காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு


அதிபார குத்துச்சண்டை வீரர் எவென்டர் யஹாலி பீல்ட் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கு வருகை தந்த அவரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ சந்தித்தார். 1997ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டை ஒன்றின் போது யஹாலி பீல்டுடன் சண்டையிட்ட மைக் டைசன், அவரின் காதைக் கடித்து துண்டாடி இருந்தார். சம்பவம் நடந்து 15 வருடங்களுக்குப் பின்னர் கடிபட்ட காதை எங்கள் நாட்டு ஜனாதிபதி தொட்டுப் பார்த்தார். துயரம் பகிர்ந்து கொண்டதாகத் தகவல். குத்துச் சண்டைக்குப் போய் காது அறுபட்டவரின் விடயத்தில் காட்டப்பட்ட கரிசனையைக் கேட்டபோது, எங்கள் மண்ணில் நடந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், அங்கவீனங்களை நினைத்துப் பார்த்தேன்.

கடவுளே! இரண்டு காலும் இல்லாதவர்கள் எத்தனை பேர்? கை இழந்தவர்கள், கண் இழந்தவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள் இப்படி பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டு குடிசைக்குள் குந்தியிருந்து சதா அழுகின்றவர்களை ஆட்சி பீடத்தினர் யாருமே பார்த்ததாக -அனுதாபம் தெரிவித்ததாக இல்லை. நடந்தது நடந்தாயிற்று. யுத்தத்தில் அகப்பட்டு உயிரை இழந்த குடும்பங்களை, அங்கவீனமானவர்களை சந்தித்து ஒரு சில ஆறுதல் வார்த்தை கூறி ஆற்றுப்படுத்த ஆட்சிப்பீடத்தினருக்கு அறவே விருப்பமில்லை. ஆறுதல் கூறுவதை விட, போரின்போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதிலேயே அரசு அதிதீவிரமாக உள்ளது. உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் நடந்த யுத்தங்கள், அழிவுகள், இழப்புக்காக மன்னிப்புக் கேட்கின்ற மரபு இருந்து வருவதை அறிய முடியும்.

செய்த தவறுக்காக காலங்கடந்தேனும் மன்னிப்புக் கோரிய சம்பவங்கள் நிறையவே உண்டு. ஆனால், இலங்கையில் அப்படியயதுவுமே இல்லை. வன்னி யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலைக் கூறினால், சிங்களவர்களும், முஸ்லிம்களும் இறந்துள்ளார்கள் என்று பதிலளிக்கும் பன்னாடைப் பண்பாடே இந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான  அப்பாவித் தமிழர்கள் இறந்துள்ளனர் என்றால் அதனை நியாயப்படுத்துவதுபோல சிங்கள மக்களும் இறந்தார்கள் என்று கூறும் அநாகரிகம் இலங்கையில் மட்டுமே இருக்க முடியும்.

ஒரு இனத்திற்கு ஏற்பட்ட இழப்பை நியாயப்படுத்த இன்னொரு இனம் இழக்காத இழப்பை இழந்ததாக கூறுவது மிகப்பெரும் துரோகத்தனம். போரில் சிங்கள, முஸ்லிம் மக்கள் இறந்தார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் இறக்கலாம் என்றோ அல்லது தமிழ் மக்கள் இறந்தமைக்காக சிங் கள, முஸ்லிம் மக்கள் மரணிக்கலாம் என்றோ கூறுவது ஒருபோதும் நியாயத்துவமானதல்ல. ஆட்சியாளர்கள், எப்போதும் மக்களின் காவலர் களாக-துணையாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ வேண்டாத அனுதாபங்களை தெரிவித்து உலகில் நல்ல பெயர் வேண்ட நினைக்கும் ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டில் இருக்கக்கூடிய பேரழிவைச் சந்தித்த மக்களை ஒரு பொருட்டாக நினைக்காமை பொல்லாப்பின் வெளிப்பாடென்றே உணர்தல் வேண்டும்.

நன்றி வலம்புரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment