ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும் – பகுதி 3

ஆரம்பத்திலேயே வெளியேவந்த குட்டிமணியும் தங்கத்துரையும் தயாரிக்கப்பட்ட குண்டினை எடுத்துச்சென்று ரோந்துவரும் இராணுவ ஜீப்பினை தாக்குவது பற்றி உரையாடும் பொழுது அறைவாசலிற்கு ஞானலிங்கமும் வந்திருந்தார். வயதில் இளையவரான சரத்தும் அறையைவிட்டு முன்பே வெளியேறியிருந்தார். இவர்கள் அனைவரும் நின்றுகொண்டே தமது வேலை களைச்செய்ததினால் இலகுவாக வெளியேவர முடிந்தது. இந்நிலையில் தரையில் உட்கார்ந்து குண்டினை உருவாக்கிய சின்னச்சோதி அதனை அருகில் வைத்துவிட்டு எழுந்து வெளியே வரமுயன்றார். எற்கெனவே ஒரேஇடத்தில் இருந்து விறைத்துப்போன கால்களை நீட்டிநிமிர்த்தி இவர் எழுந்துகொள்ளவும் பக்கத்தில் வைத்திருந்த குண்டில் எதேச்சையாக அவரதுகால்பட்டுவிடவே யாரும் எதிர்பாராமல் படீர் என்ற சத்தத்துடன குண்டு வெடித்தது.

                                               

சின்னச்சோதி

வெளியில் வந்தவிட்ட குட்டிமணிக்கும் தங்கத்துரைக்கும் அதிர்ச்சி கலந்தஆச்சரியம். மிகவும் அவதானமாக செய்துமுடிக்கப்பட்ட குண்டு எப்படியோ வெடித்துவிட்டது. எப்படி?….. எப்படி?….. எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் நுண்ணறிவு கொண்ட தங்கத்துரை நிலமையைப் புரிந்துகொண்டார். நிலத்தில் இருந்து எழும்பும்போது குண்டு வெடித்து விட்டதால் ‘ஆ’ என்ற அலறலுடன் கீழேவிழுந்த சின்னச்சோதியின் வலதுகாலின் வெளிப்புறமாக மேலிருந்து கீழ்வரை முழுமையாக சல்லடையாக்கப்பட்டிருந்தது. சல்லடைக்கண்கள் யாவற்றிலும் இருந்து  அதிகளவுpல் இரத்தம்  வெளியேறிக் கொண்டிருக்கவே அதன்காரணமாக சிறியமுனகலுடன் மயங்கி இருந்தார். வாசலில்நின்ற ஞானலிங்கத்திற்கு காலில் சிறியகாயமானாலும் அதன்ஆழம் காரணமாக அதிகளவு இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. கிடைத்த துணியைக்கொண்டு ஞானலிங்கத்தின் காயத்தைக்கட்டி இரத்தம் வழிவதை நிறுத்தமுயன்றனர். படுகாயமடைந்த சின்னச்சோதியை என்னசெய்வது என தடுமாற்றமடைந்தனர். ஏறத்தாள இரவு பத்துமணியாகி இருந்த அவ்வேளையில் ஊரடங்குசட்டம் காரணமாக எங்கும் நிசப்தமாக இருந்தது. இந்நிலையில் குண்டுவெடித்த சத்தத்தைக்கேட்டு எவ்வேளையிலும் சிங்களப்படைகளின் கவனம் பாடசாலையை நோக்கித் திரும்பலாம் என்னும் நிலையில் அனைவரும் அவ்விடத்தைவிட்டு விரைவாக வெளியேறமுற்பட்டனர்.

படுகாயமடைந்த சின்னச்சோதியை ஒருவாறு துக்கிக்கொண்டும் காலில் காயமடைந்திருந்த ஞானலிங்கத்தை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டும் வீரமாகாளியம்மன் கோவிலை மீண்டும் அடைந்தனர். குண்டு வெடிப்பு சத்தத்தின் காரணமாக வெளியேவந்த சிலஅயலவர்கள் குறிப்பாக அயலிலிருந்த வீடொன்றில் குழந்தையொன்றின் முப்பத்தியோராம் நாள்  விழா நடைபெற்றிருந்தது. (இக்குறிப்பிட்ட தொட்டிலிடும் நாளை அடையாளம் கண்டே நாற்பதுவருடங்களிற்கு முந்தைய ஏப்ரல் 7ந்திகதியையும் அன்றையநாளான புதன்கிழமையையும் இன்றும் எம்மால் அடையாளம் காணமுடிகின்றது)  மற்றும் தங்கத்துரையின் சகோதரி மைத்துனர் ஆகியோருடன் உதவியுடன் தெரிந்த முதலுதவிச்சிகிச்சை எல்லாம் அளித்தபின்பும் சின்னச்சோதியின் நிலமை பயமூட்டுவதாகவே காணப்பட்டது. அதிகஇரத்தம் வெளியேறியதால் அவரின் உடல் நீர்ப்பிடிப்பை இழந்து போகவே அவர் அம்மயக்கநிலையிலும் ‘தங்கத்துரை தண்ணீர் தண்ணீர்’ என கேட்டவாறிருந்தார். அவரை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதைத் தவிர வேறுவழியில்லை.

ஊரடங்குச்சட்டம் அதிலும் குறிப்பாக யாழப்பாணத்தில் எதிர் பாராதவிதமாக நடந்துவிட்ட சேகுவராத் தாக்குதலினால் எப்பொழுதும் உசார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதுடன் எந்நேரமும் வீதிரோந்துவரும் படையினரின் கண்ணில்படாமல் சின்னச்சோதியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதெப்படி?…..சிங்களப்படைகளை முதன்முதலில் திட்டமிட்டு தாக்கமுற்பட்ட போது ஏற்பட்டபாரிய பின்னடைவு அதனால் அவர்களை தாக்கமுடியாமற் போனது ஒருபுறம் கவலையளித்தது.அதனையும்விட தமதுநண்பனும் தமது இரகசிய இராணுவகுழுவில் ஒருவனுமாகிய சின்னச்சோதியின் உயிரை எப்படியும் காப்பாற்றவேண்டிய மிக இக் கட்டானநிலை.

எதிலும் சமயோசிதமாக முடிவெடுக்கும் தங்கத்துரை தமது குழுவின் இரகசியமா அல்லது நண்பனின் உயிரா எனத் தடுமாறியபோதும் அன்றைய நிலையின் இறுதியில் நண்பனின் உயிரைக்காக்கவும் அதன்முலம் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாரானார். முடிவாக காயமடைந்து அரைமயக்கநிலையில் தண்ணீர் தண்ணீர் என அரற்றியவா றிருந்த சின்னச்சோதியை சாக்குஒன்றில் படுக்கவைத்து குட்டிமணி தங்கத்துரை  அவரதுதுமைத்துனர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தூக்கிச்சென்று வல்வெட்டித்துறை காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த தொண்டைமானாறு பிள்ளையார் கோவில்ச்சந்தியின் நடுவீதியில் வளர்த்தி (படுக்கவைத்து) விட்டு மறைந்துநின்று நிலமைகளை அவதானித்தனர். இவர்கள் எதிர்பார்த்தது போலவே பலாலிமுகாமிலிருந்து வந்த இராணு வத்தினர் நடுவிதீயில் குற்றுயிராக கிடந்த சின்னச்சோதியை கண்டு  ஜீப்பினை நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சின்னச்சோதியினையும் தம்முடன் எடுத்துச் சென்றனர். எந்த இராணுவஜீப்பினை தாக்கவென வெடி குண்டுகளை சின்னச்சோதி செய்தாரே அதே இராணுவ ஜீப் வண்டி யிலேயே சின்னச்சோதியினை சமயோசிதமாக இவர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.
              
காயமடைந்திருந்த சின்னச்சோதியினை எடுத்துச்சென்ற இராணுவத்தினர் அவரை நிச்சயமாக வைத்தியசாலையில் அனுமதிப்பர் என்னும் திடமான நம்பிக்கையுடன் வீரமாகாளியம்மன் கோவிலடிக்கு மீண்ட குட்டிமணி தங்கத்துரை என்போர் ஞானலிங்கத்தின் காயத்திற்கு மேலதிகமருந்திடும் பணியில் ஈடுபட்டனர்.

1971 ஏப்ரல் 05ந்திகதி நண்பகல்முதல் நாடுதழுவிய ரீதியில் மூன்றுநாட்களும் தொடரான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததனால் பகிரங்கமான மக்கள் நடமாட்டம் வீதிகளில் இருக்கவில்லை. எனினும் வல்வெட்டித்துறை ஊறணி இந்திராணி வைத்தியசாலைக்கு இராணுவத்தால் எடுத்துவரப்பட்ட சின்னச்சோதியினை அங்கு கடமையிலிருந்த சின்னச் சோதியின் உறவினரான இந்தியத்துரை என அழைக்கப்பட்ட காமாட்சி சுந்தரத்தின் மனைவியான திருமதி அலஸ் என்னும் தாதி அடையாளம் கண்டுகொண்டார். இவரின் மூலமாக சின்னச்சோதியின் ஆபத்தான நிலமை யினை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதே ஜீப்பிலேயே அவர் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியினையும் அறிந்து கொண்டனர்.
                 
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
ஏப்ரல் 09ந்திகதி அதிகாலையில் யாழ் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் சின்னச்சோதியின் சகோதரன் விசியன்மாஸ்டர் மற்றும் நண்பர்களான ஜெயபாலி சிவக்கிளி மற்றும் சிலநண்பர்களும் வைத்தியசாலைக்கு சென்றுபார்த்தனர். அப்பொழுதும் அரைமயக்க நிலை யிலேயே சின்னச்சோதி காணப்பட்டார். அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் ஊரில் இருந்து சென்ற அனைவரும் இரத்தம்கொடுக்க தயாராகினர். பரிசோதனையின் பின்பு ஜெயபாலி மற்றும் சிவக்கிளியின் இரத்தங்கள சின்னச்சோதிக்கு ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏறத்தாள இருவாரங்களிற்கு மேல் சின்னச்சோதி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று ஓரளவுகுணமடைந்து வந்தார்.

 குண்டு வெடித்தகாயங்களுடன் அரைமயக்கநிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட சின்னச்சோதியினை விசாரித்து என்ன நடந்தது? எனப் புரிந்துகொண்ட பொலிஸார்  தொடர்ந்து வந்தநாட்களிலும் இதனை நிதானமாகவே கையாளமுயன்றனர். காரணம் அன்றைய சேகுவராப்புரட்சியின் ஓர்அங்கமாக இக்குண்டுவெடிப்பு நிகழவில்லை என்பதுடன் அவர்கள் திருப்திப்பட்டுக்கொண்டனர் எனலாம்;. எனேனின் பின்வரும் நாட்களில் பெருவிருட்சமாக வளரப்போகும் தமிழ்ஈழவிடுலைப் போராட்டத்தின் வித்தாக இந்த குண்டுவெடிப்பு இருக்கலாம் என்றோ ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தை மூன்று தசாப்தத்திற்கு மேலாக தலைமையேற்று நடத்தப்போகும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ‘தமிழீழவிடுதலை’ இயக்கமான இக்குழுவின் ஓர்அங்கமாக வளருகின்றார் என்பதையோ வல்வெட்டித்துறைக்கு வெளியே யார்தான் அன்று கனவு கண்டிருக்கமுடியும்?

இவ்வாறு சின்னச்சோதி சிகிச்சை பெற்றுவரும் நாளொன்றில் அவருக்கான நெல்லிரசப்போத்தலொன்றுடன் தனது நண்பன் குமார தேவனுடன் இணைந்து வைத்தியசாலைக்கு வந்த பிரபாகரன் இராணுவத்தை தாக்கும் முயற்சியைப்பற்றி சின்னச்சோதியிடம் விளக்கமாக கேட்டதுடன் அம்முயற்சியில் தன்னையும் இணைத்துக் கொள்ளாமையை கூறி மிகவருத்த முற்றார்.
                                               
தேசியத்தலைவருடன் சின்னச்சோதி (1984)
தொடர்ந்து வந்தநாட்களில் சின்னச்சோதியின் காயங்கள் ஓரளவு குணமாகி சாதாரணநிலைக்கு வரவும் அவரைநாடிய பொலிசாரின் வரவு அதிகரித்தது. குண்டுவெடிப்பின் விபரத்தை பூரணமாகஅறியும் நோக்கத்துடன் விசாரணை என்றபெயரில் அவர்களின் வரவு தொடர்ந்து அதிகரித்துவந்தது. காயங்கள்மாறி சாதாரணநிலைக்கு வந்தவுடன் சின்னச்சோதியை கைது செய்து மேலதிகவிசாரணை நடைபெறலாம் எனும் அச்சநிலமை ஏற்பட்டது. இதனால் வைத்தியரின் அனுமதியின்றியே வைத்தியசாலையை விட்டு வெளியேறுவது தவிர்க்கமுடியாததாகியது. காரணம் இக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறையை சேர்ந்த சின்னத்துரை தாயுமானவர் என்பவர் மேற் குறிப்பிட்ட சேகுவராப்புரட்சிக்கு ஆதரவாககதைத்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருந்தார். நாட்டில் இடம்பெற்றிருந்த எந்தவிதகுழு வன்செயல் களிலும் சம்பந்தமில்லாத அப்பாவியான அவர் அதன்பின் சிலவருடங்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடக்கூடிய தொன்றாகும்.

அன்று கொக்குவில் பல்தொழில் நுட்பக்கல்லூரியில் நிலஅளவையியல் மாணவனான துரைரெத்தினராசா சோதிரெத்தினராசா எனப்பட்ட சின்னச்சோதி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தலைமறைவாகியதைத் தொடர்ந்து போராளிகள் எதிர்பார்த்தது போலவே அடுத்த சிலவாரங்களில் சின்னச்சோதி குட்டிமணி தங்கத்துரை ஞானலிங்கம் என்பவர்களிற்கு எதிரான குற்றவியல் வழக்குத்தாக்கல் பத்திரம் மேற்குறிப்பிட்டவர்களின் வீடுகளிற்கு அன்றைய வல்வெட்டித்துறை பொலிஸ்நிலைய அதிபரான சிறிவர்தனா என்பவரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டது. குறிப்பிட்டதிகதியில் பருத்தித்துறை நீதிமன்றில் நேரடியாக சமூகமளிக்க கோரப்பட்டிருந்த இக்குற்றப்பத்திரத்தில்

1. ஊரடங்கு நேரத்தில் சட்டத்தை மீறீ ஒன்றுகூடியது
2. உயிராபத்தை விளைவிக்கும் நாசகார ஆயுதத்தை (வெடிகுண்டு) தயாரிக்க முற்பட்டமை  என்பன இவர்கள் புரிந்த குற்றங்களாக குறிப்பிடப்பட்டிருந்தன.குறிப்பிட்ட திகதியில் குட்டிமணி தங்கத்துரை சின்னச்சோதி என்போர் பருத்தித்துறை நீமன்றில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டதுடன் அதற்கு எதிராகவும் வழக்காடமுயன்றனர். இவர்களின் சார்பில் அன்று வடமராட்சியில் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கியவரும் வல்வெட்டித்துறை மக்களின் உற்றநண்பனும் உறவினனுமான திரு.நமசிவாயம் நடராசா (கட்டைப் பிறக்கிராசி) ஆஜராகி இருந்தார்.
                                                
ஞானலிங்கம்
குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றொரு துடிப்புள்ள இளைஞனான சின்னரெத்தினம் ஞானலிங்கம் குற்றப்பத்திரிகையை ஏற்கமறுத்துதுடன் குறிப்பிட்டதிகதியில் நீதிமன்றம் வருவதையும் தவிர்த்துக்கோண்டார். இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸார் இவரை கைதுசெய்ய முயன்றனர். காட்டுவளவு  இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸ்நிலையம் கொண்டுசெல்லும் வழியில் பொலிஸாரின் கண்களில் மண்ணை எறிந்துவிட்டு  ஒருநாள் தப்பியோடினார். இதுபோலவே மீண்டும் 1972ஜூன் மாதத்தில் இன்ஸ்பெக்டர் திருச்சிற்றம்பலம் மற்றும் சார்ஜன்ட் இராஜாமுத்தையா என்பவர்களால் கைதுசெய்யப்பட்டு நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் வல்லைவெளியில் ஜீப்சாரதியை இவர்தாக்கவும் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் கவிழ்ந்துவிடவே ஞானலிங்கம் மீண்டும் தப்பியோடினார். இச்சம்பவத்தினை தொடர்ந்து அன்றைய பரபரப்பு பத்திரிகையான மித்திரன் ‘பாய்ச்சாமன்னன’; ஞானலிங்கம் என தலைப் பிட்டமையும் இவரது நண்பர்கள் மற்றும் ஊரவர்களினால் இவர் ‘ஜீப்பிரட்டி’ எனும் அடைமொழியினால் பெருமையாக அழைக்கப்பட்டமையும் இவ்விடத் தில் குறிப்பிடத்தக்கது.

குட்டிமணி தங்கத்துரை சின்னச்சோதி என்பவர்களும் தமக்கு எதிரான ஓரிருதவணைகளிற்கு நீதிமன்றில் சமூகம் அளித்தனர். சேகுவராப் புரட்சியின் பின் குற்றவியல்சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களினை அடுத்து தமக்கு எதிரான வழக்கின் பாரதூரத்தன்மையினால் தொடர்ந்து நீதிமன்றம் செல்வதினை யாவரும் தவிர்த்துக்கொண்டனர். இதன் காரணமாக 1971 இன் பிற்பகுதியில் நீதிமன்ற ஆணையின் பெயரில் பொலிஸாரினால் தேடப்படும் புரட்சிகரநபர்களாக இவர்கள்யாபேரும் மாறியிருந்தனர்;. வவுனியா மகா வித்தியாலயத்தில் 10தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தலைவர் பிரபாகரனும் 1971 செப்டெம்பரிலேயே வீட்டைவிட்டு வெளியேறி முழுநேர போராளியாகியமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாற்பதுவருடங்கள் கடந்து விட்டநிலையில் வெலிக்கடை மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைச் சம்பவங்களில் இவர்களில் பலரும் வீரமரணமடைந்ததாக கூறப்பட்டபோதும் தகுந்தவர்களினால் அடையாளம் காட்டப்படாமலும் எவ்வித நீதிவிசார ணைகள் இன்றியும் இவர்களது உடல்கள் அழிக்கப்பட்டன. காலம்காலமாக ஈழத்தமிழ் இனத்தையும் எங்கள் நிலத்தையும் கபளீகரம் புரியும் சிங்கள இனவெறி அரசின் நாசகாரமுயற்சியினை நாற்பதுவருடங்கள் தடுத்து நிறுத்தியதுடன் அதற்காக நாலுதசாப்தங்களிற்கு முன்பாகவே ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் புரட்சிப்புயலினை ஈழத்துமண்ணில் விதைத்து யுகப்புரட்சியினை ஏற்படுத்திய வரலாற்றுநாயகர்கள் இவர்கள்தான். தமிழினத்திற்காக தலைமறைவு வாழ்கையை மேற்கொண்ட ஒழுங்கில் வல்வெட்டித்துறை மண்ணின்மைந்தர்களின் பெயர்களும் அவர்கள் தலை மறைவு வாழ்கையை ஆரம்பித்த காலங்களும் பின்வருமாறு……

வைத்திலிங்கம் நடேசுதாசன் (நடேஸ்) 1971 மார்ச்
சின்னரெத்தினம் ஞானலிங்கம் 1971 ஏப்ரல்
துரைரெத்தினராசாசோதிரெத்தினராசா(சின்னச்சோதி) 1971 செப்டெம்பர்
செல்வராசா யோகச்சந்திரன் (குட்டிமணி) 1971 செப்டெம்பர்
நடராசாதங்கவேல்(தங்கத்துரை1971செப்டெம்பர்           
ஞானமூர்த்தி சோதிலிங்கம் (பெரியசோதி) 1972 பெப்ரவரி 12
வேலுப்பிள்ளை பிரபாகரன் (தம்பி)1973 மார்ச் 23
                      
பிற்குறிப்பு:1. எமது போரியல் வரலாற்றில் பெரிதும் பேசப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொன்.சிவகுமாரன் பொன். சத்தியசீலன் என்போருக்கு குண்டு செய்யும்கலையை கற்றுக்கொடுத்த ஆசான் மட்டுமன்றி 1973 ஆம் ஆண்டிலேயே விடுதலைப்போராளிக்களுக்கான தளத்தை தமிழ்நாட்டின் திருச்சி வேதாரணியம் கோடம்பாக்கம் என உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் சின்னச்சோதியும் பெரியசோதியும் ஆவார்கள்;. 1983இன் பின் விடுலைப்புலிகளின் பயிற்சிப்பாசறைகளை தமிழகத்தில் உருவாக்குவதிலும் அதனை நிர்வகிப்பதிலும் சின்னச்சோதி பெரும்பங்காற்றினார். தலைவர் பிரபாகரனின் சுயசரிதை கூறும் ‘ஒரு தீப்பொறி’ தொடரில் அவரால் அண்ணா எனஅழைக்கப்படும் ‘போராட்டமுன்னோடிகள்’ இக்கட்டுரையில் குறிக்கப்படுபவர்களே.

பிற்குறிப்பு: 2. சாதாரணவெடிகுண்டுகள் மட்டுமல்ல பாரியகுண்டுகளை தயாரிப்போரும் மிகுந்த பாதுகாப்புடன் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் சில சமயங்களில் அவர்களையும்மீறி; எப்படியோ விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் 14.02.1987இல் நடந்த நாவற்குளி குண்டு வெடிப்பு மறக்கமுடியாததாகும். இக்குண்டுவெடிப்பில் பொன்னம்மான் வாசு கேடில்ஸ் என முன்னணிப் போராளிகள் 10பேரும் 60இற்குமேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தமை இங்குநினைவூட்டத்தக்கது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment