Saturday, January 7, 2012

ஆணைக்குழுவின் அறிக்கையும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

மூன்று வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகளுக்கு பயனுறுதியுடைய வழிகாட்டல்களை ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளினாலும் அவதானிப்புகளினாலும் எந்தளவுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதைப் பற்றிய மதிப்பீடுகளாகவே அந்த விமர்சனங்கள் அமைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

ஆணைக்குழுவின் விதப்புரைகளின் போதாமைகள் என்று அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கும் அம்சங்கள் பற்றிய விமர்சனங்கள் உள்நாட்டை விடவும் வெளிநாடுகளிலிருந்தே வருவதையும் அவதானிக்க முடிகிறது. மூன்று வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட இ ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை வெளிக்காட்டக்கூடிய உருப்படியான சமிக்ஞை எதுவுமே தென்படுவதாக இல்லை.

விதப்புரைகள் முழுவதையுமே அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்று மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்ச்சையில் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்  மகிந்த சமரசிங்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் பொறுப்புடைமையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளினால் செய்யப்பட்டிருக்கக்கூடிய விமர்சனங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் ஏற்கனவே எடுத்திருந்த நிலைப்பாடுகளின் பரப்பெல்லைக்கு வெளியே தனது விதப்புரைகளும் அவதானிப்புகளும் சென்றுவிடாதிருப்பதை முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான ஆணைக்குழு உறுதி செய்திருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

இத்தகையதொரு பின்புலத்திலேயேஇ நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் சர்வ மதத் தலைவர்கள் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தெரிவித்த கருத்துகளையும் அரசாங்கத்திடம் முன்வைத்த வேண்டுகோளையும் நோக்க வேண்டியிருக்கிறது. ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எவருமே எதிர்பார்த்திருக்கக்கூடியதைப் போன்றே மதத்தலைவர்கள் விமர்சன ரீதியான கருத்துகளை முன்வைக்க வில்லை. முக்கியமான விதப்புரைகளை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதை அவர்களின் கருத்துகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. விதப்புரைகளை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாகவும் முக்கியமான விதப்புரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறினால்இ சமூகங்கள் மத்தியில் உகந்த முறையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிவில் இயக்கமொன்றை அமைக்கப்போவதாகவும் மதத்தலைவர்கள் பிரகடனம் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகருவதற்கு சிறந்த வழி சமூகங்கள் மத்தியில் முறையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் வடக்குஇ கிழக்கில் அபிவிருத்தியையும் நிறுவனங்களையும் அரசியல் மயப்படுத்துவதை நிறுத்துவதுமாகும் என்று வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்த கருத்து கவனத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளுக்கான உடனடிப் பிரதிபலிப்பு அமைச்சரவைப் பேச்சாளரான தகவல்இ ஊடகத்துறை  அமைச்சர் கெஹலிய ரம்புக் வெலவிடமிருந்து வந்திருக்கிறது.  "பிரச்சினைகளில் பங்கும் ஈடுபாடும் கொண்ட சகல தரப்பினருடனும் கலந்தாராயாமல் ஆணைக்குழுவின் விதப்புரைகள் முழுமையையும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது சிக்கல் வாய்ந்த ஒரு நிலைவரமாகும். ஜனநாயக அரசியல் முறைமையிலே பல்வேறு அரங்குகளில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் வெளியிடப்பட முடியும். ஆனால்இ இது விடயத்தில் அரசாங்கம் அரசியற் கட்சிகளுடனும் ஏனையவர்களுடனும் விவகாரங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே அரசாங்கத்தினால் வரையப்பட்ட பயணத் திட்டம் (கீணிச்ஞீ ஆச்ணீ) ஒன்றுக்கு இசைவான முறையிலேயே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்த முடியும். இதுவே சிக்கலின் உயிர்க் கூறு'  என்று அமைச்சர் ரம்புக்வெல நேற்றைய தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றுக்குக் கூறியிருக்கிறார்.

ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புக்களையும் அவதானிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவையாக அரசாங்கத்தின் அடுத்த  கட்ட அணுகுமுறைகள் அமையப் போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரின் கருத்துகளை அர்த்தப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதாவதுஇ ஆணைக்குழு அறிக்கையின் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடியதாக ஏதாவது பாடங்கள் இருக்குமானால்இ அவற்றை அரசாங்கம் கற்றுக்கொள்ளத் தயாராயில்லை என்பதுவும் ஏற்கெனவே அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயேஇ ஆணைக்குழுவின் விதப்புரைகளில் அரசாங்கம் தனக்கு சாதகமானது என்று கருதக்கூடியவற்றை நடைமுறைப்படுத்துவதில் (அதுவும் விரும்பினால் மாத்திரமே) அக்கறை காட்டும் என்பதுமே அமைச்சரின் கருத்துகளினால் நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படுகின்ற செய்தியாகும்.  இலங்கை அரசியலைப் பொறுத்தவரை வரலாற்றில் இருந்து நாமெல்லோரும் படிக்கக்கூடியதாக இருக்கும் பாடம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்கப்படுவதில்லை என்பதேயாகும்!

தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment