மேலும் கால அவகாசம் கோரும் சிறிலாங்கா


ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் இறுதியான, நிலையான அமைதியை எட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மீளிணக்கப்பாட்டை நிறுவுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 30 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போது,  குறிப்பாக 2009 ஜனவரி தொடக்கம் மே வரை இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காப் படையினர் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


யுத்தத்தின் பின்னர் சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் சில மீறல் சம்பவங்களைக் காரணம் காட்டி சிறிலங்காவானது அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படுவதாகவும், அனைத்துலக அமைப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


"நாங்கள் உப ஆணைக்குழு, அமைச்சரவை ஆணைக்குழுவை அமைத்துள்ளதுடன் தேசிய அளவில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா இராணுவத்தினர் தமக்கிடையிலான உள்ளக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் மேலும் தேவைப்படுகிறது" எனவும் இவ்வதிகாரி சென்னையில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான  'இந்து' வில் தெரிவித்துள்ளார். 


இராணுவத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறை கடந்த ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், "கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சிறிலங்கா இராணுவத்தினரிடம் கிடைக்கப் பெற்ற பின்னரே இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது" எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


இந்த இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில் போர்க்குற்ற விசாரணையின் தற்போதைய நகர்வு தொடர்பாக வினவிய போது, "இதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அவர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்" எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 


அமெரிக்கா மற்றும் ஏனைய உலக நாடுகள் சில ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் பரிந்துரை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதானது 'நீதிக்குப் புறம்பான' செயலாக உள்ளதுடன், இது நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சிறிலங்காவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்த வேளையில், மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது ஒன்றுபட்ட சிறிலங்காவை உருவாக்குவதில் எவ்விதத்திலும் உதவமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கான நாட்கள் நெருங்கி வரும் இந்நிலையில் சிறிலங்காவானது தனக்கு ஆதரவு வழங்குமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உலக நாடுகளின் அரசாங்கங்களைச் சந்தித்து சிறிலங்காவிற்கு ஆதரவைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். 


இதன் அடுத்த கட்டமாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய கையோடு சிங்கப்பூருக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ள நிலையில், சிறிலங்காவின் முக்கிய அதிகாரிகள் தொடர்ந்தும் இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர்.


நன்றி புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment