ஜூலை எப்போதும் கறுப்புத்தான்

இலங்கையைப் பொறுத்தவரை, ஜூலை மாதம், தற்போதும் கறுப்பு நிறம் கொண்டதே. ஜூலை மாதத்தில் ஒட்டிக் கொண்டுள்ள அந்தக் கறுப்புக் கறையைப் போக்க முயல்வது நம் எல்லோரதும் பொறுப்பும் கடமையுமாகும். இது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கிடைத்த செய்தியொன்று என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்ட கைதிகளில் ஒருவர் ராகம வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்பதே அச்செய்தி. இச் செய்தியால் என் கண்முன்னால் கறுப்பு ஜூலை நினைவுகள் மேலும் இருளடைந்தன. அறிமுகமான மனிதர்கள் மத்தியில் முன்பின் அறிமுகமில்லாத அந்த விடுதலைப் புலிச்சந்தேகநபரின் முகம் என் கண்முன்னால் தோன்றி மறைந்தது.
கொல்லப்பட்டவர் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் என்பவராவார்.  கொல்லப்பட்ட நிமலரூபன் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் ஏனையோர் சார்பாக உயிருடனிருக்கும் நாமே பேசியாக வேண்டும்.
ராகம வைத்தியசாலையிலேயே இறப்பு சம்பவித்ததாக செய்தி வெளியானதால் சம்பவம் குறித்துத் தெரிந்துகொள்ள ராகம வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டோம். நான்காம் திகதி அதிகாலை 6.15 மணிக்கு மஹர சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று ராகம வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சம்பா அளுத்வீர தெரிவித்தார்.
அத்துடன் யாராவது வெளியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சடலமொன்றை வைத்தியசாலையில் ஒப்படைத்தால், உரிய பரிசோதனை மூலமாக அன்றி இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த இயலாததாகையால், அச்சடலத்தை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க நேர்வ தாகவும், பொறுப்பேற்க மறுப்பது வைத்தியசாலை கொள்கை நிலைப்பாட்டுக்கு பொருத்தமற்றதெனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட தினத்தன்று பிற்பகல் 3.30 மணிக்கு மஞ்சுள பத்திராஜ, நாமல் ராஜபக்ஷ, பிரியஞ்சன் ஜயசிங்க, மற்றும் உதுல் பிரேமரத்ன ஆகிய வழக்கறிஞர்கள் சம்பவம் தொடர்பாக தகவலறிய மஹர சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர். வவுனியா சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்ட கைதிகள் தொடர்பாக தகவலறிந்து தெரிவிக்குமாறு கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே வழக்கறிஞர்கள் அங்கு சென்றிருந்தனர்.
 மனித உரிமைகள் அமைப்பொன்றைச் சேர்ந்த அந்த நான்கு வழக்கறிஞர்களும் சிறைச்சாலை அதிகாரிகளின் அவமதிப்புக்கு உள்ளாக நேர்ந்தது மட்டுமன்றி அவர்கள் அங்கு அரை மணிநேரம் தடுத்து வைக்கப்படவும் நேர்ந்ததென்றால், உயிரிழந்த நிமலரூபன் என்ற சந்தேக நபருக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியுமல்லவா?
 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி உட்பட்ட 56 தமிழ்ச் சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்திலேயே மஹர சிறைச்சாலையிலும் நிமலரூபன் படுமோசமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 
உறுதிப்படுத்தப்படாத வைத்தியசாலை வட்டாரத் தகவல்படி மஹர சிறைச்சாலையில் வைத்து மனிதாபிமானமற்ற வகையில் கடுமையான  தாக்குதல்களுக்கு உள்ளான மற்றும் சில தமிழ் சந்தேகநபர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.  
உயிரிழந்த நிமலரூபனின் இறப்பு இயற்கையானதெனக் காட்டிக் கொள்ள அரசு தயாராகி வருகின்றது. எனவே அது சிறுநீரகச் செயலிழப்பு அல்லது இருதயநோயினால் ஏற்பட்ட இறப்பு என மருத்துவப்  பரிசோதனை அறிக்கை வழங்கப்படவும் வாய்ப்புண்டு.
சிறுநீரகச் செயலிழப்பாலோ, இருதய நோய் காரணமாகவோ மனிதர்கள் உயிரிழப்பதுண்டு. கடுமையாகத் தாக்கப்படும் மனிதரொருவர் உயிரிழக்கத்தக்க காரணங்களில் அத்தகைய நோய்ப் பாதிப்பு இருக்கக்கூடும். எனவே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி அதன் காரணமாக உயிரிழப்பது தொடர்பான மருத்துவ விஞ்ஞான விளக்கமொன்றை வைத்தியர் ஒருவரிடம் பெற்றுக் கொள்ள முயன்றோம். தசைநார்கள் கடுமையாக தாக்கமுறுவதன் காரணமாக உடலில் உருவாகும் மயோக்லொபின் (Mayoglobin) இரசாயன மாற்றம் காரணமாக சிறுநீரகம் செயலிழப்பதுண்டு என, அவர் கூறினார்.
நிமலரூபன் வவுனியா சிறைச்சாலையிலி ருந்து வேறு 28 சந்தேகநபர்களுடனேயே மஹர சிறைச்சாலைக்குக்கொண்டு செல்லப்பட்டார். வவுனியா சிறையில் இடம்பெற்ற கைதிகள் கிளர்ச்சியொன்றே இதற்குக் காரணமாய் அமைந்தது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான சரவணபவன் என்பவரை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியதுடன், சிறைச் சாலையிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றிருந்தனர். 
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையோர், சரவணபவனை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டுமெனக் கோரி நின்றனர். வெளியில் கொண்டு செல்லப்பட்ட சரவணபவன் உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டு விட்டாரா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் நிலவியது. தமது கோரிக்கை அலட்சியப் படுத்தப்பட்டதால் பொறுமை இழந்த அவர்கள் அங்கு கடமையிலிருந்த மூன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சிறைச்சாலையின் ஒரு பகுதியில் தடுத்து வைத்ததன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்க முயலாமல் அரச தரப்பிலும் பதிலுக்குப் பதில் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டமையே நிலைமை இவ்விதத்தில் மோசமடையக் காரணமாகியது. 
விசேட அதிரடிப்படை வீரர்களால் குறைந்த பட்ச பலத்தைப் பயன்படுத்தி சிறைச்சாலைச் சுவர்களில் ஏறியிருந்த கைதிகளை அடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரச தொலைக்காட்சி ஒளிபரப்பில் அது பெரும் போர் நடவடிக்கையொன்றாகக் காண்பிக்கப்பட்டது. 
சந்தேக நபர்களால் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவரையும் விடுவித்த எஸ்.ரீ.எவ். படையணி நடவடிக்கை காரணமாக கைகால் முறிவுற்று, தலைகளில் காயமுற்ற சிறைக் கைதிகள் அங்கிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டனர்.
கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்வதற் காக கொழும்பிலிருந்து 28 சிறைச்சாலைப் பொலிஸார் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் மூவர் அதிகாரிகள் தரத்தினர். ஏனையோர் சிப்பாய்கள்.  
வவுனியா சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள மறுத்ததன் காரணமாகவே கொழும்பிலிருந்து பொலிஸாரை அனுப்ப நேர்ந்தது என்பது வழக்கறிஞர் உதுல் பிரேமரத்ன தெரிவித்த தகவல்.
அதேவேளை பெரும்பாலான இலத் திரனியல் மற்றும்அச்சு ஊடகங்கள் இது  புலிக்கிளர்ச்சி முறியடிப்புச் சம்பவமென வர்ணித்து செய்தி வெளியிட்டிருந்தன. வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் பதுங்கு குழிகள் அமைத்திருந்தனர், உயி ரிழந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்களுக்கு நினைவுத்தூபி அமைத்திருந் தனர், அதியுயர் தொழில் நுட்பத்திறன் கொண்ட தொலைபேசிகள், மன்னாக்கத்திகள், வாள்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் வைத்திருந்தனர்.என்றெல்லாம் பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன.
அவர்களது செய்திகளின்படி சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் வசம் இல்லாதிருந்தவை துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் மட்டுமே. ஒரு மாதத்துக்குத் தேவைப்படும் அளவான உணவுப்பொருள்களை அவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகக்கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. 
குறிப்பிட்ட ஊடகச் செய்திகளின்படி விசேட அதிரடிப் படையினரால் கைதிகளின் கிளர்ச்சி முறியடிக்கப்படாதிருந்திருந்தால் ஐந்தாவது ஈழப்போர் வவுனியா சிறைச்சாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட வாய்ப்பிருந்தது.
அரசுக்கு ஒத்து ஊதும் சில ஊடகவியலாளர்களின் கருத்துப்படி தாக்குதல் காரணமாக உயிரிழந்த நிமலரூபன் சில சமயம் ஐந்தாம் ஈழப் போருக்கு தலைமை தாங்கி வழி நடத்தவும் வாய்ப்பிருந்தது. ஆதலால் விடுதலைப் புலிப் போராளிகள் உயிரிழப்பது தவறாகக் கொள்ளப்பட முடியாதது என்பது அவர்களது நிலைப்பாடு.
உயிரிழந்த நிமலரூபனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே முன்னாள் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நிமலரூபனின் மரணம் இருதய நோயினால் ஏற்பட்டதொன்றெனத் தெரிவித்திருந்தார். மரணத்துக்கான காரணம் குறித்து மேலும் பல வெவ்வேறு விமர்சனங்கள் எதிர்வரும் நாள்களில் வெளியிடப்படக்கூடும்.
1990 ஆம் ஆண்டில் மகசின் சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகையதொரு தாக்குதல் சம்பவத்தில், சிங்கள சந்தேகநபர் ஒருவர் உலக்கையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். தென் பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இளைஞர்கள் குறிப்பிட்ட அந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒவ்வொருவராக வெளியில் இழுத்து வரப்பட்டு பொல்லுகளால் தாக்கப்பட்டனர். இருபதுக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களின் கைகால்கள் தாக்குதலில் அடித்து முறிக்கப்பட்டன. 
அதே போன்ற விதத்தில் தற்போது விடுதலைப் புலி சந்தேகநபர்கள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டு கை, கால்கள் முறிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நிமலரூபனுக்கு நேர்ந்த கதி இனவாத செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டியதொன்று.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களிடம் பிரபாகரனின் படம் இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டமை அரசுக்கு வாக்காலத்து வாங்கும் ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு வெறும் வாயைமென்றவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தமை போன்றாகியுள்ளது. 
அவர்களால் உயிரிழந்த விடுதலைப் புலிகளது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதென்ற செய்தி எம்மைப் பொறுத்தவரை ஆச்சரியமான தொன்றல்ல. அவர்களது அரசியல் அபிலாஷை சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். அவர்கள் வாழைக்குலை திருடினார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களல்லர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே அவர்கள்.
 அதனால் அத் தமிழ் இளைஞர்களிடம் பிரபாகரனின் படம் இருந்தமை யொன்றும் புதுமையானதல்ல. விடுதலைப்புலிகளது கிளர்ச்சி குறித்து சந்தேகமும் அச்சமும் கொண்டுள்ள தரப்பி னர் எப்போதுமே இத்தகைய புனைகதைகளைக் கட்டவிழ்த்து விடுவது வழமையானதொன்றே. 
இத்தகைய கிளர்ச்சிச் சிந்தனை குறித்து மனச்சாட்சியுள்ள எவரும் சிந்தித்துப் பார்ப்பதற்காக உதாரணத்துக்கு ஒரு தகவலைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.அவளது பெயர் திருமகள். கடந்த 16 ஆண்டுகள் காலமாக வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் சந்தேக நபர்என்ற பெயருடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாள்.
 இந்த 16 ஆண்டுகளில் 429 தடவைகள் அவள் சிறையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அவள் மீதான குற்றமெதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் அவள் தொடர்ந்தும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாள். தான் நிரபராதி என நிரூபிக்க அவள் இன்னமும் எத்தனை வருடங்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருக்குமோ? அவளுக்கு விடுதலை கிட்டுவது எப்போது?
திருமகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் போன்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் நான்கு பேர் மகசீன் சிறைச்சாலையில் கடந்த 16 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அதே போன்று 429 தடவைகள் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கும், நீதிமன்றத்திலிருந்து மீண்டும் சிறைசாலைக்கும் சென்று திரும்பி கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு விடுதலை கிட்டுவது எப்போது? ஒன்றில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது தண்டனை வழங்கப்பட வேண்டும்.
 இவர்களுக்கு ஆரம்பத்திலேயே  சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், இன்று ஒரு வேளை அவர்கள் தமது தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகியிருக்கலாம். இது ஒரேயொரு  உதாரணம் மட்டுமே. இதனைப் போன்ற உதாரணங்கள்  இன்னமும் எத்தனையோ உள்ளன. இத்தகைய நிலையில் இருப்போர் கிளர்ச்சி குறித்துச் சிந்திகாதிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்பட இயலும்.
1983 ஆம் ஆண்டில் குட்டிமணி உட்பட பல  தமிழ் இளைஞர்கள் வெலிக்கடைச் சிறையில் படுகொலையுற நேர்ந்தது. இன்று நிமலரூபன் மஹர சிறைச்சாலையில் மரணத்தைத் தழுவநேர்ந்துள்ளது. அன்று முதல் இன்று வரை களுத்துறை சிறைச்சாலையிலும், பிந்துணுவவ புனர்வாழ்வு முகாமிலும், இந்நாட்டின் தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்களின் இரத்த ஆறு ஓடியிருக்கிறது. 
அண்மையில் கொலையுண்ட நிமலரூபன்  இன்று எம் மத்தியில் இல்லை. ஜூலை மாதத்தின் இரவு இருள்  நம்மைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது. தொடரும் நியாயமற்ற படுகொலைகளால் ஜூலை மாதத்துக் கறை மென்மேலும் இறுக்கமாகப் படிந்து வருவதை வெறுமனே கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 
சந்திர ஒளி மறைந்து காரிருள் மட்டுமே மீந்திருக்கிறது. ஜூலையின் இந்த காரிருள் அகன்று வெளிச்சம் தோன்றவேண்டும். அவ்விதம் ஒளியைக் காண வேண்டுமானால், அந்த ஒளியைப் பெறுவதற்கான எமது மனித முயற்சிக்குத் தைரியமும் ஊக்கமும் அவசியம். அத்தகைய முயற்சியை நாம் கைநழுவ விடாதிருப்போம்.   

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment