முல்லைத்தீவுக்கு இரகசியமாக சென்ற அமெரிக்க தூதுவர் ராப் - போர்க்குற்ற சாட்சியங்கள் சேகரிப்பு


போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விபரங்களை நேரடியாகத் திரட்டுவதற்காக நான்கு நாள் பயணமாக சிறிலங்கா சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்டீபன் ராப் நேற்று திடீரென முல்லைத்தீவுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார். 


நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஸ்டீபன் ராப் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று சந்திப்புக்களை நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கிளிநொச்சியில் சிறிது பரபரப்பு நிலவியது. ஆனால் திடீரென முல்லைத்தீவுக்கு இரகசியமாகச் சென்ற ராப், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார். 

கரைத்துறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் அமைந்துள்ள யூதாதேயூ ஆலயத்தில் திடீர்ச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சுமார் 25 வரையான பொதுமக்கள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இறுதிப் போரின்போது நடந்தவை குறித்து ராப் அங்கிருந்த மக்களிடம் விசாரித்தார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை அந்த மக்களிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். இறுதிப் போர் முடிந்த பின்னர் சிறிலங்கா அரசபடையினரிடம் வட்டுவாகலில் வைத்து தாம் நேரடியாக ஒப்படைத்த உறவினர்கள் பலர் மூன்று ஆண்டுகளாகி விட்ட போதும் இதுவரை மீண்டும் வரவில்லை என்றும், அவர்களில் சிலரை இறந்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுமாறு இப்போது சிறிலங்கா இராணுவத்தினர் கூறுவதாகவும் ராப்பிடம் அவர்கள் தெரிவித்தனர். சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைத்த பிள்ளைகளின் ஒளிப்படங்களையும் ராப்பிடம் கையளித்த பெற்றோர், அவர் முன் கதறியழுதபடி நீதி கிடைக்க வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். சிறிலங்கா அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை தமக்குத் திருப்திகரமானதாக இல்லை என்றும் அங்கு தெரிவித்த பெற்றோர்கள், நீதியான சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள், “இறுதிப் போரின்போது காணாமற்போனவர்கள் இரு வகைப்பட்டவர்கள். போர் நடந்து கொண்டிருந்தபோது காணாமற்போனவர்கள் ஒரு வகையினர்.  மற்றொரு தொகுதியினர் சரணடைவதற்காக இலங்கை இராணுவத்தினரிடம் உறவினர்களால் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். வட்டுவாகலில் வைத்து இவர்கள் இராணுவத்தினரிடம் மனைவிமாராலும் தாய்மாராலும் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். இப்படி ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்பதைப் பின்னால் வந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது கேட்டால் அப்படித் தாங்கள் யாரையும் பொறுப்பேற்கவில்லை என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள். தமது பிள்ளைகள் எங்கே என்று கேட்டுச் சென்ற தாய்மார்கள் சிலருக்கு, "உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்" என இராணுவத்தினர் பதிலளித்துள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழு எங்களிடம் பகிரங்க இடத்தில் விசாரணை நடத்தியது. அப்போது சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அங்கு நின்றிருந்தனர்.  உண்மையைச் சொன்னால் ஏதாவது நடந்து விடும் என்ற அச்சம் காரணமாக நாங்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை. உண்மையில் எம்மால் அங்கு சுதந்திரமாகச் சாட்சியமளிக்க முடிந்திருக்கவில்லை. அப்படி இருக்கையில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் எப்படி ஏற்க முடியும்? அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. நீதி கிடைக்க அனைத்துலக விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கடந்த மூன்று ஆண்டகளாகக் கிடையாது. அவர்களால் எந்த அச்சமும் இல்லை. ஆனால் பல இடங்களில் எம்மை மீளக்குடியமர விடவில்லை. சிறிலங்காப் படையினர் தமக்குத் தேவை என்று பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் ஒரு முகாம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் காணி போதாதா? எதற்காக 400 முதல் 500 ஏக்கர் காணியைக் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதால்தான் எங்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து விட்டு மீதியை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கலாம்தானே? வன்னியில் இராணுவத்தின் பிரசன்னம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு நிகழ்வாயினும் சிறிலங்காப் படையினர் அங்கிருப்பர். குடியியல் நிர்வாகம் நடக்கிறது என்று அரசு கூறுகிறது. பின்னர் ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் சிறிலங்கா இராணுவத்தை நிறுத்துகிறது? நாங்கள் சிங்களவர்களுக்கு நிகராக சம உரிமைகளுடன் வாழ்வதற்கே விரும்புகிறோம். அதனையே கேட்கிறோம். காவல்துறை, காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு மாகாண சபையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு தீர்வை அரசு வழங்க அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நீண்டகாலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத் தான் நம்பியுள்ளோம். நீங்கள் தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர். மக்களின் கருத்துக்களைக் கேட்ட ஸ்டீபன் ராப், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.


நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment