வாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற சரத் பொன்சேக்கா


உணவின்றி, மருந்தின்றி ஒரு தேசம் முடக்கப்பட்டு மனிதாபிமானப் போரென்ற போர்வையில் அழிக்கப்பட்ட குரூரம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.எஞ்சியுள்ள மக்கள் ஏதிலிகளாக, நிலமற்றவர்களாக, ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டுமென்பதையே பேரினவாதச் சக்திகள் விரும்புகின்றன."கோத்தாவின் போர்' என்று தலைப்பிட்டு சி.ஏ. சந்திரபிரேம எழுதிய நூலிற்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு.


அத்தோடு மே 19 அன்று காலி முகத்திடலில் போர் வெற்றிக் கொண்டாட்டம் வேறு நடைபெற்றது.


ஆகவே இழப்பிற்கு பொறுப்புக் கூறல் மற்றும் தேசிய இன நல்லிணக்கம் என்பது குறித்து அரசிற்கு சிறு துளியளவும் அக்கறை கிடையாது என்பதையே இதே நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.


இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், சமகாலத்தில் கூட்டமைப்பு -அரசு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுதல், தெரிவுக் குழுவின் செயற்பாடு ஆறு மாத காலத்துள் முடிவடைதல், 3 மாதத்துள் இடைக்கால அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தல் என்கிற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அதனை நாடாளுமன்றில் ரணில் பகிரங்கப்படுத்தினால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என்கிற செய்தி வருகிறது.


சரத் பொன்சேகாவின் விடுதலை, பீரிஸ் ஹிலாரி சந்திப்பு என்பதோடு இணைந்து வரும் இச் செய்தி கவனிக்கத்தக்கது.


இங்கு முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை என்பது நான்கு சுவர்களுக்குள் இருந்து சிவில் உரிமையற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு இடம் மாறியுள்ளதாக கணிப்பிட வேண்டும்.அனுபவித்த சிறைவாசத்தால் இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.


இத்தடை அரச அதிபருக்கு மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிழ்ச்சியான விடயந்தான்.ஆனாலும் அரசிற்கெதிரான போராட்டக் களத்தில் இவர் ஒரு பிரசாரப் பீரங்கியாகவே பயன்படுத்தப்படுவார்.


வாயால் பேச முடியும். ஆனால் கையால் வாக்குப் போடக் கூட இவரால் முடியாது.


அதேவேளை, 'ஜனநாயகக் கட்சி' என்று புதிய கட்சியொன்றினை அமைத்து, பத்தாண்டு திட்டத்தோடு பொன்சேகா குழுவினர் முன்னகர முற்பட்டாலும் வரும் தேர்தல்களில் விஜயகாந்தின் கட்சி போலவே இயங்க முடியும்.


தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்றவர்கள், இலங்கை அரசியலில் சர்க்கஸ் பபூன்களாக மாறுவது பரிதாபமாக இருக்கிறது. 


ஆனாலும் பொன்சேகாவின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட அமெரிக்காவிற்கு பெரும் சங்கடங்களை உருவாக்கி விட்டார் மஹிந்த ராஜபக்ஷ.ஆங் சான் சூகி போன்று சரத்திற்கும் கடவுச்சீட்டோடு உலவும் உரிமையை இலங்கை அரசு வழங்குமென்று எதிர்பார்த்த உலக நாயகன் அமெரிக்காவிற்கு பலத்த ஏமாற்றம்.


ஐ.நா. சபையின் தீர்மானத்தோடு உறுதியாக நிற்போமென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா  நூலன் தெரிவித்த கருத்து, ஏமாற்றத்தின் எதிர்வினை என்று கணிப்பிடலாம்.ஆகவே சரத் பொன்சேகா பூரண விடுதலை பெறும்வரை அமெரிக்காவின் அழுத்தம் தொடருமென எதிர்பார்க்கலாம்.


சிறகுகள் கட்டப்பட்டு விடுதலையான பொன்சேகா சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டும். போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள தான் தயாரென மேற்குலகை சாந்தப்படுத்தும் அதேவேளை, இறுதிப் போரில் பொதுமக்கள் ஏராளமாகக் கொல்லப்படவில்லை என்பதோடு குற்றங்கள் நிகழவில்லை என்று அடித்துக் கூறி சிங்கள பேரினவாத கடும் போக்காளர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார் சரத் பொன்சேகா.ஏனெனில் வெள்ளைக் கொடி விவகாரத்தால் பெருந்தேசியவாதிகள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை தணிக்க அவர் பெரும்பாடு படுவதைக் காணலாம்.


இந்த மட்டுப்படுத்தப்பட்ட விடுதலை ஊடாக அரசிற்கும் இலாபமுண்டு.பொன்சேகாவின் விடுதலைக்காக பகிரங்கமாக அறிக்கைவிட்ட அமெரிக்கா, போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் அழுத்தங்களை இனி அதிகம் உயர்த்திப் பிடிக்கும் வாய்ப்பு குறைவடையும் என்பதே இவ் விடுதலை ஊடாக அரசு எதிர்பார்க்கும் விடயம்.


போரை நடாத்தியவன் என்கிற வகையில் விசாரணைகளை எதிர்கொள்ள தான் தயாரென்று பொன்சேகா கூறுவதால் தமது தலை தப்புமென ஆட்சியிலுள்ள உயர்குழாம் கருதுகிறது. 


அதேவேளை முழுமையான அல்லது அரைகுறை விடுதலையின் பின்னால் எத்தகைய நகர்வினை மேற்கொள்ள வேண்டுமென்கிற நிகழ்ச்சி நிரல்களை மேற்குலகம் வகுத்திருக்கும் என்பது உண்மை.


சிலவேளைகளில் இந்த அரை விடுதலையைக் கூட அமெரிக்கா விரும்பலாம். சிங்களப் பெருந் தேசிய இனவாதத்தை பகிரங்கமாகவே தமது அரசியல் பாதையாக வரித்துக் கொள்பவர்களை விட ,அதனைக் கடலடி நீரோட்டம் போன்று கண்ணிற்குப் புலப்படாதவாறு பிரயோகிக்கும் சக்திகளே மேற்குலகின் நவதாராண்மை வாத உலக மயமாக்கலுக்கு பொருத்தமானவர்களென்று அமெரிக்கா எடை போடலாம்.


சரத்தின் பகுதி விடுதலை, ஐ.தே.க. தலைமையிலான எதிரணியைப் பலப்படுத்த உதவும் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்க்கலாம்.ஒலிம்பிக் தீபம் போல் சிங்கக் கொடி உயர்த்தி, சரத்தின் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்து, அரசியல் கைதிகளின் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு கோப்பி வழங்கி நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குப் பச்சை கொடி காட்டி, தமிழ்த் தேசிய அரசியல் சிங்களத்திடம் சாஷ்டாங்கமாக விழும் போது, பொன்சேகாவின் தனிவழிப் பாதையும் சில மாதங்களில் வழி மாறி ரணிலோடு சங்கமமாகலாம்.


 சென்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியுற்றமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய நிந்தனையற்ற ஆதரவும் ஒரு முக்கிய காரணியாகப் பேசப்படுகிறது.


விடுதலைப் புலிகளின் அரசியல் முகமான கூட்டமைப்புடன் பொன்சேகா இணைந்து விட்டார் என்கிற பேரினவாதப் பரப்புரை நன்றாக வேலை செய்தது. அவ்வாறானதொரு பார்வை ரணில் மீது விழுந்து விடக் கூடாதென்பதற்காகவே, புதிய வல்லரசு மீட்பர்களின் ஆலோசனைக்கு அமைய தமிழீழத்தைக் கோரவில்லை என்ற கதையும், விருப்பத்தோடு சிங்கக் கொடி உயர்த்திய நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டதாக அரசியலை ஆழ ஊடுருவிப் பார்க்கும் பல அரசியல் அவதானிகள்கூறுகின்றார்கள்.


அதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வவுனியா, களுத்துறை மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டமும் கோப்பி கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது.


 இவர்கள் அரசியல் கைதிகளல்ல, பயங்கரவாதிகளென்று தெளிவாகச் சொல்லும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஒரு மாதத்துள் முடிவு சொல்ல இருப்பதால் அவருக்கு அவகாசம் கொடுக்கும் வகையில் விரதத்தை கைவிட்டு கோப்பி குடியுங்கள் என்று இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுள்ளார் கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன். 


நீண்ட துயர் சுமந்து வாடும் தமிழ் அரசியல் கைதிகள், ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடாத்தும் போது, இத்தகைய மாய மான் வாக்குறுதிகளை அளித்து தாங்களும் போராடாமல் அவர்களையும் போராட விடாமல் தடுக்கும் பின்னணியில் உயர் மட்ட வர்க்க நலன் ஊடுருவிப் பாய்வது போல் தெரிகிறது.இதேபோன்று எல்லா அவலங்களையும் புதிய மீட்பர்கள் நீக்கித் தருவார்கள் என்கிற பரப்புரை, புலம்பெயர் நாடுகளிலும் காணப்படுகிறது.


இதயச்சந்திரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment