தமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் அரசின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் மன்னார் சத்தியாக்கிரகத்தில் அடைக்கலநாதன் சூளுரை


எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் எங்கள் இனத்தை அடக்கி ஆள ஒரு போதும் இடமளியோம். எங்களது இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இன்றுடன் முடிவடையப் போவதில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எங்கள் இனத்தை மீட்டெடுப்போம்.
 
இவ்வாறு, மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சூழுரைத்தார்.
 
அங்கு உரையாற்றிய அடைக்கலநாதன் மேலும் தெரிவித்ததாவது:
 
எமது தமிழ் இனம் தமது பூர்வீக நிலங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு திட்டமிட்ட முறையில் எமது காணிகளை ஆக்கிரமித்து வருகின்றது. இன்றைய காலகத்தில் வடக்கு கிழக்கில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
 
வசதிகள் எதுவுமற்ற நிலையில் தமிழ் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் இந்த அரசு எமது இனத்தை அடிமை இனமாகப் பார்ப்பதே காரணமாகும். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். 
 
இன்று மன்னார் மாவட்டத்தின் சன்னார் கிராமத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு உரிய வகையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த மக்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில் அரச அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றனர். 
 
மன்னார் மறை மாவட்ட ஆயர், இந்தப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றார். மன்னார் மாவட்ட மக்களின் விடிவுக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவறாக  திரிபுபடுத்தி  நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தற்போது இந்த விவகாரம் சர்வதேசம் வரை சென்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மீனவருக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
     யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகின்ற போதிலும், எமது மன்னார் மாவட்ட மீனவர்கள் யுத்த காலம் போன்றே தற்போதும் பாஸ் பெற்றே கடற்தொழில் நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
 
மீனவர்கள் பாஸ் பெற்றுக் கொள்வதற்காகப் பத்திற்கு மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் பாஸ் பெற்றுக் கொள்வதற்கு 500 ரூபா வரையில் பணம் செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் மன்னார் மாவட்ட மீனவர்களால் நாளொன்றுக்கு 500 ரூபா ஈட்டுவது என்பது சவாலான விடயமாக இருக்கின்றது. 
 
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையும் உருவாகியுள்ளது. அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை தோற்றுவிக்கபட்டிருக்கின்றது. 
 
வவுனியா சிறைச்சாலையில் சிறைக் கைதிகளால், சிறைக்காவலர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானதுதான். ஆனாலும் கண்ணீர் புகைக் குண்டு வீசி கைதிகளை மயங்கச் செய்து விட்டு அவர்கள் மீது காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கியது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. வவுனியா சிறையில் தாக்கி விட்டு பின்னர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 
 
அத்துடன் காயமடைந்த கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்காது மஹர சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இது மனிதாபிமானமற்ற செயலாகும். 

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் அவரது உடலை இதுவரையில் பெற்றோரிடம் வழங்கவில்லை. அந்தத் தாயாருக்கு ஆதராவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் குரல் கொடுக்கும். 
 
எனவே தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அதன் மூலமே எமது இனத்தின் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும். நாங்கள் ஒரு போதும் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று  தெரிவித்தார். 

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment