இலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதிர்காலமும் – மீள் சிந்திப்புக்கான முன்மொழிவுகள்

அண்மையில் நோர்வே ஒஸ்லோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ‘போருக்கு பின்னான இலங்கையில் நிலஅபகரிப்பும் இனப்பிரச்சனையும்'; என்ற கருத்தரங்கில் பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம் இலங்கையின் தேசியஇனப்பிரச்சனை சார்ந்த அரசியலினை ‘மீள்சட்டகப்படுத்தல்’ [Reframing] செய்யவேண்டிய அவசியம்பற்றி பேசியிருந்தார். இக்கட்டுரை அவர்குறிப்பிட்ட விடயத்தினை விளங்கிக்கொள்ளும் ஆரம்ப முயற்சியே
01. 


பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் இறுதிக்காலத்தை ஒட்டியதாக வெளியரும்பிய தேசியவாத முரண்பாடுகளும் இனப்பிரச்சனையும் தற்போது தனது உச்சத்தினை நெருங்கியுள்ளது. இன்று தீவின் குடிமக்கள் மூன்று தேசியஇனக் குழுக்களாக முரண்பாடுகளினை மிகவும் கூர்மைப்படுத்தி வேறுபட்டு நிற்கின்றனர். 


இங்கு 'நாம் இலங்கையர்கள்’ அல்லது 'நாம் சிறிலங்கர்கள்' என பரந்த தேசியவாதம் பேசுபவர்களினை மூன்று தளங்களில் கண்டுகொள்ளமுடிகின்றது. 


முதல் தொகுதியினர் இனரீதியான தேசியவாத சிந்தனைகளைப் புறந்தள்ளி ஒரு நாட்டின் தேசியஅடையாளத்திற்குள் எல்லோரும் இணையவேண்டும் எனக்கூறுவோராவர். இவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கை கொண்டவர்களாகவும் இலங்கைத்தீவின் அரசியலினுள் எவ்வித ஆளுமையினை கொண்டிராதவர்களாயுமே காணப்படுகின்றனர். இவர்களது வாதத்தினை பரந்தளவில் முன்னெடுக்க முடியாதளவிற்கு இனரீதியான முரண்பாடுகளும் குரோதங்களும் சந்தேகங்களும் நம்பிக்கையீனங்களும் பல இனமக்கள் மத்தியிலும் ஆழமாக பரப்பப்பட்டுள்ளதுடன் அவை அரசியலினைக் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்களால் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.


இரண்டாவது தொகுதியினர் பரந்ததேசியவாதத்தினை முன்னெடுப்பதன் மூலம் என்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள ஏனைய தேசிய இனங்களை உள் இழுத்து வலுவிழந்து போகச்செய்யும் சிந்தனையைக் கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது கருத்தியல், செயற்பாடு ஆகியவற்றுக்கான அடித்தளமாக பெரும்பான்மை இனத்தேசியவாதத்தினை கட்டியெழுப்பி பேணிவருகின்றனர். இவர்கள் ஆட்சியதிகாரத்தினை மாறி மாறிக்கைப்பற்றும் எல்லா எதிர்நிலைக் கட்சிகளினையும் தலைவர்களினையும் கட்டுப்படுத்தும் சூத்திரத்தினை தமக்குள் கொண்டுள்ளனர். 


மூன்றாவது தொகுதியினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிராத தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாகவும் பெரும்பான்மைத் தேசியத்தின் ஆளுமைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் பரந்த தேசியவாதம் பேசுபவர்களாகவும் உள்ளனர். ஆனாலும் இவர்களால் தங்களது இனம் சார்ந்த மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அழுத்தங்களினையும் அழிவுகளினையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய எந்தவிதமான அரசியல் பொறிமுறையினையும் உருவாக்கவோ அல்லது அதன்பொருட்டு செல்வாக்கு செலுத்தவோ முடியாதளவுக்கு பெருந்தேசியவாதம் முதிர்ச்சியடைந்து இறுக்கமாயுள்ளது.


இத்தகைய பின்னணியில் இலங்கைத்தீவில் குடிமக்களின் பாதுகாப்பான எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்களினைக் கண்டறிய வேண்டுமானால் அதற்கு முதற்படியாக ஒவ்வொரு இனக்குழுக்களும் கொண்டிருக்கக்கூடிய தேசியவாத அடையாளங்களினை பரஸ்பரம் அங்கீகரிக்கவேண்டியது அவசியமாகும். 


தீவினுள் வாழும் சிங்கள மக்களும் தமிழ்மக்களும் இரண்டு பரிமாணங்களில் தங்களது தேசியத்தினை முன்னிறுத்தியுள்ளனர். சிங்கள மொழிபேசும் மக்கள் தங்களை மொழிவழி தேசியஇனமாக அடையாளப்படுத்தியுள்ளனர். பௌத்தம்சார்ந்த சிங்களத்தேசியவாதம் மேனிலைப்படுத்தப்பட்டாலும் ஏனைய மதங்களினைச்சார்ந்த சிங்களமொழியினைத் தாய்மொழியாக கொண்டவர்களும் அதே சிங்கள தேசியஇன அடையாளத்தினுள் தம்மை உள்ளடக்கியுள்ளனர்.


தீவின் வடக்கு கிழக்கினுள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக வாழுவதுடன் தீவின் ஏனைய பகுதிகளில் சிதறி வாழும் இலங்கைத் தமிழர்கள் [தற்போது தங்களை ஈழத்தமிழர்களாக புலம்பெயர்தேசங்களில் அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்] தங்களினையும் ஒரு மொழிவழித்தேசிய இனமாக கட்டியெழுப்பும் முனைப்புக்களைக் கொண்டிருந்தாலும் அதில் வெற்றிபெறமுடியாத நிலைக்குள் சிக்குப்பட்டுள்ளனர். 


முஸ்லீம் மக்களினை தமிழ்த் தேசியஇன அடையாளத்தின்கீழ் குறியீடு செய்யும் முயற்சிகள் கடுமையான வாதப்பிரதிவாதங்களை 20ம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்திலேயே உருவாக்கியிருந்தது.


இலங்கைத்தீவினுள் வாழும் இஸ்லாமியமக்கள் தமிழ்மொழியை தங்களது தாய்மொழியாக கொண்டிருந்தாலும் வழிபாட்டு மொழியாக அரபுமொழியையும் வழக்கு மொழியாக தாங்கள் வாழும் பிரதேச மொழியையும் கொணடுள்ளனர். இலங்கைத்தீவினுள் வாழும் முஸ்லீம் மக்களினை பல்வேறு அடையாளங்களினையும் தாண்டியதாக அவர்களது மார்க்கமும் அதுசார்ந்த வாழ்க்கை நெறியும் ஒருங்கிணைக்கின்ற காரணத்தினால் ஏனையவர்களினைப் போலல்லாமல் தங்களினை மதம் சார்ந்த முஸ்லீம் தேசியஇனமாக தங்களினை அடையாளப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். 


முஸ்லீம் மக்களின் 'முஸ்லீம் தேசிய இனம்' என்கின்ற வாதத்தினை தமிழ்த்தேசியவாதிகள் உள்வாங்க முடியாதவர்களாக காணப்பட்டனர். எனினும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாக கொண்ட இந்து, கிறீஸ்தவ மக்கள் தங்களினை தமிழ்தேசிய இனமாக அடையாளப்படுத்துவதற்கும் அரசியல் சமூக செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்கும் எந்தளவிற்கு உரிமை கொண்டவர்களோ அந்தளவிற்கு இஸ்லாமிய மக்களும் தங்களினை முஸ்லீம் தேசியஇனமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையினை கொண்டவர்கள் என்பதனை தமிழ்த்தேசியவாதிகள் விரைந்து முன்வந்து ஏற்றுக்கொள்வது புறக்கணிக்கமுடியாததும் மிகவும் அவசியமானதும் காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது. 


ஓவ்வொரு தொகுதியினரும் மற்றவர்களின் அரசியல் அடையாளங்களினை அங்கீகரிக்கின்றார்களோ இல்லையோ இலங்கைத்தீவின் யதார்த்தமானது பிரதானமாக மூன்று தேசிய.இன அடையாளங்களுக்கு ஊடாக பயணிக்கவேண்டியுள்ளது. அத்துடன் அந்த அடையாளங்களினை தக்கவைத்துக்கொண்டு தங்களின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு செழுமையினைத் தேடவிரும்பும் அபிலாசைகளினை கொண்டிருப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் அம் மக்கள் கொண்டிருக்கும் உரிமைகளினை அங்கீகரிக்கவும் வேண்டியுள்ளது. 


இங்கு ஒரு தேசிய இனத்தின் உரிமையையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் அங்கீகரிக்காமல் மறுப்பதற்கு மற்றொரு தேசியஇனத்திற்கு உரிமையில்லை. 


சில சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழ்த் தேசியவாதம் புரிவோர் இந்தியாவின் தமிழ்நாட்டினை உதாரணமாக காட்டி அங்கு இஸ்லாமியர்கள் தமிழர்களாகவே தங்களினை அடையாளம் காட்டும்போது ஏன் இலங்கைத்தீவில் முஸ்லீம்கள் இஸ்லாமியத்தமிழர்களாக தமிழ்த்தேசிய அடையாளத்தினுள் உள்ளடங்ககூடாது? போன்ற வாதங்களினை முன்வைக்கின்றனர். இது பொருத்தமற்ற வாதமாகவே கொள்ளப்படவேண்டியுள்ளது. 


இவ்விடயத்தினை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ளவேண்டுமானால் தேசியஇனம் என்ற விடயம் தொடர்பாக மாக்சிய சித்தாந்தம் குறிப்பிடும் விடயங்களினை நாங்கள் மீளப்படிக்கவேண்டியுள்ளது.


இங்கு மாக்சிய சித்தாந்தங்களினை முன்னிறுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் மாக்சிய சித்தாந்தம் தரக்கூடிய தர்க்கவியல் சார்ந்த விஞ்ஞானமுறை விளங்கங்கள் கூடிய தெளிவினை ஆர்வமுடையவர்களுக்கு ஏற்படுத்தலாம். தற்போது உலகபொருளாதாரம் எதிர்கொண்டுள்ள மூலதனச்சந்தைகளின் நெருக்கடிகளினை புரிந்து கொள்வதற்காக அமெரிக்காவின் வால் ஸ்ரிட்[Wall Street] முதலாளித்துவவாதிகள் கார்ள் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலினை மீள்பதிப்பு செய்து அதனை ஆழமாக படிக்கத்தொடங்கியுள்ளனர். அப்படியானால் நாங்கள் ஏன் எங்களின் கேள்விகளுக்கு சாத்தியமான விடைகளினை மாக்சியத்தினுள் தேடக்கூடாது. 


தேசியம், தேசியஇனப்பிரச்சனை ஆகியவை தொடர்பாக ஜே.வீ.ஸ்ராலின் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார். 


“A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture” 


தேசியஇனம் என்பது வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டதும், தங்களுக்கு என பொதுவான மொழி, நிலம், பொருண்மிய வாழ்வு, ஆகியவற்றுடன் தங்களினை உளவியல் ரீதியாக ஒரு பொதுவான பண்பாட்டுதளத்தினுள் உருவகித்துக்கொண்ட நிலையான சமூகமாக வாழும் மக்களினைக் குறிக்கும். 


இங்கு ஒரு தேசியஇனம் கொண்டிருக்ககூடிய அடிப்படை அம்சங்கள் கூறுபடுத்தப்பட்டுள்ளன. அ) வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது. 

ஆ) பொதுவான மொழி. 

இ) நிலம் 

ஈ). பொதுவான பொருண்மியவாழ்வு 
உ) ஒரு பொதுவான பண்பாட்டுதளத்தினுள் உளவியல் ரீதியாக தங்களினை உருவகித்துக்கொள்ளல். 
ஊ) நிலையான சமூகமாக வாழும் மக்கள் தொகுதி. 


இலங்கைத்தீவினுள் இலங்கைத்தேசியம் என்ற ஒற்றைப்பரிமாண தேசியத்தினை கட்டியெழுப்ப முடியாமைக்கு இரண்டு விடயங்கள் முக்கியமான தடைகளாகவுள்ளன. 


ஒவ்வொரு தொகுதியினரும் தாங்கள் வெவ்வேறுவகையில் வரலாற்று ரீதியான கட்டமைப்பினைக் கொண்டவர்கள் என்று தங்களின் உள்மன ஆளத்தில் கொண்டிருக்கும் பதிவு இங்கு முதன்மையாக உள்ளது. அத்துடன் வேறுபட்ட பண்பாட்டுத்தளத்தில் தங்களின் வாழ்வியலினை உருவகித்துக்கொண்டள்ளதான நிலைமை முதலாவது விடயத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. இவை இரண்டும் இலங்கைத்தேசியம் அல்லது சிறீலங்கா தேசியத்தினை முற்றாக மறுப்பதுடன் முரண்பாடுகளினை மென்மெலும் கூர்மைப்படுத்துகின்றது. 


தமிழ்பேசும் இந்துக்களும் கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமிழினை தங்களது தாய்மொழியாகவும் பொதுமொழியாகவும் கொண்டிருந்தாலும் இஸ்லாமிய மக்களினை அவர்களுக்குள் ஒருங்கிணைக்கும் மதம் சார்ந்த குறியீடு ஏனைய பொதுவான மொழி, ஒத்த தன்மையான பண்பாட்டுக்கூறுகள் என்கின்ற விடயங்களினை முற்றாக வலுவிழக்கச்செய்கின்றன. 


அதேபோன்று தீவின் மத்திய மலைநாட்டில் தோட்டத்துறை சார்ந்து வாழுகின்ற தமிழ்மக்கள் தமிழ்மொழியினை தாய்மொழியாகவும் பண்பாட்டுவிடயங்களில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்களுடன் ஒத்த பண்பாட்டு அம்சங்களினையும் கொண்டுள்ளார்கள். எனினும் அவர்களது வரலாற்றுரீதியான கட்டமைப்புசார்ந்த உருவகமும், வேறுபட்ட பொருண்மிய வாழ்வியலும், அவர்களை ஈழத்தமிழ்த் தேசியத்திலிருந்து வேறுபடுத்தியுள்ளது. 


தமிழர்களும், முஸ்லீம்களும் தீவின் வடக்கு கிழக்கில் பொதுவான நிலப்பரப்பினைக் கொண்டிருந்தாலும் இரண்டு மக்கள் தொகுதிக்கும் இடையே காணப்படும் சனத்தொகை வளர்ச்சி வீதத்தின் வேறுபாடுகளும், நிலப்பசியும், ஏனைய வளங்கள் வாய்ப்புக்களுக்காக ஏற்படும் கடுமையாக போட்டியும் அவர்களுக்கிடையில் பொதுவான நிலம் என்ற அடிப்படையினை இல்லாமற்செய்துள்ளது. 


வளங்களினை ஆட்சிப்படுத்துவதற்காக அரசியல் அதிகாரம் வேண்டும், அரசியல் அதிகாரத்தினைப்பெற தெளிவான வரையறைகளினைக்கொண்ட நிர்வாக அலகும், தேர்தல் தொகுதிகளும் வேண்டும் என்கின்ற தர்க்கரீதியான செயன்முனை வடக்கு கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம்கள் ஆகியோருக்கிடையே காணப்பட்ட பொதுவான நிலம் என்ற காரணியினை பிளவுறச் செய்துள்ளது. 


இங்கு மேற்குறிப்பிட்ட தர்க்கரீதியான வாதத்தினை முன்வைத்ததற்கு காரணம் தமிழ்மக்களின் தேசியஇனப்பிரச்சனையினை மீள் சட்டகப்படுத்த வேண்டிய தேவை உண்டா? என்பதனை ஆழமாக புரிந்து கொள்வதற்கேயாகும். 


02. இலங்கைத்தீவினுள் சிங்களபௌத்த தேசியவாதிகளினால் முன்னெடுக்கப்படும் சிறீலங்கா தேசியவாதம் வெறும் அடையாளம் சார்ந்த கூக்குரல் அல்ல என்பதனை இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் அக்கறைகொள்பவர்கள் யாவரும் இலகுவில் புரிந்துகொள்வர். 


பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாற்றிய காலத்திலிருந்தே எண்ணிக்கைப் பெரும்பான்மையினைப் [numerical supremacy] பயன்படுத்தி ஏனைய தேசிய இனங்களினை மேலாதிக்க உணர்வுடன் அச்சுறுத்துவதே சிங்களஅரசியல் தலைமைகளின் தொடர்சியான செயற்பாடாக இருக்கின்றது. 


தங்களின் கைகளில் குவிந்துள்ள ஆட்சியதிகாரப் பலத்தினை பயன்படுத்தி இயற்றப்படும் சட்டங்கள் [laws], அரசியல்யாப்புக்கள் [constitution], நிதி நிர்வாக பிரமாணங்கள்[Administrative circulars & Financial regulations], அபிவிருத்திக்கான வளஒதுக்கீடுகள் [Resource allocations] யாவற்றினூடாகவும் கட்டமைக்கப்பட்ட வன்செயலினை [Structural Violence] மிகவும் சிறப்பாக முன்னெடுத்தனர். அதற்கும் மேலதிகமாக காலத்திற்கு காலம் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனவன்செயல்களுடாக அம்மக்களின் சமூக இருப்பினையும், மூலதனதிரட்சியினையும் சொத்துடைமை உருவாக்கத்தினையும் தகர்த்து எறிந்துகொண்டே இருந்தனர். 


இச்செயற்பாடுகளின் விளைவுகளினை தொடர்ந்து தக்கவைப்பதற்காக வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழ்ந்த அப்பாவிச் சிங்கள மக்களை 'சிங்களதேசியத்தினை பாதுகாக்கப்போகின்ற எல்லைப்புறக்காவலர்கள்', 'போராளிகள்' என்றவாறு மூளைச்சலவை செய்து இனக்குரோத உணர்வு கொண்டவர்களாக உருவேற்றி தமிழ்க்கிராமங்களிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைப்புறங்களிலும் குடியேற்றினார்கள்.


இந்த நிகழ்ச்சித்திட்டங்களினால் முஸ்லீம்மக்களின் கிராமங்களும் விளைநிலங்களும், மலையகத்து தமிழ்மக்களின் தோட்டங்களும் நகர்ப்புறங்களும் கூட குறிவைத்து சிதைக்கப்பட்டன, சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 


தமிழ், முஸ்லீம் மக்களின் வாழ்விடங்கள் [habitual lands], வயற்காடுகள் [paddy fields], வளந்தரு வனங்கள் [minerals & forests], மீன்பிடி தளங்களும் கரையோர துறைகளும் [fishing grounds & landing points], பிரதான போக்குவரத்துப்பாதைகளின் இணைவு சந்திகளும் [strategic locations and junctions] நகரங்கள் சார்ந்த வளர்ச்சி மையங்களும் [urban and growth centres] சேவைக்கட்டமைப்புக்களும் [service infrastructures] சிங்கள மக்களினதும் அவர்கள் சார்ந்த நிர்வாக அதிகாரபொறிமுறையினதும் [administrative & power structures] கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. 


முழுமையான பார்வையில் தமிழ்மக்கள் தங்களினை தேசியஇனம் ஆக நிலைநிறுத்தக்கூடிய அடிப்படைகள் யாவும் ஒவ்வொன்றாக குறிவைத்து தகர்க்கப்பட்டன. 


முஸ்லீம் மக்கள் சிங்களபௌத்த தேசியவாத அரசுகளில் ஒட்டிஉயிர்வாழும் வேண்டாவிருந்தாளிகளாக [Politically unwanted guest or parasites] அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டனர். சிங்கள ஆட்சியாளர்கள் தங்களது தீர்மானங்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கட்டுப்படக்கூடிய தனிநபர்களினை தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளாகவும் தங்கள் அரசியல் மேடையில் பக்கவாத்திய கலைஞர்களாகவும் இணைத்துள்ளனர். 03. 


சுமார் எழுபதாண்டு கால வரலாற்றினைக்கொண்ட தமிழ்மக்களது அரசியல் உரிமைக்கான போராட்டம் பலவடிவங்களில், பல தலைமைகளின் வேறுபட்ட அணுகுமுறையின் கீழ பலகட்டங்களினைக் கடந்துள்ளது. ஆனால் இவை எல்லாவற்றினையும் முன்னோக்கிய கட்டங்களாக குறிப்பிடமுடியாது. 


பாம்பும் ஏணியும் [snake & ladder] என்கின்ற தாயக்கட்டை விளையாட்டில் பலபத்துக்கட்டங்களினைத் தாண்டியபின்பு பெரியதோர் பாம்பின் கட்டத்துள்; பிரவேசித்ததனால் மீண்டும் முதலாம் கட்டப்பெட்டிக்குள் சறுக்கிய நிலையினைத்தான் தற்போது ஈழத்தமிழர்கள் அடைந்துள்ளார்கள். விளையாட்டின் வேகத்தில் தாயக்கட்டையினையும் தொலைத்துவிட்டு இருட்டினில் தேடுகின்றவர்களாகவே இருக்கின்றனர்.


இத்தகைய நிலையில் தான் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையினை மீள் சட்டகப்படுத்துவது [Reframing the National Question] தொடர்பான உரையாடலுக்கான இடைவெளி ஒன்று தோன்றியுள்ளது. 


இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதியில் பருத்திதுறையிலிருந்து பாணமை வரைக்கும் முல்லைத்தீவிலிருந்து மறிச்சுக்கட்டி வரைக்குமான நீண்ட நிலத்தொடரான தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தினை தமிழீழமாக வென்றெடுப்பது தமிழ்மக்களின் இலக்காக இருந்தது மறுக்கமுடியாத உண்மை. ஆயுதபலம் பெருக்கி படைநடத்தி நிலத்திற்கு எல்லை வேலி போடலாம் என்கின்ற கனவு நனவாகாமல் மௌனமாகியது 2009 மே மாதத்தில். 


அதனைத்தொடர்ந்து சிங்களத்தேசியவாத அரசியலும் அதன் அரச இயந்திரமும் இராணுவமும் தமிழ், முஸ்லீம்மக்களின் அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டு இருப்பினை நிர்மூலமாக்கும் செயற்றிட்டத்தினை விரைவுபடுத்தியுள்ளனர். 


இத்தகைய மிகவும் மோசமான நெருக்கடி நிலையில் தொடர்ந்தும் தமிழ்மக்களின் தன்னாட்சி அரசியல் உரிமைக்கான செயற்பாடுகள் கனவுகளாலும் எதிர்வுகூறல் அரசியலினாலும் அச்சுறுத்தும் அடாவடித்தனங்களாலும் நெறிப்படுத்தப்படாமல் ஒரு தெளிவானதும் வெளிப்படையானதுமான பகுத்தாய்தல் பயிற்சி ஊடாக தன்னை மீள் கட்டமைக்க restructure வேண்டியுள்ளது. 


தமிழ்மக்களின் தேசியஇனப்பிரச்சனையினை மீள சட்டகப்படுத்தல் எனகூறும்போது அது தமிழீழத்தினைக் கைவிடுமாறு கோருகின்றார்கள் என்றோ அல்லது சிறீலங்காவின் சிங்களபௌத்த தேசியவாதத்துடன் உடன்பட்டு இசைந்து அழிந்து போவதற்கான முன்தயாரிப்பு முயற்சிகள் என்றோ முடிவுக்கு வருதல் மிகவும் அபத்தமானது.


இலங்கைத் தீவினுள் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியஇனங்கள் எவ்வாறு வெற்றிகரமாக தங்களினைத் தக்கவைத்து செழுமைப்படுத்திக்கொள்ளலாம் என்பதனைக் கண்டறிவதே இங்கு முக்கியமானதாகும். 


இலங்கைத் தீவில் வாழும் மூன்று முக்கிய தேசியஇனங்களிடமும் பலவிதமான பலமும் பலவீனங்களும் உள்ளன. அவற்றினைச் சிறப்பான முறையிலே விளங்கிக்கொள்வதன் மூலமே இப்பயிற்சியினை சிறப்பாக செய்யமுடியும். இப்பயிற்சி ஒரு தனிஒருவரது நிபுணத்துவத்தினாலோ அல்லது ஒத்த சிந்தனைகள் கொண்ட சிலரால் உருவாக்கப்பட்ட குழுக்களால் மட்டுமோ செய்து முழுமையடைய முடியாது.


தமிழ்த்தேசிய இனத்தின் பலம்-பலவீனங்கள் சிலவற்றினை இங்கு உதாரணத்திற்காக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். 


தமிழ்மக்களின் முதன்மையான பலம் தங்களினை ஒரு பொதுவான பண்பாட்டுத்தளத்தினுள் உளவியல் ரீதியாக உருவகித்து கட்டியெழுப்பியமையாகும். அடுத்து தங்களுக்கென கட்டமைக்கப்பட்ட வரவாற்றினைக்கொண்டிருப்பதுடன் ஒரு தொடர்நிலப்பரப்பினுள் நிலையான சமூகக்கூட்டமாக தங்களினை நிலைநிறுத்திக் கொண்டுள்ளமையுமாகும். 


இதற்கு மறுதலையாக பல பலவீனங்கள் கொண்ட தேசியஇனமாக தமிழ்மக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றனர். இவற்றில் முக்கியமானது மக்கள்தொகைக் கட்டமைப்பாகும். 


ஓப்பீட்டளவில் என்றைக்குமே சிங்களத் தேசிய இனத்தின் எண்ணிக்கையினை நெருங்கமுடியாத பாரிய இடைவெளியினைக் கொண்டுள்ள ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த யுத்தம், நெருக்கடி, வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக எதிர்மறையான வளர்ச்சி கொண்ட மக்கள் கூட்டமாக கரைந்து கொண்டிருக்கின்றனர். 


எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனிநாட்டினுள் அல்லது ஒரு தீவினுள் வாழுபவர்கள் அவ்வாறு எதிர்மறைப்போக்கினை [negative trend] கொண்டிருந்தால் அது உடனடியான பாதிப்பினை அவர்களுக்கு ஏற்படுத்த மாட்டாது. ஆனால் இலங்கைத்தீவினுள் 70வீதத்திற்கு அதிகமான சனத்தொகையினை கொண்ட சிங்களமக்கள் தொகுதியுடனும், கூடிய மக்கள்தொகை வளர்ச்சி வீதத்தினை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களுடனும் நிலத்திற்காகவும் வளத்திற்காகவும் வாய்ப்புகளுக்காகவும் அரசியல் உரிமைக்காகவும் போட்டியிடுதல் என்பது மிகவும் கடினமான இலக்காகும். 


தற்போது ஈழத்தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர் தேசங்களில் தங்களினை நிலைப்படுத்தியுள்ளனர். இவர்கள் தமிழ்த்தேசியத்தில் பற்றுறுதி கொண்டிருந்தாலும் அவர்களது பிள்ளைகளது கல்வியும் வாழ்க்கைமுறையும் [education & lifestyle] புலம்பெயர்தேசத்தின் வசதிக்கட்டமைப்புகளும் [social securities] அவர்களது தாயக்திற்கு மீண்டும் திரும்பிச்செல்லும் விருப்புக்களினை மிகவும் பலவீனமாக்கிகொண்டிருக்கின்றன. 


அத்துடன் தொடர்ச்சியாக வெளியேறும் படகு அகதிகளும் ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களில் புதுவாழ்வு தேடும் பயணங்களும் ஈற்றில் இலங்கைத்தீவில் இயலாத தமிழர்களின் எஞ்சிய தொகுதி ஒன்றினையே விட்டுச்செல்லும். 


அடுத்து தமிழ்மக்களிடையேயான பொதுவான பொருண்மியவாழ்வு என்பது மிகவும் கேள்விக்குரியதாக மாறியுள்ளது. இலங்கைத்தீவில் மலையக பெருந்தோட்டத்துறைத் தமிழ்மக்கள் தமக்கென ஒரு குறைந்த பட்சமான பொருண்மியவாழ்க்கையினை கொண்டுள்ளமை அவர்களது சிறப்பம்சமாகும். 


சிங்களமக்கள் தீவின் தேசிய பொருளாதாரத்தினை தமது ஆளுமைக்குள்ளும் உரித்தின் கீழும் வைத்துள்ளனர். முஸ்லீம் மக்கள் தமது சமூக அடையாளத்தினைக் கொண்டதான வர்த்தக தொழிற்றுறையினையும், தங்களது சமூகமூலதனத்தால் [Social Capital] செழுமைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் சார் தொழிற்றுறையினையும் ஒரு குறிப்பிட்டளவுக்கு விவசாயம் விவசாயம்சார் கைத்தொழில், சேவைத்துறைகள் என பலதளங்களிலும் இனஅடையாளத்தினால் ஒருங்கிணைக்கப்படக்கூடிய தனித்துவமான பொருண்மிய வாழ்வியல் கட்டமைப்பினைக்கொண்டுள்ளனர். 


ஆனால் இவையாவற்றிலிருந்தும் ஈழத்தமிழர்களின் பொருண்மியவாழ்வியல் முற்றிவும் வேறுபட்டுள்ளது. ஐரோப்பிய குடியேற்ற ஆட்சியின்கீழ் கிடைத்த கல்விமுறையின் தொடர்ச்சியும் “கோழி மேய்த்தாலும் கொர்னமேந்தில மேய்க்கவேண்டும்” என்கின்ற அரசஉத்தியோக கூலி மனப்பான்மையும் [Coolie’s mindset] இளைப்பாற்றுச் சம்பளத்துடன் கூடிய நிரந்தர கந்தோர் உத்தியோக கனவும் தமிழ்மக்களின் புத்தாக்கத் திறமையினையும் [creativeness] தொழிற்றுறை ஆளுமையினையும் [entrepreneurial spirit] மூலதனவாக்கத்தினையும் [capital formation] முழுமையாக மலட்டுத்தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது. 


புலம்பெயர் தேசங்களில் தங்களினை நிலைப்படுத்திக்கொண்ட ஈழத்தமிழர்கள் கூட கல்வியிலும், சேமிப்பாற்றலிலும், சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமக்களாக வாழ்வதிலும் தமக்கென சொந்த வீடுகளினை கொண்டிருப்பதிலும், கடமைபுரியும் நிறுவனங்களில் விசுவாசத்துடன் உழைப்பதிலும் தங்களின் தனிமனித, சமூக ஆளுமையினை நிலைநிறுத்தியுள்ளனர். 


ஆனால் தொழிற்துறைகளினை கட்டியெழுப்புதல், தொழிலதிபர்களாக மேலேழுதல், தேசியஅரசியலும் சர்வதேசஅரசியல் மற்றும் நிபுணத்துவ தளங்களிலும் தங்களினை நிலைநிலைநிறுத்துதல் ஆகியன ஈழத்தமிழர்களுக்கு இன்னமும் வானவில்லின் வர்ணஜாலங்களாகவே உள்ளது. 


ஈழத்தமிழர்கள் யூதர்களினைப்போல் என்று மார்தட்டுபவர்கள் கூட உலகெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களது தேசத்தினை பாலஸ்தீனத்தின் பாலைவனவெளிகளில் கட்டியெழுப்புவதற்காக உழைத்த உழைப்பினையும் முன்னெடுத்த அபார முயற்சிகளினையும் செலுத்திய விலையினையும் தற்போது பாலஸ்தீனர்களின் நிலங்களினை தொடர்ந்து அபகரித்துக்கொண்டிருக்கும் மோசமான செயற்பாடுகளையும் அறிந்துகொள்ள கொள்ளத்தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். 


தமிழ்மக்களினை யூதர்களுக்கு ஒப்பிடுதல் தமிழ் மத்தியவர்க்கத்தின் ஒரு சிறுபகுதியினரைப்பிடித்திருக்கும் மனநோய் என எண்ணவேண்டியுள்ளது. 04. 


இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் இருப்பு உறுதிசெய்யப்படவேண்டுமாயின் தற்போது அங்குள்ள களயதார்த்த நிலைமைகள் சரியாக விவாதிக்கப்பட்டு இருப்புக் கணக்கு எடுக்கப்படவேண்டும். ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்ற சக மக்களின் உரிமைகளும் முன்னுரிமைகளும் அடையாளங்களும் கூட அக்கறைக்குள்ளாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். பொருத்தமான விடயங்களில் சக தேசியஇனங்களுடன் செய்யப்படக்கூடிய பரஸ்பரவிட்டுக்கொடுப்புகள் தமிழ்மக்களது அரசியலுரிமைக்கான போராட்டத்தினை செழுமைப்படுத்தும். 


வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய தேசிய தாயகம் என்பது உண்மை என்றாலும் கூட தற்போதுள்ள களநிலை யதார்த்தங்கள் மிகமோசமாக உள்ளன. உதாரணமாக அம்பாறை மாவட்டம் என்பது 1960களில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டமாகும். அதன்பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியும் அந்நிலப்பரப்பிற்கு தென்மேற்கே இருந்த சிங்கள மாவட்டங்களினதும் பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே திகாமடுல்ல எனப்பெயரிடப்பட்ட அம்பாறை மாவட்டமாகும். 


அந்நிலப்பரப்பில் வாழ்ந்த முஸ்லீம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையாக்கி சிங்கள மக்களின் அரசியல் ஆளுமைக்குள் அம்மாவட்டத்தினை வளர்த்தெடுப்பதே சிங்களதேசியவாத அரசுகளின் குறிக்கோளாக இருந்தது. 


இதே போன்ற அனுபவமே திருகோணமலை மாவட்டத்திற்கும் ஏற்பட்டது. 1970களில் திருகோணமலையின் ஒரு சிறு பிரிவான பதவியா தற்காலிகமாக அனுராதபுர மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டு அக்காலப்பகுதியில் பெருமளவு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டபின்பு மீண்டும் திருகோணமலையுடன் இணைக்கப்பட்டது. அதனால் திருகோணமலையின் இனச்சமநிலை மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. 


முல்லைத்தீவின் மணலாறு பிரதேசமும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மகாவலி 'எல்' வலயத்தின் கீழ் அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டு பலஆயிரக்கணக்கான சிங்களமக்கள் குடியேற்றப்பட்டபின்பு முல்லைத்தீவு மாவட்டத்துடன் 2012ம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டதன் மூலம் முல்லைத்தீவின் இனச்சமநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


இவை எல்லாம் சிங்களதேசியவாதத்தின் நீண்ட மாற்றமடையாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு சில உதாரணங்களே. 


2009 மே மாதத்திற்கு பிறகு அபிவிருத்தியின்பெயரால் தமிழ்ப்பிரதேசங்களின் வளம்மிக்க பிரதேசங்களும் நகரமையங்களும் தென்னிலங்கை சார்ந்த தனியார்துறைக்கு ஒதுக்கப்படுகின்றன. பெருமளவு காணிகள் இராணுவமுகாம்களுக்காகவும் அவற்றுக்கான குடியுருப்புக்களுக்காகவும் எல்லையிடப்படுகின்றது. யுத்தத்தின் பின்னான மூதலீட்டு வாய்ப்புகள் [Post-war investment opportunities] யாவும் தமிழ் மக்களால் நிரப்பப்படாத நிலையில் தென்னிலங்கைசார்ந்த முதலாளித்துவ நிறுவனங்களினால் [Southern based corporate institutions] நிரப்பப்படுகிறன. தமிழ்மக்கள் தங்களது வேலைவாய்ப்புக்காக இந்நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தம்மை வாழ்நாள் கொத்தடிமைகளாக [political or intellectual servitudes] மாற்றிக்கொண்டிருக்கின்றனர். 


பல்கலைக்கழக காலத்தில் சுயநிர்ணயத்திற்காகவும் தன்னாட்சியுரிமைக்காகவும் போராடிப் பொங்கு தமிழ் நடத்திய மாணவர்கள் அரசாங்க உத்தியோகம் வேண்டி கச்சேரிக்கும் கட்சிக்காரியாலயத்திற்கும் முன்னால் சத்தியாக்கிரகம் நடத்தும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையினை நடாத்த தொழில் ஒன்றினைத் தேடுவது அவசியமானது. தங்கள் சொந்தக்காலில் நின்றால்தான் அவர்களால் தமக்காகவும் சமூகத்திற்காகவும் போராடமுடியும்.


ஆனால் தமிழ்மக்கள் சார்ந்த தொழில்துறை போதியளவில் கட்டியெழுப்பப்படாத காரணத்தினாலும் உலகமயமாக்கப்பட்ட சந்தையின் தொழிற்றுறையுடன் போட்டியிடக்கூடிய சிறப்பான பயிற்சிகளினை [Innovative educational interventions & competency based training opportunities] தமிழ்ப் பிள்ளைகள் பெறுவதற்கான வாய்ப்புக்களினை தமிழ்மக்கள் வாழும்பிரதேசங்களில் தமிழர்கள் உருவாக்கத் தவறியமையினாலும் தமிழ் பட்டதாரிகளும் இளந்தலைமுறையும் அரசாங்கத்தின் இளைப்பாற்றுச் சம்பளத்துடன் கூடிய நிரந்தர வேலைக்காக தங்கள் தலைகளினை அடைவுவைக்கும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். 


அரசாங்க உத்தியோகத்தினுள் சேர்ந்தால் பின்பு சமூகத்திற்காக அரசியல் செய்யமுடியாது. மந்திரிமாருக்கும் அரசாங்க கட்சிசார் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாலை மரியாதையும் எடுபிடி வேலையும் செய்வதுதான் இருப்புக்கான ஒரேயோரு தெரிவாக இருக்கும். இந்நிலை அவர்களது 55 வயதுவரை பின் சேவைநீடிப்புக்கான 60 வயதுவரை என நீடிக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்க உத்தியோகம் என்பது யாழ்ப்பாண மொழிவழக்கில் புருசலட்சணமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசியல் உரிமையற்ற கௌரவமான கூலிகளாளவே வாழ்ந்து மடிவார்கள். 


தமிழ்மக்களின் அரசியல் ஆளுமை கட்டியெழுப்பப்படவேண்டுமானால், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவேண்டுமானால் தமிழ் இளைஞர்கள் அரசாங்க உத்தியோகம் என்ற மாயப்பொறிக்குள் அகப்பட்டு அரசியல் நலமடிக்கப்படும்[political impotence] நிலை மாற்றப்படவேண்டும். இதனை தமிழ்மக்கள் நலன்சார்ந்த தொழிற்துறை வளர்ச்சியினூடாகவே கட்டியெழுப்பமுடியும். இது புலம்பெயர் தமிழ்மக்களினால் மட்டுமே சாத்தியமாகும். 


2012 கோடைவிடுமுறைக்காலத்தில், யூலைமாதத்தில் அண்ணளவாக 45000திற்கு குறையாத வெளிநாட்டு கடவுச்சீட்டுகளினைக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பானத்திற்கு வருகை தந்துள்ளதாக ஒரு பயணமுகவர் நிலையக்குறிப்பு கூறுகின்றது. மிக்கமகிழ்ச்சியான செய்தி. தாயகம் திரும்பி உறவுகளினைக் காண்பதுவும், ஊர் அழகினை அனுபவிப்பதும் திருவிழாக்களில் கூடிமகிழ்வதும் தமிழ்மக்களின் பண்பாட்டுக்கூறுகளில் முக்கியமானது. பெருமைக்குரியது. ஆனாலும் ஒரு சிறிய கூட்டல்கழித்தல் கணக்கு மனதினை உறுத்துகின்றது.


45,000 பேர் என்பது சுமார் 10,000 குடும்பங்கள். அவர்கள் அங்கு சராசரியாக மூன்றுவாரங்கள் தங்கியிருப்பர். அங்கு நிற்கும் காலத்தில் அவர்களது செலவு நாளாந்தம் 5000 ரூபாவிற்கு குறையாது. அப்படியாயின் 2012 கோடை விடுமுறையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு ரூபாவினைச் செலவழிப்பர். 


10,000 X 5,000 X 20நாட்கள் = 1000 மில்லியன் சிறிலங்கன் ரூபாய்கள். 


ஆகா 1000 மில்லியன் ரூபாய்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களிடம் புழங்கப் போகின்றது என்பது மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது. ஆனால் உண்மை கசப்பாகவே உள்ளது. 


புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் அங்கிருக்கும் காலத்தில் சாதாரண கிராமத்து தேநீர்க்கடைகளுக்கோ உணவுச்சாலைகளுக்கோ செல்லப்போவதில்லை. அதனால்வரக்கூடிய பல சுகாதாரப்பிரச்சனைகள் அவர்களது பிள்ளைகளின் உடல்நலத்தினையும் இனிமையான விடுமுறை அனுபவத்தினையும் பாழாக்கிவிடும். 


எனவே நட்சத்திர உணவுவிடுதிகளிலும் அதிநவீன உணவு விற்பனைக் கடைத்தொகுதிகளிலும் [Food Cities & Super Markets] தான் பொருட்களினைக்கொள்வனவு செய்வர். இவையாவும் கார்கில்ஸ் போன்ற பாரிய தென்னிலங்கையினை மையமாக கொண்ட தனியார் கம்பனிகளாகவே இருக்கும். ஆக மொத்தத்தில் 1000மில்லியன் ரூபாயில் ஐந்துவீதம் உள்ளுர் மக்களிடம் தங்கி நிற்குமா என்பது கேள்விக்குரியதே. 


நாளாந்தம் செலவிடப்படும் பணம் அன்று மாலைக்குள்ளாகவே வங்கிகளின் வடிகுழாய்களால் [siphon-out] தென்னிலங்கைக்கு வெளியேற்றப்பட்டுவிடும். 


அத்துடன் இந்த 1000 மில்லியன் ரூபாயும் நுகர்வுச்செலவே. இங்கு மூலதன உருவாக்கமோ தொழில்பெருக்கத்திற்கான வாய்ப்புகளோ எதுவும் இல்லை. 


05.நிறைவு 


முற்குறிப்பிட்ட விடயங்களினை விட மேலும் அதிகமான விடயங்களினை மிகவும் ஆளமாக ஆராயவேண்டியுள்ளது. சிலவிடயங்கள் மிகச்சிக்கலானதும்[highly complex] நம்புவதற்கு முடியாததும்[Unbelievable] ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு [un acceptable] கசப்பானவையாகவும்[bitterness] இருக்கும். ஆனால் இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு இருப்பு தக்கவைக்கப்படவேண்டுமாயின் நாங்கள் இவ் மீள சட்டகப்படுத்தும்[reframing] பயிற்சிக்கு எம்மை உட்படுத்தியே தீரவேண்டும். 


கடந்த 70 ஆண்டு இலங்கையின் அனுபவத்தினை உற்றுநோக்கும் ஒருவருக்கு சிங்களதேசியவாத அரசியலின் சாணக்கியத்தினைப் புரிந்து கொள்ளமுடியும். தனது குறிக்கோளினை நிறைவு செய்யும்வரை காலத்தினை இழுத்தடித்து நீடிப்பதற்கான சகல தந்திரோபாயங்களினையும் சிறீலங்கா செய்யும். அதற்கு சிங்களபுத்திஐீவிகள், அரசியல்சாணக்கியர்கள், துறைசார் நிபுணர்கள் இராஜதந்திரிகள் என அனைவரும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைவர். 


பிராந்தியத்திலுள்ள தேசங்களின் நட்புறவும் மேற்கு தேசங்களின் நல்லெண்ணங்களும் அவர்களுக்கு வலுச்சேர்ப்பர். 


தற்போது அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போர்குற்றங்கள்[war crime], மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்[crimes against humanity], இனப்படுகொலை [Genocide] போன்ற விடயங்கள் யாவும் அவசியமானவை. எதிர்காலத்தில் அத்தகைய கொடுரங்கள் மீண்டும் நிகழ்த்தப்படாமல் இருப்பதற்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது கட்டாயமானது. ஆனால் இவையாவும் இலங்கைத்தீவில் 2009 மே மாதத்திற்கு பின்பு தமிழ்மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள பொருண்மிய யுத்தத்தினை வெல்வதற்கு உதவமாட்டாது. 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக ஐ.நாவின் மனிதஉரிமை குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் பாலஸ்தீனத்தினை கூறுபோடும் இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களினை கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியவில்லை. 1948ல் ஐ.நாவின் தீர்மானத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட “தாயகத்திற்கு மீளத்திரும்புவதற்கான பாலஸ்தீனர்களின் உரிமை” [Palestinian right of return] இன்னமும் கடதாசியிலேயே உள்ளது. 


அதேவேளையில் ஐ.நாவினால் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன இராச்சியம் ஐ.நாவில் முழுஅங்கத்துவ உரிமை கோரி விண்ணப்பத்தினை கடந்த ஆண்டு சமர்ப்பித்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய வார்த்தைகள் இங்கு நினைவுகொள்ள வேண்டியது. “ஐ.நாவின் தீர்மானங்களோ அறிக்கைகளோ மத்திய கிழக்கில் சமாதானத்தினைக் கொண்டுவரமாட்டாது. இரண்டுதரப்புகளும் தமக்குள் பேசியே முடிவுக்கு வரவேண்டும்”. 


இச்செய்தி ஈழத்தமிழர்களுக்கும் பொருத்தமானது. எனவே தான் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் தன்னை மீள் சட்டகப்பயிற்சிக்கும் அதனடிப்படையிலான மீள்கட்டமைப்பிற்கும் [restructuring after reframing exercise] உட்படுத்துவதன் மூலம்தான் முஸ்லீம்மக்களது தேசியத்தினை அங்கீகரிப்பதற்கும் பரஸ்பரம் இணைந்து போராடுவதற்குமான இடைவெளி உருவாக்கப்படமுடியும். 


அத்துடன் சிங்களமக்களினை ஒரு அடையாளத்தின் கீழ் எதிர்நிலைப்படுத்தாமல் அவர்களுக்குள் இருக்கும் தோழமைச்சக்திகளினை அடையாளங்கண்டு அவர்களுடன் இணைவதன் ஊடாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களினதும் தன்னாட்சி உரிமைகளினை சிங்களமக்களுக்கு சமானமாக வென்றெடுப்பதற்கு இடையூறாக உள்ள தடைகள் அகற்றப்படும்.


இல்லையேல் தமிழ்மக்களின் எதிர்காலம் என்பது “குளம் வற்றும் வற்றும் எனக்காத்திருந்து குடல் வற்றி செத்ததாம் கொக்கு” என்றாகிவிடும்.'புதினப்பலகை'க்காக ம.செல்வின்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment