கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி உருவாகும் வலுமிக்க ஒரு முக்கோண கூட்டுறவு


சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கும் இடையில், ஏற்பட்டுள்ள வலுமிக்கஉறவு ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர்கள் தற்போது நடாத்தி வரும் கருத்தாதரவுப் போரிலே சிறிலங்கா அரசுடன் பொருதி நிற்கின்றனர். தமது போராட்டத்தை பற்றி சிந்திப்பதற்கு முன்னர் வல்லரசுகளின் நலன்கள் குறித்த கரிசனையில்தான் கூடிய கவனம் செலுத்துகின்றனர். வல்லரசுகள் தமது நலன்களிற்கு ஏற்றவாறே எமது போராட்டத்தை நோக்குகின்றன என்பதனையும் ஈழத்தமிழர்கள் சரியான பார்வையாக கருதுகின்றனர். 


எதிர் புறத்தில் போராட்டத்தை முன்னகர்த்துவதன் மூலம் எதை ஈழத்தமிழர்கள் பெற்றுகொள்ள முனைகின்றனரோ, அதை கொடுக்க மறுப்பதற்கான ஆதாரங்களை நிலைநிறுத்துவதே அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் போராட்டமாக அமைகிறது. சிறிலங்கா அரசின் வாதம் அதன் தேவை, ஈழத்தமிழர்களின் வாதம் அதன் தேவை என்பனவற்றை அனைத்துலக நாடுகள் நன்கு உணர்ந்து உள்ளன. இதனால்தான் இன்று எமது கருத்துப்போர் அனைத்துலகெங்கும் வியாபித்துள்ளது.



சிறிலங்கா அரசின் இராசதந்திர யுக்திகள் மிகநீண்ட வரலாற்றை கொண்டவை. உலகின் பல்வேறு நாடுகளிலும் நன்கு காலூன்றி பல்வேறு விடயங்களையும் நினைத்த மாத்திரத்தில் செய்து கொள்ளகூடிய சக்தி பெற்றது என்பதை பல்வேறு இடங்களிலும் சிறிலங்கா தன்னை தக்கவைத்து கொண்டுள்ள லாவகத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதேவேளை கொழும்பு ஆட்சியாளர்கள் மத்தியிலே 'மின்சாரக்கதிரை' குறித்த பேச்சுகள் அதிகம் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபடுகின்றன. இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தனது சொந்த ஆட்சி அதிகாரத்திற்கே ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த சிறிலங்கா அதிபர் நிலைமையை சுதாகரித்து கொள்ளும் வகையில் அண்மையில் ஊடகவியலாளர்கள் மத்தியிலே ஒரு கூற்றை வெளியிட்டார்.



"சிறீலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் சிறீலங்காவில் சீனாவின் இருப்பு வர்த்தக நோக்கத்தை மட்டுமே கொண்டது இதிலே அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை" என்பதே அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களின் மிக அண்மைய கூற்றுகளில் ஒன்றாகும். ஆனால் சில வாரங்களுக்கு முன்னாலேயே சீனாவின் தளபதி மா ஜியோதின் [General Ma Xiaotian, Deputy Chief of General Staff of the Chinese People’s Liberation Army - PLA],  சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவருடன் மேலும் ஏழு அதிகாரிகள் நன்நம்பிக்கை பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. முழுஅளவு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்ட சீன மக்கள் விடுதலைப்படைத் தளபதியின் சிறிலங்காவுக்கான இந்தப்பயணத்தில் உள்ளாந்த ரீதியான முக்கியத்துவம் பல அமைந்திருந்தன. சிறிலங்காவின்  இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா [Lieutenant General Jagath Jayasuriya, Commander of the Army],  இந்த சந்திப்பின் போது தனது சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் [NDU] தான் பயிற்சி பெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் தளபதி மா ஜியோதின் [General Ma Xiaotian]  கட்டுபாட்டாளராக இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.



மேலும் சிறிலங்கா இராணுவத்தளபதி சீன இராணுவத்தின் குறையில்லாத ஒத்தாசையுடனும், தடைகளற்ற நீடிக்கப்பட்ட உதவிகளுடனும் சிறிலங்கா இராணுவத்திற்கு மேலும் சீன பயிற்சிப் பாசறைகளில் இடம் ஒதுக்கி தரும்படியும் வேண்டிக்கொண்டார். போர் உச்சநிலையில் இருந்த காலத்தில் சீன மக்கள் விடுதலைப்படையினால் கொடுக்கப்பட்ட பிரதானமான இரணுவ உதவிகளுக்கு சிறிலங்காத்தளபதி நன்றியும் தெரிவித்து கொணடார். யுத்த காலத்தில் உதவிசெய்த சீன இராணுவத்தை சிறிலங்கா இராணுவத்தின் உண்மை நண்பனாக பெருமையுடனும் தாரள மனத்துடனும் பார்ப்பதாக சிறிலங்கா தளபதி கூறிக்கொண்டார். தெடர்ச்சியான தாராளமாக உப்பிப்பெருத்த இருதரப்பு புரிந்துணர்வு நிலையை அடைந்து விட்ட சீன சிறிலங்கா உறவுநிலை, இந்த இராணுவ-இராணுவ உறவுநிலை மூலம் மேலும் தொடர்ச்சியான பாதுகாப்பு பொருளாதார உறவின் வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கூறி இருந்தது. 



சிறிலங்கா அதிபரின் கூற்றுபடி சீனாவுடன் பொருளாதார உறவை மட்டும் கொண்டாடும் நிலையில் சிறிலங்கா இல்லை என்பதையே இது எடுத்துகாட்டுகிறது. சீனாவோ பல்துறை கையாள்கை உறவு நிலை ஒன்றை நிறுவுவது குறித்தும் இருதரப்பிற்கும் ஒத்திசைவான தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் குறித்த நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. அவ்வப்போது சீன தலைவர்கள் கொழும்புக்கு வரும் போதும், சிறிலங்க தலைவர்கள் பீஜிங் செல்லும் போதும் இருதரப்பு அரச செய்தி நிறுவனங்களின் செய்திகளும் இதையே கூறுகின்றன. பொருளாதார முதலீடுகளை பெற்று கொள்வதுதான் சிறிலங்காவின் உறவுநிலை என்றால் அது ஒருபோதும் இடம்பெறப்போவதில்லை. வர்த்தகம் என்றால் இருதரப்பிற்கும் நன்மை பயப்பதாக இருக்கும் போதே அது வர்த்தகமாக கணிப்பிடப்படும். உள்நாட்டு பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் இராணுவ கட்டுபாட்டுக்குள் வடக்கு கிழக்கை வைத்திருப்பதன் மூலமே மேலும் பயங்கரவாதம் தோன்றாதபடி பார்த்து கொள்ளலாம் என்பது சிறிலங்காவினது வாதமாகும். இங்கே சீனாவின் நலன் என்ன இருக்கிறது என்பது பிரதான கேள்வியாகும்.



மேலைத்தேய மற்றும் இந்திய செல்வாக்கை சமநிலைக்கு கொணடு வருவதிலேயே சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பேச்சுகளில் ஒத்திசைவு ஏற்படமுடியும். இதன் அடிப்படையிலேயே பொருளாதார முதலீடுகளிற்கு அப்பாற்பட்ட நிலையில் சீனாவின் கையாள்கை சென்று விட்டது என்பதை சிறிலங்கா விடயத்தில் கவனம் செலுத்தும் மேலை நாடுகளின் இராசதந்திரிகள் உணர்ந்து வருகின்றனர். தமிழின அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் மேலைநாடுகளின் கருவியாக பயன்படுத்தப் படுவதற்கும் சீன தலையீட்டை கட்டுபடுத்துவதே குறிக்கோளாகும். ஆனால் மேலைநாடுகளின் இந்த பயமுறுத்தி எச்சரிக்கும் இராசதந்திரத்தை சமநிலை படுத்தும் வகையில் சீன வெளியுறவு அமெச்சர் Yang Jiechi  "சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்து கொள்ளும் தகுதி இருப்பதாகவே நாம் நம்புகிறோம் . நிலையான சமுக மேம்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது தேவை என்பதால் இணக்கப்பாட்டின் அவசியத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.



சீனாவின் கையாள்கை குறித்து சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி பாலித கோகன நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் "சிறிலங்காவின் புதிய கொடையாளிகள் எம்மை வித்தியாசமான முறையில் கையாளுகிறார்கள். ஆசிரியர்கள் தமக்குள் நடத்தைகள் குறித்த பாடம் கற்பிற்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. மிகவும் அமைதியான பேச்சுகள் மூலம் காரியங்கள் ஆகின்றன. அவர்கள் விரல் காட்டி கதைப்பது இல்லை. சீனா சிறிலங்காவை நடாத்தும் விதம் தனியானது. சங்கடத்திற்குள்ளாக்கும் கேள்விகள் எதுவும் கேட்கப்படாததால் ராசபக்ச அரசாங்கத்திற்கு நன்கு பொருத்தமானதாக அமைகிறது" என்றார்.




சீன அரசு சிறிலங்காவை தனது விரும்பத்தகுந்த நம்பிக்கைககுரிய துணை நாடாக ஏற்று கொள்கின்றது என்பதாயின் சிறிலங்காவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையே இதில் முதன்மை பெறுகிறது. ஏனெனில் சீனாவுக்கு சிறீலங்காவுடன்தான் வர்த்தகம் செய்து தன்னை காப்பற்றி கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் சிறிலங்காவை இந்திய நட்பிலிருந்து பிரித்து வைப்பது சீனாவுக்கு முககியமானதாக தென்பட்டாலும் அதனை நேரடி முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையிலே பார்த்து கொள்வதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதற்கு ஏதுவாக பாகிஸ்தானிய அரசின் முதலீடுகளை இணைத்து வைப்பதன் மூலம் சிறிலங்காவை இந்திய தயவிலிருந்து பிரித்து வைக்க முனைவதாக பாகிஸ்தான் சிறீலங்கா உறவு நிலையை ஆய்வு செய்த மேலைத்தேய கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காலாகால முரண்பாடுகள் மேலும் சிறிலங்கா பாகிஸ்தான் இணக்கப்பாட்டை வலுவடைய செய்கிறது. சிறிலங்கா வெளியுறவு அமைச்சுக்கும் கொழும்பு ஆய்வாளர்களுக்கும் சீன பாகிஸ்தானிய நட்புபோக்கில் மிக ஆர்வம் உண்டு. இது இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் பார்க்கின்றனர். 



தற்போது பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாக கொண்ட அம்பாந்தேட்டை துறைமுகம் அனைத்துலக அரசியல் சந்தர்ப்பங்கள் மாறும்போது சீன இராணுவ தளங்களாக மாறிவிடக்கூடிய நிலையை இந்தியா உணர்ந்திருப்பதாக மறைமுக எச்சரிக்கை கட்டுரைகள் கொழும்பிலிருந்து வெளிவருவதும், பாகிஸ்தானிற்கு சிறிலங்கா அதிபரின் வருகையின் போது இருதரப்பு பாதுகாப்பு கூட்டுடன் முழு அளவு பல்துறை கையாழ்கை 'multisector engagement' நோக்கும் கொண்ட வர்த்தக உடன்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை இதன் அடிப்படையிலேயே ஆகும்.




ஆகவே தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வலுமிக்கஉறவு ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானில் காலாகாலமாக இருந்து வந்த இராணுவஆட்சி நிலைமாறி மக்களாட்சி தலைமை ஏற்பட்டிருக்கிறது, இந்நிலையில் தெற்காசிய மக்களாட்சி நாடுகளின் வரைமுறைகளுக்கு ஏற்ற வகையில் சிறிலங்கா பாகிஸ்தான் உறவில் மேலும் வலுவடைவதற்கே வாய்ப்பு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் வர்த்தக சுட்டெண்கள் சிறிலங்கா பாகிஸ்தான் வர்த்தக வலுவை எடுத்துகாட்டுகிறது. சிறிலங்காவின் வர்த்தகத்தில் சீனாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தானே முதன்மை வகிக்கிறது.



2009ம் ஆண்டிலிருந்து, யுத்த வெற்றியின் பின், இந்திய தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்குமிடையில் இருந்து வந்த உறவு நிலைக்கு மதிப்பளிக்க வேண்டிய தன்மை தற்போது சிறிலங்கா அரசுக்கு இல்லாத நிலையும். வரலாற்று பெருமையுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலமிழந்த நிலைக்கு வந்துள்ளமையும் பாகிஸ்தானிய சிறிலங்கா உறவை மேலும் வலுவடையச்செய்திருக்கிறது.இங்கே தமிழர்களின் நலன் குறித்து இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் மீள் சிந்தனைக்கு கொண்டு வர வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. சிறிலங்காவை அரசில் ஆட்சியில் உள்ளவர்களின் சலுகைகளின் அடிப்படையில் பார்க்காது. அத்தீவிலுள்ள தமிழர்களின் உரிமைகள் ஊடாக பார்க்கும் போது, இந்தியா தனது பெறுபேறுகளை அதிகமாக பெற்று கொள்ள கூடிய தன்மை உள்ளது.



வல்லரசுகளின் நலன்களில் ஊடாக தமது போராட்டத்தை எவ்வாறு முன்னகர்த்தலாம் என்று சித்திக்கும் தமிழ்மக்களுக்கும் வல்லரசுகளை ஏமாற்றி எவ்வாறு தமது காரியத்தை சாதிக்கலாம் என்று சிந்திக்கும் சிறிலங்கா அரசுக்கும் மேற்கூறிய விபரங்கள் நல்ல உதாரணங்களாகும்.



நன்றி புதினப்பலகை 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment