மனிதத்துள் மரித்துவிட்ட கறுப்பு ஜூலை


ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதார ரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப் போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்கள். ஆனாலும் தமிழினத்தை தன்னிலை பற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது, சிறீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட "தரப்படுத்தல்'' என்னும் தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்க முடியாது.
 
தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞர்களுள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.
 
இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
 
 திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப் பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராத ஒன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.
 
ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் திடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தன.
 
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
இலங்கையின் இரத்த வடுக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்களில் ஒன்று ஜூலை 23 தொடக்கம் ஜூலை இறுதி வரையான கறுப்பு நாள்கள். கொழுந்து விட்டு எரிந்த நெருப்புச் சுவாலைகளில் கருகிப்போன ஆத்மாக்களை மறக்க முடியாமல், இன்றும் மனங்களில் வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். 
 
13 இராணுவத்தினரை சுட்டுக்கொன்றார்கள் என்கின்ற ஒரே ஒரு காரணத்துக்காய் அந்த மூன்றே மூன்று நாள்களில் தெருக்களில் வீசப்பட்ட வெற்றுடல்கள் 400 இலிருந்து 3000 வரை, நாசமாக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்துக்கும் மேல், காயப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். ஆக 13 உயிர்களுக்கான பழிவாங்கல்கள் இவை.
 
இந்தக் கொடூரமான சம்பவம் 1983 இல் நடந்தேறியிருந்தாலும் இன்றும் அந்தச் சம்பவங்களையும் புகைப் படங்களையும் பார்க்கும் பொழுது கண்கள் வலிக்கின்றன. இது வெறுமனே ஒரு பழிவாங்கலா அல்லது தமிழ் இனத்துக்கான ஒரு திட்டமிட்ட சதியா என்பதற்கு அப்பால் இது ஒரு கொடூரமான மனித உரிமை மீறல் என்றே அன்றும் இன்றும் பேசப்படுகின்றன.
 
எதற்காகவும் மனிதன் சட்டத்தையும் தீர்ப்பையும் கையில் எடுக்க கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகவே கொள்ளப்படுகிறது. இலங்கையின் இந்தக் கறை படிந்த சம்பவமே நீண்டகால தமிழ் சிங்கள ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஒரு தவறு இன்று 30 வருட கொடூர யுத்தத்துக்கும், இலட்சக் கணக்கான இறப்புக்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. 
 
சாதாரணமாக சிந்தித்துப் பார்த்தால், அவ்வாறானதொரு கலவரம் நடைபெற்றிருக்காவிடில் இத்தனை கால போர் இத்தனை கொடூரங்களை கொடுத்திருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதற்கான எமக்கான சுதந்திரத்துக்காக நாம் போராடாது இருப்பது என்பது முட்டாள் தனமான ஒன்றுதான்.
 
இந்த ஜூலை கலவரம் என பேசப்படும் சம்பவம் வெறுமனே ஒரு சம்பவத்தோடு தொடர்புபட்டது அல்ல. யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாக்குதல் சம்பவம் (ஜூலை 23 . 1983) தொடங்கி 28 ஜூலை 1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் முறையாக 15 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி வரை பல வகையான கோர்ப்பு சம்பவங்களின் நிகழ்ச்சியே இந்த ஜூலைக் கலவரம்.
 
24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கர்த்தால் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டையும் மீறி (??) நடைமுறைக்கு சாத்தியமற்றதாக மாறியதே இத்தனை இறுதிக்கட்ட கலவரங்களுக்கும் மூல காரணமாய் மாறியதாக சொல்லப்படுகிறது.
 
அந்தக் கணம் தொடக்கம் "இனக் கலவரம்'' தீப்பிழம்பாய் கொழுந்துவிட ஆரம்பித்ததன் விளைவு வீதிகளில் பயணித்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும், தங்கள் வியாபார பணித் தளங்களுக்குள்ளும் அடைபட்ட தமிழர்கள் தீ மூட்டப்பட்டனர்.
 
 இதுவே ஜூலை கலவரத்தின் மிக முக்கியமான சம்பவமாக குறிப்பிடப்படுகிறது.
இனக் கிளர்ச்சிக்காரருக்கு அன்று கூரான கத்திகளும், பொல்லுத் தடிகளும், நெருப்பும், ஆயுதங்களும் தமிழரைக் கொல்வதற்கு போது மான ஆயுதங்களாக இருந்தன.
இந்தக் கறை படிந்த நிகழ்வு நடந்தேறி இன்றோடு 29 வருடங்கள் முடிகின்றன.  
 
ஆனால் முடியாத கதையாக கறுப்பு ஜூலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 2012 ஜூலையும் நம் எண்ணங்களில் மறையாத ஓர் ஜூலையாகவே மாற்றப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்ட கைதிகளில் ஒருவர் ராகம வைத்திய சாலையில் உயிரிழந்தார் என்பதே அச்செய்தி. 
 
இந்தச் செய்தியால் என் கண்முன்னால் கறுப்பு ஜூலை நினைவுகள் மேலும் இருளடைந்தன. கொல்லப்பட்டவர் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் என்பவராவார்.
 
1983 ஆம் ஆண்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி உட்பட்ட 56 தமிழ்ச் சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்திலேயே மஹர சிறைச்சாலையிலும் நிமலரூபன் படுமோசமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 
 
உறுதிப்படுத்தப்படாத வைத்தியசாலை வட்டாரத் தகவல்களின் மஹர சிறைச்சாலையில் வைத்து மனிதாபிமானமற்ற வகையில் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான மற்றும் சில தமிழ் சந்தேகநபர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.  
 
உயிரிழந்த நிமலரூபனின் இறப்பு இயற்கையானதெனக்  காட்டிக் கொள்ள அரசு தயாராகி வருகின்றது. இவ்வாறு ஜூலைகளில் கொல்லப்படும் தமிழர்களும் தொடரப்படும் அடக்குமுறைகளும் என்றைக்குமே தமிழ் மக்களை நின்மதியான வாழ்வுக்கு இட்டுச் செல்லப்போவது இல்லை. 
 
இவ்வாறு தொடரப்படும் ஜூலைகளால் மக்கள் தமது இருப் புக்காக மீண்டும் கிளர்ந்து எழ எண்ணினால் அது சந்தேகப் படவேண்டிய விடயம் இல்லை.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment