காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும்

‘ஆவீன மழை பொழிய இல்லம் வீழ,
அகத் தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல
தள்ளவொண்ணா விருந்துவர சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே’தனிப்பாடல் திரட்டின் இப்பாடல் வரிகள் மனிதனின் வாழ்வில் துன்பம் எப்படி வரும் என்பதை சுட்டி நிற்கிறது. அடுத்தடுத்து துயரம், எப்படிச் சமாளிப்பது என்ற நிலையில் தான் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு தொடருகின்றது. அதேசமயம் தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்த இலங்கை அரசு நினைத்துக் கொண்டமை மிகப்பெரும் துரதிர்ஷ்டம் ஆகும். 2009 ஆம் ஆண்டுமே மாதத்துடன் முடிபுக்கு வந்த வன்னிப் போரின் பின்னர் அரசும், சிங்கள மக்களும் தமிழ் மக்கள் தொடர்பில் இரக்கம் கொண்டிருக்க வேண்டும்.

மிகப்பெரும் அழிவை தமிழ் மக்கள் சந்தித் தமைக்காக அவர்களிடம் பகிரங்க மன்னிப்பை அரசு கோரியிருக்க வேண்டும். அதுவே ஜனநாயக அரசொன்றின் தார்மீகப் பண்பாக இருந்திருக்கும். ஆனால் தமிழ் மக்கள் மீது அரசு ஒருபோதும் கவலை-இரக்கம் கொண்டதாக இல்லை. மாறாக வன்னிப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்த அத்தனை மக்களும் விடுதலைப்புலிகள் என்ற கோதாவில், அரசினால் நோக்கப்பட்டனர். சுமார் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து அவர்களை படுத்தாப்பாடு படுத்தியதை நினைக்கும்போது அசுரத்தனத்திற்கு முடிவே இல்லையா என்றே எண்ணத் தோன்றும்.

30 ஆண்டுகால யுத்தம். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், உடைமை அழிவுகள் என்ற வரலாற்றில் யுத்தத்தின் வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இல்லை. எல்லோரும் இந்த நாட்டில் வாழ முடியும் என அரசு கூறிக் கொண்ட அதேநேரம், தமிழ் மக்கள் எக்காலத்திலும் தலைநிமிரக் கூடாது என்ற அடிப்படையில் செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கலாகாது என்பதில் ஆட்சிப்பீடம் மிகவும் இறுக்கமாக இருந்தது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றி பெறுமாக இருந்தால், இலங்கை அரசின் எதிர்காலம் மிகவும் துன்பத்திற்குரியதாக இருக்கும் என்பதைக் கூறித்தான் ஆகவேண்டும்.

கொட்டடிக் கறுத்தார் என்ற தனவந்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்தார். குதிரை வண்டியில் தான் அவர் பயணிப்பது வழக்கம். அவரின் பின்னடிக்காலத்தில் எல்லாம் இழந்தாயிற்று. ஒருநாள் அவர் கால்நடையாக யாழ்ப்பாண நகருக்குச் சென்றார். இதனைக் கண்ணுற்ற ஒருவர் ஐயா! உங்களுக்கும் இக்கதியா என்றார். அதற்கு கறுத்தார் ‘‘காலம் பிழைத்தால் கறுத்தார் தான் என்ன செய்யமுடியும்’ என்றாராம். காலம் பிழைத்தால் கறுத்தார் அல்ல அந்த சூரிய சந்திரருக்கும் ஆபத்துத்தான். அதனைத் தான் கிரகணங்களும் உணர்த்தி நிற்கின்றன போலும்.நன்றி - வலம்புரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment