காட்டுக்கோழியும் நாங்களும்

நாங்கள் திருமலைக்காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். காட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். காட்டு வாழ்க்கையில் கடினமாக இருப்பது உணவுதான். பசிக்குச் சாப்பிடலாம் ஆனால் சுவைக்கு சாப்பிடுவது என்றால் சற்றுக்கடினம் தான். வேவுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காகவோ சிறு அணிகளாகப் பிரிந்து செல்லும் நேரம், இடையில் உடும்பு அகப்பட்டால் அன்றைக்கு நல்ல சாப்பாடுதான். அல்லது, ஆறு, குளம், என தண்ணீர் தேங்கி நின்று ஓடும் இடமாகப் பார்த்து ஓட்டை வலைகளை வைத்து மீன் பிடித்து சாப்பிடமுடியும்.

அணிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சென்றால் பன்றி, மான், மரைகளை வேட்டையாடித் தூக்கி வந்து நல்ல இறைச்சியுடன் சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால், அந்த இடங்களில் இராணுவத்தின் தாக்குதல் ஆபத்துக்கள் இருந்ததால் கூடுமானவரை தவிர்த்து விடுவோம்.

காட்டுக்குள் முகாம்கள் அமைக்கும்போது, நடுவில் பிரதான முகாமை அமைத்து, அந்த முகாமைச்சுற்றி சின்ன சின்ன கொட்டில்களில்கள் அமைத்து, சிறு சிறு அணிகளாகப் பிரிந்து தங்கியிருப்போம். அப்படியிருக்கும்போது, சிலர் காட்டுக்கோழி பிடிப்பதற்கான பொறிகளை எங்கையாவது அருகில் வைத்துவிடுவார்கள்.  பொறியை எப்போதும் பார்வை எல்லைக்குள் வைத்துவிட்டு, இடையிடையே சென்று பார்ப்பார்கள். ஏனெனில் காட்டுக்கோழி பொறியில் அகப்பட்டால் கத்தாது என்பதால் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள், நானும் என்னுடைய நண்பனும் வேறொரு நண்பனைச் சந்திப்பதற்காக அவனிருந்த கொட்டிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். இடையில், கொஞ்சம் வழிமாறிவிட்டோம். ஒருவாறு சமாளித்து, சுற்றி போய்க் கொண்டிருக்கும்போது வழியில் கோழியொன்று பொறியில் அகப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. உடனடியாக நாங்கள் நண்பனைச் சந்திக்கிறதை முடிவைக் கைவிட்டிட்டு, நைசா கோழியைச் சமைத்துச் சாப்பிடுவம் என்று முடிவெடுத்தம்.

மெதுவாகக் கோழியை கழற்றிக் கொண்டு, வேறு யாரும் எங்களைக் கண்டு பிடிக்க முடியாத இடம் ஒன்றை அருகில் தேடினோம். கனதூரம் போகவும் ஏலாது. பக்கத்தில் ஆற்றுப்பள்ளம் ஒன்று இருந்தது. அது எமது சமையல் வேலைக்கு மறைவாக, பொருத்தமாக இருக்கும் என்பதால் அதில வைச்சு சமைப்பம் என்று தீர்மானித்தோம்.
இனி சமைப்பதற்குச் சாமான்கள் எடுக்க வேணும். அது கடினமானதாக இருக்கவில்லை. காரணம், நண்பன் தான் முகாமின் ஸ்ரோர்(களஞ்சியம்) பொறுப்பாளர். நான் கோழியின் காலைத் துணியால் கட்டிவிட்டு பள்ளத்து மணலில் இருக்க, நண்பன் பொருட்களை எடுக்கச் சென்றுவிட்டான்.

கோழியின் காலைக் கட்டிவிட்டு ஒரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு, கோழிக்கறி சாப்பிடுகின்ற சந்தோஷத்தோடு நண்பன் எப்போது திரும்பி வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சில்லென்ற காற்று, நல்ல அமைதி, ஆற்றுமணல் என உடலுக்கு நல்ல இதமாக இருந்தது. கொஞ்சம் அசதி வேறு, கோழியைப் பிடித்தபடி ஆற்று மணலில் சாய்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில், நண்பன் ஒருவருக்கும் தெரியாமல் சமைக்கிறத்துக்கான சட்டி, கத்தி, தூள், உப்பு எண்ணெய் என எல்லாத்தையும்; எடுத்துக் கொண்டு, தெரிந்தவர்களிற்கும் போக்குக் காட்டிவிட்டு வந்த சந்தோசத்தில், ‘டேய் மச்சான் சாமான் கொண்டு வந்திட்டேண்டா’ என்று சொல்லிக்கொண்டு, கொண்டு வந்த சாமான்களோட பள்ளத்திற்குள் பாய்ந்தான்.

இவன் பாய்ந்த அதிர்ச்சியில் பயந்துபோன கோழி திடீரென மேல துள்ளிப்பாய, நானும் திடுக்கிட்டு எழும்பிக் கையை விட்டிட்டன். கோழி பறந்திட்டுது. இரண்டு பேரும் எல்லாத்தையும் போட்டிட்டு, கோழியின் கால்கட்டியிருக்கு என்ற நம்பிக்கையில் கோழியைத் துரத்தினோம். அதை எங்க துரத்திறது?, கோழி தெத்தி தெத்தி ஓடிப்போய் நின்றது. அப்ப நான் சொன்னன் ‘மச்சான் நீ அந்தப்பக்கத்தால வா, நான் இதால வர்றன், அப்பிடியே அமுக்குவம் என்று’. அப்படியே மெதுவாய் மெதுவாய் கிட்டப்போக, கோழி பக்கென்று இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று கால்களை மாறி மாறி இழுத்து கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது.

இவர் எங்க போப்போறார் பாப்பம் என நாங்களும் ‘மச்சான் எங்களுக்கு போக்கு காட்டுது, இன்டைக்கு விடக்கூடாது’ என எங்களுக்கும் கடுப்பேற, மீண்டும் கிட்ட நெருங்க இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று நின்றது. இறுசல்காடு வேற, முள்ளுக்கிளித்து கையில சில இடங்களில ரத்தக் கோடுகள் வேற, ‘தனது முயற்சியில் சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி’ இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்தம். நல்லாக் களைச்சும் போனம், ஆனால் கோழியைப் பிடிக்க முடியவில்லை. 
கையில துவக்கும் இல்லை. கோழித் துரத்திக் கொண்டு, முகாம் எல்லையை விட்டு சற்றுத் தள்ளியும் வந்திட்டம். ஆமி வந்தாலும் என்ற எண்ணமே மனதில் வரவேயில்லை. இருந்தாலும் கோழி ஆசை விடவில்லை. மீண்டும் கடைசியா மெது மெதுவா கிட்டச் செல்ல கோழி கழுத்தைத் திருப்பி எங்கட பக்கம் பாத்திச்சு, நாங்கள் கண்ணால் சைகை செய்து கொண்டோம் கொஞ்சம் பொறுப்போம் என்று, கோழி எங்கட பக்கம் திரும்பிப்பார்த்து விட்டு பின்பக்கத்தை ஒரு ஆட்டு ஆட்டியிட்டு துள்ளிப் பறந்து மரங்களுக்குள்ள போய் மறைஞ்சிட்டுது.  நண்பன் என்னைப்பார்த்து கடுப்புடன் ‘மச்சான் கோழி திரும்பிப்பார்த்து பின்பக்கத்தை அசைச்சு “Bye” சொல்லிட்டுப் போகுது’ என்றான்.
களைச்சுப்போய், நான் அதில இருந்திட்டன். நண்பன் வந்து எனக்கு மேல ஏறி இருந்து ‘எவ்வளவு கஸ்டப்பட்டு இந்தச் சாமான்; எல்லாத்தையும் எடுத்து வந்தனான் என்று தெரியுமா’ என்று குத்தினான். காட்டுக்கோழி காலைக்கட்டியிருந்தாலும் எகிறிக் குதித்து நீண்ட தூரம் பறக்கும் என்பது அன்றைக்குத் தான் தெரியும். ஊரில கள்ளக்கோழி பிடிச்ச அனுபவ வேற இல்லை.

பிறகு என்ன செய்யிறது? கோழியிட்டப் பட்ட அவமானம் காணும் என்று சாமான்களை ஒருதருக்கும் தெரியாம கொண்டு போய் திருப்பி வைச்சிட்டு, திருப்பவும் நண்பனைச் சந்திக்க அவனுடைய கொட்டிலுக்குப் போனோம். அவனும்; ‘ஏண்டா இவ்வளவு லேட்’ என்று கேட்டான். ‘பாதையை மிஸ் பண்ணிட்டம் மச்சான்’ என்று கூறிவிட்டு கதைத்துக் கொண்டிருந்தோம். பசி வயித்தைக் கிள்ளியது.  அவனிடம் ‘என்ன மச்சான். எதாவது அயிற்றம் (சிறு சாப்பாடு) போட்டனியே’ என்று கேட்க, அவன் சொன்னான் ‘மிஸ் பண்ணியிட்டுதடா, பொறியில கோழி ஆப்பிட்ட தடயம் இருக்கு, ஆனால், கோழியைக் காணேல்ல எண்டு பொறி வைச்ச பெடியன் சொன்னான், அது கிடைச்சிருந்த நல்ல அயிட்டம் ஒன்று போட்டிருப்பன்டா’ என்றான்.

கோழியைக் கொண்டுபோய் வழியனுப்பி வைச்ச எங்கட வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்தக்கூடாது என கண்களால் பேசிக்கொண்டோம். நல்லகாலம், தெனாலிராமன் சபை கோழி விசாரணை மாதிரி போகாததால தப்பிச்சம். ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு நெருடல் ஊடுருவிச் சென்றது.

நினைவழியாத்தடங்கள் - 03

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment