சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள்! சிரித்தபடி நிற்கும் மகிந்த 'கட்அவுட்கள்! மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்!


ஈழத் தமிழர்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக அந்தப் பகுதிக்குச் சென்று பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.இம்முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர்.
அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்து சென்ற ஆண்டு மறைந்தவருமான பேராசிரியர் சிவத்தம்பி குறித்து நினைவுப் பேருரை ஆற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டு இருந்தேன்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த ஜூலை 8 அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. மிகப்பெரிய அளவில் அங்கு தமிழ் மக்கள் திரண்டு இருந்தது சிவத்தம்பி மீதும் தமிழ் அடையாளத்தின் மீதும் அவர்கள் கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்தியது!
இலங்கை வருவதை ஒட்டி நண்பர்கள் மன்னார், யாழ்ப்பாணம், மட்டகளப்பு, ஓட்டமாவடி, மருதமுனை ஆகிய பகுதிகளிலும் சந்திப்புகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இம்முறை என்னால் மலையகம் செல்ல இயலவில்லை. எனினும் மலையக நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர்.
சென்ற முறையைப் போல முள்வேலி முகாம்களுக்கும் என்னால் செல்ல இயலவில்லை. எனினும் செட்டிகுளம் முகாம்களை சாலையில் இருந்து பார்க்க முடிந்தது.
சற்றே இருள் கவிழ்ந்த நேரமது. கட்டுநாயக்க விமானத்தளத்தில் இருந்து நண்பர் தேவா ஒரு வாடகைக் காரில் தலைமன்னாரில் உள்ள தன் வீட்டை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், அனுராதபுரம், செட்டிகுளம், மடு, மன்னார் தீவு வழியாகத் தலைமன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் செட்டிகுளம் முகாம்கள் கண்ணில்பட்டன.
அனுராதபுரத்தை ஒட்டிச்சென்ற அந்த நெடுஞ்சாலைப் பகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ள இடம் என்கிற எச்சரிக்கை ஆங்காங்கு காணப்பட்டது.
நாங்கள் சென்றபோது கூட ஓரிடத்தில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்தது. வண்டியை நிறுத்தி அவை கடந்த பின்னரே எங்களால் நகர முடிந்தது.
அப்படியான ஒரு காட்டுப் பகுதியில் இராணுவ முகாம்களை ஒட்டித் தெரிந்த மங்கிய மின் ஒளி விளக்குகள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிலர் எஞ்சியிருப்பதை உறுதி செய்தன.
அவர்களின் நிலங்கள் ஒருவேளை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். 'உயர் பாதுகாப்பு வலயங்கள்’ அல்லது 'அபிவிருத்தி’ என்கிற காரணம் காட்டி அரசால் பறிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிங்களக் குடியேற்றம் கூட காரணமாகக்கூட இருக்கலாம். அல்லது ஊர் திரும்பித்தான் என்ன செய்வது என்று இங்கேயே இருந்திருக்கலாம். இறங்கி விசாரித்திருந்தால் ஒருவேளை அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்.
சென்ற முறை நான் சென்றபோது போர் முடிந்து சுமார் 10 மாதங்கள் ஆகி இருந்தன. அதன்பின் சுமார் இரண்டேகால் ஆண்டுகளுக்குப் பின் சென்றபோது மிகச் சில வித்தியாசங்களையே காண முடிந்தது.
2009-ல் சென்றபோது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் செல்ல இயலாது. ஓமந்தையிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமானால் அயலுறவு அமைச்சக அனுமதி பெற வேண்டும்.
இப்போதும் ஓமந்தையில் இராணுவ அதிகாரிகளால் நமது பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்படுகின்றன. என்றாலும் பதிவு செய்துகொண்டு மேலே செல்வதற்கு அனுப்பி விடுகின்றனர். மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இந்தச் சோதனையும் செய்யப்படுவதில்லை.

நகரங்களுக்குள்ளும் ஆங்காங்கு ஆயுதங்களுடன் கூடிய இராணுவ வீரர்கள் பங்கர் அல்லது சிறு காவல் 'போஸ்ட்’களில் நின்று கண்காணிப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது.
எனினும் ஏ32 சாலை வழியாக மன்னாரிலிருந்து பூநகரி, பின் அங்கிருந்து கிளிநொச்சி... பின் அங்கிருந்து ஏ34 சாலை வழியாக பரந்தன், முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் ஊடாக முல்லைத்தீவு வழியாக நாங்கள் சென்றபோது அப்பகுதியில் மட்டும் ஆயுதம் தாங்கிய சிங்கள வீரர்கள் சுமார் 100 மீட்டருக்கு ஒருவர் நின்று கொண்டிருந்தனர்.
சில முக்கிய இடங்களில் 'செக் போஸ்ட்’ அமைத்து ஓட்டுனரை இறங்கச் சொல்லி வண்டி எண்ணைப் பதிவு செய்து கொண்டு அனுப்பினர். இங்கும் கூட வண்டியில் உள்ளவர்களை இறக்கி விசாரிப்பது கிடையாது.
கடல் புலிகளின் நீச்சல் பயிற்சிக் குளமும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடும் காட்சிப் பொருளாக்கப்பட்டு, இங்கு உல்லாசப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் நிலையில்... கடும் சோதனைகளைத் தவிர்க்கின்றனர்.
இவற்றின் பொருள் - இராணுவக் கெடுபிடிகள் குறைந்து விட்டன என்பதல்ல. போரின்போது இருந்த இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளது.
தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்கு உள்ளும்தான் உள்ளன.
'இந்தப் பகுதி இத்தனையாவது பிரிகேடின் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றோ, 'இத்தனையாவது பிரிகேட் உங்களை வரவேற்கிறது’ அல்லது, 'இத்தனையாவது பிரிகேட் உங்களுக்கு விடை சொல்கிறது’ என்றோ ஆங்கில வாசகங்கள் அடங்கிய பலகைகளை தமிழ் பேசும் மக்கள் வாழும் பூமியெங்கும் காண முடிகிறது.
மன்னார் தீவுக்குள் நாங்கள் நுழையும் ஒவ்வொரு முறையும் இராணுவ அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு, 'எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று ஓட்டுனரிடம் விசாரித்த பின்னரே அனுப்பப்பட்டோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் 50,000 படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருந்த செய்தி, நான் அங்கிருந்தபோது பத்திரிகைகளில் வந்திருந்தது.
யாழ்ப்பாணத்தின் இன்றைய மக்கள் தொகை 5 லட்சம் என்கின்றனர். ஆக 50 பேருக்கு ஓர் ஆயுதம் தாங்கிய சிங்கள வீரன்! உண்மையில் இன்னும்கூட அதிக எண்ணிக்கையில் இராணுவ வீரர்கள் உள்ளனர் என்றொரு கருத்தும் உண்டு.
இது போன்ற நிலைகளில் அரசும், இராணுவமும் உண்மைகளைச் சொல்வதில்லை. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் மொத்தம் எவ்வளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என இந்திய அரசு சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ முகாம்களுக்குள் வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எல்லாவிதமான வசதிகளும் உள்ளன. சில முகாம்களில் வசதியான குவாட்டர்ஸ்களில் அவர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.
ஒவ்வொரு முகாம் வாசல்களிலும் பிற முக்கிய இடங்களிலும் இராணுவம் நடத்தும் கேன்டீன்கள் உள்ளன. குளிர்பானங்கள், பிஸ்கட் முதலியன விற்கப்படுகின்றன. 'மக்கள் சேவை’ முதலான கவர்ச்சிகரமான பெயர்களும் சில இடங்களில் உண்டு.
அல்லப்பட்டி தீவில் உள்ள சர்ச் ஒன்றில் இராணுவம் நடத்திய படுகொலை குறித்த செய்தி ஷோபா சக்தியின் நாவல் ஒன்றில் இடம்பெறும். அந்தப் பக்கம் போயிருந்தபோது, அந்த மாதா கோயிலைப் படம் எடுக்க முயற்சித்தேன்.
அங்கிருந்த இராணுவ வீரன் கையைத் தட்டிக் கூப்பிட்டு, யார் என சிங்களத்தில் கேட்டான். சர்ச்சில் பிரார்த்தனை செய்ய வந்தோம் என தேவா பதில் உரைத்தார்.
'பள்ளி?’ (சிங்களத்தில் ஆலயம்) எனக் கேட்டுவிட்டு, போய் வணங்கி வருமாறும், ஆனால் படம் எடுக்கக்கூடாது எனவும் சொன்னான். ஆனாலும் நாங்கள் பின்புறமாக வந்து அவன் கண்ணில் படாமல் படம் எடுத்துக் கொண்டுதான் வந்தோம்.
இப்படியான ஒரு சூழலில் முழு நேரமும் நாம் இராணுவக் கண்காணிப்பில் இருப்பதாகவே உணர நேரிடுகிறது.
தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் கண்காணிக்கப்பட்ட சமூகமாகவே வைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் ஒரு தோற்கடிக்கப்பட்ட சமூகத்தினர், என்றென்றும் கண்காணிக்கப்படுபவர்கள் என்கிற உணர்வு ஓர் மிகப்பெரிய உளவியல் சிக்கல் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.
சென்ற முறை யாழ்ப்பாணம் சென்று வந்தது குறித்து நான் ஆனந்த விகடனில் எழுதிய 'ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை’ எனும் கட்டுரையில், திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் கீழ் சிங்களக் கடைகள் போடப்பட்டிருந்தது படத்துடன் வெளியாகி இருந்தது.
பின்னாளில் அந்த நினைவுச் சின்னமே தகர்க்கப்பட்டது. கோப்பாயில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மாவீரர் கல்லறையும் அவ்வாறு இன்று தகர்க்கப்பட்டு, அவ்விடத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். என்னால் போக இயலவில்லை.
யாழ் குடா பகுதியிலுள்ள சாட்டி தீவில், மாதா கோயில் அருகிலிருந்த ஒரு மாவீரர் கல்லறை தகர்க்கப்பட்டிருந்ததை எழுத்தாளர் யோ.கர்ணன் சுட்டிக்காட்டினார்.
பூநகரியிலிருந்து கிளிநொச்சி செல்லும் வழியிலும் அவ்வாறே ஒரு மாவீரர் கல்லறை இடித்து நொறுக்கப்பட்டு அதன்மீது சாலை போடுவதற்கான மண் குவிக்கப்பட்டிருந்தது..
மாற்று மதத்தவர்கள் ஆயினும் தோற்றோர்கள் ஆயினும் இறந்தோரை மதிப்பது என்கிற குறைந்தபட்ச மானுட மரபையும் கூட ராஜபக்ச அரசு கடைபிடிக்கத் தயாராக இல்லை.
தோற்கடிக்கப்பட்ட போதும் எல்லாளனின் வீரத்தை மெச்சி அவனது கல்லறையைக் கடந்து செல்லும் எல்லோரும் வணங்கிச் செல்ல வேண்டும் என, துட்டகைமுனு ஆணையிட்டிருந்த கதையை நண்பர் தேவா நினைவூட்டினார்.
இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராஜபக்சவின் 'கட்-அவுட்’கள் 'நீடூழி வாழ்க’ எனும் முழக்கங்களுடன் வைக்கப்பட்டிருந்தன.
தமிழ் மக்களால் பெரிதும் வெறுக்கப்படக்கூடிய அம்முகம் வாழ்த்துகளுடன் தங்கள் முன் கட்டாயமாக நிறுத்தப்படும்போது அது எத்தகைய கையறு நிலையை அவர்களுக்குத் தோற்றுவிக்கும் என நினைத்துப் பார்த்தேன்.
தமிழர்களை நோக்கி 'நீங்கள் தோல்வியடைந்தவர்கள்' என ஒவ்வொரு கணமும் சொல்லிக்காட்டும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பயணத்தின்போது இதை எங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது!
வேதனைகள் தொடரும்...
இவ்வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :