மேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்


யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறுவதாக முதலில் செய்தி வந்தது.அரச ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி, நவசமசமாஜக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவை கலந்து கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது.

ஆனால் வெளிவந்த கானொளிகளைப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணைந்தது போன்றதான தோற்றப்பாட்டை அந்நிகழ்வு உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.

கூட்டமைப்போடு சேர்ந்து மேதின நிகழ்வினை நடத்துவதால் சிங்கள மக்களின் வாக்கு வங்கியில் சேதம் ஏற்படும் என்கிற அபாயத்தை உணர்ந்தும், ஐ.தே.க. இந்த விஷப் பரீட்சையில் ஏன் ஈடுபட்டது என்கிற கேள்வியும் எழுகிறது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அரசு வெற்றி கொண்டாலும், தமிழ் மக்கள் அரசோடு இல்லை என்பதையும், சகல இன மக்களும் இணைந்த மாற்று அரசியலுக்குத் தலைமை தாங்கும் வல்லமை, தம்மிடையே இருப்பதை சர்வதேசத்திற்குக் காட்டவும் ரணில் முயற்சி செய்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் கோரிக்கைகளை கூட்டமைப்பு முன்வைக்கிறது' என்கிற அரசின் பரப்புரையை முறியடிக்கக்கூடிய வகையில், சில அதிரடியான மாற்று நகர்வுகளையும் இம் மேதின நிகழ்வில், திட்டமிட்ட வகையில் ரணில் மேற்கொண்டுள்ளார். இதில் ஊர்வலம், மேடை என்கிற இரண்டு பகுதிகளையும் மிகச் சாதுரியமாக மாற்றியமைத்த ரணில். தமிழ்த் தேசியம் என்கிற இறுக்கமான நிலைப்பாட்டில் கூட்டமைப்பு தற்போது இல்லை என்பதைக் காட்டும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளார் போலுள்ளது. இந்த மேதின "பெலபாலிய' வில் (ஊர்வலம்) எங்கும் பச்சைத் தலைகள்.ஊர்வலத்தை பச்சை நிறப் பதாகைகள் நிரப்பியிருந்தன.

"எக்சத் ஜாதிக பக்சயட ஜயவேவா', "ஒன்ன பபோ அலி எனவா', "கணவா கணவா ரட்ட கணவா', "அபட ஓன ஆண்டுவ' என்கிற முழக்கங்கள் வானைப் பிளந்தன.தமிழில் கூறுவதானால், 'ஐக்கிய தேசியக் கட்சி வாழ்க', 'இதோ யானை வருகிறது', 'நாட்டை விழுங்குகிறார்கள்', 'எங்களுக்கு ஆட்சி வேண்டும்' என்பதுதான் அந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொண்ட தென்னிலங்கை பச்சைத் தலைகள் எழுப்பிய கோஷங்கள்.

ஆகவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேவைப்படும் ஆட்சியதிகாரத்திற்கு, தேசிய இனங்களின் ஆதரவு வேண்டும் என்பதாக இந்நிகழ்வினைக் கொள்ளலாம்.ஆனாலும் ஆட்சிமாற்றமென்பதை அடுத்து வரும் தேர்தல்களே தீர்மானிக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ சொல்வதையும் கவனிக்க வேண்டும்.
 
ஊர்வலத்திற்கு அப்பால், மேதின மேடை நிகழ்வினை நோக்கினால், அங்கும் ரணிலின் கபடத்தனமான காய் நகர்த்தலைக் காணலாம். மேடையில் எதிரணித் தலைவர்கள் நின்றிருக்க, "ரகுபதிராகவ ராஜாராம்' என்கிற பாடல் காற்றை நிரப்ப, ரணிலும் சம்பந்தனும் இலங்கை தேசியக் கொடியை அசைத்தவாறு மக்களுக்கு காட்சி அளித்தார்கள்.

அது என்னகொடி என்று கூட நிமிர்ந்து பார்க்காமல்,, கூட்டமைப்பின் தலைவர் அதனை அசைத்துக் கொண்டிருந்தார். கூட்டமைப்பின் சிவப்பு மஞ்சள் வர்ணக் கொடிகள் சோகத்தில் ஒளித்துக்கொண்டன.

ஐ.தே.க.வின் பச்சை நிறமும், கூட்டமைப்பின் சிவப்பு மஞ்சள் நிறமும் இணைந்ததால், அங்கு தமிழரசுக் கட்சியின் பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் பட்டொளி வீசிப் பறந்ததாகவும் சிலர் வியாக்கியானமளிக்க முன் வரலாம். 
தனக்குச் சாதகமில்லாத களத்தை, எவ்வாறு கையாண்டு வெற்றிகொள்வது என்பதனை ரணிலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இவைதவிர தாயகம், தேசியம், என்கிற சொல்லாடல்களை சிங்களம் விரும்பாது என்பதனால் இவைகளை தவிர்த்து வருகிறோமென அண்மைய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது சம்பந்தன் தேசியத் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வினைத் தேடுகிறோம். துண்டாடப்பட்ட தாயகத்து மாகாண சபைகளில் போட்டியிடுகின்றோம். தாயகக் கோட்பாடு பற்றி பேசாமல் விடுகிறோம். கொடியையும் பிடிக்கின்றோம் என்று எவ்வளவு தான் இறங்கி வந்தாலும், பெருந்தேசிய இனவாதத்தின் நிலைப்பாடு மாறப் போவதில்லை என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன.

மேதினத்தன்று திருக்கோணமலையிலும், ஒரு சிறு கூட்டம் நடந்தது.அதில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பல வரலாற்று உண்மைகளையும் எதிர்கால தேர்தல் வியூகம் பற்றியும் தெரிவித்திருந்தார்.

இதில் ஆயிரக்கணக்கில் மக்களும் கலந்து கொள்ளவில்லை. பச்சைத் தொப்பிகளும் (ஐ.தே.க) இல்லை. அரியநேத்திரனிடம் ஸ்ரீ லங்காக் கொடியைத் திணிப்பதற்கும் ஆட்கள் இல்லை.

1946இல் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, திருமலை மணிக்கூட்டுக் கோபுர உச்சியில் பறந்த "சிலோன்' கொடியை தியாகி. நடராஜன் இறக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தாயகத்தின் தலைநகர் இதுவென தந்தை செல்வாவினால் போற்றப்பட்ட விடயத்தையும் மிகத் தெளிவாக முன்வைத்த அரியநேத்திரன், மாகாண சபைத் தேர்தல் குறித்தும் பேசினார்.

தேர்தல் பற்றி அவர் கூறிய விடயம் இதுதான். தாயக பூமியைக் காப்பாற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவோம். நில அபகரிப்பைத் தடுப்பதற்கு இடைக்காலத் தீர்வாக இந்த மாகாண சபைத் தேர்தலை கூட்டமைப்பு கருதுகிறது என்பதோடு, மாகாணசபை அதிகாரங்களை கூட்டமைப்பு கைப்பற்றினால் ஓரளவிற்காவது எமது தாயக நிலத்தை பாதுகாக்க முடியும் என்றார்.

ஆயினும், காணி, காவல்துறைக்கான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க மாட்டோமென சிங்களம் உறுதிபடத் தெரிவிக்கும் நிலையில், மாகாண சபையைக் கைப்பற்றி எவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களைக் காப்பாற்ற முடியுமென்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

77இல் தனிநாடு கேட்டு, 81இல் மாவட்ட சபையை ஏற்றுக்கொண்ட இறங்குநிலைதான் நினைவிற்கு வருகிறது.ஒரு இலட்சம் இந்தியப் படை சூழ, வடகிழக்கின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளினாலும் , இந்த காணி உரிமைகளைப் பெற முடியவில்லை. கோவில் காணிகளைக் கையாளும் உரிமையைக் கூட மாகாண சபைக்கு விட்டு வைக்கவில்லை அன்றைய ஐ.தே.க அரசு.

மேலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துவதில் கூட்டமைப்பு பெருமையடைவதாகக் கூறுகிறார் அரியநேத்திரன்.ஆனால் மூதூர் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட, இன்னமும் தேசமின்றி அகதி முகாம்களில் வாடும் சம்பூர் மக்கள் இதில் பெருமை படுவதற்கு என்ன இருக்கிறது?

கல்லோயாவிலிருந்து ஆரம்பித்து மகாவலி அபிவிருத்தி திட்டமூடாக இற்றைவரை அபகரிக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களை அதிகாரமற்ற மாகாண சபைகள் மீட்டுத் தருமா?

இவைதவிர, நாடாளுமன்ற தெரிவுக் குழு விவகாரம், மறுபடியும் இலங்கை அரசியல் உரையாடல் வெளிகளில் உலா வருவதைக் காண்கிறோம். சுஷ்மா சுவராஜ் குழுவினரின் விஜயத்தோடு , இவ்விடயம் கிளப்பப்படுவதால் இந்தியாவின் வகிபாகம் இந்நகர்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது.தெரிவுக்குழுவிற்குள் கூட்டமைப்பை உள்வாங்கும் விடயத்தில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்களிப்பு அரச தரப்பினூடாக நகர்த்தப்படுவதாக பேசப்படுகிறது.ஆனாலும் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தின் பின்னர், அது குறித்த, அரசிற்குச் சாதகமாக முடிவினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மீதான அமெரிக்க- இந்திய நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில், தனது இராஜதந்திரத்தை இரா.சம்பந்தன் பிரயோகிக்க முற்படுகிறாரென, கூட்டமைப்பின் தலைமைத்துவ ஆதரவுச் சக்திகள் திருப்தி கொண்டாலும், வல்லரசாளர்களின் மூலோபாயத் திட்டங்களை அவர்கள் உணர்ந்து கொள்வது போல் தெரியவில்லை.

ஆங்சாங் சூகியின் மீள் பிரவேசத்தின் ஊடாக, மியன்மாரின் நடப்பு அரசியலில் காலூன்ற முயலும் இந்திய  -அமெரிக்க தந்திரோபாயக் கூட்டின் வெற்றிகரமான நகர்வு போன்று, இலங்கையிலும் ஒரு ஆட்சி மாற்றம், எதிரணிகளின் இணைவு மற்றும் சரத்பொன்சேகாவின் விடுதலை ஊடாக ஏற்படலாமென்கிற எதிர்பார்ப்பும் சிலரிடம் உண்டு.

மியன்மாரை பொறுத்தவரை, அங்கு மூலவளச் சுரண்டலில் ஈடுபடும் டெங்சியாவோ பிங்சின் வழித்தோன்றல்களால், அந்த நாட்டின் தெயின் செயின் தலைமையிலான இராணுவ ஆட்சி காப்பாற்றப்பட்டு வந்தது.ஆனாலும் சீனாவின் அதீதமான ஆதிக்கத்தை விரும்பாத இராணுவ ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள், ஏனைய எதிர்த்தரப்பு வல்லரசாளர்களை உள்நுழைய அனுமதித்தது என்கிற பார்வையும் உண்டு.

மூலவளமிக்க நாடொன்றின் பொருளாதார அபிவிருத்திக்கு கைத்தொழில் வளர்ச்சியும், அதற்கான நவீன தொழில்நுட்க உபகரணங்களும் தேவை. அத்தோடு உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மேற்குலக முதலீட்டாளர்களும் அவசியம்.

ஆகவே, போர் காலத்து இலங்கை போன்று, இந்தியா - சீனா -அமெரிக்கா என்கிற முத்தரப்பினை சம காலத்தில் கையாள்வதன் ஊடாக, மியன்மாரினை துரித கதியில் அபிவிருத்தி செய்யலாம் என்கிற முடிவினை அதன் ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறு வகையானவை. பொன்சேகாவை விடுதலை செய், ஊடக அடக்கு முறையை நிறுத்து, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று என்கிற மேற்குலகின் அழுத்தங்களை அரசு விரும்பவில்லை. இதன் அடுத்த கட்டமாக, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை முன் வை என்று மேலும் இறுக்குவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

 அதேவேளை, ஏதாவதொரு இணக்கத்திற்கு பெருந்தேசியவாதச் சக்திகள் வராவிட்டால், பேரிழப்பினை சந்தித்த மக்கள் கூட்டம், மறுபடியும் கிளர்ந்தெழும் என்கிற வரலாற்று நிதர்சனங்களையிட்டு அமெரிக்கா கவலைப்படுகிறது.அண்மையில் இதுபோன்றதொரு கருத்தினை அமெரிக்கா வெளியிட்டது நினைவிற்கு வருகிறது. 
 
இவற்றைக் கருத்தில் கொண்டு  ,அமெரிக்க-இந்திய இராஜதந்திர காய்நகர்த்தல் ஊடாக, தமக்கொரு தீர்வு கிட்டுமென கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எதிர்பார்க்கிறது.அதேவேளை நிரந்தரமான தீர்வொன்று, இனப்படுகொலைக்கான சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றினூடாகவே எட்டப்படுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அத்தோடு போர்க்குற்ற விசாரணை குறித்து அதிகம் பேசாத கூட்டமைப்பு அதனை மேற்குலகின் நகர்விற்கே விட்டுவிட்டது போலுள்ளது. 
அதேவேளை, மத்திய ஆட்சியதிகாரத்தில் குவிந்துள்ள சிங்களத்தின் இறைமையை, தமிழ்த் தேசிய இனத்தோடு பகிர்ந்துகொள்ள பெருந்தேசிய வாதிகள் உடன்பட மாட்டார்கள் என்பதனை யதார்த்த பூர்வமாகப் புரிந்துகொள்ளும் மேற்குலகும், இந்தியாவும் 13ஆவது திருத்த சட்டத்தை அரசியல் தீர்வாக முன்வைக்கின்றன.

ஆனால் அதனையும் தற்போதைய ஆட்சியாளர்கள் நிராகரிக்கும் பொழுதே, ஆட்சி மாற்றமொன்றிற்கான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த ஆரம்பிக்கிறார்கள் மேற்குலகினர்.

ஆகவே இராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை ஜீ.எல்.பீரிஸ் குழுவினர் சந்திக்கும் போது அமெரிக்காவின் புதிய நகர்வு உறுதி செய்யப்படுமென எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் அமெரிக்கா, இந்தியாவோடு இராஜதந்திர உறவாடல்களை பேணும் அதேவேளை, நாட்டின் மையப் பிரச்சினையான எண்ணெய் குறித்தும், அதனைச் சுத்திகரிக்கும் சப்புகஸ்கந்த தொழிற்சாலையை தரமுயர்த்துவது பற்றியும் சீனாவோடு பேசிக் கொண்டிருக்கிறது அரசு.

தரமுயர்த்துவதோடு அதனை நிர்வகிக்கும் பொறுப்பினையும் இந்தியாவிடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தையும் இந்தியா பேசும் என்பதால், எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத சீனா, ரஷ்யாவோடு வர்த்தக ரீதியில் உறவாடுவது தமது பெருந்தேசியவாத இருப்பிற்கு பாதுகாப்பாக அமையுமென சிங்களம் கருதுகிறது.

தமக்குப் போட்டியாக இருக்கும் ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிகம் தங்கியிராமல் , உள்நாட்டு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துங்களென்று இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ரிமோதி கைத்னர், சீன அதிபரிடம் மிகவும் பவ்வியமாகத் தெரிவித்த செய்தி, பலமான சீனாவுடனான உறவு சரியானது என்கிற நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஊட்டியிருக்கும்.
 
 தற்போது ஆசியாவில், சந்தைகளை, மூலவளங்களைப் பங்கிடும் போட்டியே நடைபெறுகிறது. மூலோபாய இருதரப்புக் கூட்டு (Strategic Partnership) என்கிற சொல்லாடல் அதிகம் பேசப்படுவதும் ஆசியாவில்தான்.

ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தை விட தென்சீனக் கடலோடு ஒட்டிய நாடுகள் சீனாவுடன் ஏற்படுத்தும் முறுகல் நிலை குறித்து தனது கழுகுப் பார்வையைச் செலுத்தும் அமெரிக்கா, மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு ஒரு வருட கால அவகாசத்தை ஏன் வழங்கியது என்கிற கேள்விக்கான பதில் இதில் அடங்கியுள்ளது.

பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தோல்வியடைந்தாலும் ரணில் - சம்பந்தன் புதிய கூட்டு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவிபுரியுமாவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment