வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு மைற்கல் மட்டுமல்ல அது ஒரு திருப்புமுனை. 1997 ம் ஆண்டே, கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதிக்கான வேவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிளிநொச்சி ஆனையிறவு வேவு நடவடிக்கை கடினமானதாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு படைப்பிரிவு வேவு நடவடிக்கையை ஆரம்பித்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை அடைய முடியவில்லை.
இதனால் செம்பியன் வேவு அணி, சாள்ஸ் அன்ரனி வேவு அணிகள் வேவு நடவடிக்கையைப் பொறுப்பெடுத்தன. பாரிய நிலப்பகுதியை உள்ளடக்கி, பல கட்டமைப்புக்களுடன் கூடிய காப்பரண்களைக் கொண்டு அமைந்த இப்படைத்தளங்களின் தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு உட்பகுதி வேவுத்தகவல்களே மிக அவசியம் ஆனவையாக இருந்தன. உட்பகுதி வேவுத்தகவல்கள் இன்றி திட்டத்தை தீட்டுவதோ வெற்றிகரமாக நகரத்துவதோ இயலாத காரியம். பல மாதங்களாக இதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எவையும் சாதகமாக அமையவில்லை.
வேவுஅணிகளால் உள்நுழையக்கூடிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறைப்பு வேலியில் இடைவெளிகள் இல்லை. காவலரணின் சூட்டு ஓட்டைகளிற்குள்ளாலும் புகுந்து செல்ல முடியாத வகையில் காவலரணின் சூட்டு ஓட்டைகள் விடப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் அநேகமான வழிகளையும் மிக நுணுக்கமாக உள் நுழைய முடியாதவாறு கட்டுப்படுத்தியிருந்தான்.
காவலரண் வேலியில் இருக்கும் எல்லாக் காவலரணிலும் இராணுவம் நிற்பதில்லை. அநேகமாக ஒன்றுவிட்ட ஒரு காவலரணில்தான் இராணுவம் நிற்பான். இடையிடையே ரோந்துக்கு வரும் இராணுவம் இந்த ஆளில்லாக் கவலரணுக்கு வந்து டோச் அடித்துவிட்டு சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வான். அதன்பின் அக்காவலரணில் ஒருவரும் நிற்கமாட்டார்கள். அடுத்த ரோந்துக்காரன் வரும் நேர இடைவெளிக்குள் காவலரண் சூடும் ஓட்டைக்குள்ளால் புகுந்து உள்வேவு அணிகள் செல்லுவது வேவுக்கான ஒரு வழி.
ஏற்கனவே முல்லைத்தீவு முகாம் உள்வேவு எடுக்கச் சென்ற வேவு அணியினர் உள்நுழைவதில் சிரமத்தைச் சந்தித்தபோது, காவலரணின் சுடும் ஓட்டையையே முகாமினுள் நுழைவதற்கான வழியாக பயன்படுத்தினர். இது போன்று புலிகளின் வேவு உத்திகள் தொடர்பாக இராணுவம் தான் பெற்ற எல்லா அனுபவத்தையும் பயன்படுத்தி உள்வேவு நுழைவு வழிகளை இறுக்கமாகக் கட்டுப்படுத்தியிருந்தான். இருந்தும் தொடர்ச்சியான கடும் முயற்சிகளை அணிகள் மேற்கொண்டுதான் இருந்தன.
இறுதியாக, வேவு அணிகளை உள் அனுப்புதற்கான மாற்றுத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதன்படி தொடர்காவலரண் பகுதியில் நான்கு காவலரண்கள் மீது தாக்குதலை நடாத்துவது என்றும் அதேநேரத்தில் அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, வேவு அணியை உள் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. காவலரண் மீது தாக்குதலை நடாத்தும் சமநேரத்தில் வேவு அணியை உள்நகர்த்துவதை எதிரி அனுமானிக்கமாட்டான். காவலரண் தாக்குதல் நடைபெற்றதாக எண்ணுவான். எனவே, இந்த வழிமுறையினூடாகப் பிரதான நோக்கத்தை நிறைவேற்றலாம் என்ற கணிப்பீட்டின் அடிப்படையில் இதற்கான முடிவு எட்டப்படுகின்றது.
லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் லூயின்(கலையழகன்) உட்பட ஐந்து பேரைக் கொண்ட உள்வேவு அணி தயார்ப்படுத்தப்பட்டது. காவலரண்களை தாக்கியழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள, மேஜர் கார்முகிலனுடன் முப்பத்தைந்து பேரைக் கொண்ட அணி தயாரானது. கிளிநொச்சி உருத்திரபுரப்பகுதியில் உள்ள குஞ்சிப்பரந்தன் வீதிக்கு அருகாமையிலேயே தாக்குதலுக்கான காவலரண் வேலிஅமைந்திருந்தது.
இந்நடவடிக்கைக்கு வேவு நடவடிக்கையில் இருந்த போராளிகளை மட்டுமே பயன்படுத்துவத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால் உள்வேவு அணியும் காவலரண் ஊடறுப்புத் தாக்குதலில் பங்கெடுத்துவிட்டு, தங்களது வேவு நடவடிக்கைக்கான பயணத்தைச் செய்வார்கள். இரகசியமான முயற்சியென்பதால் வேவு அணிகளே தாக்குதல் அணிகளாகவும் செயற்பட்டது.
தடைகளிற்குள் நகரும் போது இடையில் எதிரி அடையாளம் கண்டு தாக்குதலைத் தொடங்கினால் டோப்பிட்டோவைப் பயன்படுத்தி மீதித்தடைகளை உடைத்து தாக்குதலை முன்னெடுப்பதுதான் வழமையான பாதையுடைப்புத் தந்திரோபாயம். பாதையுடைப்பிற்குச் செல்லும் போது டோப்பிட்டோவையும் கொண்டே பாதையுடைப்பு அணிகள் செல்லும். ஆனால் இங்கு டோப்பிட்டோ இல்லாமல் சைலன்றாகத் தடைகளைத் தாண்டி பண்டில் சண்டையைத் தொடங்கலாம் என்ற உறுதியான முடிவில் பாதையுடைப்புத்திட்டம் வகுக்கப்பட்டது. ஏனெனில் சைலன்றாக காவரலண் சுடும் ஓட்டைக்குள்ளால் உள்நுழைவதற்கு முயற்சிக்கப்பட்ட பகுதி என்பதால் பலதடவை பண்டிற்குச் (மண்அணை) சென்று வந்திருக்கின்றனர். எனவே, தடையகற்றுவதற்கு வழமையாகக் கைக்கொள்ளும் பாணியைப் பின்பற்றவில்லை.
தாக்குதல் அணிகள் மெதுவாக நகர்ந்து தாக்குதல் பகுதிக்குச் சென்றுவிட்டன. பாதை உடைக்கும் அணி நகர்ந்து சண்டையைத் தொடக்கும் போது வலது, இடது பக்க காவலரண்களில் இருந்து, தடையுடைப்பு அணிகள் மீது எதிரி தாக்குதல் நடாத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் காப்புச்சூட்டு அணிகளை வலது, இடது பக்கம் நிலைப்படுத்திவிட்டு சண்டைக்கான அணிகள் நகரத்தொடங்கின.
முதலாவது, இரண்டாவது தடைகளை வெட்டிக்கொண்டு காவலரணை நோக்கி நகர்ந்தது பாதையுடைப்பு அணி. கடைசித்தடையைத்தாண்டி பண்டுக்கு நகர்ந்து கொண்டிருந்தபோது, வலது பக்க காலரணில் இருந்த இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. உடனே தடையில் இருந்தவர்கள் அக்காவலரண் மீது தாக்குதலை ஆரம்பித்த சமநேரத்தில் காப்புச்சூட்டணியும் தாக்குதலில் இணைந்தது. அதேநேரம் இடதுபக்க காவலரணிற்கு வீரமணி ஓடிச் சென்று குண்டை அடிக்க, இராணுவம் அக்காவலரன்களை விட்டு விட்டு ஓடத்தொடங்கினான்.
காவலரணுக்கு இடையில் இருந்த மறைப்புவேலியை பலமாக இருந்தது. என்றாலும் பிய்த்துக் கொண்டு உட்பக்கம் நுழைந்த அணிகள் இரண்டு பக்கமும் தாக்குதலை மேற்கொண்டன. அதேவேளை வேவு அணியினரும் வெற்றிகரமாக உள் அனுப்பப்பட்டனர். தாக்குதல் அணிகளும் அதில் இருந்த இராணுவத் தளபாடங்களை எடுத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, வீரமணி திரும்பி ஒடிவந்து, வேவு அணியில் இருந்த ஒருவர் நைற் விசனை(இரவு தொலைநோக்கி)அவசரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டார் என்று அதை ஒடிப்போய் எடுக்கச் சென்றார். உடனே பின்வாங்கிய அணியை உள் எடுத்து மீள கட்டவுட் போட்டு நிற்க, வீரமணி அதை எடுத்துக் கொண்டு திரும்பி உள்ளுக்குச் சென்றுவிட்டார்.
அதனால், திட்டமிட்டதன்படி வேகமாகப் பின்வாங்க முடியவில்லை. இவ்வளவும் நடந்த நேரத்திற்குள், காவலரணில் இருந்து பின்வாங்கிய இராணுவம் அப்பகுதிக்குச் சகல ரக மோட்டர் ஆட்லறிகளையும் இணைத்துக் கடுமையான செல் மழை பொழியத் தொடங்கினான். போராளிகளும் மிக வேகமாகப் பின்வாங்கத் தொடங்கினர். தடைக்கு வெளியில் செல் சரமாரியாக விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. மிகக்குறுகிய பகுதியில் செறிவாக, மழைபோல் தொடர்ச்சியாக செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியதால் பலர் காயமடைந்து விழுந்தார்கள். காயமடைந்தவர்களையும் இழுத்துக் கொண்டு தவண்டு தவண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். தவண்டு வந்துகொண்டிருந்த சில போராளிகளின் மீது செல்விழுந்து வெடித்ததில் சிலர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தனர்.
ஒரு சிறிய பிரதேசத்திற்குள் பொழிந்த செல் மழையில் அணிகள் பலத்த இழப்பைச் சந்தித்தன. கிட்டத்தட்டப் பத்துப் போராளிகள் காயப்பட்டதுடன் எட்டுப் பேர் வீரச்சாவடைந்தனர். கடுமையான செல் தாக்குதல் தொடர்ந்த போதும், மீதமிருந்த குறைந்தளவிலான போராளிகளே காயப்பட்ட, வீரச்சாவடைந்த எல்லோரையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். ஒருவர் அல்லது இருவராகவே ஒவ்வொரு போராளியையும் அங்கிருந்து, தவண்டவாறே அப்புறப்படுத்தினர். எதிரியின் செல்வீச்சு கடைசிவரை குறையவேயில்லை. அந்த செல்மழைக்கு நடுவே துணிச்சலாகச் செயற்பட்டு போராளிகளைக் கொண்டுவந்தது நினைத்துப் பார்க்க முடியாத செயலாகவே இருந்தது.
அதேசமயம், வேவு அணி பாதுகாப்பாக உள்ளே சென்றுவிட்டது. இராணுவம் உட்பகுதியில் கடுமையான தேடுதல் நடவடிக்கையை செய்தது. ஆனால், உள்வேவு அணிகள் அதிலிருந்து சாதுரியமாகத் தப்பித்தன. பின்னர் ஆனையிறவு, கிளிநொச்சியின் வேவைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கியமான அடிப்படை வேவுத் தகவல்களுடனும் வெளியில் வந்தார்கள். அவர்களுடைய வேவுத் தகவல்கள், அப்பகுதி உள்வேவுக்கு எவ்வாறு, எந்தப்பகுதியால், எந்தப்பாதையால் செல்லவேண்டும் என்ற அனைத்து கேள்விகளுக்குமான பதிலைக் கொடுத்தன. தொடர்ந்து வேவு அணிகள் பல தடவை உள்ச் சென்று வேவை முழுமைப்படுத்தின.
கிளிநொச்சி ஊடறுப்பு நடவடிக்கை தொடக்கம் வரலாற்றுச் சாதனை எனப்பதியப்பட்ட ஆனையிறவுச் சமர் வரை, சரியான முறையில் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு இவ்வேவுத்தகவல்களே அடிப்படையாக விளங்கின. இதை பெறுவதற்கான ஆரம்ப முயற்சியில் எட்டுப்பேர் வீரமரணமடைய வேண்டியிருந்தாலும் அத்தகவல்களின் அடிப்படையில் எதிரிக்கு கொடுத்த பாரிய இழப்பானது வரலாற்றில் மறக்கமுடியாததாகும்.
இந்த நடவடிக்கையில் மேஜர் கார்முகிலனும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். சாள்ஸ் அன்ரனி படையணில் செயற்பட்ட கார்முகிலன், பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர். அவரின் துணிவும் அதிரடியான நடவடிக்கையும் பல தாக்குதல் வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைத்திருக்கின்றன.
ஆனையிறவு பரந்தன் ஊடறுப்புச் சமரில் ஆட்லறி முகாமிற்குள் நுழைந்த கார்முகிலன் தலைமையிலான அணி ஆட்லறி முகாமின் குறிப்பிட்ட பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, ஆட்லறியை கைப்பற்றினர். ஆனால் முகாமின் மறுபக்கம் கட்டுப்பட்டுக்குள் வராமல் சண்டை தொடர்ந்தது. சண்டை மறுநாள் காலை வரை நீடித்தது. சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்திற்கு உதவிகள் கிடைத்து, சண்டை எதிரிக்கு சாதகமாகப் போகின்றது என்பதை உணர்ந்த கார்முகிலன், அந்த ஆட்லறிகளை கையாள்வதற்கு சென்ற போராளிகளைக் பயன்படுத்தி, ஆட்லறிகளைக் கொண்டு இராணுவத்தின் மீது நேரடித்தாக்குதலை தொடுத்து கணிசமான இழப்பை ஏற்படுத்தினார். ஏனைய முனைகளிலும் எதிர்பார்த்த வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. நிலைமையை உணர்ந்த கார்முகிலன், அத்தனை ஆட்லறிகளையும் உடைத்ததுடன் வெடிபொருள்கள், களஞ்சியங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, சமரில் பிரதானமாக செயற்பட்டவர். அத்தகைய மாவீரனையும் பலிகொடுத்து, ஆனையிறவுச சமருக்கான அடித்தளம் போடப்பட்டது.
“எமது போராளிகளின் அபாரமான துணிவும், விடா முயற்சியும், தளராத உறுதியுமே இந்த வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. எதற்கும் துணிந்தால், விடாது முயற்சிகளை எடுத்தால், உறுதியோடு இயங்கினால் எந்த சாதனையையும் சாதித்துவிடலாம். எமது இராணுவ வெற்றிகள் இந்த உண்மையையே எடுத்தியம்புகின்றன” – தலைவர் பிரபாகரன்
தலைவரின் வழியில் பாரிய வரலாற்று வெற்றிகளைப் பெற்றாலும் புல்லுாருவிகள் இனத் துரோகிகளினால் அனைத்தும் பறிபோய் அவமானம் மட்டுமே தற்போது.
ReplyDelete