சத்தியமூர்த்தியின் பதியப்படாத பக்கங்கள்


ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளரும் நாட்டுப்பற்றாளரும் தமிழ் மக்களின் மனங்களில் அல்ல அனைத்து ஊடக நண்பர்களின் மனதிலும் நிலைத்து நின்று இன்று எம்மைவிட்டு பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பேசப்படுகின்ற புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவுநாளில் (12.02.2012) இந்த அடைமொழிகளுக்கும் அப்பால் அவர்பற்றிய பதியப்படாத சில நினைவுகளுடன்...
1972.10.30 அன்று அவர் இணுவில் வைத்தியசாலையில் பிறந்து பொலநறுவை மன்னம்பிட்டி என்னும் தமிழ் கிராமத்தில் எட்டுவயது வரை வளர்ந்து, பின்பு யாழ். மண்டைதீவில் தனது உறவினர் வீட்டில் இருந்து மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி, பின்பு யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரக்கல்வியை முடித்து, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கல்வியைத் தொடர்ந்த வேளையிலிருந்தே தனது பட்டப்படிப்பில் அரசியலை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தார்.

அப்போதே கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் என அவரின் எழுத்துக்காலம் தொடங்கியது. 
1990ம் ஆண்டு அவரின் இரண்டாவது தம்பி தன்னை மண்ணின் மைந்தனாக இணைத்துகொண்டிருந்தான். அவனின் பல்துறை ஆற்றல் கண்டு தனது பங்களிப்பை வெளியிலிருந்தே தொடர்ந்திருந்தவேளை 1995ம் ஆண்டு கப்டன் சிந்துஜனாக தம்பி மண்ணிற்குள் விதையானான். அவனின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ளமுடியாது தள்ளாடி நின்றபோது, அவனின் நினைவாக அவர் எழுதிய நினைவுக் குறிப்பில் இருந்தது ‘இன்று நீ சொன்றுவிட்டாய் நாளை நான் உன்னைத் தொடர்ந்து வருவேன். நீ நிம்மதியாக உறங்கு’ என்று...

1995 யாழ். இடப்பெயர்வினூடாக வன்னியில் கால்பதித்தவர், தன் இறுதிக்காலம் இவ்வளவு வேகமாக முடியும் என்று அவர் அன்று எண்ணியிருக்க மாட்டார். 14 ஆண்டுக்குள் தன் எழுத்தூடாக வெளியில் அனைவரினதும் மனங்களில் நிலைத்து நின்றாலும் தேசவிடுதலைக்காக அவர் செய்தவைகள் அந்த வன்னிக்குள்ளேயே பேசப்படாது அடங்கிவிட்டது.

அவரோடு 12 ஆண்டுகாலப் பழக்கம் எனக்கு ஏற்பட்டதால் பலபக்கங்களை நான் அவரிடமிருந்து உள்வாங்கிக் கொண்டேன். நல்லபண்பு, மனிதநேயம், எல்லோரையும் மதிக்கும் பக்குவம் என நீண்டு நிறைந்திருந்தது. அவர் முதல் முதல் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘ஆதாரம்’ சஞ்சிகையில் தனது வேலையைத் தொடங்கி பின்பு ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளில் அரசியல், களநிலவரம், விமர்சனம் (பு.சிந்துஜன், பு.சத்தியமூர்த்தி, விவேகானந்தன், ஹம்சத்வனி என்னும் பெயர்களில்) என எழுதத் தொடங்கியிருந்தார்.
அக்காலப்பகுதில் தமிழீழ சட்டக் கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்றும் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு கொடுக்கப்படும் கொடுப்பனவு 3000 ரூபா. அந்த கொடுப்பனவை தனது பயன்பாட்டுக்கு எடுப்பதில்லை. களத்திலே நின்று வேலி அமைத்திருந்தவர்களின் சில தேவைகளை பூர்த்திசெய்து வந்தார்.
அத்தோடு மட்டுமல்லாது அக்காலப்பகுதில் களத்திலே நின்றவர்களுக்கு உதவியாக எல்லைப்படை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. வெளியே பணிபுரிபவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதில் தானும் முழுமையாக ஈடுபட்டு ஒவ்வொரு மாதத்திலும் ஒருகிழமை பணிக்கு செல்வது வழமை. அப்போது அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி. குளிசை இல்லாது அவரால் இயங்கமுடியாதிருந்த நிலையிலும், மழைக் காலப்பகுதி என்றாலும் அவர் தனது நாள் வரும்போது சொல்வார்.

அங்கு தொடராக எல்லையில் நிற்பவர்களுக்கு தனது பைநிறைய தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் செல்வார். பணிமுடியும் வரை நின்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கடுமையான வருத்தத்தோடே வருவார். ‘ஏன் எத்தனையோ பேர் சாட்டுச்சொல்லி நிற்கிறார்கள் உங்களுக்கு வருத்தம் என்று சொல்லி நிற்கலாம் தானே` என்றால் அவரின் முகத்தில் கோபரேகைகள் ஓடும். `எனக்கு மட்டுமா வருத்தம்.
அங்கு எத்தனை பேர் எத்தனை வருத்தத்தோடு நிற்கிறார்கள். இப்படி எல்லாரும் சொன்னால் எங்கபோய் முடியும்’ என்று வாயை அடைத்து விடுவார். அவரிடம் எல்லைக்குமீறிய அன்பு, நல்ல நட்பு எல்லாம் நிறையவே இருந்தது. அது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை நீண்டிருந்தது. அளவு கடந்த காதல்கொண்டிருந்தார். அது இயற்கை மீதும் சரி, தாயகத்தின்மீதும் சரி பெண்ணின் மீதும் சரி. யார் கண்ணீர் சிந்தினாலோ, தம் துயரத்தை பகிர்ந்தாலோ தன்னால் முடியாதிருந்தாலும் யாரால் அதைக்கொண்டு செய்விக்கமுடியுமோ செய்து முடித்தபின்புதான் ஓய்வார்.
அவருக்கு முல்லைத்தீவு கல்வித்திணைக்களத்தில் அரசாங்க வேலைகிடைத்திருந்தது. அங்கு சிறந்த முகாமையாளராக தன்பணி செய்துகொண்டிருந்த வேளைகளில் எல்லாருக்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்துகொடுப்பதில் முன்னிற்பவர். கல்விச்சமூகம் இவர்மீது அளவுகடந்த மதிப்பைக்கொண்டிருந்ததை கண்டுகொள்ள முடிந்தது. பின்னாளில் சுகாதாரத் திணைக்களத்தில் தன்பணிதொடங்கி அதனூடாக அவர் மக்களின் தேவையறிந்து அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு பெற்றுக்கொடுக்க முடியுமோ அதுகிடைக்கும் வரை ஓயாது உழைத்து வறிய மக்களின் குறைநீக்கியதால் அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டுப்பிள்ளையாக நின்று பேசப்பட்டவர்.
நிறைய இளம் ஊடகவியலாளர்களுக்கு ஊடகக் கல்வியை ஆரம்பித்து பல்துறை சார்ந்தவர்களின் அறிமுகத்தை ஏற்படுத்தி அவர்களின் கருத்துக்கள் ஊடாக புடம்போடப்பட்டு உருவாக்கியவர்களில் இன்றும் பேசப்படுகின்ற ஊடகவியலாளர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார். ‘எழுகலை இலக்கியப் பேரவை’ ஒன்றை அமைத்து வன்னியில் வெளிவந்த படைப்புக்களை புத்தகமாக்கி வெளியிட்டதில் அவரின் பணிநீண்டிருந்தது.

18.06.2005 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது வன்னியில் உள்ள அனைவரும் அவருக்கு உறவுகள். யாரை விடுவது என்பதுதெரியாத திணறல். ஏனெனில் எனக்குச் சொல்லவில்லை உனக்குச் சொல்லவில்லை என்ற குறை இருப்பினும் அவரின் பொருளாதாரச் சுமை காரணமாக எண்ணூறு பேரைமட்டும் உள்வாங்கி அழைப்பு கொடுத்தபோது வந்தவர்களோ ஆயிரத்தைத்தொட்டிருந்தது. அப்போது அவரின் தந்தை சொன்னார் ‘எங்கட ஊரில எண்டால் சொந்தங்கள் மட்டும்தான் வந்திருப்பினம் ஆனால் இங்கபாத்தால் எனக்கே பிரமிப்பாய் இருக்கு. நீ இவ்வளவு உறவையும் தேடிவைத்திருக்கிறாய். உன்னைப் பெற்றதையிட்டு நான் எவ்வளவு பெருமிதம் அடைகிறன்’ என்று ஆனந்தக் கண்ணீரோடு ஆசீர்வாதித்ததைப் பார்த்திருந்தவர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்.

தனக்கு பிறக்கின்ற குழந்தை பெண்ணோ, ஆணோ என்னவாக இருந்தாலும் தன் தம்பியின் பெயர் சிந்துஜன். அதில் ‘ஜன்’  என்ற வட எழுத்தை எடுத்துவிட்டு ‘சிந்து’ என்று வைப்பதென முடிவு எடுத்துவிட்டார். 12.04.2006 அவருக்கு மகள் பிறந்தபோது தனக்கு அப்பா என்ற பெயரைத்தந்துவிட்டாள் தன் மகள் என சந்தோசத்தின் எல்லையில் நின்றதை கண்டு நாம் அவர்மீது பொறாமை கொண்டோம்.
தன் மகளை வைத்தியசாலையால் வீட்டுக்கு கொண்டுவந்த அடுத்த நாள் சித்திரைப் புதுவருடம். அறிவமுது புத்தகசாலைக்குச் சென்று 550 பக்கம் கொண்ட ‘பஞ்சதந்திரக் கதைகள்’ என்ற புத்தகத்தை வாங்கிவந்து அதில் ‘மகளே இந்தப்புத்தகத்தில் உள்ளவைகள் கதைகள் மட்டுமல்ல. வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்துமே அடங்கியுள்ளது. இது உமது படிநிலை வளர்ச்சிக்கும் சமூகத்தில் உமது அடையாளத்துக்கும் உறுதுணையாக நிற்கும். அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து உமக்கு பரிசளிக்கிறோம்’ என்று எழுதி அதில் தங்கள் இருவரினதும் கையெழுத்தோடு திகதியும் போட்டு பரிசளித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது தனது மகளுக்கான சேமிப்புக்கணக்கையும் அன்றே தொடங்க தமிழீழ வைப்பகத்திற்குச் சென்றிந்தார். அங்கு தமிழ் பெயர் வைப்பவர்களுக்கு விசேட வைப்புக்கணக்கு இருந்தது. அவர்களிடம் தமிழ் பெயர்கையேடு என்ற புத்தகம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. இதில் உள்ளபெயர்கள் தான் தமிழ்ப் பெயர்கள் என. அதில் ‘சிந்து’ இருக்கவில்லை. அதனால் சாதாரண கணக்கில் வைப்பிடப்பட்டது. அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. பண்டிதர் பரந்தாமன் அவர்களால் ‘சிந்து’ என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்மொழி விளக்கத்தைக் கொண்டு வெளியிட்ட பலபுத்தகங்களை எடுத்து அதனை ஆதாரமாக்கி தான் ஒரு மண்ணின் மைந்தனின் பெயரையே தனது மகளுக்கு வைத்தேன் என்று மேலிடங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி அவர்கள் அதை தமிழ்பெயர் என்று ஏற்றுக்கொண்டு வைப்பை மாத்தும்வரை போராடி நிலைநிறுத்தியவர்.
தன்மகளின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசித்து அவளை நோக்கி பல கனவுகண்டதோடு மட்டுமல்லாது அப்துல் கலாம் இளைஞர்களை நோக்கி எழுதிய ‘அக்கினிச் சிறகுகள்’ என்ற புத்தகத்தை முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளித்துவிட்டு, தன்மகளை தன் நாட்டின் ‘இராஜதந்திரி’ ஆக்கவேண்டும் என்பதே அவர்கண்ட கனவுகளில் ஒன்று. வீட்டுச்சுவரின் ஒருபகுதியில் தன்மகளைக் கொண்டு படங்கள் கீறி கலர் அடிக்க வைத்து அதைப் படம் எடுத்து சேர்த்து வைத்திருந்தவர். பிறந்து பதினாறாவது நாளிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அதன் திகதியிட்டு, சம்பவம் எழுதி ஆவணமாக்கி பாதுகாத்து அதை, 21வது பிறந்ததினத்திற்கு பரிசளிக்க கனவுகண்டவர்.


தனது டயறியில் தன்மகள் ஏதாவது எழுதினால் அதற்கு வடிவம் கொடுத்து தன் நண்பர்களிடம் காட்டிப் பெருமையடைந்தவர். குட்டியம்மா என்று செல்லப் பெயர் கொண்டு செல்லமாய் அழைத்து... அப்பா சொன்னகதைகள் ஏராளம். எல்லா அப்பாக்களும் செய்ய நினைத்து, எழுத நினைத்தவைகளை அவர் செய்து காட்டியவர். இன்று அவளின் வளர்ச்சிகள் அவர் கண்ட கனவுகளில் நிறைந்து நின்றாலும் அவரின் ஆசீர்வாதம் மட்டுமே இன்று கிடைக்கப் பெற்றவளாய்...
நாளை அவர் கனவை அவரின் குட்டியம் மாவாய் நிலைத்து நின்று நிறைவேற்றுவாள்..! அவரின் கனவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் இடப்பெயர்வு அவர்களைத் துரத்தத் தொடங்கியது. அதுகண்டு அவர் துவளவில்லை. ஓடி ஓடி தன்பணி தொடர்ந்தார். மக்கள் பட்ட துன்பங்களைப் புலம்பெயர் தேசம் நோக்கி எடுத்துவிளக்கினார். மக்களின் நிலைகண்டு குமுறினார்.  ஒரு நாள் விசுவமடு பகுதி எங்கும் ‘செல்’ விழுந்து வெடித்துக் கொண்டிருக்க மக்கள் அவலப்பட்டு ஓடிக்கொண்டிருந்த நிலையை வானலையூடாக அறிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தன் மக்களுக்குச் சொன்ன செய்தி ‘சுற்றிவர குண்டுமழை பொழிகிறது மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்று உங்களோடு கதைக்கும் நான்கூட இந்த குண்டுக்கு பலியாகலாம்’ என்று சொன்னவரின் குரல் மட்டும் காற்றலையூடாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
விசுவமடுவில் அவர்களின் பணி இடம் இருந்தது. களத்திலே நிற்பவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு. அப்பகுதிக்கு பொறுப்பாக நின்றவர் அவரது நண்பர். அவர் வெளியே வந்தபோது இவரிடம் சொல்லியுள்ளார். ‘பெடியளுக்கு சாப்பாடு இல்லை. மக்கள் சிலபேரைச் சேர்த்து உலர் உணவு செய்து தாங்கோ’ என்று... அந்த நிலையில் மக்களிடம் எப்படிக் கேட்க முடியும் என யோசித்தவர் தனது மனைவியிடம் சென்று நிலைமையைச் சொல்லி எப்படியாவது செய்யும் என்று சொல்லியுள்ளார்.

அவர்களிடம் கையில் காசில்லாத நிலை. ஏதாவது மருத்துவச் செலவு ஏற்பட்டாலும் என்று இலங்கை வங்கியில் பத்தாயிரம் ரூபாவை எடுக்காது வைத்திருந்தார்கள். அதை எடுத்து முழுவதற்கும் ‘பயற்றம் பலகாரம்’ செய்தால் ஒரு நேரப்பசியைத் தாக்குப் பிடிக்கும் எனதிட்டமிட்டு அவரின் மனைவி பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் செய்தார் (பயற்றம்பலகாரம் என்றால் எல்லாரினதும் மனதில் அதன் வடிவம் தெரியும். இது அப்படியல்ல பந்து அளவு உருண்டையில் பிடிக்குமாறு கடுமையான உத்தரவு அவர்களுக்கு) அவற்றை பதினைந்து பதினைந்தாக எண்ணி பைகளில் போட்டு கட்டி பெரிய உரப்பைக்குள் வைத்து சைக்கிளில் கட்டி விசுவமடுவுக்கு கொண்டு போய் உரியவர்களுக்கு அனுப்பிவிட்டு வந்திருந்தார்.
அவரின் நண்பர் வந்து கண்கள் கலங்கச் சொன்னாராம் ‘அண்ணை பெடியள் சந்தோசமாகச் சாப்பிட்டு சண்டை பிடிச்சவங்கள். உங்கட உதவியை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவர் மூன்றாவது நாள் களத்திலே வீழ்ந்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்த செய்தி... காதில் பேரிடியாக வந்து நின்றபோது மௌனமாக அவர் அழுது அஞ்சலித்தார்.
அவர்களின் குடும்பம் மூங்கிலாற்றில் இருந்தது. அங்கு இருக்கமுடியாது குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தது. அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரத்திற்கு மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இடம் பார்க்கச் சென்றவர் திரும்பி உடையார்கட்டுச் சந்திக்கு வந்தபோது நூற்றுக்கும்மேற்பட்ட ‘செல்’ அந்த இடத்தை நோக்கி வந்து வெடித்துக் கொண்டிருக்க மக்கள் எவருமே இல்லாது இருந்தபோதும் தான்

காப்பெடுத்தால் தமது குடும்பம் இருக்கு மிடத்திற்கு ஆமிவந்து விடுவான் என்று நினைத்து விட்டு மடிந்துபோன மாவீரர்களை மனதில் நினைத்துக்கொண்டு துவிச்சக்கரவண்டியை வேகமாக மிதித்துக்கொண்டு வந்ததாக பதுங்குகுழியைவிட்டு தலைகாட்ட முடியாது இருந்த அவர்கள் குடும்பத்துக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

11.02.2009 அன்று தன்னுடைய மனிதவாழ்வு முடிவடையப்போகிறது என்று அவரது உள்ளுணர்வு உணர்த்தியதாலோ தெரியாது இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த வழிகளில் எல்லாம் காணும் உறவுகளுக்கு சண்டை தீவிரமடையுது கவனம் பிள்ளைகள். செல்வருகுது என்றால் விழுந்துபடுங்கள், இழப்புகளைத் தவிருங்கள் என்று கூறிக்கொண்டே வந்தார். அதுமட்டுமல்லாது தனது மனைவியிடமும் ‘இந்த நிமிடத்திலிருந்து எதுவும் யாருக்கும் நடக்கலாம். அப்படி எனக்கு எதாவது நடந்தால் நீ அழுது கொண்டிருக்கவேண்டாம். அடுத்த கட்டத்தை நோக்கி பிள்ளையோடு நகரவேண்டும். உம்மில எனக்கு நம்பிக்கை இருக்கு. நீர் எடுத்து வைக்கும் எந்த முடிவாகினும் பிள்ளையைச் சார்ந்ததாகவே இருக்கட்டும். 

எல்லாரிடமும் ஆலோசனைகேளும். ஆனால் முடிவு உம்முடையதாகவே இருக்கவேண்டும். பிள்ளையை நானில்லாட்டிலும் நீர் வளர்ப்பீர் என்றதால எனக்கு நிம்மதியாக இருக்கு. சமூகம் எதையும் சொல்லும் நீர் பயப்படத்தேவையில்லை. துன்பப்படும்போது கண்டுகொள்ளாத சமூகம், மனிதன் தானாக முன்னேறி வரும்போது அதைக்கண்டு பொறுக்காது முதுகில்குத்தவே முயலும். நீர் நிமிர்ந்து நில்லும். பிள்ளையையும் நிமிரடைய வையும். ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போதும் நிதானமாக நடவும்...’ அவ்வாறு எதற்காகச் சொன்னார் என்று அடுத்தநாள் அவர் உயிர் பிரிந்தபோது அவர் மனைவி உணர்ந்து கொண்டிருப்பார்.

12.02.2009 அன்று காலை வழமைக்கு மாறாக தன் குட்டி மகளை இறுக்கி அணைத்து முத்தமிட்டதைப் பார்த்த போது மனம் சில்லிட்டது. அதுதான் கடைசி முத்தம் என்று யாரும் எண்ணவில்லை. ஆனால் அவர் எண்ணியிருப்பார். எங்கோ விழுந்து வெடித்த செல்லின் சிறு துண்டு அவரின் இதயத்தை துழைத்தபோதும் தனக்கு காயம்பட்டுவிட்டது என்று உணர்ந்து இடுப்பில் கட்டியிருந்த சாரத்தை எடுத்துக் கட்டியவரை தூக்கி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லும் போதும் அவரின் வாயிலிருந்து வந்த வார்த்தை மகள் பற்றியதாகவே இருந்ததென்றும் அது வெளியே சத்தம் வராது வாய் அசைவாக இருந்ததாகவே அவரின் உடலைக் கொண்டு வந்தவர்கள் சொன்னார்கள்.

உடனுக்குடன் செய்தி சொன்ன செய்தியாளனின் செய்தி உலகெங்கும் உறயவைத்தது. நல்லதொரு கணவனாக, தன் மகளுக்கு அன்பான அப்பாவாக, குடும்பம் என்றால் இவர்கள்போல இருக்கவேண்டும் என்று உதாரணம் காட்டிக் கதைக்க வைத்த குடும்பஸ்தனாக, தமிழ் மக்களின் மனங்களில் நல்ல ஊடகவியலாளனாக, நல்ல நண்பனாக, வாழ்ந்துகாட்டிய, இன்றும் பேசப்படுகின்ற நல்லதொரு வழிகாட்டி தான் எங்கள் சத்தியமூர்த்தி.

தாயகத்திலிருந்து கண்ணன்Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment