வடுக்களைச் சுமந்து பரிதவிக்கும் மூத்தகுடிகள்


இலங்கையின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதை தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது. அதேசமயம் முதியவர்களில் அதிகளவு எண்ணிக்கையானோர் கவலை, குழப்பம், ஆவல் என்ற மன ஒழுங்கின்மைக்கு உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் வட, கிழக்கைப் பொறுத்தவரை முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த உளவியல் பாதிப்புகள் வயது முதிர்ந்தவுடன் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டவையென்பதை நேரில் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமாகும். போரினால் குடும்ப உறுப்பினர்களை இழந்தோ அல்லது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையுடன் தவித்துக்கொண்டோ அல்லது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த துன்பப்பட்டு மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பியும் அடிப்படை வசதிகளின்றி அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாமல் தவித்துக்கொண்டே அதிகளவான முதியவர்கள் இருக்கின்றனர்.

சமூக ரீதியான குழப்பங்கள், பயத்தால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, கொள்கைப் பிடிவாத நிர்ப்பந்தத்தால் ஏற்படும் குழப்பங்கள், தேவையற்ற பயப்பிராந்திகள் மற்றும் பல்வேறு விதப்பட்ட கவலைகள் முதியவர்களை நலிந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இது வயது மூப்பினால் ஏற்படும் இயல்பான விடயம் தானே என்று முதியவர்கள் பலர் இந்த ஒழுங்கின்மை தொடர்பாக அலட்சியப்படுத்திவிட்டு மனக்கவலைகள், குழப்பங்கள், கடும் ஆவல் தொடர்பானவற்றுக்கு சிகிச்சையை நாடுவதில்லை. பெரும்பாலான முதியவர்களுக்கு இதற்கான வசதி வாய்ப்புகளோ, வலுவூட்டல் வசதிகளோ சிறிதளவும் கிடைப்பதில்லை.

ஆனால், இந்த மனக்கவலைகள், குழப்பங்கள் சிறப்பான வாழ்க்கையை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது வித்தியாசமான உலகத்திற்கு இந்த முதியவர்களைக் கொண்டு செல்லும் அதேசமயம் இங்கு முக்கியமான விடயமாக காணப்படுவது முதியவர்களுக்கு ஏற்படும் இந்தக் குழப்பம், கவலை, ஆவல் என்பன வயது மூப்படைவதாலா அல்லது கவலை, குழப்பம், ஆவல் என்ற ஒழுங்கீனங்களால் ஏற்பட்ட ஒழுங்கீனமா என்பதை அடையாளம் கண்டுகொள்வதாகும். இதற்கு தகைமை பெற்ற மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், முதியோர் மருத்துவப் பராமரிப்பியல் நிபுணர்கள் நிச்சயமாக உதவ முடியும்.

முதியோருக்கு ஏற்படும் ஆவல், குழப்ப ஒழுங்கின்மைக்கு பலர் குடும்ப மருத்துவரை அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள சாதாரண மருத்துவர்களை நாடுவது வழமை. இங்கு பொருளாதாரமே முக்கிய காரணியாக உள்ளது. பொருத்தமில்லாத மருத்துகளைப் பெற்றுக் கொண்டு சிலருக்கு நிலமை மேலும் மோசமடைவதும் உண்டு. முதியவர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக இந்த அபரீதமான கவலைகள், குழப்பங்களுக்கு மருந்துகளை எடுப்பதால் அதற்கு அடிமைகளாகிவிடுவதும் காணப்படுகிறது. அதீத ஆவல் குழப்பமானது வயிற்றுப் பொருமல், அதிகளவாக வியர்த்துக்கொட்டுதல், தோலில் கொப்புளங்கள், சிவப்பு படைகள், கை, கால் நடுக்கம், மூச்சிழைத்தல், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, சிறிய விடயங்கள் குறித்தும் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருத்தல் போன்றவற்றைத் தோற்றுவிக்கிறது. தொடர்ந்து நீடித்திருக்கம் கவலைகள் முதியவர்கள் மத்தியில் அதீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இடம், பொருள், விடயம் தொடர்பாக ஒருவர் அதிகளவு அச்சம் கொண்டிருப்பது பயப்பிராந்தி நோயால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதீத ஆவல், பயம் என்பன மார்பு வலி, மூச்சுத்திணறல், மூக்கோட்டம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. இதனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அண்மையில் இந்தியாவில் பத்மபூஷணம் விருது பெற்ற டாக்டர் வி.எஸ்.நடராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனக்குழப்ப வியாதியானது மன அழுத்தத்துடன் உடல் ரீதியான பாதிப்புக்கும் இட்டுச் செல்கிறது. முதியவர்கள் தத்தமது வாழ்க்கைத் துணையை இழக்கும் போது அல்லது பிள்ளைகள் பிரிந்து சென்றுவிடும்போது அதிகளவு மனக் குழப்பத்துக்கு உள்ளாகின்றனர்.  இவை யாவற்றுக்கும் மேலாக “இறப்பு’ பற்றிய சிந்தனைகள் முதியவர்கள் மத்தியில் அதிகளவுக்கு காணப்படுவது பற்றி புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியமானதாகும். முடிவு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற சிந்தனை சதா காலமும் அவர்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும்  என்பது விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும். மேற்குலகைப் பொறுத்த வரை மரண பயணம் சிரேஷ்ட பிரஜைகளிடம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால், இலங்கை போன்ற கீழைத் தேசங்களில் சுதந்திரமான முறையில் மரணிக்க வேண்டுமென்ற விருப்பமே அதிகளவில் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

முதியவர்கள் மத்தியில் காணப்படும் மனக்குழப்பத்தை அகற்றுவதற்கு சமூகத் தொண்டர் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானதாகக் காணப்படுகிறது. அத்துடன் குடும்பத்திலுள்ள இளைய சமூகம் முதியவர்கள் பற்றிய அக்கறையை அதிகளவில் வெளிப்படுத்த வேண்டும். தனிமையாக இருக்கும் இந்த மூத்தவர்கள் அசட்டையீனத்தால் போஷாக்கான உணவு வகைகளைப் புறக்கணித்துவிடுவதுண்டு. உண்மையிலேயே முதியவர்களுக்கு சிறப்பான போஷாக்கு தேவைப்படுகிறது. மேலும் பலர் குறைவாகவே வழங்குகின்றனர். அதிகாலையில் விழித்தெழுந்துவிடுவதால் மன அமைதியீனம் ஏற்பட அது வழிவகுக்கிறது. சிறப்பான உறக்கம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சிறப்பான தூக்கம், தியானம், சிறியளவிலான பயிற்சிகள் என்பன பாரியளவுக்கு மனதை இலகுவாக்கும். அத்துடன் செய்வதற்கு எந்த வேலையும் இல்லையென விட்டுவிடாமல்  எதனையாவது செய்துகொண்டிருப்பதன் மூலம் மனதை இலகுவாக்கிக் கொள்ள முடியும். 

அத்துடன் சமூகத்துக்கு நான் பயனுள்ளவனாக இருக்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்த குறைந்தது வாரத்தில் ஒரு தடவையாவது சமூக மற்றும் மனித நேயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதும் மனக் குழப்பம், கவலை, ஆவல் என்ற பிரச்சினைகளிலிருந்து முதியவர்கள் விடுபட முடியும். இந்த விடயம் நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொதுவானதாக இருக்கும் அதேசமயம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வட, கிழக்கிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைப் பொறுத்தவரை அவர்களின் உள ரீதியான பிரச்சினைகள் வேறுபட்டவையாகும். சமூகக் கட்டமைப்புகள் சிதறிச் சின்னாபின்னமாகியிருக்கும் நிலையில் அங்குள்ள முதியவர்களின் மனக் குழப்பங்கள், கவலைகள், வேறுபட்ட தன்மையைக் கொண்டவையும் அடிப்படை உரிமைகள் பற்றியவையாகவும் இருக்கின்ற நிலையில் அங்குள்ள சிரேஷ்ட பிரஜைகளின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பரிகாரம் காணப்பட வேண்டும்.

நன்றி தினக்குரல் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment