இந்திய கிருஷ்ணரின் வருகையால் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது நன்மையுண்டா


சென்ற ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈழத்தமிழினத்தை ஈன இரக்கமின்றி அழித்து இனப்படுகொலை செய்த நாடான ஸ்ரீலங்கா நாட்டுக்கு பொருளாதாரத்தடை விதிக்க கோரியும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் உறுதியாக இருக்கிறார், அதையே வைகோ அவர்கள் தானும் விரும்புவதாகவும் தமிழ்நட்டின் மனநிலையும் அதுவே என்றும் பல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் அது நியாயமான வேண்டுகோளாகவும் இருந்தது.

அதைக்கேட்ட மன்மோகன் சிங். அது இயலாத காரியம் என்றும், இந்தியா அப்படியான நடவடிக்கையில் இறங்கினால்,  சீனா, ஸ்ரீலங்காவை ஆக்கிரமித்துவிடும் அதனால் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று ஒரு அ'நியாயப்பாட்டை எடுத்துவைத்து மனுதர்மத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இனப்படுகொலையை,, ஏதோ காரணத்தால் திடமாக எதிர்க்காமல் தனது இயலாமையை வெளிப்படுத்தி இந்தியாவின் பலவீனத்தை ஒப்புக்கொண்டு தனது அரசாங்கத்தின் தீர்க்கமான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டு  கலைந்து சென்றுவிட்டார்.

இலங்கை போரின்போது போட்டி போட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகியவையும் இருந்தன அந்த நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வியாபார நோக்கோடும் நட்புரீதியான சலுகை கட்டண அடிப்படையில் கடனாகவும் வழங்கப்படன. இந்த ஆயுதங்கள் தருவிக்கப்பட்டபோது இலங்கையுடன் இந்தியாவுக்கு இருக்கும் மொழி கலாச்சார உறவு., அவை சார்ந்த தலையிடும் உரிமை, மனுதர்மம் போன்ற காரணிகளை முன்னிறுத்தி அவற்றை மட்டுப்படுத்த வேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு நிச்சியம் இருந்தது. ஆனால் எரியும் நெருப்பில்  எண்ணெய் வார்க்கும் விதமாக இந்தியா தன்நலனுக்காக போட்டிபோட்டு தன்பங்கிற்கும் அழிவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

ஏழு கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்டதால் அந்த உரிமையின் அடிப்படையில்  ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தை ஆரம்பத்தில் நியாயப்படுத்தி விரும்பி ஊக்குவித்த இந்தியா, அயல் நாடான இலங்கையில் இன ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அசாதாரண நிலை உருவாகாமல் கட்டுப்படுத்தி ஒரு நீதியான அரசியல் தீர்வை நிறுவி அமைதி ஏற்ப்படுத்தக்கூடிய பொறுப்பும் வல்லமையும் இருந்தது. அதற்கான நியாயமும் உண்டு.

அப்படிச்செய்திருந்தால் உலகிலுள்ள எந்த ஒரு வல்லரசு நாடும் குறை குற்றம் காணாமல் மிகுந்த மதிப்புடன் இந்தியாவை போற்றியிருக்கும். இன்று நடைபெறும் கடற் படுகொலைகளும், பல லட்சம் மக்களின் ஈழப்படுகொலையும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மாறாக இந்தியா பயங்கரவாதம் என்ற பதத்தை பாவித்து விடுதலைப்புலிகளையும் ஒரு மக்கள் கூட்டத்தையும் அழித்தது.  ஒரு அழிவிற்கு பயன்படுத்திய அதே பலத்தை பாவித்து ஒரு அரசியல் தீர்வை இந்தியா உண்டுபண்ணியிருக்கலாம். அதன்பின் வேண்டாதவர்கள் மீது தனது வல்லமையை பாவித்து சட்டப்படி நடவடிக்கையையும் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா குறுக்குத்தனமாக நடந்து கொண்டது. 

2008, 2009ல் கடுமையான இன அழிப்பின்போது, ஒருசில தமிழக அரசியல் கட்சியை சார்ந்த ஒரு சில பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் இலங்கயில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரையும், மத்திய அரசின் கொள்கைகளையும் வன்மையாக எதிர்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரம் இந்தியா தமிழர்கள் மீதான போரை நிறுத்துவதற்கு தானும் பாடுபடுவதாக கூறி பல தூதுவர்களையும்  பேச்சுவார்த்தைகளையும் நடத்திக்கொண்டு, மறுபுறம் தொடர்ந்து நச்சு ஆயுதங்களையும் கண்காணிப்பு கருவிகளையும் மேலாக பெருந்தொகையாக பணம் மற்றும் இராணுவ உதவியும் செய்து மனுதர்மத்தை அடியோடு மீறி நடந்துகொண்டது.

இவை அனைத்தும் எல்லோரும் அறிந்த விடயம். எனவே இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் போர்க்காலத்திலும் சரி போர் முடிவுக்கு வந்தபின்னும் சரி ராஜபக்க்ஷவை காத்து நிற்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றதென்பதை சொல்லி தெரியப்பட்டுத்தவேண்டிய நிலையில் உலகம் இல்லை.

ஜனநாயகத்தை மதிப்பதாக தம்பட்டமிடும் இந்தியா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும். அதற்கு இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் நீதியான மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அல்லது அந்நாட்டின் அரசியல் மாற்றம் அதாவது ஆட்சி மாற்றம் நிகழவேண்டும். அவை எதுவும் நிகழாதவரை இந்திய ஆதிக்கவாதிகளால் பொதுவாக தமிழருக்கு தொடர்ந்து மோசமான விளைவுகளே காத்திருக்கிறது என்றே கருத இடமுண்டு.

அங்கு ஒரு ஆட்சிமாற்றம் உண்டாகி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பொறுப்பேற்றாலும், ஈழம் பற்றிய கொள்கையில் அல்லது நியாயமான தன்னாட்சி தீர்வு கொள்கையில் மாற்றம் நிகழுமா என்பதும்,ஆட்சியாளர்களின் வெளியுறவு கொள்கையின் நாகரீகத்திலும், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களின் குணநலனைப்பொறுத்துமே நகர்த்தல்களின் வீச்சை காணலாம்.

இன்று முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்களின் ஒரே காப்பரணான விடுதலைப்புலிகளை பரம விரோதியாக கருதுபவர். திமுகவைப்பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தமிழர்களை காப்பதில் எந்த நோக்கமும் இல்லாதவர். அத்துடன் ஈழத்தமிழினத்தை மிக மலிவாக மதிப்பவர். தனது குடும்பநலன் கெட்டுவிடக்கூடது என்பதில் கவனம் செலுத்தி காரியம் சாதிப்பாரே தவிர அவரால் உலகத்தில் தமிழர்களுக்கு துளி நன்மை பயக்காது. ஆனால் ஜெயலலிதா விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து பொதுமக்களை வேறு விதமாக பார்ப்பதாகவே படுகிறது. தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வரையறுக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். எது நடக்கவேண்டுமானாலும் மத்தியில் காங்கிரஸ் இருக்கும்வரை எந்த ஒரு துரும்பும் வேறு விதமாக அசைவதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் ஒரு அரசியல் மாற்றம் நிகழவேண்டுமென சர்வதேசம் விரும்புகிறது.  அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்கான சில அறிவுறுத்தல்களையும் உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆளும் ராஜபக்க்ஷ தரப்பிற்கும் சில பிடிமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எந்த ஒரு நல் நகர்வு நடந்தாலும் இடையூறு ஏற்படும் விதமாக இந்தியா தன்பாட்டிற்கு தலையீடு நடத்தி வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது.

இந்தியாவை விடவும் சீனா இலங்கையில் ஓரளவு பலமாக காலூன்றிவிட்டிருந்தாலும் அரசியல் ரீதியில் சீனா ஈழத்தமிழினத்துக்கு இடஞ்சலாக இப்போதைக்கு இல்லை. ஸ்ரீலங்காவுக்குள் இந்தியாவின் தலையீடு இருந்துகொண்டிருப்பதை சீனா பெரிதுபடுத்துவதாகவும் தெரியவில்லை. கடற்பரப்பில் சீனா தனது ஆளுமையை அகல விரித்து முக்கிய கேந்திரங்களை கைப்பற்றிவிட்டதால் எந்த எதிர்வினையையும் வெளிக்காட்டாமல் மௌனமாக பல இடங்களையும் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்காவில் சீனாவின் ஆதிக்கத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சீனாவின் முதலீடுகள் குவிக்கப்பட்டுவிட்டன. ராஜபக்க்ஷ சீனாவை நம்புமளவுக்கு எவரையும் நம்பவுமில்லை. ராஜபக்க்ஷவின் சீனச்சார்புக்கு இந்தியாவின் திடமில்லாத்தன்மையும் நேர்மையற்ற நம்பகத்தன்மையற்ற அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் முக்கிய காரணியாகும்.

சட்டத்தை மதிக்காமல் புறந்தள்ளி, பொய் வாக்குறுதிகளை வழங்கி பெருவாரியான ஊழல் செய்து மன்னராட்சிபோல் பழக்கப்பட்ட இந்தியா. தொடர்ந்தும் தந்தரமாக இலங்கையை எதிர்க்காமல் உள்ளிருந்தே தமிழினத்தை காவு கொடுத்து தந்திரமாக தப்பிக்க விரும்புகிறது. அந்த நோக்கத்தின் ஒருகட்ட விஜயம்தான் வெளிநாட்டு மந்திரி கிருஷ்ணா இலங்கை சென்று ராஜபக்க்ஷ சொல்லுவதை கேட்டு குளிர்ச்சி செய்து மாட்டுப்பொங்கல் விழாவிலும் பங்குபற்றி சிறப்பித்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் பயணம் தமிழர்களின் பிரச்சினை தீர்வுக்கான பயணமென ஊடகங்கள் மூலம் முக்கியத்துவம் கொடுத்து  விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை கையில் வைத்து காத்திருக்கும் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்பு வேண்டுமென்றே முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருந்தது. சந்திப்பு நிகழும்,, ஒருவேளை  சந்திப்பு நிகழாது, என்ற அளவுக்கே வேண்டுமென்றே கிருஷ்ணா கூட்டமைப்பு சந்திப்புக்கு மதிப்பு தரப்பட்டிருந்தது.

ஆனால் மறுபுறம் கூட்டமைப்பினர் விரும்பாவிட்டாலும் கிருஷ்ணர் எப்படியும் கூட்டமைப்பை சந்தித்தே திரும்பவேண்டிய தேவை தந்திரம் இந்தியாவுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் உண்டு. 

கொழும்பு சென்ற கிருஷ்ணா ராஜபக்க்ஷவையும் கூட்டி தமிழினத்துக்கே முதல் மரியாதை செய்வதுபோலவும் அதையும் மாட்டுப்பொங்கலாக்கி அரசியல் செய்து மகிழ்ந்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்காவுக்குள் ஊடுருவியுள்ள சீனாவின் அடர்த்தியை குறைப்பதற்கு இந்தியா தனது வல்லமையை பயன்படுத்தி வென்று கொண்டால் எவரும் சினப்படப்போவதில்லை. தமிழர்களை களப்பலியாக்கி அரசியல் செய்வது மிக கீழ்த்தரமானதும் கண்டனத்துக்குமுரிய செயலாகும். ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள்மீது தமிழினத்திற்கு இருக்கும் அதேயளவு வெறுப்பை இன்று இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு பெற்றிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் மாற்றுச்சிந்தனை கொண்டு இவற்றை ஆராய முற்படவில்லையானால் தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் போராட்டத்தை கொண்டுசெல்ல நேரலாம்.

அனைத்து அரசியல் தலைமைகளிடமும் ஆளுமை ஒரேசீராக இருப்பதில்லை. ஈழத்தமிழினத்திற்கு இன்று வாய்த்திருக்கும் அரசியல் தலைமையும் மாற்றுச்சிந்தனையின்றி அதரப்பழசான ஒரே கீறல் விழுந்த மந்திரத்தையே பாவித்து இந்தியாவை உருவேற்றிவிடலாமென ஏமாந்துகொண்டிருக்கின்றனர். அமெரிக்காவும் அவர்களை அழைத்து வேறு சுலோகத்தை சொல்லிக்கொடுத்தும் பார்த்தது. தென்னாபிரிக்காவுக்கும் சென்று கருத்து பகிர்ந்து வந்தனர். திரும்பி வந்ததும் "ஆரோக்கியமான பயணமாக அமைந்தது "வலியுறுத்தி வந்திருக்கிறோம்" என்பதை மட்டும் அவர்கள் அறிக்கையிட தவறவில்லை".

இந்தியா எதையும் பெற்றுத்தரப்போவதுமில்லை பெற்றுவிட அனுமதிக்கப்போவதுமில்லை என்பதுதான் யதார்த்தமான் உண்மை. 1980 களில் திம்புவில் தொடங்கப்பட்ட "பேச்சுவார்த்தை" முப்பது வருடங்களை தாண்டி திரும்பவும் சுப்பற்றை கொல்லை(இந்தியா)க்குள் வந்து நிற்கிறது. இனப்பிரச்சினை என்ற நிலையை தள்ளி வைத்துவிட்டு  பேச்சுவார்த்தை என்ற புள்ளிக்கு இரண்டு தரப்பையும் கொண்டு சேர்ப்பதற்கே உலகநாடுகளின் உதவி தேவைப்படுகிறது. நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா முயன்று தோற்றுப்போன ஒரு விடயத்தை கிருஷ்ணா முடித்துத்தருவார் என ஒரு குழந்தையும் நம்பவேண்டிய அவசியமும் இல்லை.

அதை உண்மையாக்கும் விதமாக உலகத்தால் விமர்சிக்கப்பட்டு புறந்தள்ளிய ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் சில விடயங்களை நடைமுறைப்படுத்தினாலே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்றும் அதற்கும் கால வரம்பு காட்டமுடியாது என்றும் ராஜபக்க்ஷவும் கிருஷ்ணாவும் கூட்டமைப்பினருக்கு சொல்லி அனுப்பியதாக கேள்வி.

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்டிக் கொடுக்க இந்தியா ரூ.1,319 கோடி நிதி அளித்துள்ளதாகவும். அதில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 50 வீடுகளை தமிழர்களுக்கு எஸ்.எம். கிருஷ்ணா வழங்குகிறார். என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால் 13 வீடுகள்தான் கட்டுமானம் தொடங்கப்பெற்றதாகவும், 03 வீடுகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பகமான செய்திகள் வருகின்றன். 03 வீடு எங்கே 49,000. வீடுகள் எங்கே எப்போ கட்டி எவருக்கு கொடுக்கப்போகின்றனர் என்பதும், நடந்து முடிந்தால் மட்டுமே அதுபற்றி சிந்திக்கமுடியும்.  சில சைக்கிள்கள் வழங்கப்பட்டதாகவும் அவைகளில் கணிசமானவை உடனடியாக சிங்களவர்களுக்கும். மீதி ஒட்டு ஆயுதக்குழுவின் தலைவர் டக்கிளஸ் கையகப்படுத்தி சில சைக்கிள்கள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை தீர்வுத்திட்டம் என்று கிருஷ்ணா கூட்டமைப்பினரை களக்கட்டையில் மாட்டி விட்டிருக்கிறார் இது காலம் கடத்தி சிங்கள குடியேற்றத்தை விஸ்த்தரித்து தமிழினத்தை அழிக்கும் உபாயமே தவிர கௌவைக்கும் உதவப்போவதில்லை.  அடுத்து மொழியை பாவித்து ஏதோ ஒரு ஏமாற்று நோக்கோடு அப்துல் கலாம்  யாழ்ப்பாணம் வரவிருப்பதாகவும் பீதி கிளப்பப்பட்டிருக்கிறது. அதற்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

போனதெல்லாம் போனாலும் வலியையும் வேதனையும் தந்தவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதற்கான முயற்சியை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கலாம். அதற்கான அரங்கும் நிறையவே சாதகமாக் காணப்படுகிறது.

பொருத்தமான இடங்கள் எனக் கருதக் கூடிய எந்த இடத்திலும் இராணுவ முகாம்களை அமைகின்ற உரிமை சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்றும். எந்த ஒரு தகுதிவாய்ந்த அதிகாரமும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு வழங்கமுடியாது என்று கோத்தபாய மூலம் சொல்லப்பட்டுவிட்டது.

செத்துப்போன இந்திய துணைக்கண்டத்தின் பிரதமர் ராஜீவ், அன்றைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே ஆர் இருவரும் கூட்டுச்சேர்ந்து ஜூலை 29, 1987ம் ஆண்டு அன்று தமிழர்களுக்கு எதிராக ஒரு ஒப்பந்தம் எழுதினர். அந்த ஒப்பந்தம் காகிதத்தரத்தில் அப்போ இருந்து பேணப்பட்டதே தவிர அதிகாரம் எவையும் வழங்கப்படவில்லை அன்றைக்கு முதலமைச்சராக வரதராஜப்பெருமாளை இந்தியாவே தெரிவு செய்தது. இந்தியாவுக்கு விருப்பமிருந்திருந்தால் அல்லது வல்லமை இருந்திருந்தால் அதிகாரத்தை ஒப்பந்தம் எழுதிய அன்றே பெற்றுக்கொடுத்திருக்க முடியும். கால் நூற்றாண்டு கடந்தும் காகிதத்தில் இருப்பதில் ஒன்றையும் இன்றுவரை நிறைவேற்ற இந்தியாவால் முடியவில்லை.

இன்று வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கிறது ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சரத்தான 13வது திருத்தத்தில் கூறப்பட்ட சில விடயங்களையே எவராலும் சிங்களவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் என்ன?

நன்றி ஈழதேசம்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment