தமிழீழ விடுதலைப்போர் வரலாற்றின்பிரமிப்பு -கப்டன் பண்டிதர்.


தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கா என்றும் உழைத்து நின்ற கப்டன் பண்டிதரின் இருபத்திஏழாம் ஆண்டு நினைவுநாட்களின் வரலாற்று தொகுப்பு.
விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது.நின்றும்,நகர்ந்தும்,அதிவேகமான பாய்ச்சலுடனும்,தேங்கியும்,பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்றுதேடல்இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவி;டுகின்றன.அத்தனை அர்ப்பணமும்,ஈகமும்,தியாகமும் அவர்களின் வரலாறுமுழுதும் நிறைந்தே கிடக்கும்.அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான்.தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி-ஆயுதங்களுக்கு பொறுப்பாளன்,முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன்,மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி இருபத்திஏழுவருடங்கள் உருண்டோடிவிட்டன.
பண்டிதரை பற்றிய நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஒரு சுகமான சுவாரசியம்தான்.அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கிறான்.விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதபோராட்டஅமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது.


எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது.ஒரு கைத்துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்த பண்டிதரின் நெஞ்சுக்குள் இருந்த விடுதலைக்காக போராடும் உறுதி என்பது மலையளவு உயர்ந்ததாக அப்போதே இருந்ததை கவனித்த தலைவர் பண்டிதரை சிறிது காலம் வீட்டில் சென்று இருக்கும்படியும் நேரம்வரும்போது அமைப்பில் இணைத்துக்கொள்வதாகவும் உறுதிசொல்லி திருப்பி அனுப்பபட்டிருந்தான்.



மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக்கணக்குகூட இப்படி காத்திருக்கவேண்டிவரும்.ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம்காணுவார்.உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகுமுறைதான் விடுதலைப்புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும்வலுச்சேர்த்தது. 1978ல் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான்.எந்தநேரமும் வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்த்மாநோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான்.அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான்.அவரிடம் இருந்து எளிமை.அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை.அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு..என்று எல்லாமே அவரைப்போலவே அவனும்..எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..! 



இதனை அவதானித்த தலைவர் 1970களின் இறுதியிலேயே அவனிடம் இயக்கத்தின் முழு நிதி பொறுப்பையும் கொடுத்திருந்தார்.எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப்பட்டுவிடும்.தினசரி சாப்பாட்டுசெலவு பத்துரூபாவீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும் இந்த பணத்துக்கான செலவுகணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும்.தலைவர்உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான். 

ஒவ்வொருவரின் கணக்குதுண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது. 

பகல்முழுதும் சைக்கிளில் அங்கும் இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும்,மக்களை சந்திப்பதற்காகவும் அதிகாலைமுதல் நள்ளிரவுவரை ஓடிக்கொண்டே இருப்பான்.இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கியபின்னரும் இவன் தனித்து ஒரு குப்பிவிளக்கு ஒளியிலோமெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக்கொண்டிருப்பான்.மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும் அனைவரதும் கோரிக்கைகளையும் உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான்.

நிதியை திறம்பட கையாண்ட அவனிடம் மீண்டும் ஒரு பொறுப்பை தலைவர் 80களின் ஆரம்பத்தில் வழங்குகிறார்.அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தினதும் பொறுப்பாளனாகிறான் பண்டிதர்.நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம்மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு.அந்தநேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துகீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.அப்படி புதைத்துவைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள்,அவை வைக்கப்பட்ட திகதி,மீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப்படவேண்டிய திகதி என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.ஆனால் என்ன.. அதை வேறுயாருமே படிக்கமுடியாது.இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்துமுறையை கண்டுபிடித்தான் அதில்தான் எழுதுவான்.இதனை படிக்ககூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும்,லெப்.சங்கரும்,ரங்சன்லாலாவுமே விளங்கினார்கள். அதனைபோலவே இயக்கத்தின் முதலாவது ஆவணப்பொறுப்பாளனாகவும் அவனே இருந்திருக்கிறான்.
விடுதலைஅமைப்பு சம்பந்தமான செய்திகள்,தமிழர்கள் மீதான சிங்களபேரினவாத தாக்குதல்கள் செய்திகள் என்று அனைத்தையும் வெட்டிஎடுத்து அழகாக தொகுத்து ஒட்டிஅவன்தான் இதனை ஆரம்பித்தான். 1983 இனப்படுகொலைநிகழ்வுகளின் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும்ஆதரவால் அங்கு எமது விடுதலைஇயக்கத்தின் முக்கிய கட்டமைப்பு நகர்ந்தபோது எமது விடுதலைப்போராட்டம் பற்றிய பழைய செய்திகளை ஆர்வத்துடன் கேட்ட பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுப்பதற்கு பண்டிதர் சேகரித்துவைத்திருந்த ஆவணங்கள்தான்மிகவும் உதவின.ஒரு பெரும் விடுதலைஅமைப்பை கட்டிவளர்ப்பதில் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக நின்று உழைத்தவன் அவன்.இப்படி இந்த விடுதலைக்கான பெரும் பயணத்தின் முதல் பயணவீரர்களின் வரிசையில் முன்னோடியாக நின்ற அந்த வீரன் 1985ம்ஆண்டு ஜனவரி 9ம்திகதி அதிகாலையில் அச்சுவேலிப்பகுதியில் நடந்த ஒரு முற்றுகைக்குள் விட்டுவந்த ஆவணங்களை எடுக்க மீண்டும் அதே முற்றுகைக்குள் நுழைந்து வீரச்சாவடைந்தான்.
தூக்கம்,சோர்வு,உணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கிவந்தவன் அவன்.அவனுக்குதான் தினமும் எத்தனை வேலைகள்.கடலால் வந்திறங்கும் சாமான்களை இறக்கி சரியான இடத்தில் வைக்கவேண்டுமா..அங்கும் பண்டிதர்தான்...தென்தமிழீழத்தில் இருந்துவரும் ஒரு நிதி சம்பந்தமானதோ ஆயுதம் சம்பந்தமானதோ அதுவும் அவன்தான் கவனித்தான்...போராளிகளுக்கு சப்பாத்துகள் கிழிந்துவிட்டனவா..கூப்பிடு பண்டிதரை...ஒருசிறு முகாம் அமைக்கவேண்டுமா அதுவும் அவனே போய்பார்த்து சரி செய்யவேண்டும்...
தமிழகத்தில் ஒரு பெரும்தொகை அமைப்புக்கு வழங்கப்படுகிறதா...பண்டிதர்தான் அங்கும் சென்றுஅதனை கணக்கில் வைக்கவேண்டும்...இத்தனையும் செய்துகொண்டு அவன் ஒரு பழைய சாரத்துடனும்,சிலவேளைகளில் கசங்கிய ரவுசர் உடனும் திரிந்து எளிமையானவனாகவே இருந்திருக்கிறான்.முpக எளிமையான அவனுக்குள் இருந்ததுவோ மிக ஆழமான விடுதலை இலட்சியம்.அது என்றும் சாகாது.அவனின் நினைவுகள் போலவே.இன்னும் என்றும் என்றும் அவன் வாழ்வு நான் எழுதியதை விடவும் மிகப் பிரமிப்பான ஒன்றே.
தகவல் தொகுப்பு-ச.ச.முத்து

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment