தமிழீழம் பொதுவாக்கெடுப்பு ஏன்?


                தமிழனுக்கென்று 49 நாடுகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. ஆனால் இன்று தமிழன் நாடற்றவனாக, நாதியற்றவனாகக் கேட்பாரற்றுக் கிடக்கின்றான். இவ்வுலகில் மிகப்பெரிய தேசிய இனமான தமிழினத்திற்கென்று ஒரு நாடுகூட இல்லை. அதனால்தான் தமிழீழத்தில் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்க முடியாமலும், அந்த இனப்படுகொலை நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் சர்வதேச நீதிமன்றத்தில் அதற்கான நீதியைப் பெறமுடியாமலும் போனது. 
வரலாற்றுப் புரிந்துணர்வு
                ஈழம் என்பது தமிழர்களின் பழமையான நாடு. முதல் கடல் கோளால் ஏற்பட்ட புவியியல் மாற்றத்தினால் இலெமூரியா எனும் குமரிக்கண்டம் கடல் சீற்றத்தால் மூழ்கடிக்கப்பட்டது. பாண்டிய நாட்டின் நிலப்பரப்போடு இணைந்திருந்த ஈழம் கடல் நீரால் பிரிக்கப்பட்டு தீவுத்திடலாக மாறியது. ஈழத்தின் தென்பகுதிகள் அடர்த்தியான காடுகளால் சூழ்ந்திருந்தது. இந்நாளில் ஒரியப் பகுதிகளிலிருந்து அரசுக்குக் கட்டுப்படாத குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக அவர்களை ஈழத்தின் தென்பகுதிகளில் மலைப்பாம்புகளும், கொடிய மிருகங்களும் நிறைந்த அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறைவைக்கப்பட்டனர். இவ்வாறு சிறை வைக்கப்பட்ட குற்றமரபில் தோன்றிய ஒரு கலப்பினம்தான் சிங்களம். ஒரியமொழிச் சொற்களாலும், வடமொழிச் சொற்களாலும் உருவாகிய ஒரு கூட்டுக்கலவையே சிங்கள மொழியாகும்.
                தமிழ் இனமும், சிங்கள இனமும் தனித்தனி மொழி, பண்பாடு, வழிபாடு, வரலாறு கொண்ட இருவேறு நாட்டினமாகும். இரு நாடுகளாக இருந்த தமிழ், சிங்கள அரசுகளை ஆங்கிலேயர்கள் தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பின்னர் ஒற்றை அரசாக்கி ஆளுமை செலுத்திவந்தனர். பின்னர் தங்களின் ஆதிக்கங்களைத் தளர்த்திக் கொள்ளும் போது இவ்விரு நாடுகளையும், ஒன்றாக்கி ஒன்றுபட்ட இலங்கை என்னும் நாடாக்கி, விடுதலையையும் கொடுத்துக் கெடுத்துவிட்டனர். தமிழீழ மக்களின் விழிப்புணர்வின்மையாலும், சிங்களவர்களின் சூழ்ச்சியாலும், ஆங்கிலேயர்களின் அறியாமையாலும் தமிழீழம் எனும் நாடு கிடைக்கும் வாய்ப்பு 1948-லேயே தவறிப்போனது. 
அரசியல் பின்புலம்
                இலங்கையில் தமிழீழம் தனி நாடாக அமைந்தால் இந்தியாவில் தமிழ்நாடு தன¤நாடாக ஆகிவிடும் என்ற கண்மூடித்தனமான தப்புக்கணக்கால் ஏற்பட்ட அச்சமே இந்திய அரசு இலங்கை அரசுடனும், பல்வேறு நாடுகளுடனும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தமிழீழ தேசத்தின் முப்பது ஆண்டு கால அறம் சார்ந்த, வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது. உண்மையற்ற முறையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசு, தமிழீழம் மலர்ந்தால் அது இந்தியாவிற்கு என்றென்றும் துணைநிற்கும் என்னும் உண்மையை மறுத்து வருகிறது.
                தெற்காசியப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும், சமாதானத்திற்கும் தமிழீழத்தின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதாகும். தமிழீழம் இல்லையேல் இலங்கை அந்நிய அரசின் வெடிமருந்துக் கிடங்காய் மாறிவிடும் அபாய நிலையை இந்திய அரசு புரிந்துகொண்டு இனிமேலாவது தமிழின அழிப்புப் போக்கினைக் கைவிட்டுவிட்டு, தமிழீழ மக்களின் உரிமைப்பிரச்சனைக்கெதிராகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இத்தகைய நிலைக்கு இந்திய அரசைத் தள்ளி, தமிழீழ மக்களின் உரிமைகளைப் பெருவதே பொதுவாக்கெடுப்பு என்னும் சனநாயக அரசியல் வழிமுறையாகும். இந்த வழியில் தீர்வு காண சர்வதேச சமுதாயத்தை வலியுறுத்துவதே இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் கடமையாகும்.
                ஒரு தேசிய இன விடுதலைப்போராட்டம் என்பது தம்மை ஒடுக்கும் ஆதிக்க தேசிய இனத்திற்கு எதிரான போராட்டமாகும். அது ஒட்டுமொத்த உலக ஏகாதிபத்தியங்கள் அனைத்தையும் எதிர்க்கும் போராட்டம் அல்ல. ஒரு நாட்டின் குறிப்பிட்ட பிரிவினை, குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்குச் சாதகமாக இருந்தால் அவை அதனை ஆதரிக்கும். அதே பிரிவினை குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்குப் பாதகமாக இருந்தால் அவை அதனை எதிர்க்கும். உலக அரசியலில் நிலவிவரும் இத்தகையச் சூழ்நிலைகளையும் கடந்து சர்வதேச சமூகத்தை தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக மாற்றுவதே நம்மின் இம்முயற்சியாகும்.
                'தமிழீழம்' என்பது அந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களின் இலக்கு. பொதுவாக்கெடுப்பு என்பது அதற்கான வழிமுறையாகும். தமது தாய் நிலம், தாய்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழர் வழிபாடு ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்ள இலங்கை அரசுடன் இணைந்து வாழ்வதா? அல்லது தனியாகப் பிரிந்து செல்வதா? என்று தமிழீழ மக்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அரசியல் உரிமையாகும். உலகம் முழுவதுமுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்குமான அரசியல் உரிமையாகப் 'பொது வாக்கெடுப்பு' இருந்து வருகிறது. 
பொது வாக்கெடுப்பும், புதிய நாடுகள் உருவாக்கமும்.
                இசுலோவேனியா (1990), குரோசிமா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), சார்கியா (1991), டிரான்சுனிசுடீரியா (1991), போசுனியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்குதிமோர் (1999), மாண்டிரிக்ரோ (2006), தெற்கு ஏசெடியா (2006) தெற்கு சூடான் (2011) ஆகிய நாடுகள் தன்னுரிமை பெறப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை இவ்வுலகம் அறியும். அவ்வாறே போகைன் வில்லே (2015), கலிடோனியா (2014) ஆகிய நாடுகள் உரிமை பெறப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேற்கு சகாராவிற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. உலகத்திற்கே பொருந்துகின்ற அதே 'பொது வாக்கெடுப்பு' என்னும் அரசியல் வழிமுறையில் தமிழீழமும் தன்னுரிமை பெறவே உலகத்தமிழினம் சர்வதேசத்திற்குக் கோரிக்கை வைக்கிறது. 
தமிழீழ விடுதலைப் போராட்டமும், பொது வாக்கெடுப்புக்கான காரணமும்
            1.            இனிமேலும் தமிழர்கள் சிங்கள அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில் இவர்கள்தான் 2.5 இலட்சம் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள்.
                2.            இனிமேலும் தமிழர்கள் சிங்கள மக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில் தமிழர்களை ஒடுக்குகின்ற அரசியல் கட்சிகளிடமே ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பவர்கள் சிங்கள மக்கள்.
                3.            இனிமேலும் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. ஏனெனில் நூற்றுக்கும்மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றுள்ளது. பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு காலம் கடத்தவும், தமிழர்களையும், உலகத்தையும் ஏமாற்றவுமே பயன்படுத்தி வந்துள்ளது.
                4.            இனிமேலும் தமிழர்கள் இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாகச் சம உரிமைபெற்று வாழமுடியும் என நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில் இன்றுவரை தமிழர்கள் கோரும் எந்த உரிமையையும் எந்த ஒரு சிங்கள அரசும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
                5.            இனிமேலும் இலங்கையின் ஒருமைப்பாடு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் விடுதலை பெற்ற நாளிலிருந்து இலங்கையில் ஒருமைப்பாடு என்ற ஒன்று எப்போதுமே இருந்தது கிடையாது.
                6.            இனிமேலும் இலங்கையில் இன நல்லிணக்கம் என்பதற்கு எள்ளளவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான பல்வேறு வாய்ப்புகள் அறுந்துபோய் காலங்கள் கடந்துவிட்டது.
                இன நல்லிணக்கம் பேசிக் கொண்டே சிங்களவர்கள் தமிழர்களுக்குச் செய்த அவலங்கள்தான் இத்தனையும். ஈழ மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் 2லு இலட்சம் பேர், உலக நாடுகளுக்கு ஏதிலிகளாகச் சென்ற தமிழர்கள் 10 இலட்சம் பேர்; இன்றளவும் சித்திரவதைக் கூடங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் 10,000 பேர்; இராணுவக் கட்டுப்பாட்டில் சுதந்திரமற்று வாழுவோர் ஒட்டுமொத்தத் தமிழர்களும்.
                இத்தகையச் சூழலில் கடுமையான, கொடுமையான, கொடூரமான நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் இன்றைய முதலாவது தேவை உயிர்ப்பாதுகாப்பாகும். தொடர் இனப் படுகொலையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு தனி அரசு தேவைப்படுகிறது. இதனை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அரசியல் நடவடிக்கையே பொது வாக்கெடுப்பாகும். பொது வாக்கெடுப்பு என்பது ஈழத்தமிழர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தாமே நேரடியாகத் தீர்மானித்துக் கொள்ளும் ஒரு சாதாரணத் தேர்தல் வழிமுறையாகும். தமிழீழத்தில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள், உலக நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் பொது வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையும், தகுதியும் உடையவர்களாவர்.
                பொது மக்கள் வாக்கெடுப்பை தமிழீழ விடுதலைக்கான பாதையாகப் பலரும் ஏற்க முன் வரவேண்டும். அவ்வாறு முன் வந்து உலக வெகுமக்கள் கருத்தியலாக அதை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த உலக வெகுமக்கள் கருத்தியல் உலக நாடுகள் பொது வாக்கெடுப்பை ஏற்பதற்கான அழுத்தமாக அமைய வேண்டும்.
                சர்வதேச அரசியல் களத்தில் ஈழப்பிரச்சனை முன் எப்போதையும்விட தீவிரமடைந்துள்ளது. இத்தகைய நிலையில் பொது வாக்கெடுப்பு என்பது ஈழத்தமிழர்களின், உலகத் தமிழர்களின் சர்வதேச சனநாயக சக்திகளின் ஒற்றைக் குரலாக இருந்தால் அதனைச் சர்வதேச சமூகம் பரிசீலித்தே ஆக வேண்டும். சரியானதோர் தீர்வையும் ஏற்படுத்திக் கொடுத்தே ஆக வேண்டும்.
"ஈழத்தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தச் செய்வோம்-தமிழ்
இனத்திற்கெனத் தனி நாடொன்று அமையச் செய்வோம்" 

"தமிழினத்தில் பிறந்ததற்கு இடுவோம் ஒரு கையெழுத்தை-அது
தீர்மானிக்கட்டும் ஈழத்தமிழனின் எதிர்காலத் தலையெழுத்தை"
நன்றி - கீற்று
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment