இந்தியாவிற்கு பெரும் தலைவலியை உண்டுபண்ணியுள்ள சிறிலங்கா


    ஐ.நாவில் சிறிலங்கா அரசாங்கம் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக கடந்த காலத்திலும், தற்போதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கவில்லை. 


    இவ்வாறு அமெரிக்க பொஸ்டன் நகரை தளமாகக்கொண்ட GlobalPost ஊடகத்தில் Jason Overdorf எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.



    அதன் முழுவிபரமாவது,



    மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவிற்குள் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை பூசி மெழுகப்பட்ட ஒன்று என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்ப் பிரிவினைவாதிகளிற்கு எதிராக 25 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை வரலாற்றிலிருந்து அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சிகளிற்கு இவ்வாரம் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



    இந்நிலையில் சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதானது இந்தியாவின் முயற்சியிலேயே தங்கியுள்ளது. 



    சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் தொடர்பான தனது அறிக்கையை டிசம்பர் 16 அன்று வெளியிட்டுள்ளது. ஆனால் உள்ளக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தம் தொடர்பான மதீப்பீட்டு ஆய்வானது இது தொடர்பான அனைத்துலக விசாரணையை முடிவிற்குக் கொண்டு வரும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ள போதிலும், 388 பக்க அறிக்கையில் காணப்படும் 'தீவிர யுத்தக் குற்றங்கள் தொடர்பான பற்றாக்குறைகளை' மனித உரிமைகள் கண்காணிப்பகம் அடையாளங் கண்டுள்ளது. 



    சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த விதிமுறை மீறல்கள் தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையில் முழுமையாக சுட்டிக்காட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது. 



    "சிறிலங்காவில் யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட முறைமையானது நேர்மறையான எடுத்துக்காட்டாக உருவாக்கப்படக் கூடாது. அதாவது ஏனைய அரசாங்கங்கள் மேற்கொள்வதற்குத் தூண்டுதல் அளிக்கும் விதமாக அல்லது இவ்வாறு யுத்த வழிமுறைகளை ஏனைய அரசாங்கங்கள் கையாள்வதற்கு அனுமதியளிக்கக் கூடாது" என 'நெருக்கடி ஆய்வுக்கான அனைத்துலக குழு' விற்கான சிறிலங்கா நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். 



    "அழிவுகள் இடம்பெறுவதற்கு எவ்வாறான அணுகுமுறைகள் கைக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நம்பத்தகுந்த விதமாக வெளிப்படுத்துவதே, அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதில் காணப்படும் மிகப் பெரிய நன்மைகளில் ஒன்றாக உள்ளது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



    இவ்வாறான அனைத்துலக விசாரணை ஒன்று இடம்பெறுவதானது, பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை தடுத்துள்ள சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்க்க வேண்டும் என்கின்ற இந்தியாவின் புதிய விருப்பத்திலேயே பெரிதும் தங்கியிருக்க முடியும். 



    சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெளிவான பதிலை அந்நாட்டு அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ திருப்திப்படுத்துவதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கவில்லை. 



    "இவ் அறிக்கையில் குறிப்பிடத்தக்க விதமாக எந்தவொரு சித்திரவதைகளும் காணப்படவில்லை. பாரபட்சமற்ற முறையில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பாக ஆணைக்குழுவினர் எந்தவொரு விளக்கப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. நாட்டின் அதிகாரத்தில் முதல் நிலையிலுள்ளவர்கள் எவரையும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பானவர்கள் எனக் குற்றம் சாட்டவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட இவ் அறிக்கை உண்மையில் மிகக் குறைவான அம்சங்களையே கொண்டுள்ளது. அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளத் தேவையில்லை என்ற நிலைக்கு இவ் ஆணைக்குழுவினர் தமது விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்திருப்பார்கள் என நாம் நினைத்திருந்தோம்" என தொலைபேசி வழி மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 



    "பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள், நலன்கள் போன்றவற்றைக் கருத்திலெடுக்காது, அனைத்துலக சட்ட விதிமுறைகளை மதிக்காது" சிறிலங்கா அரசாங்கப் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



    சிறிலங்கா அரசாங்கமானது தனது படைகள் எந்தவொரு பொதுமக்களையும் கொல்லவில்லை என முன்னர் அறிவித்திருந்த அதேவேளையில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவும் பொதுமக்கள் எறிகணைகளால் கொல்லப்பட்டமை, பாலியல் வன்முறைகள், சரணடைய முயன்ற தமிழ்க் கிளர்ச்சியாளர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தமை போன்ற விடயங்கள் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. 



    இவ்வாறான அப்பட்டமான பூசி மெழுகலானது பெரிதளவில் அதிர்ச்சியைத் தரவில்லை. உள்நாட்டு யுத்தம் நிறைவடையும் முன்னரும், பின்னரும் சிறிலங்காவில் பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பேசுபவர்கள் ஆபத்தை எதிர்நோக்குவார்கள் என்கின்ற விதமாக அவ் அரசாங்கம் பல தோற்றப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



    ஆகவே இவ் ஆணைக்குழுவால் கற்றறியத் தவறிய பல குற்றச்சாட்டுக்கள், இது தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. 



    "சிறிலங்காவில் இடம்பெற்ற ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளிப்படுத்தப்படாத மீறல் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதற்கான அரசியல் உந்துதலை மேற்கொள்ளவேண்டியது அமெரிக்காவினதும் குறிப்பாக இந்தியாவினதும் கடப்பாடாகும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 



    உண்மையில், சீனாவானது அமெரிக்கச் செல்வாக்குகளில் தலையிடுவது அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான புதிய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு யுகத்திற்கான முக்கிய சோதனைக் களமாக சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணை அமைந்துள்ளது. 



    ஏற்கனவே, சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலமானது, அமெரிக்காவாலும், ஐரோப்பிய சமூகத்தாலும் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாடுகள் மீது தடைகளை உண்டுபண்ண ஆரம்பித்துள்ளது. 



    உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதத்தில் சீனாவானது சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி அதன் மூலம் சிறிலங்கா இராணுவத்தின் தந்திரோபாயங்களில் தனது செல்வாக்கை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. 



    யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர், ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என முயற்சி எடுக்கப்பட்ட போது அதற்கு ரஸ்யாவுடன் இணைந்து சீனா பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.



    சிறிலங்காவில் சீனா பெருமளவான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதாவது மிகப் பெரிய துறைமுகம், நெடுஞ்சாலை, நிலக்கரி – எரிவாயு மின்சக்தி ஆலை, அனைத்துலக விமான நிலையம் போன்றவற்றை சிறிலங்காவில் சீனா அமைத்தவருகின்றது. 



    சிறிலங்காவின் மீள்கட்டுமான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட ஆறு பில்லியன் டொலர் திட்டத்தில் யூன் மாதத்தில் 1.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கியதன் மூலம் சீனாவானது சிறிலங்காவிற்கான மிகப் பெரிய உதவி வழங்குனராக உயர்ந்துள்ளது. 



    முன்னர் சிறிலங்காவின் முதன்மை உதவி வழங்குனர்களாக இருந்த அமெரிக்கா மற்றும் யப்பான் போன்ற பாரம்பரிய பிராந்திய அதிகார சக்திகளிற்கு சீனாவின் சிறிலங்கா மீதான இப்புதிய பெருந்தன்மையானது கடுமையான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. 



    ஆனால் இது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடானது உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதாக உள்ளது. 'முத்துக்களின் மாலை' என அழைக்கப்படுகின்ற சீனாவின் இந்து சமுத்திரப் பிராந்தியம் நோக்கிய நகர்வானது, கடல் மற்றும் இராணுவ வளங்களிற்கான முக்கிய மையங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டதாகவே இந்தியா பார்க்கிறது.  



    சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா கடும்போக்கைக் கடைப்பிடிப்பதானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை விரோதப்படுத்துவதாக இருக்க முடியும். அத்துடன் இந்தியாவின் இக்கடும் போக்கால் ராஜபக்ச சீனாவின் கைகளில் விழவேண்டிய நிலையையும் உண்டுபண்ணலாம். 



    "சிறிலங்காவில் சீனா தனது தலையீட்டை அதிகரித்திருப்பதானது அண்மைய ஆண்டுகளில் இந்தியாவிற்கு பெரும் தலைவலியை உண்டுபண்ணியுள்ளது. பெருமளவில் அனைத்துலக அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தாமல், இந்தியா இவ்விடயத்தில் தனித்தச் செயற்படுவது சாத்தியமற்ற விடயமாகும்" என புதுடில்லியைத் தளமாகக் கொண்டியங்கும் கொள்கை ஆய்விற்கான மையத்தின் மூலோபாயக் கற்கைநெறிக்கான பேராசிரியர் பிரஹ்மா செலானி தெரிவித்துள்ளார். 



    மனித உரிமை அமைப்புக்கள் அவசியம் என நம்புகின்ற விதமாக மிக உறுதியுடன் இந்தியா செயற்படுவதற்கு இவ்வாறான காரணங்கள் அதற்குத் தடையாக உள்ளன. 



    போரின் போது இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிற்கு புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்கின்ற ராஜபக்சவின் நகர்வுகள் தொடர்பாக தனது அதிருப்தியை பரஸ்பரம் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கலந்துரையாடுகின்ற சந்தர்ப்பங்களில் இந்திய மத்திய அரசு வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் கூட,   இந்திய அரசாங்கத்தால் வெளிவிடப்படுகின்ற அறிக்கைகளில் இவ்விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை அதிகம் எதிர்ப்பது போன்று காண்பிப்பதைத் தவிர்த்து வருகின்றது. 



    இதற்கப்பால், ஐ.நாவில் சிறிலங்கா அரசாங்கம் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக கடந்த காலத்திலும், தற்போதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கவில்லை. 



    இது விடயத்தில் இந்தியாவின் மெத்தனப் போக்கானது சீனா, ரஸ்யா ஆகியவற்றால் சிறிலங்கா மீதான அழுத்தங்களிற்கு எதிராக வெளிப்படையாகக் காட்டப்படும் நிலைப்பாட்டை ஒத்ததாக உள்ளதாக அலன் கீனன் தெரிவித்துள்ளார். 



    இவ்வாறான எதிர்ப்புக்களை வெற்றி கொள்வதற்கு சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மட்டுமல்லாது யப்பான், இந்தியா ஆகிய நாடுகளும் தமது ஆதரவை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. 



    இது தொடர்பாக இந்தியா மிக அழுத்தமாக உறுதியான அறிக்கையை வெளியிட்டால், ஆசியாவின் ஏனைய சிறிய நாடுகள் மற்றும் ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்றனவும் இந்தியாவின் இவ்வழியைப் பின்பற்றும். புதுடில்லி தற்போது கைக்கொள்ளும் தயக்க நிலையைக் கைவிட்டு சிறிலங்கா விடயத்தில் உரத்த குரல் எழுப்ப வேண்டும். 



    "சிறிலங்கா மீது மனித உரிமைகள் சபை பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே மேற்குலக அரசாங்கங்கள் விருப்பம் கொண்டுள்ளமையை அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கூட்டணியுடன் தானும் இணைந்து கொள்ள விருப்பம் காட்டுவதற்கான எந்தவொரு சமிக்கையையும் இந்தியா இன்னமும் அனுப்பவில்லை என்பதே உண்மையாகும்" என அலன் கீனன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
    Share on Google Plus

    About Unknown

    This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
      Blogger Comment
      Facebook Comment

    0 கருத்துரைகள் :

    Post a Comment