சிறிலங்காவில் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்களும் வன்புணர்வும் அதிகரிப்பு - சமூக ஆர்வலர்கள் கவலை


முப்பதாண்டுகளாக தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் பதின்மவயது கருத்தரிப்புக்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் 'பெண்கள் மற்றும் அபிவிருத்தி மையத்தின்' தலைவி சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு Inter Press Service - IPS இணையத்தள ஊடகத்திற்கு Amantha Perera எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு வயதுச் சிறுமி ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்ட மறுநாள் கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கிருலப்போன [Kirulapona] என்கின்ற இடத்தின் ஊடாக நடந்து செல்லும் போது மயான அமைதி நிலவியமை தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக, உள்ளுர் ஊடகவியலாளரான குமார் டீ சில்வா குறிப்பிட்டிருந்தார். பதினாறு வயது நிரம்பிய ஒருவரும் அவரது இரு நண்பர்களுமே இச்சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதை மருத்துவ சான்றிதழ் உறுதிப்படுத்தியுள்ளது. பாலியல் வன்புணர்வின் பின்னர் இச்சிறுமியின் உடலம் கால்வாய் ஒன்றுக்குள் வீசப்பட்டிருந்தது.

"இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுவதற்கு முன்னர், இப்பட்டினத்தில் இது போன்ற மயான அமைதி ஒருபோதும் நிலவவில்லை" என டீ சில்வா தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள Tangella என்னும் இடத்தில் உள்ளுர் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஆறு பேர் இணைந்து 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இதேபோன்று, பிறிதொரு தென் பகுதி நகரமான அக்குரெசவில், 14 வயதுச் சிறுமி மீது தொடர்ச்சியாக இரு நாட்களாக பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்காவில் இவ்வாறான சிறுவர் பாலியல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர், இவை தொடர்பில் எவ்வித எதிர்ப்புக்களும் முன்வைக்கப்படாத நிலையில், டீ சில்வா தனது முகநூலில் 'வன்புணர்வு வேண்டாம். சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் வேண்டாம்' என குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு மற்றும் சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பில் சமூக ஊடக விழிப்புணர்வை மேற்கொள்ளும் நோக்கில் டீ சில்வா இதனை முன்னெடுத்திருந்தார்.

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 'சிறுவர் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல்' தொடர்பில் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதற்காக டீ சில்வா முகநூலில் தனியான பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தற்போது பாலியல் வன்புணர்வு தொடர்பான அறிக்கைகள் வரிசைக்கிரமமாக பதிவுசெய்யப்படுவதுடன், டீ சில்வாவின் முகநூலானது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இத்துடன் நின்றுவிடாது, பாலியல் வன்புணர்வைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வை மேற்கொள்வதற்காக, டீ சில்வா தனது நண்பர்கள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றார். "இவ்வாறான முயற்சியை நான் அக்கறையுள்ள தந்தை என்ற வகையிலும், நாட்டின் குடிமகன் என்ற வகையில் மேற்கொள்கிறேன். இது தொடர்பில் குரல் கொடுக்குமாறு மக்களுக்கு உந்துதலையும், விழிப்புணர்வையும் வழங்க விரும்புகிறேன்" என டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். 



இது தொடர்பில் செனகலைச் சேர்ந்த, உலகவங்கியின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி Diarietou Gaye பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். இவர் தனது செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர், சிறிலங்காவில் இடம்பெறும் சிறுவர் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பான கருத்துக்களை உலகவங்கியின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அனைத்துலக உதவி வழங்கும் அமைப்பின் பிரதிநிதிக்கென வரையறுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பால், உலகவங்கியின் சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி இந்நடவடிக்கையை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறார். 

"பாலியல் மீறல் சம்பவங்கள் தொடர்பாக அலுவலகங்கள், அயல்வீடுகள், பாடசாலைகள், மத அமைப்புக்கள் மற்றும் எந்தவொரு பொது இடங்கள் போன்றவற்றில் மக்கள் கதைப்பதன் மூலம் இவ்வாறான மீறல்களைக் குறைக்க முடியும்" என Diarietou Gaye சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் சம்பவங்கள் பெரும்பாலானவற்றில், சிறுவர்களுக்கு நன்கு தெரிந்த உறவினர், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களாலேயே மீறல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Gaye தனது முதலாவது விழிப்புணர்வுக் கருத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட பின்னர், சிறிலங்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாவனெல்ல என்ற இடத்தில் உள்ள ஆதரவற்ற சிறுவர் பராமரிப்பு விடுதியில் பணிபுரிந்த 80 வயதான வயோதிபர் ஒருவர், 15 வயதிற்கு குறைவான சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறிலங்கா காவற்துறையால் கைதுசெய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 15 வயதிற்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

2012 நடுப்பகுதிக்குள் 700 வரையான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், குறிப்பாக இவற்றுள் பெரும்பாலானவை சிறுவர் முறைகேடுகள் எனவும் சிறிலங்கா காவற்துறைப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்துள்ளார். 

"இவ்வாறு நாம் அமைதி காப்பதானது, சிறிலங்காவில் அதிகளவில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களை ஒருபோதும் முடிவுக்கு கொண்டுவராது. இந்நாட்டின் குடிமக்களாகிய நாம் இது தொடர்பில் அமைதி காக்காது குரல் கொடுக்க வேண்டும்" என பட்டதாரி மாணவர் மரிசா டீ சில்வா தெரிவித்துள்ளார். 

பாலியல் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில் சிறிலங்கர்கள் முன்வருவதில்லை எனவும், மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் கூட பாலியலுடன் தொடர்புபட்ட ஏதேனும் விடயங்கள் பேசப்படும் போது கூட சிறிலங்கர்கள் இது தொடர்பாக கருத்துக் கூறுவதில்லை என மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் Handunnetti சுட்டிக்காட்டியுள்ளார். இது உண்மையில் அதிர்ச்சி தரக் கூடிய விடயமாகும். 

முப்பதாண்டுகளாக தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் பதின்மவயது கருத்தரிப்புக்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் 'பெண்கள் மற்றும் அபிவிருத்தி மையத்தின்' தலைவி சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இவ் அபிவிருத்தி மையமானது இந்த ஆண்டில் மட்டும் பதின்ம வயதுக் கருத்தரிப்புக்கள் தொடர்பில் 400 வரையான சம்பவங்களையும், பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் 300 இற்கும் மேற்பட்ட சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளது. பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வின்மையே இவ்வாறான மீறல்கள் இடம்பெறுவதற்கான அடிப்படைக் காரணம் என சறோஜா சிவச்சந்திரன் நம்புகிறார். 

"வடக்கில் வாழும் சிறுவர் சிறுமிகள் பாலியல் கல்வி தொடர்பில் முதிர்ச்சியடையாதவர்களாக காணப்படுகின்றனர். வெளியுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர், வெளியுலகையும் இவர்கள் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்" எனவும் சறோஜா சிவச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவில் இணையத்தளங்கள் மற்றும் முகநூலின் மூலம் மேற்கொள்ளப்படும் பாலியல் விழிப்புணர்வுகள் இது தொடர்பான தாக்கத்தை மட்டுப்படுத்தினாலும் கூட, "இவ்வாறான மீறல் சம்பவங்கள் இடம்பெறும் இடங்களில் எமது நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அத்துடன் அங்கு வாழும் மக்கள் மத்தியில் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" எனவும் டீ சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார். 

பாலியல் மீறல் சம்பவங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சியில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ள அதேவேளையில், இவ்வாறான பாலியல் மீறல் சம்பவங்களை எதிர்த்து கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், இது தொடர்பில் மக்களின் எதிர்ப்புக்கள் குறைவாக உள்ளதாக சிவச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

லங்காதீப சிங்களப் பத்திரிகை மற்றும் ஊடகக் குழு போன்றவற்றால் இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்குகொண்ட 60 சதவீதமானவர்கள் சிறுவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சிறிலங்காவில் மரண தண்டனை வழங்கப்படாத போதிலும், இவ்வாறான சிறுவர் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என இணையத் தள ஆய்வின் முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

"இவ்வாறான மீறல்கள் தொடர்பில் உடனடி மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இதற்கு மேலும் காலம் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வுகளை வழங்கினால் குற்றவாளிகள் இனங்காணப்படுவர்" என டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். 

"இது தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பலமான அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது. சிறிலங்காவானது 'ஆசியாவின் அதிசயமாக' மிளிர வேண்டுமானால், இது முதலில் தனது மக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வாறான பாலியல் மீறல்கள் தடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறிலங்கனதும் பொறுப்பாகும்" என உலகவங்கியின் வதிவிடப் பிரதிநிதி Diarietou Gaye மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment