இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரிக்கும் அமெரிக்கா..............?


தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்கான மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிந்த மூன்றாவது ஆண்டு நிறைவு அண்மையில் மூன்று விதமாக முன்னெடுக்கப்பட்டது. போர் முடிந்த பின்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவின் மீதான சர்வதேச கவனம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

முதலாவது நிகழ்வு- அரசாங்கம் நடத்திய வெற்றிக் களிப்புக் கொண்டாட்டங்கள், இராணுவ அணிவகுப்புகள். இது வழக்கமானது தான். இரண்டாவது நிகழ்வு- புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் போர்க்குற்ற நாளாகவும், துக்க நாளாகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதுவும் கூட வழக்கமானதொன்று தான். மூன்றாவது தான் மிக முக்கியமானது- அது ஆக்கபூர்வமான வழியில் தீர்வுகளைத் தேடும் வகையிலானது. முதல் இரண்டுமே ஏதோ ஒரு உணர்வை வெளிக்காட்டும் வகையிலானதாக இருந்தது. ஆனால், இனங்களுக்கிடையிலான நீண்டகாலப் பிளவை அது துலாம்பரமாக காட்டுவதாகவும், அந்தப் பிளவு இன்னமும் நிரவப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. ஒரு இனம் போர் வெற்றியின் மீது களித்துத் திளைத்திருக்க, இன்னொரு இனம் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. 

மூன்றாவது விவகாரம் சற்று வித்தியாசமானது. 

அதாவது, சர்வதேச அளவில் ஊடகங்களிலும், கருத்தியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரசாரம். சர்வதேச ஊடகங்கள் முள்ளிவாய்க்கால் பேரழிவை மறக்கவில்லை என்பதை கடந்த சில வாரங்களில் தமிழ் அல்லாத ஊடகங்களில் வெளியான கட்டுரைகள், செய்திகளில் இருந்து உணரமுடிந்தது.

நோர்வேயில் ஒரு கருத்தரங்கும், லண்டனில் ஒரு விவாதமும் நடத்தப்பட்டன. நோர்வேயில் நடந்த கருத்தரங்கில் எரிக் சொல்ஹெய்ம் பங்கேற்றிருந்தார். அவர் தனது உரையில் வலியுறுத்திய சில விடயங்கள் முக்கியமானவை. 

-இலங்கைத்தீவில் இன்னொரு தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப் போவதில்லை. 

-வடக்கு, கிழக்கில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல் தீர்வுக்கு அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. 

-மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவுக்கும் இல்லாமல் போய்விடும். 

-அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆட்சியாளர்களே தமிழ்மக்களை நோக்கி நேசக்கரம் நீட்ட வேண்டுமென்ற பரவலான கருத்து அனைத்துலக மட்டத்தில் நிலவுகின்றது. 

-போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்கான பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. 
-இலங்கைத்தீவின் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு காலம் எடுக்கும். அனைத்துலக சமூகம் அக்கறை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடங்களில் இல்லை.  

இவை அவர் முன்வைத்த முக்கியமான விடயங்கள். 

ஒருபக்கத்தில் தமிழீழத்தை உருவாக்க ஐ.நா தலையீட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது. இது சாத்தியமானதொன்றா என்ற கேள்வி இருந்தாலும், இந்தக் குரலுக்கு தமிழ்நாட்டைத் தாண்டியும் ஆதரவு உள்ளதென்பதை கடந்தவாரம் உணரமுடிந்தது. ஆனால் இது யதார்த்தமற்றது என்பதே சொல்ஹெய்மின் கருத்து. 

இந்தியா, சீனா ஆகிய இரண்டுமே பிரிவினை பற்றி அதிகம் அச்சம் கொண்டுள்ளன. 

இந்தியாவுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அச்சுறுத்தல் வெளியே தெரிந்தாலும் சீனா பற்றிய அதிகம் வெளியே தெரிய வருவதில்லை. திபெத் விவகாரம் மட்டும் தான் சீனாவுக்குத் தலையிடி என்றில்லை. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியிலும் பிரிவினைப் பிரச்சினையை சீனா எதிர்கொள்கிறது. இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்க முனைவது அல்லது அதற்கு ஆதரவளிப்பது தமது நாடுகளில் பிரிவினையை ஊக்கப்படுத்தும் என்ற கருத்து இந்த நாடுகளுக்கு வலுவாக உள்ளது. இதையெல்லாம் மீறி தனிநாடு ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதே சொல்ஹெய்மின் கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை சுயாட்சித் தீர்வுக்கு- இந்தியாவின் மாநிலங்களுக்கு உள்ளது போன்ற அதிகாரங்களுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அது ஒன்றும் சுலபமான காரியமில்லை.


சர்வதேச சமூகத்தின் இந்த ஆர்வமும் விருப்பமும் நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை மீது தனது பார்வையை அழுத்தமாக இன்னும் திருப்பவில்லை, அதற்கான சூழல் இப்போது இல்லை என்பதையும் சொல்ஹெய்ம் விளக்கியுள்ளார். சர்வதேச சூழல், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், என்று பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றன. காரணம் மேற்குலகின் பொருளாதார, பூகோள, பாதுகாப்பு நலன்களுடன் அந்த நாடுகள் அதிகம் பின்னியுள்ளன. இலங்கை பூகோள நலன்சார் இடத்தில் இருந்தாலும், பொருளாதார முக்கியத்துவம் என்று வரும் போது, இலங்கையை விடவும் இந்த நாடுகள் அவற்றுக்கு முக்கியமானவை. காரணம் அவற்றின் எண்ணெய் வளம். இதனால் இலங்கை மீதான கவனிப்பு சற்றுப் பின்னே தான் உள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது திரும்ப வேண்டுமானால், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும். அப்போது இயல்பாகவே இலங்கை விவகாரம் முன்னே வரும். 

அதேவேளை, இன்னொரு சிக்கலும் உள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனம் வேறு பக்கம் திருப்பப்படாமல் இருக்க வேண்டுமாயின் புதிய சிக்கல்கள் கிளம்பாமல் இருப்பதும் அவசியம். 2001இல் இலங்கை விவகாரம் முன்னே வரும் சூழல் ஒன்று காணப்பட்டது. அதற்குள், செப்ரெம்பர் 11 தாக்குதல் அதை வெகு தொலைவுக்குப் பின்தள்ளியதுடன் வேண்டாத விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தியது. போரின் அவலங்களுக்கு கொழும்பே பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் இருப்பதான கருத்து மேற்குலகிடம் இருந்தாலும், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்ற குழப்பம் அவர்களிடம் உள்ளது. தமிழ்மக்களிடம் அரசாங்கமே நேசக்கரத்தை நீட்ட வேண்டும் என்று மேற்குலகம் கருதினாலும், அது நடைமுறைச் சாத்தியமாவது அரிது. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை வெற்றிகரமாக நடத்த முடியாத அரசாங்கம் தமிழ்மக்களுக்கு நேசக்கரம் நீட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்பது சிக்கல் நிறைந்த விவகாரமாகவே இருக்கும். அதேவேளை இன்னொரு ஆயுதப்போர் பற்றி சொல்ஹெய்ம் விடுத்துள்ள எச்சரிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அப்படியான முயற்சி சர்வதேச ஆதரவை முற்றாகவே இல்லாமல் செய்து விடும் என்று அவர் கூறியுள்ளார். 

ஏற்கனவே, அமெரிக்கா இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை சொல்ஹெய்மோ, ஆயுதப்போர் தொடங்கினால் சர்வதேச ஆதரவு பறிபோகும் என்கிறார். இவை இரண்டுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. அதாவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறினால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், இன்னொரு ஆயுதப் போர் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்கும் நிலை வந்து விடுமா என்று மேற்குலகம் அஞ்சுகிறது. அதற்கான சூழல் இப்போது இல்லா விட்டாலும், அதுபற்றிச் சிந்திக்கக் கூடும் என்பதே சொல்ஹெய்மினதும், அமெரிக்காகவினதும் கவலையாக உள்ளது. இப்போதைய சூழலில், சர்வதேச ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வது தான் புத்திசாலித்தனம் என்பது சொல்ஹெய்மின் கருத்தாகத் தெரிகிறது. இதில் உள்ள தடைகளை அவர் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவரது கருத்தில் இருந்து சர்வதேச சமூகத்துக்கு இலங்கை விவகாரத்தில் உள்ள சிக்கல்களும் தெரிகிறது. அதற்கான தீர்வும் தெரிகிறது. ஆனால் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தான் தெரியவில்லை. அதாவது நோய் என்னவென்றும் தெரிகிறது- நோய்க்கான மருந்து என்னவென்றும் தெரிகிறது- வைத்தியத்தை தொடங்கும் வழிமுறை தான் அவர்களுக்குப் பிடிபடாமல் இருக்கிறது.

கட்டுரையாளர் சத்ரியன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment