மீண்டும் ஒரு தடவை 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால்

இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் சுமார் கால்நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987  ஜூலை 29 இல் கொழும்பில்   கைச்சாத்திட்ட இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் மாகாண சபைகளை நிறுவுவதற்கு வகை செய்வதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இத் திருத்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் பதவியில் இருந்திருக்கக் கூடிய எந்தவொரு அரசாங்கமுமே முயற்சிக்கவில்லை. வெறுமனே மாகாண சபைகள் அமைக்கப்பட்டு அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைத்தது தான் மிச்சம்.  எந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டதோ அந்தப் பிரச்சினையின் நிலைக்களமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அவை நீண்ட காலமாக இயங்க முடியவில்லை. நான்காவது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் கிழக்கு மாகாணத்தை அரசாங்கப் படைகள் முழுமையாக மீண்டும் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு 2008 மேயில் கிழக்கு மாகாணச் சபைத் தேர்தல் நடத்தப்பட்டு நிருவாகமொன்று பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடமாகாண சபைக்குத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம்  அக்கறை காட்டுவதாக இல்லை. 

இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 1988 பிற்பகுதியில் நிறுவப்பட்ட இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண சபைக்கு முதன் முதலாக நடத்தப்பட்ட தேர்தலிலும் கிழக்கு மாகாண மக்கள் தான் வாக்களிக்கக் கூடியதாக  இருந்தது. வடக்கில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் வடக்கில் தேர்தல் போட்டி கயமைத் தனமாகத் தவிர்க்கப்பட்டு அப்பகுதிக்கான "மக்கள் பிரதிநிதிகள்' தெரிவானார்கள். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்னும் மூன்று மாதங்களில் மூன்று வருடங்கள் முடியப் போகின்ற நிலையிலும் கூட வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வருவதாக இல்லை. போரின் முடிவுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் என்று தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. 



இவற்றில் வடமாகாண மக்களும் வாக்களிப்பில் பங்கேற்பதற்கு வசதி செய்வதில் எந்த விதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்காத அரசாங்கம் அந்த மாகாண சபைக்கான தேர்தலை மாத்திரம் நடத்தவதற்கு இன்னமும் கூட மனங் கொள்ளவில்லை. தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் இணக்கத் தீர்வுவொன்றுக்கான உருப்படியான அடிப்படையாக அமைவதில் மாகாண சபை முறைக்கு பெருவாரியான போதாமைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், போரின் விளைவான அவலங்களை நாட்டின் வேறு எந்தப் பகுதியையும் விடவும் கூடுதலாக அனுபவித்த வடக்கில் இராணுவ மயமாக்கலைத் தளர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய படிப்படியான செயன்முறைகளின் ஒரு அங்கமாக மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி நிருவாகத்தில் சிவிலியன் தோற்றப்பாடுகளை அனுமதிப்பதற்கு இனிமேலும் எதற்காக அரசாங்கம் தயங்கவேண்டும் என்பதே எமது கேள்வியாகும். 

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் முயற்சிகளில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு அப்பால் செல்வதற்கும் தயாராயிருப்பதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஒன்றும் முறைப்படி அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை. வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் சகிதம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த வேளையிலேயே கிருஷ்ணா இதைச் சொன்னார். 

கிருஷ்ணாவுக்கு ஜனாதிபதி அளித்த உறுதி மொழி தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளின் ஆத்திரத்தைக் கிளற ஆரம்பித்திருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது. அதனாற்தான் கடந்த வியாழக்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல "13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் என்பது செனட் சபை பற்றிய யோசனையேயாகும்' என்று விளக்கமளிக்கவேண்டியிருந்தது. 13 ஆவது  திருத்தத்துக்கு அப்பால் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறுவது இது தான் முதற்தடவையல்ல. பல தடவைகள் அவர் இதைக் கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் "இலங்கை  முன்னோக்கிச் செல்வதற்கான வழி' என்ற தலைப்பில் சென்னை "இந்து' தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் 2009 ஆம் ஆண்டில் அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உட்பட பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷ "13 ஆவது திருத்தத்துக்கு அப்பால்' என்று கூறியிருந்தார் என்பதை பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அண்மைக் காலமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான தகராறில் அரசாங்கத் தரப்பினர் அந்த அதிகாரங்களை மாகாணச் சபைகளுக்கு இல்லாமற் செய்வதற்காக 13 ஆவது திருத்தத்துக்கு சிலமாற்றங்களைச் செய்வது குறித்து பரிசீலிப்பதாகக் கூட பகிரங்கமாக அறிவித்தனர். 

13 ஆவது  திருத்தத்தில் இருக்கக் கூடிய ஏற்பாடுகளுக்கும் குறைவான அதிகாரங்கள் குறித்து அரசாங்கம் பேசிக் கொண்டிருந்த நிலையில்  கிருஷ்ண விஜயத்தின் போது ஜனாதிபதி திடீரென்று "13 ஆவது திருத்தத்துக்கு அப்பால்' என்று கூறியிருப்பதைக் காண்கிறோம். இதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு வகையான வியாக்கியானங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை குறித்து இங்கு விளக்குவது சாத்தியமானதல்ல. ஆனால், 13 ஆவதுக்கு அப்பால்  செல்லத் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தடவை உறுதியளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி மக்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய நிர்வாகத்துக்கு 13 ஆவது திருத்தத்தில் இருக்கும் அதிகாரங்களையாவது  முதலில் கொடுப்பதற்கு முன்வருவாரா?

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment