அரசின் அரசியல் வங்குரோத்துத்தனமே வெவ்வேறு வடிவங்களில் பேசுகிறது


இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சனத்தொகை குறைவாயிருப்பதால் சிறுபான்மையினர் என்றும் சிங்கள மக்கள் சனத்தொகை கூடுதலாயிருப்பதால் பெரும்பான்மையினர் என்றும் இனத்துவ ரீதியாக வேறுபடுத்தப்பட்டிருக்கின்றதல்லவா? கூடவே, சிறுபான்மையினரை சிங்கள மொழியில் "சுலுஜாதிக்க' என்றும் பெரும்பான்மையினரை "மகஜாதிக'  என்றும் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கங்கள் அடையாளப்படுத்தி "சுலுஜாதிக்க' மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆள்வதுதான் தமது வகிபாகம் என்ற பிற்போக்கான சிந்தனையில் செயற்பட்டு வந்துள்ளன.  அதாவது, சிங்கள பெரும்பான்மை இனம் ஆளும் இனம் என்றும் சிறுபான்மை இனங்கள் ஆளப்படும் இனங்கள் என்றும் துருவப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டது. இதுதான், ஆளும் வர்க்கங்களின் பிரதான ஆயுதம்


எனவேதான், ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து நாட்டு மக்கள் வர்க்க ரீதியாகவோ, சமூக பொருளாதார  ரீதியில் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் துன்ப துயரங்களுக்கு முகம்கொடுக்கும் அனைத்து இன மக்கட் பிரிவினர் என்ற ரீதியாகவோ கைகோர்த்தது அணிதிரள்வதற்கு இடமில்லாதவாறாகவே சிங்கள மேலாதிக்கம் கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் சிங்கள இனவாத, முதலாளித்துவ சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் இதனைத் தமது பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. "இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையோ, சாந்தி சமாதானத்தையோ ஏற்படுத்த வேண்டிய பணியை மாறி மாறி பதவிக்கு வந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க.தலைமையிலான அரசாங்கங்கள் புழுதியில் எறிந்ததன் விளைவாகவே கால் நூற்றாண்டு கால பாரிய அழிப்பு யுத்தத்திற்கும் என்றுமில்லாதளவு கடன் சுமைக்கும் நாடு இட்டுச் செல்லப்பட்டது. 


இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்தா?

அன்று 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தினை இயற்றியதன் மூலம் இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்து என்று அரசியல் வடிவம் கொடுத்தவர். ஆயினும், சிங்கள மேலாதிக்கம் மென் மேலும் வீறு கொண்ட நிலையிலேயே அவர் அடுத்த கட்டமாக பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவர். பின்பு தனது உயிரையும் சோமராம தேரரின் துப்பாக்கி வேட்டுக்கு இரையாக்கியவர். பண்டாரநாயக்க 1956 ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்து 3 1/2  வருடத்திற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன. 1972 இல் பண்டாரநாயக்காவின் துணைவியார் சிறிமாவோ, விலைபோன பழைய இடதுசாரிகளின் துணையுடன், சாதாரண சட்டமாயிருந்த "சிங்களம் மட்டும்' சட்டத்தை அரசியலமைப்பு சட்டமாகத் தரமுயர்த்தியதோடு, பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கும் மதத்திற்கும் மணம் முடித்து வைத்தவர்.

இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அரசு ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்து, நாட்டின் இறைமையும் அத்தோடுள்ளது என்ற மிடுக்கு தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பிரகடனப்படுத்தாத தலைநகரமாக அம்பாந்தோட்டை கட்சிப்படுத்தப்படுகிறது. இத்தகைய பின்புலத்திலேயே குறிப்பாக புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்து, "காணி அதிகாரம் தரமாட்டேன், பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன்' என்றெல்லாம் எதேச்சையாக ஜனாதிபதி ராஜபக்ஷ முழங்கி வருவதைக் காணலாம். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாகப் பத்திரிகையாளர் மாநாட்டில் கிருஷ்ணா அறிவித்தது தொடர்பாக எழுந்த வாதப்பிரதிவாதங்களுக்கு நன்கு தெரிந்தவையாகும்.

30.01.2012 ஆம் திகதி அலரி மாளிகையில் ஊடகத்துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்த போது, தான் இந்தியாவுடனேயே 13+ விடயத்தை ஆராய்ந்ததாகவும் வடக்கு கிழக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் தான் பென்தர ஆற்றுக்கப்பால் செல்ல முடியாத நிலைமை உருவாகிவிடும் என்று பரந்துபட்ட சாதாரண சிங்கள மக்களைக் குழப்பிவிடும் குதர்க்கமும், காணி அதிகாரத்தைப் பொறுத்து இறுதி அதிகாரம் ஜனாதிபதியின் கையிலேயே இருக்கும் என்பதும் ஜனாதிபதி ராஜபக்ஷவினாலும் ஏனைய அரசாங்க முக்கியஸ்தர்களாலும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது, அர்த்தமுள்ளதும் சாதாரண ஜனநாயக நடைமுறைக்குட்பட்டதுமாகிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு தனது தலைமையிலான அரசாங்கம் தயாராயில்லை என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். 13+ தீர்வு வரை அரசாங்கம் செல்லத் தலைப்படுமாயின் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடப்போவதாக "ஜாதிக்க ஹெல உறுமய'  தலைவர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (என்.எவ்.எவ்.) தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர். இவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். எனவே இவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒரு பம்மாத்து என்பதைப் புரிந்துகொள்வது ஒரு சிறுபிள்ளைக்கும் கடினமாயிராது.

மேலும் ஊடகத்துறையினருடனான மேற்குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ.) தரப்பினரை வெகுவாகச் சாடியுள்ளார். அதாவது, த.தே.கூட்டமைப்பு தரப்பினர் அரச தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லையென்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் பாணியில் நடந்துகொள்வதாகவும் வழக்கம் போல் வாய்ப்பாடாகக் கூறியுள்ளார். அதாவது, தமிழர் தரப்பினர் இறையாண்மையற்றவர்கள், கொடுப்பதை எடுக்க வேண்டும் என்றொரு அரசியல் வங்குரோத்துத்தனத்தின் வாயிலாயெழுந்த அகங்காரமே பேசுகின்றது.

ஊடகத்துறையினரிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் ஊடகவியலாளர்கள் இன வாத ரீதியில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அது முதல் தடவையுமல்ல. இத்தகைய பல விடயங்கள் வெறுமனே பழக்கதோஷமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன எனலாம். ஏனென்றால் அவர் எதையாவது குறிப்பானதாகச் சுட்டிக்காட்டவில்லை. அதேநேரத்தில் சிங்கள ஊடகங்களோ, சில ஆங்கில ஊடகங்களோ எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி அவர் எதுவித குற்றச்சாட்டையும் வெளிப்படுத்தியதாக நாம் அறியவில்லை.

அரசாங்கம் ஏன் தடுமாறுகின்றது

அரசியல் ரீதியாகவும் பொருளாதார துறையிலும் ராஜபக்ஷ அரசாங்கம் தடுமாறிக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, இம்மாதம் 27 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளைப் பொறுத்தவரை அரசாங்கம் கலக்கமடைந்திருப்பது தெரிகிறது. அந்த வகையிலேயே அமெரிக்கா வெளிப்படுத்திய நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு ஒரு தூதுக்குழு வாஷிங்டன் விரையவேண்டுமென்று சென்ற வார மந்திரி சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார். மேற்படி மனித உரிமைகள் சபையின் சென்ற தடவை அமர்வின் போது "தருஸ்மன் அறிக்கை' என அழைக்கப்படும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையானது ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கையை இலங்கை அரசு தரப்பினால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்டதாகிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் அமர்வுகளின் போது சமர்ப்பித்து ஆராயப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்றவாரம் வெளிவிவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிக்கை அவ்வாறு சமர்ப்பிக்கப்படமாட்டாதென அறிவித்தார்.

மறைப்பதற்குப் பல விடயங்கள் இருப்பதாலேயே அவ் அறிக்கைக்கு இருட்டடிப்புச் செய்யப்படுவதாக யாரும் எண்ணுவது இயல்பானதே. அமைச்சர் பீரிஸ் ஜனாதிபதியின் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் நோக்கில் சில சந்தர்ப்பங்களில் கோமாளித்தனமாகக் காய்கள் நகர்த்துவதுண்டு. அமைச்சர் பீரிஸ் அறிக்கை விடுத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர்களுடனான வாராந்த சந்திப்பின் போது, மேற்படி அறிக்கை எதிர்வரும் ஜெனீவா அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே, அரசாங்கம் எவ்வளவு தூரம் குழம்பிப்போயுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதனிடையில் அறிக்கையானது முழுமையாக அமுல் செய்யப்படுமென 64 ஆவது ஆண்டு சுதந்திர உரையில் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பது சர்வதேச சமூகத்திற்குத் தீனியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இது பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம்.

அடுத்ததாக நாட்டின் பொருளாதார நிலை மென்மேலும் கவலைக்குரியதாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுக்குழு சென்றவாரம் தெரிவித்துள்ளதைக் காணலாம். குறிப்பாக வர்த்தக சமநிலை பெரிதும் எதிர்மறையாயுள்ளது. இறக்குமதிச் செலவீனங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. கடன் தொகை கட்டுகடங்காமல் உள்ளது என்றெல்லாம் தூதுக்குழுத் தலைவர் கலாநிதி பிறயன் அற்கன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ரூபா மேலும் மதிப்பிறக்கும் செய்யப்பட்டு வட்டி விகிதத்தை அதிகரிப்பதும் அவசியம் என்றுஅவர் கூறியுள்ளார். அதனையடுத்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடன்கள் வழங்குவதை அதிகளவில் குறைத்துவிடுமாறும் வட்டி வீதத்தை அதிகரிக்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு காண வேண்டும். அதன் மூலம் நாட்டில் உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டைத் துரித கதியில் இராணுவமயப்படுத்திச் செல்வதை நிறுத்த வேண்டும், விரலுக்குத் தக்க வீக்கம் என்பதை முற்றாக மறந்துவிடாது தாங்க முடியாத கடன்களைப் பெற்று பல்வேறு டாம்பீக செலவீனத் திட்டங்கள் இனிமேலாவது நிறுத்த வேண்டும். அப்படியென்றால் தான் நாட்டைக் காப்பாற்றி ஓரளவேனும் முன்னேறிச் செல்வதற்கான வழி சமைக்க முடியும்.

நன்றி தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment