது. அதேவேளை, காணி அதிகாரத்தை வடக்கு, கிழக்கு மக்கள் கோரவில்லையென்று அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறும் ஜனநாயக மறுப்பு வாதத்தையும் உற்று நோக்க வேண்டும்.

77இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முன் வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, அதாவது பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை முழக்கத்தை, முதலாளித்துவ ஜனநாயக வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் ஏற்றுக் கொண்டதை பஷில் மறந்து விட்டார். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கல்லோயாவிலிருந்து அம்பாறை வரை மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போது பட்டிப்பளையிலும் மன்னாரின் சன்னார் கிராமத்திலும் நாவற்குழியிலும் தீவிரமாக உருவாக்கப்படும் குடியேற்றங்கள் அனைத்தும், நடாத்தப்பட வேண்டுமென சிங்கள மக்கள் கேட்பதாக அவரால் கூற முடியுமா?

அதாவது மக்களின் விருப்பும், தமிழ்த் தேசியத் தலைமையின் உரிமைக் கோரிக்கைகளும் வெவ்வேறானதென அமைச்சர் கூற முற்படுவதன் காரணமென்ன? முழு இலங்கையும் சிங்கள இறைமைக்கு உரித்தானதென பேரினவாத ஆட்சியாளர் கொண்டிருக்கும் மகாவம்ச கருத்து நிலையானது மாறவில்லை என்பதையே இவ்வாறான குதர்க்க நியாயங்கள் வெளிப்படுத்துகிறதெனலாம்.
,
ஊடக சுதந்திரத்தைப் பேணுவதில் 163 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அரசானது, சிறுபான்மை தேசிய இனங்களின் இறைமை சார்ந்த பிறப்புரிமையை அவர்களின் அரசியல் அபிலாஷையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆகவே சுய நிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சி என்கிற அடிப்படையிலிருந்து விலகிச் செல்லாமல்,  தீர்வொன்றினை எட்டுவதே, அடக்கப்படும் தேசிய இனங்களின் நலனிற்கு உத்தரவாதமளிக்கும்.

தருவதைப் பெறும் சரணாகதி அரசியல் போக்கு, இனத்தின் இருப்பினை அடியழித்துவிடும் என்கிற வரலாற்று உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment