தமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்


அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, அது தொடர்பான தனது கொள்கைகளை மீளவும் ஆராய்ந்து மாற்றுத் தீர்வொன்றை எட்டவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அடுத்த கட்டமாக மே31, 2012 அன்று தனது நாட்டில் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்கர்களின் ஒரு தொகுதியினரை மீண்டும் அவர்களது நாட்டுக்கு திருப்பு அனுப்புவதென பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வேண்டுகோளை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங்கே பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட பல சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணை செய்ததன் பிற்பாடே இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளது. 

கடந்த பெப்ரவரியில் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைத்துலக நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்கள், சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட எட்டு சம்பவங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர், அதாவது பெப்ரவரி 2012 இலிருந்து இது வரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் மேலும் ஐந்து சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

"வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து கொண்ட சிறிலங்காத் தமிழர்கள் பலர் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான சான்றுகள் தற்போது அதிகமாகக் கிடைத்துள்ள போதிலும், சிறிலங்காவுக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதால் அங்கே அவர்கள் ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை அடையாளங் கண்டு அதனை அங்கீகரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் தவறிழைக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கான ஐக்கிய இராச்சியத்தின் இயக்குனர் டேவிட் மெபாம் சுட்டிக்காட்டியுள்ளார். 

"சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் அங்கு எவ்வாறான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்பது தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான, நியாயமான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வை எட்டும் வரை இவ்வாறு சிறிலங்காவுக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும்" எனவும் டேவிட் மெபாம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை சிறிலங்கா பாதுகாப்பு படையினர் நீண்ட காலமாக துன்புறுத்தி வருவதாகவும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தமிழ் மக்களை சித்திரவதைப்படுத்துதல் மற்றும் ஏனைய மீறல்களுக்கு உட்படுத்துவதானது அதிகரித்து வருவதையே அண்மைய சான்றுகள் உறுதிப்படுத்தி நிற்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

சிறிலங்காவில் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட ஐந்து சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் மருத்துவசான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மே 2009ல் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட அதேவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களால் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்பட்டு, இராணுவ முகாம் ஒன்றில் ஐந்து மாதங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதேபோன்று சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரு தமிழ்மகன்கள் இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அத்துடன் இவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்டதுடன், நெருப்பில் வைத்து காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியாலும் காயப்படுத்தப்பட்டது. 

இவ்விரு தமிழ் ஆண்களிலும் மற்றையவர், சிறிலங்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவ குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். 

"நான் தாக்கப்பட்டேன். சித்திரவதைப்படுத்தப்பட்டேன். எனது தலையை சுவருடன் மோதினார்கள். சிகரெட்டால் சுட்டார்கள். எனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இவ்வாறான பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் என் மீது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக செயற்படுபவன் என என் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பெற்றோல் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பை ஒன்றினுள் எனது முகத்தை வைக்க முற்பட்டார்கள்" என அவர் தெரிவித்தார். 

சிறிலங்காவில் பரந்தளவில் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் குறிப்பாக அனைத்துலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியற் செயற்பாடுகளில் பங்குபற்றுகின்றதைப் பொறுத்து அவர்கள் மீதான சித்திரவதைகள் அமைந்திருப்பதாகவும் ஏப்ரல் 2012ல் புதுப்பிக்கப்பட்ட, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கை வழிகாட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்களிடம் புலம் பெயர் நாடுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

"தான் துன்புறுத்தப்படலாம் என்கின்ற ஆபத்தை உணர்கின்ற ஒரு பாதிக்கப்பட்ட நபர் தனது நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று புகலிடம் கோரும் போது, குறிப்பிட்ட நபரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது" என சித்திரவதைப்படுத்தல், மற்றும் ஏனைய கொடூரச் செயல்களில் ஈடுபடுதல், மனிதாபிமானத்துக்கு எதிரான முறையில் தண்டனை வழங்குதல் போன்றவற்றுக்கு எதிரான சாசனத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாசனத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவானது தனது அனைத்துலக சட்டக் கட்டுப்பாடுகளை மதிப்பதற்கு அப்பால், சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப எத்தனிக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் தனது அடிப்படை கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என மெபாம் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment