பிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட சர்வதேச மருத்துவ மாநாடொன்றில் ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் இலங்கை நாட்டு வைத்தியர்கள் மூவர் சந்தித்துக் கொண்டனர். தத்தமது நாடுகளின் சிறப்புக்கள் குறித்து பெருமையுடன் அவர்கள் பேசிக்கொண்டனர். "எமது நாட்டில் ஒரு மனிதனது இதயத்தின் பாதியைப் பிரித்தெடுத்து இன்னொரு மனிதனுக்குப் பொருத்தி வெற்றி கண்டுள்ளோம்'' என்றாராம் ஜேர்மனி வைத்தியர். "இதுவென்ன பிரமாதம், அமெரிக்காவில் ஒரு மனிதனின் மூளையில் சரிபாதியை பிரித்தெடுத்து இன்னொரு மனிதனுக்குப் பொருத்தியுள்ளோம். இப்பொழுது அந்த இருவருமே நலமாக இருக்கிறார்கள்.'' என்றாராம். அமெரிக்க வைத்தியர்.
 
இலங்கையரான மற்றைய வைத்தியரோ, "இந்த விஷயத்தில் நீங்கள் எமது நாட்டை விட மிகமிகப் பின்தங்கியுள்ளீர்கள். ஏழு வருஷங்களுக்கு முன்னால் மூளையே இல்லாதிருந்த ஒரு மனிதரைப் பிடித்து நாட்டின் தலைவராக்கி வைத்திருக்கிறோம்'' என்றாராம். அந்தக் கதையை அப்படியே விட்டுவிடுங்கள். அது ஒரு கதை. அவ்வளவுதான். நாம் அரசியலுக்குச் செல்லலாம்.
 
ஒரு புறம் வேடிக்கைக் கதை போலிருந்தாலும், இன்றைய எமது நாட்டின் நிலை குறித்துச் சிந்தித்தால், தெளிவற்ற அரசியல் கொள்கையில் நாட்டு மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்பதே யதார்த்தம். 
 
சம்பள உயர்வு கோரி மின்சார, பெற்றோலிய மற்றும் நீர் வழங்கல் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு தலை சாய்த்து அவர்களது கோரிக்கைகளை அரசு ஏற்றது. அதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அரசுக்குத் தெரிவித்துள்ளது.
 
ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு, பல வழிகளிலும் இடையூறு விளைவிக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட தீர்மானம் மாணவர்களின் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டது. அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு நீறு பூத்த நெருப்பாக மக்கள் மனங்களில் கனன்று கொண்டுதான் உள்ளது. அவை இந்தப் போராட்டங்களுடன் நின்றுவிடப் போவதில்லை.
 
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியிலுள்ள பெருந்தொகைப் பணத்தை அரசு பயன்படுத்த முயன்றமை, தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் என்பன மக்களது எதிர்ப்புக் காரணமாக பிற்போடப்பட்ட தென்னமோ உண்மை தான். ஆயினும் பிரச்சினைகள் முடிந்து விடவில்லை. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கத்தான் போகின்றன.
 
அரச உயர் மட்டத்தின் அடக்கு முறைப் போக்கு, அரச நிறுவனங்களை அரசியல் மயப்படுத்தி தகுதியற்றவர்களை தலைமைப் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை அடக்கி ஒடுக்குதல் போன்றவற்றால் இந்தத் தீயை அணைத்துவிட இயலாது. கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இடம் பெற்ற கைதிகளின் போராட்டம், போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என ஊடகங்கள் மூலமாகச் சித்திரிக்கப்பட்டது. ஆயினும் சிறைச்சாலை அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் அதிருப்தியுற்று, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டமே அது என்பது தெளிவாகியுள்ளது.
 
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவோர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்படும் வரை குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட இயலாது. கைதிகளும் மனிதர்களே என சிறைச்சாலை மதிற்சுவர்களில் சிறைக்கைதிகளால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், சிறைச்சாலை நிர்வாகத்தரப்பினர் "சந்தேக நபர்களும் குற்றவாளிகள்' என்ற முடிவின் அடிப்படையில் கைதிகளை நடத்திவருகின்றமையை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியம்.
 
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெறுமானால் அதனை ஒழிப்பதற்குரிய பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் சிறைக் கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் தின்பண்டங்கள் கொண்டு வந்து வழங்குவதைச் சிறைச்சாலை நிர்வாகம் தடை செய்துள்ளது. இத்தகைய விடயங்களில் அரசின் உயர்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பலாத்காரப் பிரயோகத்தை மேற்கொள்வது வழக்கமாகி விட்டுள்ளது.
 
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையோர் காணாமல் போவது தொடர்பாக தம்மால் பொறுப்பேற்க முடியாது என்று, மக்களது வரிப்பணத்தில் பெரும்பகுதியைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் இந்த நாட்டு அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறி இருந்தார்.
 
அரசின் உயர்மட்டத்தினரே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போது, சிறைச்சாலை அதிகாரிகள் தம் மனம் போன விதத்தில் நடந்து கொள்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லையே? தற்போது தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் போன்றே சிறைச்சாலைக் கைதிகளும் கூட அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் நிலை உருவாகியுள்ளது.
 
சகல மட்டங்களிலும் அரசுக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பு, அதிருப்தி, குழப்பநிலை என்பன தலைதூக்கியுள்ளன. அரச தரப்பினரும் இது குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இத்தகைய எதிர்ப்பலையைத் திசை திருப்ப வேண்டுமானால், வேறொரு அரசியல் எதிர்ப்பலையின் பக்கம் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டியுள்ளதை அரசு நன்கு கணித்து வைத்துள்ளது. 
 
அதற்கான பொருத்தமான விடயம் இனவாதத்தை வளர்த்து விடுதலாகும். இனங்கள் மத்தியில் இனவாதப் பிரிவுகளை வளர்த்துவிட அரசு விரும்புகிறது. அதன் மூலம் ஏனைய பல விடயங்கள் தொடர்பான மக்களின் எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிவிட இயலுமென அரசு நம்புகிறது.
 
"தமிழ் மக்கள் மீதான அரசின் ஏமாற்றும் உத்தி, எல்லை தாண்டுமானால் நாடு பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்'' என அண்மையில் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். அவரது இத்தகைய கருத்து வெளிப்பாடு மூலம் கடந்த 65 ஆண்டு காலமாக இந்த நாட்டை மாறிமாறி நிர்வகித்த ஐ.தே.கட்சி, மற்றும் சுதந்திரக் கட்சி அரசுகள் இந்த நாட்டின் தமிழ் மக்கள் தொடர்பாக இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைப்பாட்டை தெட்டத் தெளிவாகப் புலனாக்குகின்றது. 
 
தமிழ் மக்களை எப்போதுமே ஏமாற்றிக் கொண்டேயிருக்க வேண்டுமென்றே இவ்விரு தரப்பினரும் கருதுகின்றனர். அதன் மூலம் தமிழ் மக்களது பிரச்சினையைத் தமது அரசியல் பலப் பரீட்சைக்கான விடயமாக அவர்கள் பயன்படுத்த முனைகின்றனர். இத்தகைய போக்கு மீண்டும் நாட்டில் இரத்த ஆற்றையே ஓட வைக்கும். ஜனாதிபதிக்கோ 13+ விடயம் இருந்தாற்போலிருந்து ஞாபகத்துக்கு வருகிறது. ஆகக் குறைந்தது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்பைக் காத்துப் பேணவேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு. ஆனால் ராஜபக்ஷ குடும்ப அரசு நாட்டின் அரசமைப்பையே சீர்குலைத்து வருகிறது. 

நாட்டின் வடபகுதித் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் எதுவும் கிடையாது. ஆள்கடத்தல், அச்சுறுத்தல் என்பவை அங்கு சாதாரண சம்பவங்களே என்ற விதத்தில் அரசின் அணுகு முறை அமைகிறது.  மொத்தத்தில் வடபகுதித் தமிழ் மக்களது உயிர்வாழும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் கூட வடபகுதியில் மறுக்கப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் எதனையும் அத்தகையோரின் பெற்றோராலோ, உறவினர்களாலோ பெற்றுக்கொள்ள இயலவில்லை. கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களது அடிப்படை உரிமைகள்கூட சவாலுக்கு உள்ளாகியுள்ளன. இவற்றை யெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதென்பது எவ்வாறு சாத்தியமாகும்?
 
இதன் பின்னணியில் உள்ளதும் ஏமாற்றும் முயற்சியே. "13+'' எனக் கூறியதும் அலிபாபாவின் குகையை மூடியுள்ள கல்வாசல் திறந்து கொள்வதற்கு அது மந்திரவார்த்தையா என்ன? இது இரு இனத்தவர்கள் மத்தியிலும் குரோதத்தை வளர்த்து விடும் ஒரு முயற்சியே. அரசு தமிழ் மக்களுக்கு விசேட சலுகைகளை வழங்க முயல்வதாக சிங்கள மக்களை சந்தேகப்பட வைக்கவே இது உதவும். அதேவேளை தமக்கு உரிமைகளை வழங்க சிங்கள மக்கள் குறுக்கே நிற்கின்றனர் என்ற அவநம்பிக்கையையும் குரோதத்தையும் இது தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கத் தவறாது. 

தமிழ் மக்களுக்கு அரசு வழங்கத் தயாராகவுள்ள உரிமைகள் எவை என வரையறுத்துக் கூறாது, ""13 மற்றும் அதற்கும் மேலாக'' என்ற விதத்தில் தெளிவற்ற கருத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அரசு இவ்விரு இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையையும் குரோதத்தையும் தூண்டி வளர்த்து விட முயல்கிறது. ஜனாதிபதியின் அந்த இரு வார்த்தைகளால் நாட்டு மக்களது கவனம் மற்றெல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் திசை மாறி 13+ பக்கமே குவியும் நிலை தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அரசின் எதிர்பார்ப்பும் அதுவே.
 
அரசு இத்தகைய தனது ஏமாற்றுப் போக்கை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களது நியாயமான பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதற்குமேல் பேச்சு அவசியமில்லை. இந்த விடயம் குறித்து வடபகுதி மக்களது கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். அவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமானால் அவர்களுக்கு ஜனநாயக சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க ஜனநாயகச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அவர்களது அபிலாஷைகள், தேவைகள் எவை என்பதைத் தெளிவாகக் கண்டறிய இயலும்.
 
அவ்வாறமையாத விதத்தில் முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகள் வெறும் ஏமாற்றுத் தந்திரமாகவே அமையும். வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட இயலாது. நாம் எந்த வித அணுகு முறையூடாக பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மக்களின் இன்றைய அவசிய, அவசர தேவையாகியுள்ளது.

 "ஜனரள' சிங்களப் பத்திரிகையில் விதர்னி எழுதிய கட்டுரையிலிருந்து தமிழ் மொழியாக்கம்

நன்றி உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment