முள்ளிவாய்க்காலில் மீளும் நினைவுகள்

இரவு பெய்த மழை ஓய்வடைந்திருந்தாலும் சற்று தூறிக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில், ஆனால் எதிரியினால் வீசப்பட்ட எறிகணைகள் ஆங்காங்கே வெடிக்கும் சத்தத்துடன் மக்களின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தது. இரவு பெய்த மழையினால் பதுங்குகுழியினுள் நிரம்பியிருந்த மழைநீரினை வாளியினால் அள்ளி வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில் அப்போது ஒரு எட்டு வயது நிரம்பியசிறுவன் ஒருவன் வந்து எனது முகத்தைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்பதற்கு முனைகிறான் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவன் கேட்கும்முன்பே நான் அவனைப் பார்த்து என்ன வேணும் தம்பி என்று கேட்டேன். அப்போதும் அவன் முகத்தில் கேட்பதற்கான ஒரு தயக்கம் தெரிந்தது. 

நான் மழை நீரை இறைத்துக் கொண்டிருந்த வாளியைக் காட்டி "மாமா அந்த வாளியைக் கொஞ்சம் தாறீங்களா? நான் எங்களின்டபங்கருக்குள்ள இருக்கிற தண்ணியை இறைச்சிட்டு கொண்டு வந்து தாரன்." என்று கேட்டான். "ஓம் தாரன் வாங்கோ" என்று அழைத்தேன். அவனதுமுகத்தில் பசிக்களையுடன்  கூடிய பதட்டம் தெரிந்தது. பெயரைக் கேட்டேன் அவனும் சொன்னான் (அப்பெயர் எனக்கு ஞாபகமில்லை). ஆனால்அவனை சின்னவன் என்று அழைத்தார் அவரது அம்மா.

அவனைப் பார்த்து ‘செல்லடிக்குள்ள நீ ஏனப்பன் தனிய வர்றாய், அப்பா இல்லையா?‘ என்று கேட்டேன். அவனும் சாதாரணமாகவே ‘அப்பா இரண்டு மாதத்திற்கு முன்னரே விமானக் குண்டுத் தாக்குதலில் இறந்துவிட்டார்‘ என்றான். ‘இரவு சாப்பிட்டியா?‘ என்று கேட்க மறுபடியும் முகத்தில்கடுமையான சோகம்  வெளிப்பட்டது. இரவு சுட்ட ரொட்டி மூன்று இருந்தது அதில் ஒரு ரொட்டியை அவனிடம் கொடுத்து இதைச் சாப்பிட்டு விட்டுதண்ணீரை இறைத்து விட்டு வாளியைக் கொண்டு வா என வாளியை அவனிடம் கொடுத்தேன்.

ஆனால் மீண்டும் என் முகத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே ‘இன்னும் ரொட்டிகள் இருந்தா தாரீங்களா மாமா? என் தங்கைக்கும்அம்மாக்கும் அப்பம்மாவுக்கும் கொண்டு கொடுக்கப்போறேன்‘ என்றான்.

என்னிடம் மீதி இருந்த இரண்டு ரொட்டிகளையும் அவனிடம் கொடுத்தேன் வாங்கிக் கொண்டு அவனும் வேகமாக ஓடிச் சென்றுவிட்டான். எங்களதுபதுங்கு குழிக்கும் அவனது பதுங்கு குழிக்கும் ஒரு ஐம்பது மீற்றர் இடைவெளிதான்  இருக்கும். உணவு அந்த நேரத்தில் அவனுக்கு மட்டுமல்ல அங்குஇருந்த குழந்தைகள்இ சிறுவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்களுக்கும் அதேநிலைதான். அந்த முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மனிதனுக்குமரணம் மட்டுமே மலிவாய் கிடைத்தது மற்ற எதுவுமே கிடைக்கவில்லை.

சற்று நேரத்தின் பின் அவனது பதுங்கு குழிக்குள் இருந்த நீரை இறைத்து விட்டு வாளியுடன் திரும்பி வந்தான் சின்னவன். வாளியைத் தந்து விட்டுநேரம் இருந்தால் நாளை எங்கள் வீட்டுக்கு வருவீங்களா? இல்லை இல்லை எங்கட பங்கருக்கு  வருவீங்களா? என்று கேட்டுவிட்டுஇ அருகில் இருந்ததென்னை மரத்தைக் காட்டி அதன் கீழ்தான் எங்களது பங்கர் உள்ளது என்று சொன்னான். சரி நேரம் இருந்தால் வருகிறேன் நீ உங்கள் பங்கருக்குள்சென்று பாதுகாப்பாக இரு என்று சொல்லி விட்டு நான் என் வேலையை கவனித்தேன்.

வழமை போல் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்களுடனும் மக்களின் அவலக் குரல்களுடனும் அடுத்த நாள் காலையும் புலர்ந்தது. வேறுபிரதேசங்களை விட அன்று எங்கள் பகுதியில் ஓரளவு செல்லடி குறைந்திருந்தது. சின்னவன் வீட்டுக்கு அழைத்தது ஞாபகம் வந்தது. ஏனோ மனம்கேக்கவில்லை அவனது இருப்பிடத்திற்கு சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. இயல்பாகவே அவனில் எனக்கு ஒரு விருப்பம் ஏற்பட்டிருந்தது.அதனால் அவனது இருப்பிடம் நோக்கி நடந்தேன். அவனது பங்கரை நோக்கிப்போகையில்இ. பார்க்கும் இடங்களில் எல்லாம் பதுங்கு குழிக்குள்இ அதற்குள் குழந்தைகளை விட்டு விட்டுஇ பதுங்குகுழி வாசலில் அடுப்பு மூட்டி கஞ்சி சமைத்துக் கொண்டிருந்தார்கள் தாய்மார்கள். சில முதியவர்கள் பங்கருக்கு வெளியில் படுத்திருந்தார்கள். அவரிகளிடம் செல்லடிக்கிறான் ஏன் வெளியில இருங்கிறீங்கள் என்று கேட்டேன். அதுக்கு ‘எவ்வளவு சின்னப்பிள்ளையளையெல்லாம் செல் கொண்டு போகுது எங்களுக்கு மேல ஒன்டும விழுகுதில்லையே‘ என்று விரக்தியாக பதிலளித்தனர். நான் தொடர்ந்து நடந்து அவனது தென்னை  மரத்துக்கு கீழே இருந்த வங்கரை அடைந்தேன்.

என்னைக் கண்டதும் வாங்கோ மாமா அன்று என்னை ஆசையாய் அழைத்தான்.  அவன் என்னை மாமா என்று அழைத்தது அவன் மீது ஒரு இனம்புரியாத பாசம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இதுதான் எங்களது பங்கர் என்று காட்டினான் .

மூன்று அடி ஆழத்தில் நிலத்தைத் தோண்டி ஒரு மீன்பிடி படகை கவிழ்த்து மூடி வைக்கப்பட்டிருந்தது. குனிந்து பார்த்தேன்  இறைத்த நீர்இன்னும் வற்றாததால் யு.என்.எச்.சி.ஆர். ரென்ற் (ஒன்றினால்) (விரிக்கப் பட்டிருந்தது.) அந்தப் படங்கின் மேல் நான்கு வயதாகிய ஒரு பெண் குழந்தைஇருந்தது. அவனது தங்கை  இவளாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பங்கருக்கு வெளியில் அவனது தாயும் அவனது அப்பம்மாவும் மழை நீரினால் நனைந்திருந்த கொஞ்ச அரிசியையும் உடுப்புகளையும் காயவைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த குடும்பம் மட்டுமல்ல அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து குடும்பங்களும் நனைந்த உடைகளையும் உணவுப்பொருட்களையும் காயவைத்துக் கொண்டிருந்தார்கள். சின்னவனின் அப்பம்மா என்னைப் பார்த்து ‘இன்று எனது மகன் செத்து ரெண்டு மாசம் ஆச்சுஇநாங்க மன்னாரில இருந்து ஒரு மெசினில  எங்கட சாமானெல்லாம் ஏத்திட்டு வந்தனாங்க தேவிபுரத்தில் வச்சு நடந்த விமானத்தாக்குதலில் மெசின்டிரைவரும் என் மகனும் செத்திட்டாங்கள். நாங்க மிஞ்சி கிடந்த சாமான எடுத்திட்டு இங்க வந்து இந்த பங்கர வெட்டிட்டு இருக்கிறம். சின்னவன்ட அப்பாஇருந்திருந்தாலும் இந்த பிள்ளைகளுக்கு நல்ல பங்கர் செய்து தந்திருப்பான். என்ன செய்ய இதெல்லாம் நாங்க அனுபவிக்க வேணும் எண்டிருக்கு. இப்பசின்னவன்தான் எல்லாமே ஓடி ஓடி செய்றான். என்று தனது அவலத்தை சொல்லி முடித்தாள்.

இவற்றைக் கேட்டு விட்டு சரி வாறன் அம்மா என்று சொல்லி விட்டு, சின்னவனை கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு எனது இருப்பிடத்துக்குவந்தேன். அவனது கையில் அரைக் கிலோ அரிசியும் கொஞ்சம் சோயாமீற்றும் கொடுத்து இரவைக்கு சமைத்து சாப்பிடுங்க என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

அன்று இரவு வழமைக்கு மாறாக மிக மோசமான செல் தாக்குதல் மக்களின் ஒப்பாரிச் சத்தமும்இ அவர்கள் தங்கி இருந்த கொட்டில்கள் பற்றி எறியும்காட்சிகளும் என ஒரே அவலக் காட்சிகளாய் இருந்தது.

இரவு பதினொரு மணியிருக்கும் சின்னவன் ஓடி வருகிறான் மாமா எங்கட பங்கருக்கு மேல செல் விழுந்து அம்மா தங்கச்சி அப்பம்மா எல்லாம்செத்திடங்க மாமா என்றான் மிகவும் சாதாரணமாக. உடனே உதவிக்கு இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். மிகமோசமான எறிகணைத் தாக்குதல் அப்பகுதியில் நடைபெற்றிருந்தது. அம்பதுக்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டது. சிதறியஉடல்களை அவர்கள் இருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு மக்கள் நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

சின்னவனின் இருப்பிடத்திற்கு சென்று பார்த்த போது அவனது தாயினதும்  சிறிய தங்கையினதும் அவனது அப்பம்மாவினதும் உடல்கள் சிதறிக்கிடந்ததைக் கண்டேன். மூடியிருந்த மீன் படகினைத் துளைத்துக் கொண்டு செல் பீஸ்கள் அவர்களது உயிரைக் காவு கொண்டது. அதிஸ்டவசமாகசின்னவனின் கையில் சிறிய செல் பீஸ் மட்டும்தான் பட்டிருந்த்துஇ  அங்கு இருந்த யு.என்.எச்.சி.ஆர். படங்கினால் அந்த வங்கருக்குள்ளேயே  அவர்களதுஉடலைச் சுற்றி வைத்து மண் போட்டு மூடினோம். இவளவு நேரமும் சின்னவன் அழவில்லை மண் போட்டு மூடிய பின் கதறி அழத்தொடங்கினான்.தனது தனிமையை எண்ணி விம்மி விம்மி அழுத வண்ணமே இரவு முழுவதும் இருந்தான். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாவிட்டலும் அவனைஅணைத்து அன்றிரவு முழுவதும் என்னுடனேயே வைத்திருந்தேன்.

காலை விடிந்ததும் அந்த இடத்தில் சற்று தூரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் மக்களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுக்கும் இடம்ஓன்று இருந்தது. அங்கு சின்னவனைக் கூட்டிச் சென்றேன். அங்கு இருந்த ஒருவரிடம் சின்னவனை ஒப்படைத்துஇ அவரிடம் அவனைப் பற்றிசொன்னேன். யாராவது அவனது உறவினர்கள் வந்து கேட்டால் இவனை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டேன். சின்னவனைஅங்கு விட்டு விட்டு திரும்பி வரும்போது அவன் என்னைப் பார்த்த பார்வையை இன்றும் என்னால் மறக்க முடியாது. ஏன் மாமா என்னையும்உங்களுடனேயே வைத்திருந்திருக்கலாமே என்று அவனது பார்வை எனக்குச் சொல்லியது. ஆனால் எனது சூழல் அதற்குச் சாதகமாக இருக்கவில்லை.

இரண்டு நாட்களின் பின்னர் சின்னவனை ஒப்படைத்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தைச் சேர்ந்தவரை இடையில் சந்தித்தேன். அவர் சொன்னார் நீங்கள் அன்று என்னிடம் ஒப்படைத்த சிறுவனின் உறவினர் ஒருவர் கஞ்சி வாங்க வந்த சமயம் சின்னவனைக்கண்டார். அவர் தங்களது உறவினர் என்று கூறி சின்னவனை அழைத்து கெண்டு போய்விட்டார். சின்னவன் என்னைப் கடைசியாய் பார்த்த பார்வை இன்னமும்எனது நெஞ்சை விட்டகலவில்லை. என்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது

திருமலைச்சீலன்

யாழ் இணையம்


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment