போராடுவதைத் தவிர வேறு வழியில்லை...


வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி 

இலங்கையின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. 

துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள்.


ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

அண்மையிலே பல்கலைக்கழக மாணவத் தலைவன் தவபாலன் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து கொண்டு வந்தவர்களால் சாகக்கூடிய அளவு தாக்கப்பட்டிருக்கின்றார். நல்லவேளை உயிர் தப்பி விட்டார். சில நாட்களுக்கு முன்னர் அதாவது 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் சித்த ஆயுள்வேத மருத்துவ பீட மாணவன் ஒருவனைக் காணவில்லை. இப்படி பலர் அங்கே காணாமல் போகின்றார்கள். இதற்கு யார் காரணம்? 27ஆம் திகதி நவம்பர் மாதம் வந்தவுடன் உங்களுடைய படையினர் என்ன செய்கிறார்கள். எங்கெல்லாம் சந்தேகம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று அங்கிருக்கின்றவர்களை எச்சரிக்கின்றார்கள். அவர்களைக் கைது செய்யப் பார்க்கின்றார்கள். விசாரிக்கின்றார்கள். தாய்மார் மற்றும் இரத்த உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களை காணவில்லை என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நடந்தது என்ன என்று தெரியாமலோ ஒரு நாளிலாவது கண்ணீர் விடக்கூடாதா? இதைக்கூட நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 

இந்த நாட்டிலே அரசியல் பண்பாடு என்னவாக இருக்கின்றது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கின்றீர்கள். ஆனால் ஜனநாயக ரீதியாக எங்களுடைய மக்களின் தீர்ப்பை ஏற்று இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நீங்கள் ஆயத்தமாக இல்லை. அதேநேரம் இந்த நாட்டின் ஜனாதிபதி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபொழுது அவருக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகின. அது உண்மையா? இல்லையா? அது தப்பா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதனை நினைவூட்ட விரும்புகிறேன். 

உங்களுடைய வரவுசெலவுத்திட்டத்திலே இராணுவப் படை வீரர்கள் மூன்றாவது குழந்தையைப் பெற்றால் ஓர் இலட்சம் ரூபா தரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். இப்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்கு நீங்கள் அப்படி தர வேண்டாம். ஆனால் மடிந்துபோன எங்களுடைய குலத்தவர், இனத்தவர்கள் மீது நஷ்டஈடு வழங்குங்கள். அவ்வாறு நஷ்டஈடு வழங்குவதாக நீங்கள் அறிவித்தீர்களா? எங்களின் இழந்த சொத்துகள் மீது நஷ்டம் கொடுக்க அறிவித்தீர்களா? வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக நீங்கள் கூறமுடியுமா? இங்கு முற்றுமுழுதாக இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் ஓர் அடக்குமுறைக்குள் அதாவது ஜனநாயகக் குரல் மீண்டும் அங்கு எழுந்துவிடக்கூடாது என்ற அளவில் அங்கே ஓர் இராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஓர் இராணுவத் தளபதி அங்குள்ள அரச ஊழியர்களை அழைத்துப் பேசியபோது இந்த நிலம் விடுதலைப் புலிகளிடமிருந்து எங்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த நிலத்தில் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் சொல்கின்றபடி இந்த நிலத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அரசாங்க ஊழியர்களாக இருக்க வேண்டாம் என்று கட்டளையிட்டாரா? இல்லையா? என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் இதனை ஆதாரத்துடன் தான் பேசுகின்றேன். ஓர் இராணுவத் தளபதி அங்கு ஓர் அரசாங்க அதிபருக்கு எழுதுகின்றார். 

உதாரணமாகக் குறிப்பிடுகின்றேன். 1 778 ஏக்கர் காணியை நீங்கள் எங்களுடைய தேவைக்காகக் கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். இந்த இராணுவத்தினருக்கு யார் காணி அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று காணி அமைச்சுப் பொறுப்பு யாருடைய கையிலே இருக்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சருக்கு 1 333 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உங்களுடைய இராணுவச் செலவு இன்றைய மொத்த வருமானத்திலே 20 வீதத்தைத் தாண்டுகின்றது. அதாவது 22, 994 கோடி. யுத்தம் முடிந்ததற்குப் பிறகும் சென்ற ஆண்டைவிட அதிகமான பணத்தை நீங்கள் இராணுவத்துக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக வடக்கு, கிழக்கைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலே நாங்கள் ஒன்றாக வாழ வேண்டும். தமிழர்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று நீங்கள் சிந்தித்தால் ஆகக் குறைந்தது எங்களுடைய செத்துப் போன மக்கள் சார்பாகவாவது நீங்கள் நஷ்டஈட்டைக் கொடுக்க வேண்டாமா? அழிந்துபோன சொத்துகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் நிதியை ஒதுக்க வேண்டாமா? உங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால் நாங்கள் உங்களிடமிருந்தாவது உதவியைப் பெறலாம் என்று குணரத்னவிடம் நேரடியாகச் சொன்னேன். ஆனால் மீள்குடியேற்றத்துக்கென மொத்த வருமானத்திலே 0.06 வீதம் அங்கே ஒதுக்கப்பட்டிருந்தது. 

கடன் வாங்கி எங்கள் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அபிவிருத்தி என்பது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அல்ல தமிழ் மக்களினது உரிமைகளை வழங்குவதன் அடிப்படையில் தான் அந்த அபிவிருத்திகள் பயன்பாட்டுக்குள் வரவேண்டும். நாங்கள் அரசியல் தீர்வொன்று இல்லாமல் எங்கள் மண்ணில் வாழவும் ஆளவும் எங்களுக்கு இருக்கின்ற உரிமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் செய்கின்ற அபிவிருத்தி எங்களை அடிமைப்படுத்துவதாக இருந்தால் நாங்கள் அதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். அது அல்ல ஒரு ஜனநாயக தத்துவம். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் புறக்கணித்துவிட்டு நீங்கள் அபிவிருத்தி வேலை என்று செய்தா? எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டீர்கள். முதலாளிகளுக்கும் தனியாருக்கும் பெரும்பான்மையினத்தைச் செர்ந்தவர்களுக்கும் எங்கள் நிலங்களை விரும்பியவாறு எங்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் அவைகள் விற்கப்படுகின்றன. கையளிக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன. 

அதைவிட நாங்கள் இங்கே பலமுறை இது சம்பந்தமாக பேசியிருக்கின்றோம். 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தினுடைய இடைக்காலத் தீர்ப்பொன்று கிடைத்ததற்குப் பிறகும் வலி காமம் வடக்கில் இராணுவம் நமது அரைவாசிப் பிரதேசத்தையும் மீள்குடியேற்றப்படாத இலட்சக்கணக்கான மக்களில் அரைவாசிப் பேரையும் மீளக் குடியேற்றுவதற்கு ஆயத்தமாகவில்லை. அந்த நிலங்களைக் கைப்பற்றி இராணுவ முகாம்களையும் இராணுவக் குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் நினைக் கின்ற திட்டம் அதுதான். இதைத்தான் அபிவிருத்தி யென்றுநாங்கள் நினைக்கின்றோம். அடுத்ததாக வலிகாமம் வடக்கை அடுத்துள்ள மாதகல் பிரதேசம். அங்கே திருவடிநிலை தொடக்கம் மாதகலுடைய முனையிலிருந்து காங்கேசன் துறை வரைக்கும் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக் கின்றன. எங்களில் எவருக்கும் தெரியாமல் அபிவிருத்தி என்ற பேரிலே அங்கே இயந்திரக் காற்றாடிகள் பூட்டப்படுவதற்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மலேசிய நிறுவனம் ஒன்றுடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றீர்கள். அதுவும் சீனர்களின் நிறுவனம் என்று நாங்கள் அறிகின்றோம். அது உண்மையோ இல்லையோ அந்த ஒப்பந்தத்தை நீங்கள் சொல்ல வேண்டும். வலிவடக்கிலே ஒ / 152 என்ற கிராம சேவையாளர் பிரிவு மக்கள் அந்த நிலங்களில் மீளக் குடியேற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும் இராணுவத்தின ராலும் கடற்படையினராலும் வெளியற்றப்பட்டிருக் கின்றனர். எங்களுடைய தலைவர் சம்பந்தன் சென்ற 24 ஆம் திகதி இந்த அவையிலே பேசுகின்ற போது சம்பூர் மக்களை மீளக்குடியேற்ற வேண்டுமென்று கேள்வியெழுப்பினார். பஸில் ராஜபக்ஷ இந்த விடயத்திலே அபிவிருத்திக்காக எடுக்க வேண்டிய நிலத்தைத் தவிர ஏனைய நிலங்களில் அந்த மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிப்போம் என்று ஒரு வார்த்தையைக் கூறியிருந்தார். அந்த மக்களுக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது. நீங்கள் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும். எங்கள் மீது அந்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வார்த்தைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். 


அதேபோல வலிவடக்கிலே இருக்கின்ற நிலங்கள் மீண்டும் எங்களுக்குத் தரப்படவேண்டும். இராணுவம் அந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக சொல்கிறோம். இராணுவத்தின் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபமும் கிடையாது. அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அரசுதான் அந்த நிலங்களை எடுத்து தமிழ் மக்களுக்கு உரித்தான அந்த நிலங்களை அவர்களிடத்தில் கொடுக்கவேண்டும். அந்த நிலத்திலே அவர்களுக்கு வாழவும் ஆளவுமான அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும். 



இறுதி யுத்தத்தின் பொழுது முல்லைத் தீவிலிருந்து ஏராளமான தங்கங்களும் பணமும் எடுத்துச் செல்லப்பட்டன என்ற தகவல்களைக் கேள்விப்பட்டோம். இன்று உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கே.பி. இருக்கிறார். அவரிடம் கப்பல்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றீர்கள். எனவே நீங்கள் எமது மக்களைத் தொடர்ந்தும் அநாதரவான நிலைக்குத் தள்ளாமல் அவர்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை நீங்கள் எங்களுக்காகச் செலவிடுவதற்கு ஆயத்தமில்லாவிட்டாலும் ஆகக் குறைந்தது நீங்கள் அங்கிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் வரவு செலவுகள் எவ்வளவென்பதை எமக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அதிலிருந்து எவ்வளவு தொகையை எமது மக்களுக்கு கொடுக்கப் போகின்றீர்கள். கே.பியிடம் உள்ள பணம் எவ்வளவு? நீங்கள் போர் முனையிலிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் பெறுமதி எவ்வளவு? அந்தத் தொகையிலிருந்தாவது எமது மக்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம். 



எங்களுக்கு தேர்தலிலும் சரி எங்களுடைய கட்சியிலும் சரி எங்களுக்கு உதவியும் கிடையாது. பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயருகின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்திலே சில காசைப் போடுகின்றனர். நீங்கள் அதைப்பற்றிக்கூட பேசுகின்றீர்கள். சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரைகூட உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டீருக்கின்றது நீங்கள் எவ்வளவு பண்டங்களை மக்களுக்குக் கொடுத்துப் பார்த்தீர்கள்? இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். இராணுவம் என்ன செய்கிறது? இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமது வேட்பாளர்கள் யாராக இருக்க வேண்டுமென அடையாளம் காண்கின்றனர். மறுக்க முடியுமா? 



சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் 22 ஆம் திகதி இரவு வடமாகாணத்தில் வன்னியில் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்கள். உங்களுடைய ஜனாதிபதியும்கூட அங்கு சென்று முகாமிட்டிருந்தார்கள். இராணுவத்தினர் அவ்வாறு கேட்கவில்லை என உங்களால் மறுக்க முடியுமா? வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்ப்பாக வாக்களிக்கும் படி கேட்கவில்லை என உங்கயளால் மறுக்க முடியுமா? அப்படியிருந்தும் அங்குள்ள மக்கள் ஒரு கொள்கைக்காக இலட்சியத்துக்காக எங்களுடைய வீடுகளில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். வீடுகள் இல்லாவிட்டாலும் நாங்கள் எமது காணிகளில் குடிசையை அமைத்துக்கொண்டாவது வாழவேண்டும். எமது பிரதேசங்களில் வாழ்கின்ற உரி மையை எங்களுக்கு வழங்குங்கள். எமக் குரிய நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளியெறி எங்களை அந்நிலங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என அம்மக்கள் விரும்புகிறார்கள். எமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளி யேற வேண்டுமென நான் விரும்பகின்றேன். 



24 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் எனது சொந்த மண்ணிலிருந்து இராணுவத்தினர் வெளியெறவேண்டும் என நான் விரும்புகிறேன். இதுநாள் வரையில் நான் சுதந்திரமாக எனது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு இன்னும் இடமளிக்கவில்லை. அதேபோன்று லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய நிலத்தில் ஆள்கின்ற உரிமையை நீங்கள் அங்கீகரிக்கும் வரை நாங்கள் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி வைக்க வேண்டாம். 



இப்போழுது நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக உலகுக்குச் சொல்வதைத் தவிர்த்து எங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயகத் தீர்ப்புகளை ஏற்று இந்த நாட்டிலே ஒரு சிறந்த அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்கின்றோம். நீங்கள் தொடர்ந்தும் எமது நிலங்களை அபகரிக்கக் கூடாது. இல்லாவிட்டால் நாங்கள் எமது மக்களுடன் இணைந்து தந்தை செல்வா எமக்குக் காட்டிய அஹிம்சை வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment