வட கிழக்கு இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரம் இல்லாத தீர்வை ஏற்கப் போவதில்லை - மாவை

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ்தேசிய கூட்டமைப்பு  ஊடாக வழங்கப்பட கூடாது  என்று ஒரு நிழ்ச்சித் திட்டத்தைவகுத்து அதன் படி செயற்படுகிறது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 'இலங்கைத் தமிழ்ரசுக் கட்சி மாநாடு - 2012'  ஏற்பாடு தொடர்பாக ஆராயும் பொருட்டு நடைபெற்ற இக் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமைவகித்தார்.


இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்


“2001-2002ம்  ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக பெரும்பான்மைப் பலம் பெற்றிருந்த  இலங்கை தமிழ்ரசுக் கட்சி   வெளியேறியது. அவ்வேளை விடுதலைப் புலிகள் உட்பட சகல தரப்பினரும் ஏற்றக் கொண்ட வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியாகவே அத்தேர்தல்களில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட்டோம்.

அதன் பின்னர் அனைத்து நாடாளுமன்ற மற்றும் உள்ளுராட்சித் சபைத் தேர்தல்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.


அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடாக வழங்கப்பட கூடாது என்று ஒரு நிழ்ச்சித் திட்டத்தைவகுத்து அதன் படி செயற்படுகிறது. படித்து பட்டம் பெற்றவர்களும்  மக்களைக் குழப்ப முற்படுகிறார்கள். சிவில் சமூகம் என்ற போர்வையில் அண்மைக் காலத்தில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசுடனாக பேச்சு வார்த்தையில் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்துவதாக கூறியிருந்தார்கள். 


ஆனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கமிடையிலான பேச்சு வார்தையில் விடுதலைப் புலிகளை விட இவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்று கூறுகிறார்.


இதில் மக்கள்தான் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு போதும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக எந்தவொரு தீர்வையும் ஏற்க மாட்டோம் ஏற்க முடியாத தீர்வொன்றை எவரும் எம் மீது திணிக்க முடியாது.


எமது இனத்தின் விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று துப்பாக்கிகளை மகிந்தவின் காலடியில் வைத்து முதலமைச்சர் பதவி மற்றும் பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றவர்கள்  எமது கட்சியையும்  தலைவர் சம்பந்தன் ஐயாவை விமர்சிக்கிறார்கள். 


அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும் அனைத்துலக  நாடுகள் அவரையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் ஏற்றுக் கொண்டுதான் எங்களை தங்களுடைய நாடுகளுக்கு பேச்சு வார்தை தொடர்பாக அழைக்கிறது.


1949ம் ஆண்டு இலங்கை தமிழ்ரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது தந்தை செல்வா கிழக்குக் தமிழர்களுக்கு வடக்குத் தமிழர்கள் பலம் கொடுக்கவேண்டுமென்று அன்று கூறினார்.  ஆனால் இன்று வடக்குத் தமிழர்களுக்கு பலம் கொடுக்கும் சக்தியாக கிழக்குத் தமிழர்கள் திகழ்கின்றனர்.  இது இணைந்த வடகிழக்கு மாகாணமே தமிழ்ர்களின் தாயகம் என்பதை தெட்டத் தெளிவாக அனைத்துலக சமூகத்திற்கு அண்மைக்கால தேர்தல்கள் அனைத்திலும் நிருபித்துக் காட்டியுள்ளது


கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் போட்டியிட்டபோது தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை ராஜதந்திரிகளும் அனைத்துலக நாடுகளும் எம்மிடம் தொடர்புகொண்டு தமிழ் மக்கள் என்றும் உங்களுடன் இருக்கிறார்கள் என கூறி பாராட்டினார்கள்.


இந்தப் பாராட்டுக்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த பாராட்டாகவே நாம் கருதுகிறோம்.


ஐ . நாவின் மனித உரிமை தொடர்பாக நடந்த கூட்டத்தில்  இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் சம்மந்தமாக அமைசச்ர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் எவ்வித மனித உரிமை மீறல்களும்  இடம்பெறவில்லை என என உண்மைக்கு மாறான அறிக்கை சமர்ப்பித்தனர்.


இந்த அறிக்கையை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அனைத்துலக சட்ட நிபுணர்களின் உதவியுடன்  24 மணி நேரத்துக்குள் உண்மை நிலையினை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக  அரசாங்கத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுபவர்கள் என எம் மீது பேரினவாதிகள் குற்றம் சுமத்தினார்கள்.


அதற்கு பதிலளித்த எமது தலைவர் சம்மந்தன் ஐயா “உங்கள் அறிக்கையில் உள்ள உண்மைகள் என்ன? எமது அறிக்கையில் உள்ள பொய்கள் என்ன?” என வினா எழுப்பியபோது அவர்களால் ஒன்றும் கூற முடியவில்லை.


2009ல்  முள்ளிவாய்கலில் தமிழ்களின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஐ நா செயலாளரும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட்டாக நாட்டு மக்களின் ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுக்கப்படவேண்டும் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார்கள். இதன் பிரகாரம் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு வாரத்தைகள் ஆரம்பமாகின.


அந்த பேச்சு வார்தையில் அரச தரப்பு வட கிழக்கு இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரம் தர முடியாது என அடம் பிடிக்கிறது ஆனால் நாம் இவை இல்லாத தீர்வை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை என்பதை தெளிவாக இறுதியாக நடைபெற்ற பேச்சு வார்தையில் கூட தெளிவு படுத்தியுள்ளளோம். இந்த பேச்சுவார்தையை அரசாங்கம் விரும்ப வில்லை அனைத்துலகத்தின் சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே எம்முடன் பேசுகிறது” என்றார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், த.கனகசபை உட்பட மட்டகக்ளப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கம், நாவிதன்வெளி பிரதேச சபைத் தலைவர் த.கலையரசன் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் உரையாற்றினர்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment