"எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், நாங்கள் எவ்வாறு உயிர் பிழைக்க முடியும்?" - மகிந்த

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஈரான் மீதான தடையானது, ஈரானைத் தண்டிக்கமாட்டாது, ஆனால் அத்தடையானது எம்மை அதாவது சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக உள்ளது" எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்துலக ஊடகமான International Herald Tribune வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.  சிறிலங்கா அரசாங்கப் படைகள் பிரிவினைவாத தமிழ்ப் புலிகளை அழித்ததன் மூலம், முப்பது ஆண்டுகளிற்கு மேலாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தின பிடிக்குள் 300,000 பொதுமக்கள் வரை  சிக்கிக் கொண்டனர். இந்த இறுதிக் கட்ட யுத்தகளமானது சிறிலங்காவின் வடபகுதிக் கரையோரங்களிலும், பின்தங்கிய கிராமங்களிலும் அரங்கேற்றப்பட்டிருந்தன.  யுத்தம் நிறைவடைந்த போதிலும், யுத்தத்தின் கட்டுப்பாடுகள் இன்னமும் அங்கு தளர்த்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான மீளாய்வை ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலுக்காக அனுப்பி வைக்கப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. இதற்கான தேவை இல்லை எனவும் ஏனெனில் நியூயோர்க்கில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அதன் அனைத்துலக விமர்சனமானது எந்த விதத்திலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டாது என சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட 'அடாவடித்தனங்கள்' தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப் படுகொலையை மேற்கொண்டவர்களை உறுதிப்படுத்துகின்ற நம்பகமான சாட்சியங்களை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அறிமுகப்படுத்தியதுடன், பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் வாழ்ந்த இடங்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டினர். "யுத்த முன்னரங்குகளிற்கு அருகில் அமைந்திருந்த வைத்தியசாலைகள் மீது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்" என ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் விசாரணைகளின் முடிவிலிருந்து பிரதிநிதி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "யுத்த வலயங்களிலிருந்து தப்பிக்க முற்பட்ட பொதுமக்கள் மீது தமிழ்ப் புலிகள் துப்பாக்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது படுகொலைகளை மேற்கொள்கின்ற யுத்தச் செயற்பாடாகும். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது யுத்தவலயங்களில் அகப்பட்டுக் கொண்ட நூற்றுக்கணக்கானவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், கடந்த டிசம்பரில் சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்த மீளாய்வைப் பூர்த்தியாக்கிக் கொண்டது. உள்நாட்டு யுத்தத்தை நிறைவிற்குக் கொண்டு வருவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட யுத்த மீறல்களை மறைத்து அதனால் எழுந்த விமர்சன அலைகளை முறியடிப்பதற்காகவே கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக, சிறுபான்மைத் தமிழ் மக்களின் முன்னணி அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் Associated Press ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிப்பதானது எந்தவொரு விளக்கப்பாட்டை வளங்குவதற்கான தூண்டுகோலாக அமைந்துவிட முடியாது என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொழும்பிலுள்ள 'டெய்லி நியூஸ்' ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். "அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்பது எமக்குத் தெரியும். அதனை நாம் செய்யவில்லை என்பதில் பிரச்சினையில்லை" என கருணாதிலக அமுனுகம குறிப்பிட்டுள்ளார். "சிறிலங்கா அரசாங்கத்தின் அறிக்கையானது பெறுமதி மிக்க ஒன்று எனவும், யுத்தத்தின் இறுதி வாரங்களைக் கருத்திற் கொள்ளும் போது இது இராணுவத்திற்கு பெரியளவில் மன்னிப்பை வழங்கியுள்ளது" எனவும் நியூயோர்க் ரைம்ஸ் ஊடகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துப் பகிர்வில் ஊடகவியலாளரான நாமினி விஜயதாச தெரிவித்துள்ளார்.  பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சிறிலங்கா 1948 ல் சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் சுதந்திர தினம் வரும் சனிக்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கம் என்பன ஈரான் மீது தடைகளைப் போடும் பட்சத்தில், சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பார்வைக்கு கொண்டு செல்வதானது அமெரிக்காவிடமிருந்து சில உதவிகளை சிறிலங்காவிற்குப் பெற்றுக் கொடுக்கலாம். சிறிலங்கா தனக்குத் தேவையான எண்ணெய் வளத்தின் 93 சதவீதத்தை ஈரானிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றது. இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்காவின் மூத்த திறைசேரி அதிகாரியான லூக் புறூன் என்பவர் வியாழனன்று பேச்சுக்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளார். இதில் ஈரான் மீது இடப்படும் தடைகள் தொடர்பாகவும் இதில் நிச்சயமாகக் கலந்துரையாடப்படும். "எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. எமக்கு மாற்று வழி ஒன்றைத் தருமாறு நாம் அவர்களிடம் கேட்கவுள்ளோம்" என சிறிலங்கா அதிபர் கடந்த செவ்வாயன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஈரான் மீதான தடையானது, ஈரானைத் தண்டிக்கமாட்டாது, ஆனால் அத்தடையானது எம்மை அதாவது சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக உள்ளது" எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான மோதலிலிருந்து தப்பிப்பதற்கான வழியாக சிறிலங்காவானது ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளில் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு தருமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை விடுக்குமா என சிறிலங்கா அதிபரிடம் கேட்டபோது "அவ்வாறு நாம் செய்ய வேண்டியிருக்கலாம். இல்லாவிடில், நாங்கள் எவ்வாறு உயிர் பிழைக்க முடியும்?" எனவும் அதிபர் கேள்வியெழுப்பினார்.


நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment