ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல


89 ஆயிரம் பெண்களின் தாலிக் கொடிகளை அறுத்து போரை இலங்கை அரசு மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடும் போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் அந்த மனிதர்களின் மனநிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பெரும்பான்மையின மக்கள் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இலங்கை அரசு முப்படை பரிமாணங்களுடன் காலிமுகத்திடலில் யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடும் போது தமிழர்களுக்கு நிச்சயம் நந்திக் கடல் அவலம் ஞாபகத்துக்கு வரும் என் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது. 


தமிழர்களைச் சீண்டும் மஹிந்த அரசு


போர் வெற்றியை வருடா வருடம் கொண்டாடி அதனூடாகத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்புகளைஎச்சரிக்கையை மஹிந்த அரசு விடுக்கின்றது. அதாவது, தமிழினம் நந்திக் கடல் முனையில் மண்டியிட்டுவிட்டது. எனவே, தமிழர்களுக்கு அதிகாரங்கள் அவசிய மில்லை. இது சிங்கள தேசம். எமக்கு கட்டுப்பட்டே தமிழர்கள் வாழவேண்டும் போன்ற குரோதத்தனமான இன வாதம் கொண்ட விடயங்களையே அது வருடா வருடம் மே மாதத்தில் தமிழர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி வருகின்றது. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் தான் என்ற யதார்த்தத்தை மறந்து ஆணவப் போக்கில் மஹிந்த அரசு செயற்படுவதாலேயே நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது. இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு மரண பீதியில் அங்கும் இங்கும் ஓடித் திரிந்த மக்கள் குண்டுமழையில் சிக்குண்டு இரத்த வெள்ளத்தில் தத்தளித்தனர். 


முள்ளிவாய்க்காலை மயான பூமியாக்கியது அரசு


இதனால், முள்ளிவாய்க்கால் மயான பூமியானது. திரும்பும் திசையெல்லாம் சடலங்கள். கடற்கரைகளில் மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருப்பது போல தமிழ் மக்களின் சடலங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், குண்டு வெடிப்பு சத்தங்களும், மக்களின் மரண ஓலங்களும் இரண்ட றக்கலந்து நந்திக் கடலெங்கும் மரண இசை ஓங்கி ஒலித்தது. இவை மட்டுமல்ல, மேலும் பல அவலங்களைத் தமிழினம் இறுதிக்கட்டப் போரில் சந்தித்தது. ஆனால், இறுதிப் போரை இலங்கை அரசு சாட்சியில்லாத இரகசியப் போராக முன்னெடுத்ததால் அந்த அவலங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இலங்கைப் படைத்தரப்பு பல அட்டூழியங்களைச் செய்த போதிலும் மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் இலங்கை அரசு தொடர்ந்தும் போரை முன்னெடுத்து ஒரு இனத்தின் விகிதாசாரப் பரம்பலையே மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது தமிழ் மக்கள் இவ்வாறான அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி போர் முடிவடைந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்தது. புலிகளின் மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம் என்றும் அரசு மார்தட்டிக் கொண்டது.


பாற்சோறு தமிழர் விரோத உணவானது எப்படி?


அரசின் இந்த அறிவிப்பையடுத்து சிங்கள மக்கள், மிகவும் பிரமாண்டமான முறையில் நாடளாவிய ரீதியில் போர் வெற்றியைக் கொண்டாடினர். தமது உறவுகளை இழந்து சோகத்தில் தவித்த தமிழ் மக்களுக்கு பலவந்தமாக பாற் சோற்றைத் திணித்து தமது சந்தோஷத்தைச் சிங்கள மக்கள் வெளிப்படுத்தினர் . இத்துடன், அரசின் போர் வெற்றி மமதை நின்றுவிடவில்லை. இதற்கு ஒருபடி மேலே சென்று மே மாதத்தைப் படைவீரர்கள் மாதமாகப் பிரகடனப் படுத்தி மே மாதம் 19 ஆம் திகதியை போர் வெற்றியைக் கொண்டாடும் தினமாக நடை முறைப்படுத்தியது. அது மட்டுமின்றி, பலகோடி ரூபாக்களை வாரி இறைத்து சர்வதேசத்துக்குத் தனது பலத்தைக் காண்பிக்கும் முனைப்பு டன் மஹிந்த அரசு அந்த விழாவை முன்னெடுக்கின்றது. இராணுவத்தைத் தலையில் தூக்கி வைத்து "இராணுவத்தினரே எங்கள் இதயத்தில் உங்களுக்குத்தான் முதலிடம்' எனக்கூறும் மஹிந்த அரசு, இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் மனிதாபிமான நடவடிக் கையிலேயே ஈடுபட்டனர் என்றும் உறுதியான முறையில் கூறிவருகின்றது. ஆனால், இலங்கை அரச படைகள் சர்வதேச சட்டதிட்டங்களை அப்பட்டமாக மீறியே போர் செய்தன என்பதை நிரூபிக்கும் வகையில் சனல்04 தொலைக் காட்சி போர்க்குற்ற காணொலிகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அவை சோடிக்கப்பட்ட காட்சிகள் என்றும், படையினர் மனிதாபி மான நடவடிக்கையிலேயே ஈடுபட்டனர் என்றும் பழைய பல்லவியையே அரசு மீண்டும் மீண்டும் பாடி அவற்றை நிராகரித்தது. அத்துடன், இலங்கை அரசால் தருஸ்மன் அறிக்கை எனக் கூறப்படும் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையிலும் இலங்கைப் படைகளின் போர்க்குற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அத்துடன் 40 ஆயிரம் பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆடைகளைந்து படுகொலை செய்வதா மனிதாபிமானம்? 


மனிதாபிமானத்தைப் பற்றி பேசும் மஹிந்த அரசு, போர்க்களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உள்ளாடைகளை அகற்றி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் பார்த்து இரசித்ததையா மனிதாபிமானம் எனக் கூறுகின்றது என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. போர்க்குற்ற விவகாரம், மனித உரிமை மீறல்கள் ஆகிய விடயங்கள் உள்பட மேலும் சில பிரச்சினைகள் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் இன்று பெரும் நெருக்கடியை கொடுத்துவரும் நிலையில், இந்த வருடம் மூன்றாவது முறையாக போர் வெற்றிவிழாவைக் கொண்டாடுவதற்கு அரசு தயாராகி வருகின்றது. பொருள்களின் விலையேற்றம், சர்வதேசப் பிரச்சினை, தமிழர் பிரச்சினை என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே அரசு இம்முறை போர் வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றது. வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால் மக்கள் வாழ்வதற்கு வழியின்றி திண்டாடும் நிலையில், அரசு பல கோடி ரூபா பணத்தை வாரி இறைத்து போர் வெற்றியைக் கொண்டாடுவதற்கு தடல் புடலாக ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது.


19 ஆம் திகதி அடக்குமுறை பட்டியல் வெளியீடு 


இலங்கை அரசு மே 19 ஆம் திகதியை இவ்வாறு போர் வெற்றித் தினமாகக் கொண்டாடுவதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வலைகளை மறைமுகமாக சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அன்றைய தினத்தில் அரசு தமிழர்களுக்குப் பல நிபந்தனைகளை அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. குறிப்பாக, மே மாதம் 19 ஆம் திகதி ஆலயங்களில் மணி ஒலிக்கக்கூடாது. பூஜைகள் நடத்தப் படக்கூடாது என அரசின் அந்த நிபந்தனை அராஜகப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. போரில் உயிரிழந்த இராணுவத் தினரை நினைவுகூர்ந்து தமது இராணு வத்தின் வீர தீரச் செயல்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் இலங்கை அரசு, போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளுக்கு ஏன் பாராமுகம் காட்டுகின்றது? இலங்கை அரசால் போர் வெற்றி விழாத்தினமாக அடையாளப்படுத்தப் பட்ட மே மாதம் 19 ஆம் திகதியன்று தமிழ் மக்களும் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்கு விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர். ஆலயங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்கள் பிரார்த்தனை செய்வர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் நந்திக்கடலுடன் முடிவடைந்து விட்டது என்பதையும், தமிழர்கள் எவரை நம்பினார்களோ அவர்களை தாங்கள் அழித்துவிட்டோம் என்பதையும் மீண் டும் மீண்டும் நினைவூட்டும் வகையிலேயே அரசு போர் வெற்றி விழாவைக் கொண்டாடுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும். எனினும், இந்த முறை தமிழர்களின் பிரார்த்தனைகளை முடக்குவதற்கு மஹிந்த அரசு நிச்சயம் பல நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதற்கான நடவடிக்கைகளை மஹிந்த அரசு தற்போதிலிருந்தே ஆரம்பித்துள்ளது. அரசு இவ்வாறு போர் வெற்றி விழாக்களைக் கொண்டாடும் போது அந்தக் கொடூர போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஏதோவொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும். அந்த மாற்றம் மீண்டுமொரு உரிமைப் போராட்டத்துக்கு கூட வித்திடலாம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, போரில் தமது கணவன்மார்களை இழந்த 89 ஆயிரம் விதவைப் பெண்கள் வடக்கு, கிழக்கில் வாழ்வதற்கு வழியின்றித் திண்டாடுகின்றனர். பெற்றோரை இழந்து சிறுபிள்ளைகளும் தவிக்கின்றனர். 


ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல


89 ஆயிரம் பெண்களின் தாலிக் கொடிகளை அறுத்து போரை இலங்கை அரசு மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடும் போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் அந்த மனிதர்களின் மனநிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பெரும்பான்மையின மக்கள் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இலங்கை அரசு முப்படை பரிமாணங்களுடன் காலிமுகத்திடலில் யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடும் போது தமிழர்களுக்கு நிச்சயம் நந்திக் கடல் அவலம் ஞாபகத்துக்கு வரும் என் பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 


அரசு தற்போது செய்யவேண்டிவை என்ன?


எனவே, இலங்கை அரசு தற்போது செய்யவேண்டியது யுத்தவெற்றியைக் கொண்டாடுவது அல்ல. தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைத்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைக் கண்டு தமிழ் மக்களுக்கு நாட்டில் சமவுரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது தாயக மண்ணில் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு ஒருபோதும் தயாரில்லை என்ற விடயத்தையும் அரசு கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தி தமிழர் தாயக பூமியிலிருந்து படைகளை மீளப் பெறவேண்டும். மேலும்,உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்து, தமிழர் தாயகப் பூமியல் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் நிர்மாணிப்பு ஆகிய செயல்களை அரசு நிறுத்த வேண்டும். குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது உட்பட பல விடயங்களை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். இவற்றை அரசு செய்யுமானால் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இருக்காது என்பதையும் இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதனை விடுத்து, போர் வெற்றி மமதையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆள முனைந்தால் இலங்கைத் தீவில் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படாது. மாறாக, அது போராட்டங்களை மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்யும். அது இன்று அல்லாவிட்டாலும் காலம் கடந்தாவது நிச்சயம் நடந்தே தீரும். நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அப்படியிருக்கையில், அரசு பல கோடி ரூபாவை செலவழித்து யுத்த வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு துடியாய்த் துடிப்பது ஏன்? உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது.


-இன்போ தமிழ் குழுமம் -
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment