இந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதால் சிறிலங்காவுடன் பாகிஸ்தான் உறவை பலப்படுத்துகின்றது


தென்னாசியப் பிராந்திய நாடுகளிலிருந்து பாகிஸ்தானை இந்தியா தனிமைப்படுத்த முயற்சிப்பதால், சிறிலங்காவுடன் பாகிஸ்தான் தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. இது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலோங்கி இருப்பதற்கும் பிரதான காரணமாக உள்ளது. இவ்வாறு பாகிஸ்தானிய ஊடகமான The Nation தனது ஆசிரியத்த தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கான வருகையை மேற்கொண்ட அதிபர் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஜிலானி மற்றும் அதிபர் சர்தாரி ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டதுடன், இரு நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடியுள்ளார்.

பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதிபர் ராஜபக்சவுடன் துறைசார் வல்லுனர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோரும் வந்திருந்தனர். சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தானுக்கான பயணமானது வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளல் மற்றும் ஒளிப்படங்களை எடுத்தல் ஆகியவற்றை மட்டுமல்லாது, நடைமுறை சார் செயற்பாடுகளை மேற்கொள்வதையும் நோக்காகக் கொண்டிருந்தது.

அதாவது இச்சுற்றுப் பயணத்தின் போது பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒருங்கிணைப்பு, தொழினுட்ப கல்வி மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை அதிகரித்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்ட மூன்று வெவ்வேறு புரிந்துணர்வு உடன்பாடிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது.

பாகிஸ்தானிய பிரதமர் ஜிலானியுடன் சிறிலங்கா அதிபர் மேற்கொண்ட சந்திப்பின்போது, இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் செயற்பாடுகளை மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பது எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பானது சுற்றுலாத்துறை, வங்கித்துறை, கப்பற்துறை மற்றும் விவசாயம் ஆகிய பல் துறைகளை உள்ளடக்கியுள்ளது.
 
பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் இவையிரண்டும் பல்வேறு நலன்களை அடைந்து கொள்ள முடியும் என்பது நிச்சயமானதாகும். தீவிரவாத்ததை ஒழிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் தனது ஆதரவுகளை வழங்கியதன் காரணமாக உருவாகியுள்ள நல்லெண்ண முயற்சியானது, ஏற்கனவே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழமாக, விரிவாகக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. 

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பாகிஸ்தானானது சிறிலங்கா இராணுவத்திற்கு தேவையான இராணுவத் தளபாடங்களை மட்டுமன்றி, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளையும் வழங்கியிருந்தது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவில் அமைதியை நிலைநாட்டுவதில் பாகிஸ்தான் பெரும் பாங்காற்றியுள்ளது என்கின்ற பொதுவான எண்ணப்பாடு சிறிலங்கர்கள் மத்தியில் நிலவுவதால் சிறிலங்காவில் பாகிஸ்தான் உயர்வாக மதிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானில் சட்ட நடைமுறைகள் சீர்குலைந்திருந்த காரணத்தால், ஏனைய நாடுகளின் துடுப்பாட்ட அணியினர் பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய மறுத்த வேளையில், சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மட்டுமே பாகிஸ்தானுக்கான தமது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் பாகிஸ்தானுக்கு வந்திருந்த சிறிலங்கா அணியினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாக இம்மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை, சிறிலங்கர்களோ அல்லது அவர்களது நாடோ ஏற்றுக் கொள்ளவில்லை.

தென்னாசியாவிலேயே பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக சிறிலங்கா உள்ளது. அத்துடன் சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளமையும், இரு நாடுகளின் உறவிலும் சாதகமான விளைவுகளை வெளிக்காட்டி நிற்கின்றன.

தென்னாசியப் பிராந்திய நாடுகளிலிருந்து பாகிஸ்தானை இந்தியா தனிமைப்படுத்த முயற்சிப்பதால், சிறிலங்காவுடன் பாகிஸ்தான் தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. இது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலோங்கி இருப்பதற்கும் பிரதான காரணமாக உள்ளது.

இந்தியாவானது தனது பிராந்திய நாடுகளுடன் குறிப்பாக அயல்நாடுகளின் விவகாரங்களில் அதிகாரப் போக்கை கடைப்பிடிக்க முயற்சித்து வருவதானது, பாகிஸ்தான் - சிறிலங்கா உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாக அமைந்துள்ளது.

இரு நாடுகளும் தமது நாட்டு இராணுவங்களைப் பலப்படுத்துவதில் பரஸ்பரம் இரு தரப்புக்களின் நலன்களில் தங்கியுள்ளன. இரு நாடுகளினதும் தலைவர்களால் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது.

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment