இன்றைய யாழப்பாணம் - தமிழக ஊடகவியலாளரின் பார்வையில்

இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதி இப்போது எப்படி இருக்கிறது? யாழ்ப்பாணம் பகுதியில் இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்த போது மனதை நெருடும் பல காட்சிகள் கண்ணில் பட்டன. 1995 இல், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட யாழ்ப்பாணம் , 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டே முக்கால் ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் பாதிப்பின் வடுக்கள் இன்னும் அகலாத நிலையில் காணப்படுகிறது என யாழ்ப்பாணத்திற்கு சென்று, கள நிலைமைகளைப் பதிந்துள்ளனர் தமிழக ஊடகவிலாளர்கள். அவர்களின் பார்வையில் யாழ்ப்பாணம். 


பாழடைந்த கட்டிடங்கள்: யாழ்ப்பாணம் நகர் யாழ். மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் குண்டு வீச்சில் பாழ்பட்ட பலவீடுகள், கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக யாழ். மத்திய கல்லூரி அமைந்திருக்கும் தெருவிலேயே இத்தகைய கட்டிடங்கள் உள்ளன. 

அவலத்தில் பொலிஸ் நிலையம்: யாழ்ப்பாண நகர் பொலிஸ் நிலையம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.அதன் கட்டிடத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்கள், ஆங்காங்கே எலும்புக்கூடு போல துருத்திக் கொண்டிருக்கும் கம்பி என புனருத்தாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது பொலிஸ் நிலையக் கட்டிடம்.

புதுப்பிக்கப்படும் நீதிமன்றம்: தற்போது சட்டம்ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருவதாக அரசுதரப்பில் கூறப்பட்டு வருகிறது.அதற்கேற்ப யாழ். நீதிமன்றக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.ஆயினும் யாழ். மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலைமை சொல்லும்படி இல்லை.

வேலையில்லாத் திண்டாட்டம்: ஒரு கிராமத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டில் நீண்ட கால போர் எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தி எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை அந்தக் கிராமத்தில் பார்க்கமுடிந்தது.

இராணுவ பீதியில் மக்கள்: யாழ்ப்பாண நகர் மட்டுமன்றி அம்மாவட்டம் முழுவதும் இராணுவத்தின் இருப்பு இன்றும் தொடர்கிறது. நகரில் குறிப்பிட்ட தூரத்திற்கு இராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வண்ணம் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது இராணுவ வீரர்கள் அடங்கிய வாகனங்கள் ரோந்து செல்கின்றன. அந்த வாகனங்கள் மட்டுமன்றி இலங்கை தேசியக்கொடி கட்டப்பட்ட வாகனங்கள், பொலிஸ் வாகனங்கள் ஆகியவற்றையும் கண்ட மாத்திரத்தில் வீதிகளில் சென்று கொண்டிருப்போர் சட்டென ஒதுங்கி நின்று விடுகின்றனர். நகரின் பல பகுதிகளில் இருந்து இராணுவம் பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் மொத்த இராணுவத்தையும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்ற அரசுடன் பேசி வருவதாகக் கூறினார்.

மோசமான வீதிகள்: நகரின் குறிப்பிட்ட இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வசதிகள் சொல்லும்படியாக இல்லை. குண்டு குழிகள் எல்லாம் ஒட்டுப்போடப்பட்டு ஒப்பேற்றப்பட்டுள்ளன. வீதிகள் அனைத்தும் கிராம வீதிகள் போல ஒற்றை வழி வீதிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பருத்தித்துறை,வல்வெட்டித்துறை செல்லும் பாதை மட்டும் இரு வழி வீதியாக முறையான பராமரிப்புடன் காணப்படுகின்றது. இப்பாதையின் சில பகுதிகளில் வீதி போடும் பணிகள் நடந்து வருகின்றன.நகரின்  முக்கியமான பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான பஸ் வசதிகள் மிகவும் குறைவு. அதனால் பல தனியார் மினிபஸ்கள் பயணிகளை புளி அடைத்துச் செல்வதைப் போல் ஏற்றிச் செல்வதைக்காண முடிந்தது.

இந்திய உதவியில் ரயில்திட்டம்: போரின் உச்சகட்ட கொடூரத்தின் சாட்சியமாக சேதம் அடைந்த யாழ்ப்பாணம் ரயில் நிலையம் காட்சியளிக்கிறது. தற்போது ஓமந்தை வரையிலான ரயில் பாதை இந்திய அரசின் நிதியுதவியால் முடிவு பெற்று செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து பளையில் இருந்து காங்கேசன் துறை வரையிலான ரயில்பாதை அமைக்கும் பணி அடுத்தாண்டிற்குள் முடிந்து விடும் என பலாலியில் உள்ள இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது இப்பணி யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கியுள்ளதாக கூறிய அவர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக உறுதியளிக்கப்பட்டால் தான் பணிகள் விரைவில் முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் தான்... :கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் உள்ள பூங்கா ஒன்றின் அருகில் மின்சார சபைக்கான கட்டிடம் கட்டுவதற்காக இலங்கை மின் துறை அமைச்சர் சம்பிக ரணவக்க, பாரம்பரிய தொழில்கள் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.இனிமேல்தான் அங்கு மின்சாரசபைக் கட்டிடம் வரப்போகிறது. இருப்பினும் யாழ்ப்பாண நகரில் மின்வெட்டு இல்லை. அவ்வப்போது மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் கூட 24 மணிநேரமும் மின்சார வசதி உள்ளது. அடுத்தாண்டிற்குள் வடமாகாணம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் ரணவக்க உறுதியளித்துள்ளார்.

வியாபாரிகள் விருப்பம்: யாழ்ப்பாண நகரின் பிரதான பகுதியான திருநெல்வேலியில் தற்போது தான் விரிவாக்கப்பட்ட காய்கறிச் சந்தைக்கான கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழா கடந்த 7 ஆம் திகதி நடந்தது. நகரின் முக்கிய இடமான இந்தச் சந்தை இன்னும் விரிவாக்கப்படவேண்டும் என அங்குள்ள வியாபாரிகள் விரும்புகின்றனர்.

குவியும் மக்கள்: யாழ்ப்பாணத்தில் முக்கிய அடையாளங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் யாழ்ப்பாண நூலகம் ஆகியவற்றுக்கு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் சுற்றுலா வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி இந்த இரு இடங்களுக்கும் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள புத்தளம் இஸ்லாமியப் பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவியர் சுற்றுலா வந்திருந்தனர்.

அருங்காட்சியகத்தின் அவலம்: நகரின் நாவலர் வீதியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஏதோ ஏழை குடிசை போலக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தின் தொன்மையை விளக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழம் பொருட்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. சில பொருட்களைக் காணவில்லை. வெறும் அலுமாரி தான் இருக்கிறது. ஏனோ தானோ என்று தான் அருங்காட்சியகம் பாராமரிக்கப்படுகிறது.

நினைத்தால் செய்யலாம்: பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பலத்துடன் உள்ள அரசு நினைத்தால் பலநலத்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றிட முடியும்.ஆனால் அரசு அதற்குத் தயாராகவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. கொழும்பு, அநுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்கள் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்கும் போது யாழ்ப்பாணம் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் கூட இன்றி திண்டாடுவதை நாம் நேரில் பார்க்கமுடிந்தது.

வெறிச்சோடிய யாழ்ப்பாணம்: போர்க்கால நினைவுகளில் இருந்து இன்னும் யாழ்ப்பாண மக்கள் மீளவில்லை. பகல் பொழுதிலேயே பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேல் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. 8 மணிவரை நகரின் பிரதான வீதி, பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் சிறிதுமக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. பொதுவாக நகரின் அனைத்து பகுதிகளிலும் 8 மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடுவதில்லை. திருநெல்வேலி ,மாதகல், வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளில் மக்களிடம் விசாரித்த போது இனியாவது எங்களை வாழவிட்டால் போதும் என்று மிகவும் நொந்த மனதுடன் தெரிவித்தனர்.அதேநேரம் போர்நிறைவு பெற்று விட்டதாகக் கூறப்படும் மகிழ்ச்சி மனோ நிலை அவர்களிடம் காணப்படவில்லை.

நன்றி தினக்குரல் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment