தமிழ்த் தேசம் இனப் படுகொலையை வலியுறுத்தக் கோருவதற்கான நியாயங்கள்

இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந் நிலையில் இவ் விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் என்பது பற்றி கடந்த பத்தியில் எழுதியிருந்தேன். அப் பத்தியில் தமிழர்கள் மேற்குலக நாடுகளால் வலியுறுத்தப்படுகின்ற அளவுக்கு போர்க்குற்றத்தினை வலியுறுத்த வேண்டுமா அல்லது தம் இனத்தின் நலன்களுக்காக போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் நடைபெற்றதும் நடைபெற்றுவருவதுமான இனப்படுகொலை (Genocide) என்பதனை வலியுறுத்த வேண்டுமா போன்ற விடயங்களை ஆராய்ந்திருந்தேன்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதும் இடம்பெறுவதும் இனப்படுகொலை தான் என்பதனைக் கூறியிருந்ததுடன் இவ் உண்மையினைத் தமிழ்த் தேசம்  வலியுறுத்துவதே உகந்தது என்பதனையும் கடந்த பத்தியில் கூறியிருந்தேன். மேலும் அப் பத்தியில்இ இனப் படுகொலையே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது என்பதனை நிரூபிப்பதனூடாக அது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக் கூடியது என்பதனையும் கூறியிருந்தேன். அதாவது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அதனூடாக மட்டுமே நடைபெற்றதும் நடைபெற்றுவருவதுமான இனப்படுகொலையில் இருந்து தமிழர் தப்புவதற்கு தீர்வு கிடைக்கும் என்பதனையும் அப் பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

யதார்த்தம் இதுவாக அமைகையில்இ போர்க்குற்றங்களை வலியுறுத்தும் மேற்குலகத் தரப்புக்கள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என்பதனை வெளிப்படுத்தத் தயாராக இருக்கின்றனரே தவிர அதற்கு அப்பால் நடைபெற்றது ஓர் இனப்படுகொலை(Genocide)  என வலிறுத்துவதை இயலுமான வரையில் தவிர்க்கவே முற்படுகின்றனர். இவ்வாறு நடைபெற்றது இனப் படுகொலைதான் என ஏற்றுக்கொள்ளாது அதனைத் தவிர்க்க முற்படுவதற்குக் காரணங்களும் உள்ளன.

அடிப்படையில் சிறிலங்கா அரசினால் (சிங்கள தேசத்தினால்) தமிழ்த் தேசத்திற்கு எதிராக இனப்படுகொலை தான் இழைக்கப்பட்டுள்ளதும் இழைக்கப்படுவதும்  என நிரூபிக்கப்பட்டால் தமிழ்த் தேசத்தினை சர்வதேச ஒழுங்குகளின் படி உலக நாடுகள் காப்பாற்றவேண்டும் என்ற தேவையும் உள்ளது. அதேவேளைஇ தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரீக்க வேண்டிய சூழலும் உருவாகும் என்பது போன்ற காரணங்களே இலங்கைத் தீவில் இனப்படுகொலை நடந்துள்ளதை மறுப்போரின் பின்புலமாக உள்ளது.

இதேவேளை ஏற்கனவே எனது பத்திகளில் நான் குறிப்பிட்டது போல சீனாவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் உருவாகியுள்ள பிணைப்பினை நோக்கி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இவ் அழுத்தத்திற்கான கருவியாக மேற்லகுக்குப் போர்க்குற்றம் மட்டும் போதுமானதாகவுள்ளது.

இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்வதன் உச்ச கட்டம்இ தமிழ்த் தேசத்தை சிங்களத் தேசத்திடம் இருந்து காக்கும் முகமாக தனிநாட்டினை உருவாக்குவதே ஆகும். இந்த பாரதூரமான அரசியல் விளைவுகளைத் தவிர்த்துக் கொள்வதற்காககவும் போர்க் குற்றங்களை வலியுறுத்துகின்ற தரப்புக்கள் இனப் படுகொலையே நடைபெற்றது என்ற உண்மையை எந்தளது தூரம் தவிர்க்க முடியுமோ அந்தளவிற்குத் தவிர்த்தே வருகின்றனர்.

இந்த வகையில் தமிழ்த் தேசத்திற்கு எதிராக இழைக்கப்பட்டது இனப்படுகொலைதான் என்பதனை நிராகரிப்பதற்கு அவர்களால் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்துக்களை ஆழமாக ஆராய்ந்து அவை ஏற்றுக் கொள்ளத்தக்கதா அல்லது நிராகரிக்கத் தக்கதா என்பதனை வெளிப்படுத்துவதாக இப் பத்தி அமைகின்றது.

இனப்படுகொலை என்பதை திசைதிருப்புவதற்காக முன் வைக்கப்படும் முக்கிய கருத்துக்கள்

•    தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் ஓர் இனப் படுகொலை என்று கருதத் தக்க அளவிற்கு இடம் பெறவில்லை.

•    வேண்டும் என்ற மனோபாவத்தில் திட்டமிட்ட படுகொலைகள் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறவில்லை.

•    தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றவற்றை இனப் படுகொலை என வலியுறுத்துவதனால் அது இலங்கைத் தீவினுள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு குந்தகமாக அமையும். அதேவேளை இனப்படுகொலை நடைபெற்றதாக பேசுவதானால் உள்நாட்டில் இனங்களிடையே சமரசத்திற்காக இருக்கின்ற கதவுகள் யாவும் மூடப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

•    இனப்படுகொலை நடைபெற்றதாகக் கூறுவது நடந்தவற்றை மிகைப்படுத்திய சிந்தனையாகும். அவ்வாறு கூறுவதன் வாயிலாக உண்மையில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனிதநேயத்திற்கு எதிரான விடயங்களையும் பெறுமதி அற்றதாகச் செய்துவிடும் நிலைமை ஏற்படும்.

மேற்கூறியவாறு கருத்துக்களை முன்வைத்தே இலங்கைத் தீவில் தமிழ்த் தேசத்திற்கு எதிராக சிங்கள தேசத்தினால் மேற்கொள்ளப்பட்டவை இனப்படுகொலை அல்ல என்ற யதார்த்தற்கு புறம்பான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இவ்வாறாக இனப்படுகொலை நடைபெறவில்லை என கருத்தினை முன்வைப்போரது வாதங்களை நிராகரிப்பதற்கு தமிழ்த் தேசத்திடம் ஏராளமான நியாயங்கள் காணப்படுகின்றன.

இனப்படுகொலை அல்ல என்போரின் கருத்தினை நிராகரிக்கும் நியாயங்கள்

1) இனப்படுகொலை எனக் கூறுமளவிற்கு உயிரிழப்புக்கள் இல்லை என்ற வாதம்

இனப்படுகொலையை வரைவிலக்கணப் படுத்துவதற்கு குறைந்த பட்சம் இவ்வளவு எண்ணிக்கையானோர் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நியமங்கள் ஏதும் சர்வதேச சட்டத்தில் இல்லை.

இந்த இடத்தில் தமிழ் மக்களின் உயிரிழப்புப்புக்கள் ஓர் இனப் படுகொலை என்று கருதத் தக்க அளவிற்கு இடம் பெறவில்லை என முன்வைக்கப்படும் மேற்கூறிய கருத்தினை ஆராய்ந்து பார்த்தால்இ அக் கருத்து வலுவிழந்தே போகின்றது. மக்களின் பேச்சுவழக்கில் இலகுவான விளக்கங்களுக்காக இனப்படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு பேசப்படுவது வழக்கமாவுள்ளது. ஆனால் இனப்படுகொலையை படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கையை எடுத்தியம்புவதனூடாகவே வரைவிலக்கணப்படுத்த வேண்டும் என்று சர்வதேச சட்டத்தில் எந்தவிடத்திலும் இல்லை.

இது அப்படி இருக்க எமது இனத்தினைப் பொறுத்தளவில் படுகொலை செய்யப்பட்டவர்களது எண்ணிக்கையானது சர்வதேசம் இனப்படுகொலை நடந்ததாக ஏற்றுக்கொண்ட முன்னுதாரணங்களை விட பன்மடங்கு அதிகமாகும். உதாரணமாக 1995 இல் சிறேபனீட்சா (Srebrenica) என்னுமிடத்தில் ஏழாயிரம் பொஸ்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டமையானது இனப்படுகொலையாகும் என 2007 இல் கேய்க்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice)  தீர்ப்பளித்தது.

இவ்வாறாக முன்னுதாரணங்கள் எம் முன் காணப்படுகையில்இ இறுதி யுத்தம் இடம்பெற்ற போது முள்ளிவாய்க்கால் பகுதியில் மட்டும் படுகொலை செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை நாற்பது ஆயிரம் என போர்க்குற்றத்தினை வலியுறுத்தும் மேற்குலகத்தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப் படுகொலை செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை என்பது மேற்கூறிய இனப்படுகொலை நடந்தேறியதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடுகளில் படுகொலைக்கு உள்ளானவர்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகமாகும்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட தொகையுடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்திவிடமுடியாது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையினைக் காட்டிலும் அதிகமானோரே படுகொலை செய்யப்பட்டனர் என்பதே உண்மை. இத்துடன் காலாகாலமாக போர் மற்றும் வன்முறைகள் ஊடாக எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டே வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறான நியாயங்களின் மத்தியில் இலங்கைத் தீவில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என கருத்தினை முன்வைப்போரின் வாதங்கள் அர்த்தமற்றவை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2) இனப்படுகொலை என்ற நோக்கோடு திட்டமிடப்பட்ட இலக்கு இல்லை என்ற வாதம்

இனப்படுகொலை என்பது திட்டமிடப்பட்ட மனோபாவத்துடனும்  உள்நோக்கத்தோடும் செய்யப்படுக்கின்ற ஒரு செயற்பாடாகும். இவ்வாறு இருக்கையில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என விவாதிப்போரிடம் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசத்தின் மீது சிங்களத் தேசமானது இனப்படுகொலையென்ற எண்ணத்தில் படுகொhலைகளில் ஈடுபடவில்லை என்ற கருத்து காணப்படுகின்றது.

இவ்வாறு கூறுவோரின் கருத்துக்களில் உள்ள தவறினை எமக்கு எதிராக நடந்தேறிய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. போரின் இறுதிக்;காலப்பகுதியில் குறித்த ஓர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து அங்கு தமிழ் மக்களை தஞ்சமடையச் செய்துஇ அப் பாதுகாப்பு வலயத்தின் மீது பலமாதங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை சிறீலங்கா அரசு நடத்தியதனூடாக சிறீலங்கா அரசு எமது மக்களை படுகொலை செய்தது.

பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்திவிட்டு அங்கு தஞ்சமடைந்திருந்த எமது மக்களுக்கு உணவைக் கூட வழங்காது பட்டினியில் போட்டு மருத்துவ சுகாதார வசதிகளை மறுத்து  திட்டமிட்ட இன அழிப்பினை சிறீலங்கா அரசு  மேற்கொண்டிருந்தது. அவ்வாறிருக்கையில் அறிவுபூர்வமாகவும் நியாயபூர்வமாகவும் சிந்திக்கும் ஒருவரால் இதனை இனப்படுகொலையென்ற நோக்கோடு செய்யப்படவில்லை என நிராகரிக்க முடியாது.

நடைபெற்ற சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த ஐ.நாவினுடையது போன்ற அறிக்கைகள் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்கள் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைகின்றன.

எனினும்இ வெளியுலகம் அரசியல் ரீதியான உள்நோக்கங்களுடனேயே இனப்படுகொலை இலங்கைத் தீவில் நடைபெறவில்லை எனக் கூறிவருகிறது. ஆயினும் அரசியல் உள்நோக்கங்களுக்கும் சட்டப்பொறிமுறைகளுக்கும் இடையில் வேறுபாடுள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பார்க்கையில்இ இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதற்கான சான்றுகளே அதிகமாக வெளிப்படுகின்றன.

3) இனப்படுகொலையை வலியுறுத்துவது எதிர்கால நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும் என்ற வாதம்.

இனப்படுகொலை நடைபெற்றது என்ற பேசுபொருளானது எதிர்காலத்தில் நல்லிணக்க முன்னெடுப்புகளுக்கு பாதகமாக அமையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது சட்டரீதியான வாதங்களுக்கு வலுச்சேர்க்கும் விடயங்கள் அல்ல. மாறாக மேற்சொன்ன அரசியல் பின்னோக்கம் கொண்ட அபிப்பிராயங்களே ஆகும்.

உண்மையில் ஒரு இனத்திற்கு எதிராக இப்படிப்பட்ட அநியாயங்கள் நடந்திருக்கையில், அநியாயங்களை விசாரிப்பது நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு குந்தகமானது எனக் கூறி, அநியாயத்தினை மூடி மறைப்பது நீதிமன்ற வழக்கங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப் படத்தக்கதல்ல. எனவே இனப்படுகொலையினை விசாரிப்பதானால் நல்லிணக்கத்திற்குக் குந்தகம் எனக்கூறுவோரின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் வாயிலாக இனப்படுகொலைத் தீர்ப்பினைப் பெறுவதற்கு தாக்கம் செலுத்தக் கூடியதல்ல. நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட வாதங்களுக்கும் இடமில்லை.

4)இனப்படுகொலை என கூறுவதுஇ போர்குற்ற விசாரணையை பாதிக்கும் என்ற வாதம்

நடைபெற்றவை இனப்படுகொலை அளவிற்கு பாரதூரமானவை அல்ல. நடந்தவற்றை மிகைப்படுத்துவதனால் நடந்தேறிய போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை இல்லாமல் செய்வதாக அமைந்து விடும் என்ற வாதங்களும் உள்ளன.

இந்த இடத்தில் நமது வாதம் யாதெனில் இனப்படுகொலை என்ற விடயத்தை நாம் முன்வைக்கும் போதுஇ போர்குற்றம் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என்ற வாதங்கள் வலுவிழந்து போகும் என கூறுவது அடிப்படையற்ற வாதங்கள் ஆகும். ஏனெனில் இனப்படுகொலை என்ற விடயத்திற்குள் போர்குற்றமும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றமும் உள்ளடங்குகிறது. ஆகவே, இனப்படுகொலை என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கும் போது போர்குற்றம் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் தொடர்பான விடயங்களும் வெளிச்சத்துக்கு வரும்.

நடந்தவற்றைக் காட்டிலும் மக்கள் இழப்புக்களை மிகைப்படுத்துகின்றோம் என்ற கருத்தானது விசாரணையின்றி முடிவுசெய்யப்பட்டு திணிக்கப்பட்ட ஓர்விடயமாகவே அமைகின்றது. இழப்புக்களை நாம் மிகைப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்கள் தமது நலன் நின்று குரல்கொடுப்பவர்களாகவே அர்த்தப்படுகின்றனர். மேலுமொரு வகையில் இதனைக் கூறுவதாயின் எமது இனத்துக்கு எதிராக நடைபெற்ற பாதிப்புக்களை கொஞ்சைப்படுத்துவோராகவே இவர்கள் நடந்து கொள்கின்றனர்.

உண்மை எதுவென அறிவதற்கான சுதந்திரமான விசாரணைகள் நடைபெறாமலேயே இனப்படுகொலையென்பது நாம் மிகைப்படுத்திச்; சொல்லும் கருத்து என வாதிடும் ஒரு தரப்பினர் உள்ளனர். இக்கருத்தானது உரிய முறையில் சுதந்திரமான விசாரணைகள் எதுவும் நடைபெறாமலேயே போர்குற்றம் எதுவும் நடைபெறவில்லை என சிறீலங்கா அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு கூறுவதற்கு நிகரானது.

எனது தொடர்ச்சியான பத்திகளில் எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருப்பதும் இழைக்கப்பட்டுவருவதும் இனப்படுகொலை என தர்க்க ரீதியில் வலியுறுத்தியிருந்தேன். இந்த நிரூபிப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வாதப்பிரதிவாதத்திற்கான உதாரணங்கள் போர் நடைபெற்ற கடைசி மூன்றாண்டுகளுக்கு உட்பட்டவை ஆகும். போர் நடைபெற்ற குறித்த கடைசி மூன்றாண்டுகளும் சர்வதேசத்தின் பார்வையில் பேசுபொருளாக உள்ளதனால் அவற்றையே ஆய்விற்கு உட்படுத்தியிருந்தேன். ஆனால் உண்மையில் பார்த்தால் அறுபது வருடங்களாகவே தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றே வருகின்றன. இவ்வாறாக அறுபது வருடங்களையும் நோக்கினால் நாம் முன்வைக்கும் இனப்படுகொலை நடந்தேறியது என்பதற்கு மேலும் அதிகப்படியான ஆதாரங்களே குவிகின்றன.

பொஸ்னியாவில் 1995 இல் ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதனைத் தான் இனப்படுகொலை என 2007 ஆம் ஆண்டு கேய்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம்  (International Court of Justice )  சுட்டிக்காட்டியிருந்தது. இச் சுட்டிக்காட்டலுக்காகஇ பொஸ்னியாவில் ஒரு இனப்படுகொலை நடந்தது என வாதாடிய சட்டத்தரணி பேராசிரியர் பிரான்சிஸ் அன்ரனி பொயெல்  (Prof. Francis. Anthony Boyle)  இலங்கையில் தமிழ்த் தேசத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருபது ஓர் இனப்படுகொலை எனக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தினரான நாம் எமது வியூகங்களை வகுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என பிறந்திருக்கும் இப் புத்தாண்டில் உறுதிகொள்வோமாக.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment