அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி 3


தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டமானது, சுமார் நாற்பதாண்டு கால அறவழியிலான போராட்டத்தினூடாகவும், பின்னர் சுமார் நாற்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தினுடாகவும் நகர்ந்து அடுத்த கட்டம் என்னவென்ற நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.கடந்த பத்தியிலே, தமிழ்மக்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களை உரியமுறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒரு அம்சமாக, உளவியல் ரீதியான ஆரம்பத் தயார்படுத்தலுக்கான மிகச்சுருக்கமான அடிப்படை, அமெரிக்க படை மற்றும் படைக்கல குறைப்பு சொல்லும் செய்தி மற்றும் சர்வதேச ரீதியாக அரசியலில் எதிர்பாராத ரீதியாக இடம்பெற்ற ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துக்கு சொல்லும் செய்தி போன்ற விடயங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். இந்தவாரப் பத்தியிலேயே, தமிழ் மக்களுக்கு படிப்பினையாக இருக்கக்கூடிய மேலும் சில உலகளாவிய ரீதியான உதாரணங்களை, ஆசிய-பசிபிக் நோக்கிய அமெரிக்காவின் நகர்வோடு இணைத்து பார்ப்பதோடு, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.
தமிழர்களின் தற்போதைய மனநிலை
தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டமானது, சுமார் நாற்பதாண்டு கால அறவழியிலான போராட்டத்தினூடாகவும், பின்னர் சுமார் நாற்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தினுடாகவும் நகர்ந்து அடுத்த கட்டம் என்னவென்ற நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.
அறவழிப் போராட்டம், குறித்த இலக்கை எட்டாது என்றவுடன் அடுத்தது ஆயுதப் போராட்டம் என்றும், ஆயுதப் போராட்டம் வீழ்ச்சியடைந்தவுடன், அடுத்தது அறவழிப் போராட்டம் என்றும் எழுந்தவாரியான முடிவுகளுடன் அடுத்த கட்டம் நிர்ணயிக்கப்படுதல் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல. 

ஆதலால், உகந்த சூழலிலே, பொருத்தமான முறையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள், ஆக்கபூர்வமான சுயவிமர்சனங்கள் ‘உள்ளக ரீதியிலே’ குறிப்பாக தமிழ்தேசியத்தின் எதிரிகளுக்கு தீனிபோடாத வகையில், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி, உரிமைப் போராட்டத்தை சரியான பாதையில் நகர வழியேற்படுத்துவதற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்தத் தருணத்தில்திலே, பலஸ்தீனத்துக்கான எனது சுற்றுப்பயணத்தின் போது, தகுதிவாய்ந்த, ஆனால் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஒரு பலஸ்தீனியர் சொன்ன கருத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
“எங்களுக்குள் (பலஸ்தீனியர்களுக்குள்) பல பிளவுகளும், இரு பெரும் பிரிவுகளும் இருக்கிறன. எங்களது அணுமுறைகளிலும், எங்களது இலக்கை நோக்கிய எமது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதில் வேறுபாடுகளும், நெருக்கடிகளும் உள்ளன. ஆனால், இங்குள்ள [பலஸ்தீனத்தில்] எல்லோருக்கும் தெரியும் எங்களுடைய பிரதான எதிரி யார் என்று. அத்துடன், எங்களுடைய இலக்கில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். ஒரு குடும்பத்துக்குள் முரண்பாடுகள் தோன்றுவதே போன்றதே, எமக்குள் நிலவிவந்த முரண்பாடுகளும். ஆனால், எமது முரண்பாடுகள் எமது எதிரியை பலப்படுத்துவதானது, எமது இலக்கை நாமே சிதைப்பதற்கு வழியமைத்துவிடும் என்பதை அச்சத்துடன் புரிந்துகொண்டோம். எமது பிளவுகளை எதிரி விரும்பினான் என்பதையும் அறிந்து கொண்டோம். ஏனெனில், எம்மை அழிப்பதற்கு அது அவனுக்கு தீனிபோட்டது. ஆதலால், நாம் ஒன்றிணைந்தோம். எங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை, எமக்குள் நாமே பேசி உடன்பாடுகளுக்கு வந்தோம். அது எமது சகோதரத்துக்குள் பகமை வளர்வதை கட்டுப்படுத்தியது. இன்று நாம், எமது போராட்டத்தில் இன்னொரு வரலாற்று மைல்கல்லை கடந்து, புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்றார் அவர்.
அவருடைய கருத்து தமிழர்களது உரிமைப் போராட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். அதனை, புரியவேண்டியவர்கள் சரிவரப் புரிந்து, தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையில் தமது பங்களிப்பினை வழங்குவது பொறுப்புமிகுந்ததும், வரவேற்கத்தக்கதுமான செயலாகும். 
அடுத்து, ‘ஏன் இப்படி நடந்தது’, ‘நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்’, ‘எல்லாம் போச்சுது’, ‘சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டதே’, ‘இனி என்ன நடந்தால் என்ன’, ‘அனைத்துலகம் என்ன செய்யும் அல்லது ஏதாவது எங்களுக்காக செய்யுமா?’, ‘எங்களுக்கு நீதிகிடைக்க அல்லது தீர்வு வர எவ்வளவு காலம் காலம் எடுக்கும்?’ மற்றும் ‘(ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது?’ போன்ற ஆதங்கங்களும், கேள்விகளும் தமிழ்மக்களிடத்தில் பரவலாக உள்ளன.

மேலே குறிப்பிட்ட கேள்விகளும் ஆதங்கங்களும், மனிதப் பேரவலத்தினால் தமது உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இயல்பானவை அல்லது தவிர்க்கமுடியாதவை என்பதையே உலக வரலாறு சொல்லி நிற்கிறது. அதேவேளை, ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டம் குறுகிய காலத்துக்குள் ‘மீள் எழுச்சியில்’ ஒருபடி முன்னிலை வகிக்கின்றது என கூறலாம்.
இதற்கொரு உதாரணமாக, 2009 மே மாதம் என்பது தமிழ்மக்களது வாழ்வில் அதிஉயர் நெருக்கடியும், ஆழமான சோகமும் நிறைந்த மாதம். சிங்கள தேசம் வெற்றிப் பெருமிதத்தில் இறுமாப்பும், எக்காளமும் இட்டபடியிருந்த நேரம். ஆனால், வெற்றிபெற்றதாக அறிவித்தவர்கள், அதை அனுபவிக்க முடியாத நிகழ்வு தொடங்கியது. 
மின்சாரக் கதிரை என்று சிறிலங்கா அதிபர் அடிக்கடி அலறும் நிலை தொடங்கியது. ஒரு சிலரைத் தவிர, தமிழர், சிங்களவர் என்ற வேறுபாடில்லாமல் யார் நினைத்திருந்தார் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்ற விடயம் மேற்கிளம்பி படுகொலையாளர்களை பதறவைக்கும் என்று? ஆம், பெரும்பான்மையானவர்கள் நினைத்திராதது நடந்தது. இது ஒரு ஆரம்பமே.

இது சரியான திசையில் நகரவேண்டுமானால் தமிழர்கள் மனநிலையில் உறுதியும், பின்வாங்காத தன்மையும், எங்களுக்கான காலம் வரும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது, இருந்தால், மாற்றுநிலையுடைய பூகோள அரசியலையும், விரிவாக்கப்படும் அமெரிக்காவின் வியூகத்தையும் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமான முறையில் கையாளலாம். வேட்கையுடனும், இலட்சியப் பற்றோடும், விடாமுயற்சியோடும் செயற்படுபவனுக்கே நாளை சொந்தமாகும்.
உலக வரலாறு சொல்லும் பாடம்
தமிழ்மக்களில் ஒரு சாரார், எமக்கு நடந்த இன்னலால் மனமுடைந்து போயுள்ளனர். அதன் வெளிப்பாடாக எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 
உரிமைக்கான போராட்டத்திலே, வெற்றிபெற்றிருந்தாலும் சரி, தோல்வியடைந்திருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலையை அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பது மெய்நிலை. இதுக்கமைவான விடயங்களை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் தமிழ் மக்களுக்கு அவசியமான ஒரு உதாரணத்தை நோக்குவோம்.

உலக வரலாற்றிலே முதன்முதலாக இடம்பெற்ற இனப்படுகொலையாக ஆர்மேனியர்கள் மீது துருக்கி மேற்கொண்ட இனப்படுகொலை பதிவாகியுள்ளது. இனப்படுகொலையின் ஆரம்பம் 1850ம் ஆண்டுகளில் முளைவிட்டிருப்பினும், அனைத்துலகம் அதனை முதலாம் உலகப் போர் முடிவோடே கவனமெடுக்கத் தொடங்கியது. ஆதலால், அதனை 1915 ம் தொடக்கம் 1923 வரை நடைபெற்ற இனப்படுகொலையாகவே வரலாறு பதிவுசெய்துள்ளது.
குறித்த எட்டாண்டு காலப்பகுதிக்குள், 10 தொடக்கம் 15 இலட்சம் வரையான ஆர்மேனியர்கள் துருக்கிய பேரரசினால் படுகொலைசெய்யப்பட்டனர். ஆனால், இன்றுவரை இதனை துருக்கி இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் ‘இனப்படுகொலையின் மறுக்கும்’ [Genocide Denial] நிலை தொடர்கிறது. ஆயினும், உலக பொருளாதாரத்தில் துருக்கி துரித கதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், அதனுடனான உறவை பேணுவதற்கே மேற்குலகம் விரும்புகிறது.
அதேவேளை, துருக்கி ஆர்மேனியர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து ஆர்மேனியர்கள் பல்வேறு தேசங்களுக்கும் பாதுகாப்புத் தேடி நகரத் தொடங்கினர். இன்று வரை ஆகக்குறைந்தது, இறமையுள்ள பத்தொன்பது நாடுகள் ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலையென்பதை ஏற்று, அங்கீகரித்துள்ளன. ஆனால், அதிகமான ஆர்மேனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவோ அதனை இன்னும் ஏற்று அங்கீகரிக்கவில்லை. 

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், 2005ம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ச்.டபிள்யு.புஸ் அவர்களுக்கு, இன்றைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்கள் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இனப்படுகொலையென அங்கீகரிக்குமாறு கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இனப்படுகொலை என்ற சொற்பதத்தையம் பிரயோகித்து வந்தார். ஆனால், அதிபரான பிற்பாடு, ஆர்மேனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தொடர்கின்ற போதும், இனப்படுகொலையென்ற சொல்லை தவிர்த்து வருகிறார். அனைத்துலக உறவில் பொருளாதாரத்தின் வகிபாகத்துக்கு இருக்கும் முதன்மையான நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், தமது முன்னைய பரம்பரையினர் மீது துருக்கிய பேரரசினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று அங்கீகரிக்க வைக்கும் செயற்பாடுகளில், அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஆர்மேனியர்கள் சளைப்பின்றி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் துருக்கிக்கும் – ஆர்மேனியர்களுக்குமிடையிலான கொதிநிலை தொடர்கிறது. ஆர்மேனியா ஒரு தனித் தேசமாக இன்று விளங்கினாலும், புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்கள் அதற்கான வலுவாகவும், அனைத்துலக குரலாகவும் இருந்து வருகிறார்கள்.
இதேவேளை, கடந்த ஜனவரி [2012] மாத நடுப்பகுதியில், ஆர்மேனிய இனப்படுகொலை சட்டம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, 86 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு, இனப்படுகொலையின் மறுப்பது குற்றச்செயல் எனும் மசோதவும் இயற்றப்பட்டது.
இது, துருக்கிக்கு கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. அதனால், பிரான்சுக்கும், துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதாரா உறவுகள் மோசமாக பாதிப்படையும் சூழல் உண்டாகியுள்ளது. இதனை பிரெஞ்சு அரசாங்கம் நிச்சயமாக எதிர்பார்த்தே இருக்கும். அப்படி இருந்தும், இத்தகைய ஒரு சட்டத்தை நடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததற்கான காரணத்தை அலசும் போது, தமிழ் மக்களுக்கும் அமைவான சில படிப்பினைகளை உணரலாம்.
2010 மே மாதம் உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு துருக்கிய கப்பல் பலஸ்தீனத்தின் காஸாவை நோக்கிப் பயணித்தது. இதனை இடைமறித்த இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதலையும் நடாத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், துருக்கிக்குமான உறவு மேலும் விரிசல் அடைந்தது. அதன் உச்சக்கட்டமாக இராஜதந்திர உச்சக்கட்ட தொனியூடாக பரஸ்பர எச்சரிக்கைகளும் விடப்பட்டது. இதேவேளை, துருக்கி ஹமாஸ்சிற்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது என்ற வலுவான சந்தேகங்களும் உள்ளன.
அத்துடன், பிரெஞ்சு வாக்குரிமை கொண்ட கணிசமான ஆர்மேனியர்கள் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்வரும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அவர்களது வாக்குகளும் சிறியளவிலான செல்வாக்கினை தன்னிலும் செலுத்தும் சக்தியாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டே நிக்கொலா சார்க்கோசி அவர்களுடைய அரசாங்கம் இத்தகைய ஒரு துணிகர நடவடிக்கையை எடுத்தது.
இத்தருணத்தில் ஒரு விடயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் முதன்மையான நாடுகளில் ஒன்றாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் நெருக்கமான ஒத்துழைப்புநிலை பல்வேறுபட்ட விடயங்களிலும் தொடர்கிறது. இரண்டும் மிக இறுக்கமாக நேசசக்திகள். அவ்வாறிருக்க, பொருளாதார நலனினை கருத்தில்கொண்டு, துருக்கியுடன் மென்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, முரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடிய நிகழ்வுகளை தவிர்த்து வருகிறது. இத்தனைக்கும், இஸ்ரேலின் அதிநம்பிக்கைக்குரிய நாடு அமெரிக்கா. அத்தகைய இஸ்ரேலுடன் துருக்கி கசப்பான உறவை பேணும்போதும் கூட, துருக்கியை நோக்கிய அமெரிக்காவின் மென்போக்கு நிலை தொடர்கிறது.
அதேவேளை, பிரான்சுக்கும், துருக்கிக்குமிடையில் சிறப்பான பொருளாதார உறவு நீடித்து வந்தது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமாக தாக்கத்தை செலுத்த வல்லது. அப்படியிருந்தும், பிரான்ஸ் அத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது.
ஆனால், இந்தமுடிவு அமெரிக்காவின் நாடிபிடித்து பார்க்காமல் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பின்வழிக் கதவு கலந்துரையாடல்கள் நிச்சயமாக நடந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளது.
ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமது பொதுநலனை கருத்தில்கொண்டு இரு நெருங்கிய நேசஅணிகள் எதிரும் புதிருமாக செயற்படுவது, இராஜதந்திரத்தில் ஒன்றும் புதியவிடயமல்ல. குறித்த மூன்று தரப்புகளும் ஒரு விடயத்தை நோக்கி நகரும் போது, அங்குள்ள நேச சக்திகள் தங்கள் நலனை பூர்த்தி செய்யும் நோக்கோடு, கலந்துரையாடி முன்னெடுக்கும் நகர்வு அனைத்துலக உறவில் சாதாரணமானது. இது, பொது எதிராளியை தமது நலனை நோக்கிய வலைக்குள் வீழ்த்துவதற்கு துணைநிற்கும். இதில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் நல்ல புரிந்துணர்வு நிலை உள்ளக ரீதியில் நிலவும்.
இதைவிட தீவிரமான ஒரு நிலை, ஆசிய-பசுபிக் நோக்கிய அமெரிக்காவின் வியூக விரிவாக்கத்தோடு இலங்கைத் தீவிலும் உருவாகப் போகிறது. அது ஏன்? அதனால் ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகளை விரிவாக ஆராய்வோம்.
- நிர்மானுசன் பாலசுந்தரம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment