போராளியின் இறுதிக்கணம்

1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன.

நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்தமிட்டபடி மரங்களில் தாவிச் சென்றன.

காட்டுக்குள் சிறிலங்கா படையணியின் சிறப்புப்படைகள் வருவது வழமை. அப்படி வந்தவர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதா? என சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஒரு போராளி ஓடிவந்து ’அருள் 89 ரைபிள் கிரனைற் செல் மிஸ்சாகி விட்டது அதில் புகழரசன் காயமடைந்து விட்டார்’ என்றான்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று பார்த்தபோது, அப்போராளியின் கால்கள்  கடுமையான காயத்திற்குள்ளாகியிருந்தது. இரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. மருத்துவப்போராளி மேஐர் ஜெமினி உடனடிச் சிகிச்சையை வழங்கினார். சேலைனை ஏற்றி, இரத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

அவசர முதலுதவியைத்தவிர மேலதிக சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை. எனவே தாக்குதல் திட்டத்தை கைவிட்டு விட்டு, அவரை வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

வன்னியிலிருந்து வண்டி(படகு) வருவதாக தகவல் கிடைத்ததும் ஒரளவிற்கு நம்பிக்கை பிறந்தது.  புல்மோட்டைப்பகுதியில் வண்டி வரும் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குக் காயப்பட்டவரைக் கொண்டு செல்ல வேண்டும்.

புல்மோட்டை பிரதான வீதியைக்கடந்து செல்லவேண்டியிருந்ததால், வீதியைக் கிளியர் பண்ணிக் கட்டவுட் போட்டு உறுதிப்படுத்துவதற்கான அணி சீக்கிரமே புறப்பட்டுச் சென்றது. சில குறிப்பிட்ட பகுதிகளால்தான் வீதியைக்கடந்து புலிகள் செல்கின்றவர்கள் என்ற விடயம் இராணுவத்திற்கு தெரியும். இதனால் அந்தப்பகுதிகளில் இராணுவம் இடையிடையே அம்புஸ் போட்டிருக்கின்றவன். எனவே செல்ல வேண்டிய பாதையை அணிகள் உறுதிப்படுத்திய பின்னரே காயக்காரரைக் கொண்டு செல்ல வேண்டும்.

கிளியர் பண்ணும் அணிகள் முன்செல்ல சிறிது இடைவெளி விட்டு காயக்காரரையும் தூக்கிக் கொண்டு அணிகள் நகர்ந்தன. வீதியைக்கடந்து படகில் ஏற்றும் இடம்வரை காயப்பட்டவரைக் கொண்டு சென்றாயிற்று. இனி படகு வந்தால் சரி என்ற திருப்தியில் அணியினர் காத்திருந்தனர். எப்படியும் சீக்கிரமாக காயக்காரரை அனுப்பினால்தான் அவரைக் கொண்டு சென்ற அணிகள் இரவே திரும்பி வர முடியும். எல்லோரும் பதட்டத்ததுடன் காத்திருந்தனர்.

செற்றில் (தொலை தொடர்பு சாதனம்) வன்னியிலிருந்து செய்தி வந்தது.  கடல் பகுதியில் கடற்படையின் டோறா பீரங்கிப்படகுகள் வந்து தரித்து நிற்பதால் ‘படகு இன்றைக்கு வராது’ என்றார்கள். மறுநாள் இரவு கடற்புலிகளின் துணையுடன் வந்து ஏற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது.

புல்மோட்டைக் கடற்பரப்பில் பல மீன்பிடிப்படகுகள் இரவு வேளைகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபடகுகளில் தொழில் செய்யும் படகுபோல வந்து காயக்காரரை ஏற்றுவதோ சாமான்கள், அணிகள் வருவதோ வழமை. அன்றைய தினம் மீன்பிடிப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

காயக்காரரை ஏற்ற வந்த படகினர் புல்மோட்டையை அண்மித்த பகுதிக்கு வரும்போது, இலங்கை கடற்படையின் டோறாப்படகு வந்து நிற்கின்றது என்ற தகவல் ராடர் நிலையத்திலிருந்து சொல்லப்பட்டதால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். எனவே காயக்காரரைத் தூக்கிக் கொண்டு மீளவும் முகாமிற்குச் செல்ல வேண்டிய நிரப்பந்தம்.

நடுநிசி இரவு, வீசிய காற்றிற்கு இசைவாக அசைந்த மரக்கிளைகளின் மெல்லிய சத்தம், ஆங்காங்கே காட்டுக்குருவிகளின் ஓசை, இடையிடையே நரிகள் ஊளையிடும் சத்தம், மிகவும் அமைதியாக இருந்தது காடு. இரவு வேளைகளில் முகாம் பகுதி மிகவும் அமைதியாக இருக்கும். வெளிச்சங்கள் இருக்காது. சென்றி மாற்றுதல் தொடக்கம் எல்லாம் மிகவும் அமைதியாக நடக்கும், டோச் லைற்றைக்கூட கையால் பொத்தியே அடிப்பார்கள்.

காயக்காரரைக் கொண்டு சென்ற அணியினர் திரும்பி வந்துவிட்டனர். காயப்பட்டவரை ஒரு ஆலமரத்தின் பெரிய வேர்களுக்கிடையில் படுக்கவைத்தனர். ஆலமரத்தின் விழுதில் சேலைன் போத்தல் கட்டப்பட்டிருந்தது. அவர் வேதனையில் கத்திக் கொண்டிருந்தார். வலி நிவாரணியை சேலையினுடன் கலந்து விட்டிருந்தனர். இரண்டு கால்களினதும் முழங்காற்பகுதி சேதமடைந்திருந்ததால் இரத்தப்பெருக்கை நிறுத்துவது கடினமாயிருந்தது. தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து கொண்டிருந்தார் மருத்துவப்போராளி.; அருகில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

புகழரசனோ ‘எனக்கு கஷ்டமியிருக்கு, உடம்பெல்லாம் முறிக்கிறமாதிரி இருக்கு’ என முனகிக் கொண்டிருந்தார். ஜெமினியிடம் என்ன மாதிரியிருக்கு என்று கேட்டேன். இரத்தம் கணக்கப்போயிட்டுது. எங்களிடம் தற்போது உள்ள சேலைன்கள் அதை நிவர்த்தி செய்யக்கூடியமாதிரி இல்லை. இரத்தம் ஏற்றக்கூடிய வசதியும் இல்லை எனக்கூறி மௌனமாக கைகளை இறுகப்பிடித்து தலைகுனிந்தார். இருட்டில் அவரது முக ஓட்டத்தைக் அவதானிக்க முடியவில்லை.

பின்னர் ‘நான் முடிந்தளவு ஏதாவது செய்யப் பார்க்கின்றேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பது விளங்கியது. அந்த இடத்திற்குப் பக்கமாக எனது நண்பனுக்கருகில் இருந்தேன். நித்தரை வரவில்லை. பகல் அலைச்சல், நித்திரையால் அயர்ந்தேனோ தெரியவில்லை. காயப்பட்ட போராளிக்கருகில் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகில் சென்றுபார்த்தேன்.

புகழரசன் ‘எனக்கு ஏதோ செய்யுது’ என மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு கைகளாலும் ஆலமர வேரைப்பிடித்துக்கொண்டு உடம்பை அங்கும் இங்குமாக வளைத்துக்கொண்டிருந்தார். ஜெமினியும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆலமரவேரை கைகளால் இறுக்கப்பிடித்துக் கொண்டு “ஆலமரவேரே என்னைவிடு நான் போப்போறன்” எனக்கூறி நெஞ்சைத் தூக்கினார், ஜெமினியும் நெஞ்சை வாஞ்சையுடன் தடவி, பிரச்சனையில்லையப்பன் என கூறிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின் மீண்டும் புகழரசன் தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி “ஆலமரவேரே என்னை விடு நான் போப்போறன்” என சிறிது உரத்த குரலில் கூறிக்கொண்டு நெஞ்சை உயர்த்தினார். அவரின் நெஞ்சைத் தடவியும் மட்டையை எடுத்து விசிறியும் ஏதேதோ செய்தனர். ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. மீண்டும் சிறிது உரத்த குரலில் “ஆலமரவேரே என்னைவிடு; நான் போப்போற…..!” என பலமாக நெஞ்சைத்தூக்கிய அவரின் உடல் சலனமற்று விழுந்து அடங்கியது. உடல் மட்டுமல்ல, அந்தப்போராளியின் விடுதலைக்கான பயணமும். ஒரு அமைதி, மௌனங்களையும் பெருமூச்சுக்களையும் தவிர வேறு சத்தங்களில்லை. அவரது உடலை துணியால் போர்த்திவிட்டு அருகில் அமர்ந்தான் ஜெமினி.

வீரச்சாவு போராட்டப்பாதையில் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இந்தச் சாவின் கணங்கள் கடினமானவை. எனது நண்பன் சொன்னான் ‘மச்சான் இங்க காயப்படுகிறதை விட ஓரேயடியா வீரச்சாவடைந்திடனும்’ என்று.

மறுநாள் அந்த முகாமிலேயே அவரது வித்துடலை விதைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. அக்காட்டுக்குள் கிடைத்த பூக்களைக் கொண்டு மலரஞ்சலி செலுத்திவிட்டு, நண்பர்கள் சேர்ந்து அவரை விதைத்தோம். சம்பிரதாயங்களோ, உறவுகளோ இன்றி அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, திரியாய் காட்டில் விதைக்கப்பட்டார். அதற்குப் பின்னர் திரியாயில் நடைபெற்ற மறிப்புச்சமரில் வீரச்சாவடைந்த மேஐர் கமல் மாஸ்டர் உட்பட பலர் அங்கு தான் விதைக்கப்பட்டனர்.
விடுதலைக்கான விதைகள் தாயகப்பரப்பில் எங்குமே விதைக்கப்பட்டிருக்கின்றன. தாயகத்தின் நிலப்பரப்பில் பாதம் பதிக்கும்போது, அந்த ஆத்மாக்களுடனான நினைவுகளுடன் சில நிமிடங்கள் கரைந்து செல்லும்.

நினைவழியாத்தடங்கள் - 01

வாணன்

யாழ் இணையம்


Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment