இலங்கைத்தீவில் இரு தேசங்கள்: மே 18 சொல்லும் மிக எளிமையான உண்மை


இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 146679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. 


மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அன்றிலிருந்துதான் ஐக்கிய இலங்கை, நல்லிணக்ம் என்ற பதங்களை எதிரிகள் மட்டுமல்ல அனைத்துலக சமூகமும் மிகத்தீவிரமாக உச்சரிக்கதொடங்கியிருக்கிறது. 

நம்வர்கள் சிலரும் அவற்றை உச்சரிப்பதை நாம் அரசியல் ரீதியாக கணக்கிலெடுக்கத் தேவையில்லை. அது உளவியல்ரீதியான பிரச்சினை. நடந்த இன அழிப்பின் நேரடி சாட்சிகளாக பேதலித்த கூட்டு உளவியலுக்குள் சிக்கியதன் விளைவாக அடிபணிவு, அவல, ஒப்படைவு அரசியலை நோக்கி அவர்கள் உந்தப்பட்டுள்ளார்கள். 

மறுவளமாக பார்த்தால் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை இவர்களின் முன்னுக்கு பின்னான நடத்தை நிருபிக்கிறது. ஏனெனில் எந்த தீர்வும் இல்லாமல், மறுவாழ்வும் இல்லாமல் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் திறந்த வெளிச்சிறைகளுக்குள்ளிருந்தபடியும் தம்மை கொன்றொழித்தவர்களுடனேயே  சேர்ந்து வாழ்வோம் என்பதிலிருந்து நடந்த இனஅழிப்பையும் அவர்களின் உளவியல் நிலையையும் புரிந்து கொள்ளலாம்.

இனப்படுகொலை அரசு "நினைவு அழிப்பு" அரசியலை மிகத்தீவிரமாக முன்னெடுக்கிறது. இடைப்பட்ட இந்த 3 ஆண்டுகளில் அது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நினைவு அழிப்பினூடாக நடந்த இனஅழிப்பை மறைத்து தமிழர்களுக்கான நீதியை கொடுக்க மறுப்பதுதான் இதன் பின்னுள்ள அபாயமான அரசியல். இதற்காக நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற கோசங்களை உரத்து பேசுகிறது. இதன் குருரமான பின்னணியை புரிந்தவர்களாக நாம் இதற்குள் சிக்குபடாமல் நடந்த இனஅழிப்பிற்கான நீதியை நோக்கி அனைத்து மட்டங்களிலும் எமது போராட்ட:த்தை முன்னெடுக்க வேண்டும்.

" வன்னி இறுதிப்போரில்1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தமது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வு. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்" எனகிறார் பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல்.

நடந்த படுகொலைகளை பிராந்திய பூகோள அரசியலின் பிரகாரம் அனைத்துலக சமூகம் இனஅழிப்பாக ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால் டப்ளின் தீhப்பாயம், மற்றும் ஐநா நிபுணர் குழு அறிக்கை என்பவற்றை கொள்கையளவில் ஒரு தொடக்கமாக கொண்டு நாம் நடந்தது இன அழிப்புத்தான் என்பதை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஏனெனில் நடந்தது இனஅழிப்புத்தான். முள்ளிவாய்க்காலில் உண்மையில் நடந்தது உயிர்களின் பலியெடுப்பு அல்ல. முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது. இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள். போரில் குருரமாக தோற்கடிக்கப்பட்டவர்களாக - தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக - வாழ்வதற்கான நிலமற்வர்களாகாக அவர்களது இருப்பை மாற்றியிருக்கிறது இனப்படுகொலை அரசு.

ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது. இனம் மொழி நிலம் பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பி தாய்நிலத்திலும் புலத்திலுமாக அலைந்துகொண்டிருக்கிறது. 

இதற்கு பின்னும் இனி ஐக்கிய இலங்கை என்பதும் நல்லிணக்கம் என்பதும் அங்கு தொடரும் எந்த நிகழ்வுலுகளின் அடிப்படையிலும் பேசப்பட வேண்டிய ஒன்றல்ல. அதற்கான எந்த புறச்சூழலையும் இனப்படுகொலை அரசு மட்டுல்ல சிங்கள மக்களும் உருவாக்கவில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு தார்மீக குரல்கள் எழுந்திருக்கின்றன. மே 18 இலிருந்து புதிதாக தனித்தனியான தமிழ், சிங்கள கூட்டு உளவியல் உருவாகியிருக்கிறது. எனவே அது என்றைக்கும் இன ஐக்கியத்தை உருவாக்காது. 

பௌத்த பேரினவாத சிந்தனையில் சிங்களம் இருக்கும்வரை மற்றவர்களுக்கான தீர்வு என்பது சாத்தியமேயில்லை. சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்த இந்த மனநிலை மே 18 இற்கு பிறகு இப்போது ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் இடம் மாறியிருக்கிறது. அதுதான் இலங்கைத்தீவில் தனியான சிங்கள - தமிழ் கூட்டு உளவியலை உருவாக்கியிருக்pறது.



நல்லிணக்கம் என்பது அழித்தவர்கள் பக்கத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஆனால் சிங்களம் அழிக்கப்பட்டவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்கிறது. அதற்கு ஒத்தூதும் தமிழ் அரசியல் தலைமைகள் எமக்கு கிடைத்த இன்னொரு சாபக்கேடு. 

மிக அண்மையில் ஒரு கருத்தரங்கிற்காக லண்டனிலிருந்து வந்திருந்த இரு சிங்கள ஆய்வு மாணவிகளை பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். கருத்தரங்கு தொடர்பான விடயங்கள் பேசி முடிந்ததும் பேச்சு இயல்பாக சிறீலங்கா அரசியலுக்குள் நுழைந்தது. அங்கு அமைதி பூரணமாக திரும்பியிருப்பதாகவும் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ தயாராக இருப்பதாகவும் தாம் யாழ், வன்னி உட்பட அனைத்து பகுதிகளுக்கும் போய் நேரடியாக இதை அந்த மக்களிடமே கேட்டறிந்ததாகவும் வெளிநாட்டில் இருக்கிற ஆட்கள்தான் பிரச்சினை பண்ணுவதாகவும் இருவரும் ஒரு பெரிய வகுப்பு எடுத்தார்கள். நிறைய தரவு பிழைகளுடன் இராணுவ பிடிக்குள் உள்ள மக்களின் கருத்து சுதந்திரம், இனப்படுகொலையை சந்தித்த மக்களின் உளவியல் குறித்த எந்தவித புரிதலுமின்றி தட்டையாக தமது வாதத்தை அடுக்கி கொண்டிருந்தார்கள். 

ஒரு கட்டத்தில் வெறுத்து போய் "சரி நடந்ததெல்லாம் இருக்கட்டும். இறுதி போர் என்று கூறப்படுகிற காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் ஒன்றாக கூடி நின்று ஒப்பாரி வைத்து ஓ வென்று அழுவதற்கு உங்கள் அரசு அனுமதிக்குமா? இன்னும் நாம் அழவில்லை அதாவது உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அதற்கும் நீங்கள் அனுமதிக்கவில்லை. 

அந்த நாளை கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவுநாளாக அரசு விடுமுறை அளிக்குமா? தமிழர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அன்று ஆலயங்களில் மணி ஒலிக்கவிட்டு மத வழிபாட்டுக்கு அரசு இடமளிக்குமா? கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக ஒரு நினைவுத்தூபியை முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் எழுப்ப அரசு அனுமதிக்குமா? ஒன்று இரண்டல்ல கிட்டத்தட்ட கொல்லப்பட்ட ஊனமுற்ற காணாமல் போக செய்யபட்ட கிட்டத்தட்ட 175000 பேர் ஒரு இனத்திலிருந்து மறைக்கப்பட்ட வரலாறு இது. 

தமிழர்கள் அழுவதற்குகூட அனுமதிக்காத தேசத்தில் எப்படி ஐக்கியமாக வாழ முடியும்? அந்த நாளை நீங்கள் வெற்றி நாளாக கொண்டாடும்போதே அந்த இடைவெளி இட்டு நிரப்பமுடியாததாகிவிட்டது. கூடியிருந்து அழுவதன் உளவியல் உங்களுக்கு தனியாக புரியவைக்க தேவையில்லை. 

அப்போது இழப்புக்களும் வலிகளும் மனத்திலிருந்து வடியும். மறக்கும் மன்னிக்கும் இயல்பு தோன்றும். இப்போது உங்கள் கேள்விகளுக்கு தலையாட்டும் மக்களின் உளவியல் பேதலித்து போயிருப்பதன எதிர்வினை என்பதை உளவியல் மாணவிகளான உங்களால் கூட புரியமுடியவில்லையே..முதலில் மே 18 அன்று நாம் அந்த மண்ணில் கூடியிருந்து அழ அனுமதியுங்கள்.. பிறகு ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது குறித்து பிறகு பேசுவோம் " என்றேன்..

உளவியல் மாணவிகள்தானே விடயத்தை சட்டென்று பிடித்துவிட்டார்கள். கனத்த மௌனம் இருவரிடமும். பிறகு இருவரும் ஒரே குரலில் "மன்னிக்கவும்" என்றார்கள். பின்பு போகும்போது தமக்குள்ளாகவே "போனமுறை அன்று கோயிலில் மணி அடித்ததற்குதானே ஒரு பூசாரியை இராணுவம் பிடித்ததாக" பேசிக்கொண்டார்கள்.. இனி ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது குறித்து யாருக்கும் வகுப்பெடுக்க மாட்டார்கள்.. 

எனவே இதுதான் நமது நிலை. இதை உலகிற்கு உரத்து சொல்வோம். 

ஒரு நாட்டிற்குள் வாழும் இரு வேறு இனங்களில் ஒரு இனம் ஒரு நாளை தேசிய துக்க நாளாக நினைவு கூரும்போது அதே நாளை அடுத்த இனம் அவர்களை வெற்றி கொண்ட நாளாக கொண்டாடும் போதே அடிப்படையில் அந்த நாடு இரண்டாக உடைந்து விடுகிறது. இதை வேறு எந்த தர்க்கங்களினூடாகவும் சமரசங்களினூடாகவும் இராஜதந்திர நகர்வு என்ற போர்வையிலெல்லாம் ஒட்ட முயற்சிப்பது அபத்தம். இலங்கைத்தீவில் இரு தேசங்கள் மே 18 சொல்லும் மிகப்பெரிய எளிமையான உண்மை இது. இந்த மூன்றாவது ஆண்டிலிருந்தாவது நாம் இதை புரிந்து கொண்டு முன்னேறுவோம்.



-பரணிகிருஸ்ணரஜனி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment