தெற்காசியாவை நோக்கி நகர்கின்றதா ”அரபு வசந்தம்”?


பல அரசியல் தலைவர்கள் எதிரணியில் செயற்படும் போது ஜனநாயகத்தின் காவலர்களாகவும் மனித உரிமைகள் மேம்பாட்டாளர்களாகவும் நடந்துகொள்வார்கள். பல போராட்டங்களை முந்நின்று நடத்துவார்கள். ஆட்சியாளருடன் மோதுவார்கள். காவல்துறையின் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள், சிறைகளிலும் அடைக்கப்படுவார்கள். காலப் போக்கில் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வேளை வந்ததும் அதிகார அகங்காரம் அவர்களை ஆட்கொள்வதற்கு நெடு நாட்கள் கழிவதில்லை. உதாரணங்களைத் தேடி நாம் வெகு தூரம் செல்லத் தேவையில்லை.

மாலைதீவில் வெடித்த கிளர்ச்சி

சின்னஞ்சிறு மாலைதீவில் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சென்ற வாரம் பதவி கவிழ்க்கப்பட்ட சம்பவத்தைப் பார்ப்போம். தனக்கெதிராக காவல்துறை, இராணுவம் செய்த சதியொன்றின் காரணமாக துப்பாக்கி முனையில் தான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நஷீட் குற்றம் சுமத்தியுள்ளார். இச்சதி முயற்சிக்கு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மொஹமட் வாஹிட் உடந்தையாயிருந்ததாக நஷீட் சாடியுள்ளார். நஷீட் மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர். அன்று வரை, கிட்டத்தட்ட 3 தசாப்த காலமாக, ஜனாதிபதியாகப் பதவி வகித்தவராகிய மமூன் அப்துல் கயூம் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நஷீட் மிகவும் ஆத்திரமடைந்திருந்தார். அதாவது கயூம் அரசாங்கம் முற்றிலும் மக்கள் விரோதனமானதும் ஊழல் நிறைந்ததும் என்பதே நஷீட் கொண்டிருந்த வைராக்கியமாகும். அவர் கயூம்  அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தும் அந்த அரசாங்கத்திற்கெதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டும் வந்ததன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான வேதனைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். இவ்வாறு பலத்த எதிர் நீச்சலடித்ததன் பயனாகவே 2008 இல் நஷீட் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.  அவர் பதவிக்கு வந்த போது, மாலைதீவுக்கு ஜனநாயகம் மீண்டுள்ளது என்று கொண்டாடப்பட்டது. 2008 தேர்தல் பெறுபேறுகளைப் பார்ப்போமாயின், முதல் சுற்றில் நஷீட் 25% வாக்குகளையும் கயூம் 40% வாக்குகளையும் பெற்றனர். எவ்வாறாயினும் இரண்டாவது சுற்றில் எல்லா எதிரணித் தரப்பினரும் இணைத்து ஆதரவளித்ததன் பயனாகவே நஷீட் வெற்றியீட்டினார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நஷீட் போலவே எதிரணியிலிருந்த காலத்தில், நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களிலான  மனித உரிமைப் போராட்டங்களை முந்நின்று நடத்தியவர். அந்த வகையிலும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான சங்கத்தின் அங்கத்துவ நாடொன்றின் தலைவராயிருந்தவர் என்ற வகையிலும் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நஷீட் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஆரம்ப காலகட்டங்களில், நஷீட் நாட்டு மக்கள் நலன்களில் குறிப்பிடத்தக்களவு கரிசனை கொண்டு செயற்பட்டவர். குறிப்பாகச் சொன்னால், உலகில் கால நிலை மாற்றத்தால் பல்வேறு பாரிய அனர்த்தங்கள் உலகின் பல பாகங்களில் இடம்பெற்றுவரும் நிலையில், கடல் மட்டங்கள் உயர்ந்து தாழ்ந்த பிராந்தியங்கள் எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் எவ்வாறு மாலைதீவு மக்களைக் காப்பாற்றலாம் என ஆதங்கப்பட்டு பல நேச நாடுகளோடு ஆலோசனைகள் கலந்துகொண்டு வந்தவர். மாலைதீவு எதிர்நோக்கும் அபாயத்தினை உலகிற்கும் பிச்சையாகச் சித்திரிக்கும் வகையில்  2009 இல் ஒரு தடவை மந்திரி சபைக் கூட்டத்தினைக் கூட நீருக்கடியில் நடத்திய வியப்பையும் நஷீட் காட்சிப்படுத்தியவர்.

தூரதிர்ஷ்ட வசமாக, காலப்போக்கில் தெரிந்தோ தெரியாமலோ, நஷீட் எதேச்சையான போக்கில் ஆட்சியை நடத்துவதற்குத் தலைப்பட்டதோடு நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அபகீர்த்தியை சம்பாதித்தார். அவருக்கெதிராக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதாரணமாக மாலே சர்வதேச விமான நிலையத்தினை முகாமைத்துவம் செய்வதற்கு 25 வருடகால ஒப்பந்த அடிப்படையில் வெறுமனே 75 மில்லியன் அமெரிக்க டொலர்  வருமானத்திற்காக மட்டும் டில்லியிலுள்ள நிறுவனமொன்றுக்கு ஒப்படைத்த விடயமானது. கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது. ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்துமாறு  எதிரணியினர். வற்புறுத்தினராயினும் நஷீட் மறுத்துவிட்டார். வெளிப்படைத்தன்மை விடயத்தில் மாலைதீவின் நிலை அருகியது. "ட்ரான்ஸ்பெரன்சி இன்டநஷனல்' எனப்படும் சர்வதேச வெளிப்படைத் தன்மை நிறுவனத்தின் ஊழல் அளவுகோல் பொறிமுறையின் பிரகாரம், 2008 இல் மாலைதீவு 115 ஆவது இடத்தில் இருந்ததாயினும் 2011 இல் 134 ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து. இன்று தேர்தல் நடத்தப்படுமாயின் நஷீட் 2008 இல் பெற்ற 25% வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள மாட்டாரென எதிரணியினர் கருதுகின்றனர்.

நஷீட் கையாண்டு வந்த எதேச்சாதிகாரத்தின் காரணமாக தனது தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார். அண்மையில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் உதாசீனம் செய்து சிரேஷ்ட நீதிபதி ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்த விவகாரம் மாலைதீவு மக்களை ஆத்திரமடையச் செய்தது. அதாவது நாட்டின் குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதிபதி அப்துல்லா மொஹமட்டின் இல்லத்தை இராணுவப் பிரிவொன்று அதிரடியாகச் சோதனையிட்ட தோடு, அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றதைத் தொலைக்காட்சியில் பார்த்த மாலைதீவு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அந்த நீதிபதியை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்று விடுத்த உத்தரவையும் நஷீட் அலட்சியம் செய்ததன் காரணமாகவே அவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. அந்த வகையில் நஷீட் நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டுமென்று ஒருகாலத்தில் எண்ணங் கொண்டிருந்தாராயினும் இன்றைய நிலையில் தடி கொடுத்து அடிவாங்கிய நிலைக்குத் தன்னை இட்டுச் சென்றுவிட்டார்.

ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்ததும் சில நாட்டுத் தலைவர்கள் அகங்காரம் கொண்டு நல்லாட்சி என்றொன்று அவசியம்' என்பதை மறந்து விடுகின்றனர். சட்டத்தின் ஆட்சி என்பதை மறந்து தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்து விடுகின்றனர். முதற்கண்,"சார்க்'பிராந்தியத்தையே எடுத்துக்கொள்வோமாயின் பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இராணுவத்தளபதியாக பதவி வகித்தவராகிய சியாஉல்ஹக் அன்று பிரதம மந்திரியாயிருந்த சுல்ஃபிக்கார் அலி பூட்டோவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியவர். கல்வியில் பெரிதும் மேம்பட்டவராயினும் பூட்டோ இறுமாப்பின் இருப்பிடமாய் விளங்கியவர். தனது பதவிக்காலத்தில் சியாஉல்ஹக் ஐ இராணுவத் தளபதியாக நியமித்தவர். ஆனால், ஹக் பின்பு பூட்டோவை வீழ்த்தியது மட்டுமல்லாமல் இன்னோரன்ன குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பூட்டோவைத் தூக்கிலும் இட்டவர். பின்பு ஹக் மறைந்தது தெரியாமல் மறைந்து விட்டார் என்பது வரலாறு அதற்குப் பிந்திய காலகட்டத்தில் பாகிஸ்தானில் நவாஸ்ஷெரீப் பிரதமராயிருந்த போது இராணுவத் தளபதி பேர்வெஸ் முஷாரப் பிரதமர் சரீபை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியவர். "சர்வமும் நானே' என்று முஷாரப் எண்ணியதாலேயே பின்பு தனது வீழ்ச்சியைச் சந்தித்தவர். அதாவது, குறிப்பாகச் சொன்னால் நீதித்துறையினைத் தனது காலடிக்குக் கொண்டு வருவதற்கு அவர் முற்பட்டுத் தான் படுதோல்விக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டவர்.

தனக்கு எதிரானவர்கள் என அவர் எண்ணிய அனைத்து நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ததோடு தலைமை நீதிபதி இப்திக்கார் சௌத்ரியை வீட்டுக்காவலில் தடுத்துவைத்தவர். முதலாளித்துவ ஜனநாயகத்துக்கே மருந்துக்கும் இடமில்லையென்றவாறாகவே முஷாரப் கொடுங் கோலோச்சியவர். சௌத்திரியின் மனோதிடமும் அவர் சார்பில் கிளர்ந்த சட்டத் தரணிகள் தரப்பினர் முடுக்கிவிட்ட போராட்டங்களும் காரணமாக முஷாரப் நாட்டை விட்டு ஓடி, நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் அஞ்ஞாதவாசம் செய்து வருகின்றார். இப்திகார் சௌத்திரி மீண்டும் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருகின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரை இன்று நீதித்துறையின் சுயாதீனம்பெரிதும் கேள்விக் குறியாயுள்ளது. உண்மையில் இந்த நிலைமை ஜே.ஆர்.ஜயவர்தன அன்று பதவியேற்ற கையோடு ஆரம்பிக்கப்பட்ட கைங்கரியமாகும். அவரது நண்பராயிருந்த நெவில் சமரக்கோன் ஜயவர்தனவினால் நியமிக்கப்பட்டு, தனது தாளத்திற்கு ஆடுவார் என்று ஜயவர்தன எண்ணியிருந்தாராயினும் சமரக்கோன் மசிய மறுத்து விட்டார். நீதித்துறை சரிந்தால் மக்கள் கதி அம்போ என்றாகி விடும். ஆனால் மக்கள் எத்தனை காலம் தான் பொறுமை காப்பார்கள் என்று கூற முடியாது.

அரபுலகில் சென்ற வருடம் ரியூனிசியாவில் ஆரம்பித்து எகிப்து, லிபியா ஊடாக சிரியா வரை சென்றுள்ள "அரபு வசந்தம்' அது தெற்காசியாவை எட்டி வருவதாக மாலைதீவுக் கிளர்ச்சி அமைகிறது எனலாம். இலங்கையிலும் குறிப்பாக தற்போது முற்றிலும் அவசியமற்ற  டாம்பீக அபிவிருத்திச் செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மறுபுறத்தில் நாடு கடன் பளுவில் சிக்கி வைக்கப்பட்டு, வாழ்க்கைச் செலவு உயர்ந்த வண்ணம், சென்று கொண்டிருக்கையில் மக்களுக்கு திண்டாட்டமே எஞ்சியுள்ளது. இந்த நிலைமை மேன்மேலும் மோசமடையும் சாத்தியக் கூறுகளே காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதில் முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டிய மத்திய வங்கி திக்கற்று நிற்கிறது. மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வர்த்தக இழப்பீடுகளை எதிர்வு கூற முடியாமற் போய் விட்டது என்று கூறவைத்தது வெட்கப் கேடானாதாகும். பகுத்தறிவு படைத்த மக்கள் எள்ளி நகையாடுமளவுக்கு நாட்டு விவகாரங்கள் நகர்த்தப்பட்டு வருவது தான் மிகுந்த கவலைக்குரியது மட்டுமல்ல கேள்விக்குரியதும் கூட. 

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment