ஜெனிவா: சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் முக்கிய விவாதமாக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையானது மார்ச் 2012 ல் மேற்கொள்ளவுள்ள தனது கூட்டத் தொடரின் போது, சிறிலங்காவில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்புக் கூறப்படவில்லை என்பதை முக்கிய விவாதமாக்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை    மனித உரிமைகள் கண்காணிப்பகமானது, ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிற்கும் அவதானிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. 


யுத்தம் நிறைவுற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்த மக்களிற்குச் செய்ய வேண்டிய கடப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை என்றும், இதனால் ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் சபை என்பன "சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க வகையில் நம்பகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் காயமடைந்தமை தொடர்பாக உரிய வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தனித்துவமான அமைப்பாக மனித உரிமைகள் சபை உள்ளது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நாவிற்கான பதில் பணிப்பாளராக உள்ள Philippe Dam தெரிவித்துள்ளார். "மனித உரிமை மீறல் சம்பவங்களில் மிக மோசமான அத்தியாயமாக உள்ள சிறிலங்காவின் யுத்த கால மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் சபையானது உரிய வகையில் பதிலளிக்கத் தவறியமையானது, இது உருவாக்கப்பட்ட நோக்கத்தை, அதன் மீதான நம்பகத்தன்மையைக் குழி தோண்டிப் புதைப்பதாக உள்ளது" எனவும் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் யுத்தச் சட்டங்கள் மீறப்பட்டதை நம்பகமான வகையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவுhல் உறுதிப்படுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனித உரிமைகள் சபையை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிநிற்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்தால் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணையானது பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதையும், எதிர்காலத்திற்குத் தேவையான பொருத்தமான தகவல்களைப் பெற்று அவற்றைப் பாதுகாத்தல் போன்றவற்றைக் கண்காணித்து, மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு சுயாதீன அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஐ.நா வல்லுனர் குழு பரிந்துரைத்திருந்ததாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கும் என சிறிலங்கா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது, சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மனிதாபிமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறல்களை பெருமளவில் மூடிமறைத்துள்ளதுடன், ஐ.நா வல்லுனர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட பல யுத்த கால மீறல்களையும் கவனத்திற் கொள்ளத் தவறியுள்ளது எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ் ஆணைக்குழுவால் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சில பரிந்துரைகள் பயன்மிக்கதாக உள்ளதாகவும், அவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியுள்ள அதேவேளையில், குறிப்பிட்ட சில மீறல் சம்பவங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என இவ் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களை தனது அறிக்கையில் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும், கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படாத கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. எவ்வாறெனினும், தனது நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதாக தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றாத நீண்ட வரலாற்றை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளது. 26 ஆண்டுகாலமாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்த போது அதில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மீறல்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. "நீதி மற்றும் பொறுப்புக் கூறல் என்பன சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து வரப்போவதில்லை என்பது நீண்ட காலமாகத் வெளித் தெரிகின்ற உண்மையாகும். பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை அனைத்துலகம் மட்டுமே வெளிக்கொணரும்" எனவும் பதில் பணிப்பாளர் டாம் குறிப்பிட்டுள்ளார். 

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment