சீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா


அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை விரிவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் மற்றும் வேவுபார்க்கும் விமானங்களை பிலிப்பைன்ஸில் நிறுத்தவும் வாஷிங்டன் மற்றும் மணிலாவிற்கு இடையில் ஜனவரி 26 மற்றும் 27 இல் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள், சீனாவைச் சுற்றிவளைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயத்தில் மற்றொரு படியாக உள்ளது. அமெரிக்க யுத்தக் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது மற்றும் பிலிப்பைன்ஸ் வழியாக இன்னும் அதிகமான அமெரிக்க துருப்புகளை சுழற்சிமுறையில் கொண்டுவருவது உட்பட இராணுவத் தளங்களைக் கூடுதலாக பயன்படுத்துவதை அந்த விவாதங்கள் உள்ளடக்கி இருந்தன. மார்ச் வரையில் அந்த உடன்படிக்கை இறுதி செய்யப்படாமல் இருந்த போதிலும் அதன் வடிவம், வடக்கு அவுஸ்திரேலியாவில் அமெரிக்க கப்பல்களை நிறுத்தவும் மற்றும் அவுஸ்திரேலிய விமான மற்றும் கப்பற்படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி அளிக்கவும் கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்ட கான்பெரா உடனான ஓர் உடன்படிக்கைக்கு ஒத்திருக்கிறது.


அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு பிலிப்பைன்ஸில் பலத்த மக்கள் எதிர்ப்பு இருக்குமென்பதை நன்கறிந்திருந்த அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ்“ அதிகாரிகள் அந்த பேச்சுவார்த்தையை இரகசியமாக வைத்திருக்க முயன்றனர். இருந்தபோதிலும் கடந்த வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலர் ஆல்பர்ட் டெல் ரோசாரியோ "அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை சுழற்சி முறையிலும் கூடுதலாகவும்' வைத்திருக்கும் விதத்தில் இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக உறுதிப்படுத்தினார். முன்னதாக பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையில் அமெரிக்காவின் பெரிய சுபிக் வளைகுடா  கப்பற்தளத்தின் ஒப்பந்த காலத்தை நீடிக்கக் கூடாதென 1991 இல் பிலிப்பைன்ஸ் செனட்டில் வாக்களிக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா அதன் அந்த தளத்தை திரும்பப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட், இராணுவ கூட்டணிகளைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எழுதுகையில், அது பிலிப்பைன்ஸ்அமெரிக்க இராணுவ பேச்சுவார்த்தைகள் குறித்து மட்டுமல்லாமல், மாறாக “வியட்நாம் மற்றும் தாய்லாந்த போன்ற ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஒபாமா நிர்வாகம் முன்னீடான முயற்சிகளை செய்து வருவதாக' குறிப்பிட்டது. ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான ஏற்பாடுகள், தாய்வானுக்கு பெரும் ஆயுத விற்பனை, சிங்கப்பூரில் புதிய கடலோர யுத்த கப்பல்களை நிறுத்துதல், மற்றும் இந்தியாவுடன் ஒரு முக்கிய மூலோபாய கூட்டணி ஆகியவை உட்பட ஆசியா முழுவதிலும் கூட்டணிகளை மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்முறையில் அமெரிக்கா உள்ளது.

சீனாவை"அடக்கி வைக்க' விரும்பவில்லையென்ற வாஷிங்டனின் வாதங்கள் முற்றிலும் அர்த்தமற்றவையாக உள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் அமெரிக்கா"மீண்டும் தென்கிழக்கு ஆசியாவில் திரும்பியுள்ளது' என்று அறிவித்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் அதிகரித்துவரும் இராஜாங்க செல்வாக்கையும் பொருளாதார இலக்குகளையும் குழிபறிக்க வாஷிங்டன் அதன் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தின் பெரும் சக்தியை அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் கொண்டு வந்துள்ளது.

ஆசியாவிற்குள் அமெரிக்க இராணுவ "புதியதாக நிலைகொள்ளல்' பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை விரிவாக்கும் ஓர் உந்துதலோடு கைகோர்த்து செல்கிறது. பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை என்பது சீனாவின் இழப்பில் அமெரிக்காவின் விதிகளின் படி பசுபிக்கில் வர்த்தகத்தை ஒழுங்கமைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொருளாதார அணியாகும். அவருடைய கடந்த வார ஜனாதிபதி உரையில் ஒபாமா சீனாவை சுட்டிக்காட்டி"சீனா போன்ற நாடுகளில்' தயாரிக்கப்பட்ட பண்டங்களுக்கு எதிராக எழும் உத்தியோகபூர்வ வர்த்தக குறைபாடுகளைத் தீவிரமாக்க ஒரு புதிய"வர்த்தக அமுலாக்க பிரிவை'  அவர் ஸ்தாபிக்க இருப்பதாக அறிவித்தது.

ஆசியாவில் கட்டியெழுப்பப்படும் அமெரிக்க இராணுவம் அதன் சொந்த விதத்தில் ஓர் அபாயகரமான தர்க்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு பாரிய உற்பத்தி விரிவாக்கம் சீனாவை பெருமளவிற்கு எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்படி செய்துள்ளது. சீனாவிற்குள் கொண்டுவரப்படும் மொத்த எண்ணெயில் ஏறத்தாழ 80 சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து இந்திய கடல் பகுதியைக் கடந்து மலாக்கா ஜலசந்தி வழியாக தென்சீன கடலுக்குள் நுழைகிறது.

"கட்டுப் பாடற்ற கடல்போக்குவரத்திற்கான' தனிச்சலுகையின் கீழ் பென்டகன் தென் சீனாவிலும் மற்றும் மலாக்கா, ஜலசந்தி போன்ற முக்கிய"தடைப்படுத்தக்கூடிய இடங்களிலும்' அதன் மூலோபாய செல்வாக்கைத் தக்கவைக்க அது இராணுவ உடைமைகளை மீள் நிலைப்படுத்தல் செய்து வருகிறது. அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் நிலைநிறுத்தப்பட்டவைக்கு கூடுதலாக பிலிப்பைன்ஸில் துருப்புகளையும் கப்பல்களையும் நிறுவதென்பது சீனாவின் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் இறுக்குமதியை மூடுவதற்கான மற்றும் அதன் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அமெரிக்காவின் சக்தியை அதிகரிக்கிறது.  ஒப்பீட்டு ரீதியில், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் சீனாவின் எழுச்சியுமே அப்பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் விதத்தில் அமெரிக்க இராணுவத்தை நிறுவுவதற்குப் பின்னால் உள்ள உந்து சக்தியாக உள்ளது. ஆழமடைந்துவரும் உலகளாவிய நிதியியல் நெருக்கடி நிலைமைகளில், சீனாவிற்கு குழிபறிக்கவும் ஒரு பொருளாதார மற்றும் இராணுவ போட்டியாளராக அதன் எழுச்சியை முன்கூட்டியே கைப்பற்றவும் எதையும் பொருட்படுத்தாமல் வாஷிங்டன் அதன் இராணுவச் சக்தியை பயன்பத்தவதன் மூலம் அதன் பொருளாதார பலவீனத்தை ஈடு செய்ய முனைகின்றது.

அமெரிக்க படைகளை மூலோபாய பிராந்தியங்களில் நிறுவுவதென்பது 1941 இல் ஜப்பானுக்கு எதிராக வாஷிங்டன் கொண்டு வந்த எண்ணெய் தடையாணையை நினைவுகூரச் செய்கிறது. அந்நடவடிக்கை பசுபிக் யுத்தத்திற்கு இட்டுச் சென்ற ஒரு தொடர்ச்சியான சம்பவங்களின் இயக்கங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. சீனாவை சுற்றிவளைப்பதும், தடையாணைகளோடு அதனை முடமாக்கும் ஒரு அபாயத்தை அமெரிக்கா முன்னிறுத்துகின்ற நிலையில், சீன ஆளும் மேற்தட்டின் முன் விடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சீனாவின் நலன்களை மிகவும் தீவிரமாகப் பாதுகாக்க வலியுறுத்தும் பெய்ஜிங்கிற்குள் இருக்கும் பிரிவுகள் அதிக ஆதரவைப் பெறுவது யுத்தத்திற்கான உந்துதலை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தும்.

சீன அரசு பத்திரிகை ஒன்றில் ஜனவரி 29 இல் வெளியான தலையங்கம், வாஷிங்டன் உடனான மணிலாவின் இராணுவ பேச்சுவார்த்தைகளுக்கு விடையிறுப்பாக பிலிப்பைன்ஸிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை வலியுறுத்தியது. அந்த தலையங்கம் எச்சரித்தது."அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவில் ஒரு படி முன்னால் எடுத்து வைத்தால் அது சீனாவுடனான பொருளாதார கூட்டுறவில் ஒரு படி பின்னால் எடுத்து வைப்பதைக் குறிக்கிறது. நீண்டகால அடிப்படையில் சீனா ஆசியான் நாடுகளுக்கும் மற்றும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் பொருளாதார நடவடிக்கைகளை வெட்டவும் அதன் பொருளாதார பலத்தை பயன்படுத்தும்'.

சீனாவுடனான ஒபாமா நிர்வாகத்தின் மோதல், ஆசியாவை ஒரு வெடிமருந்து வெட்டகமாக மாற்றி வருகிறது. வட கொரியா மற்றும் தாய்லாந்திற்கு இடையில் தென்சீன கடலில் நீண்டகாலமாக இருந்துவரும் பிராந்திய மோதல்களிலிருந்து சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்சினைகள் வரையில் ஏற்கனவே அப்பிராந்தியம் பல முக்கிய பற்றியெரியும் புள்ளிகளைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கின் அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க இராணுவத்தால் காட்டப்படும் மூர்க்கத்தனம், சார்பு ரீதியில் ஒரு சிறிய சம்பவமும் கூட இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் ஒரு நாசகரமான உலகளாவிய மோதலைத் தூண்டிவிடும் அபாயத்தை அதிகரித்திருக்கின்றது.

யுத்தத்திற்கான உந்துதல், தனியார் இலாப அமைப்பு முறையிலும் மற்றும் உலகத்தை போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகளாக காலாவதியாக பிரித்துள்ளதற்குள்ளும் வேரூன்றியுள்ளது. முதலாளித்துவத்தை அகற்றி, மனிதயினத்தின் பெரும்பான்மை மக்களின் அத்தியாவசிய சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ந்து விடாமல் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு மட்டுமே இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் தகைமையுள்ளது.

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment