கைகளால் எழு! கண்களால் சுடு!


புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை அண்மித்ததாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த இளம் போர் வல்லுநர்களான தளபதிகளை மொத்தமாக, இரசாயன ஆயுதங்களால் பலி வாங்கிய பூமியின் மையத்தில் போர்க் காட்சியகம் ஒன்றை அமைத்து, "ஒரே தேசத்தின் எல்லா மக்களையும்'' கூவி அழைத்து சிலிர்த்துக் கொள்கின்றது இலங்கை இராணுவம். எவரெவர் பார்வையில் எப்படியமையினும், வந்து போகின்ற கடைக்கோடி தீ தமிழனிடமும் ""பாரடா! உன்னினத்தை பாரறிய வைத்தவர்களின் வீரத்தின் தளும்புகளை'' என்று வெற்றுக் கலங்கள் முணுமுணுக்கும் இடம் அது! 

மூன்றுக்கு மூன்று அடிப்பரப்பையுடைய ஆறடி உயர இரும்புக் கூண்டொன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வலிமையான கம்பிகளால், மிகச் சிறிய கதவுடன் ஓர் ஆள் உட்காருவது கூட மிகக்கடினமான செவ்வகத் திண்மக் கம்பிக் கட்டமைப்பின் அருகிலிருக்கும் பலகையில் "பயங்கரவாதிகளின் தண்டனைக் கூண்டு'' என்று எழுதப்பட்டிருந்தாலும், தனிப் பார்வையில் சொல்வதானால் ஒட்டுமொத்த தமிழின ஒழுக்கத்தின் "வெளித் தெரியாத வேர்'' அது! விடயமறிந்த ஒருவரின் வாக்கு மூலத்தின் படி, தனிமனித ஒழுக்கமீறலுக்கான ஆகக்குறைந்த தண்டனை அந்தக்கூண்டு வாசத்தின் அறுநாள்களிலிருந்து தொடங்குகின்றதாம். "எல்லாமே'' அதற்குள் தானாம், வெளிவரும் போது "மாற்றம்'' மாற்றமில்லையாம்.

கலாசாரச் சீரழிவு, மாணவர்களின் ஒழுக்கமின்மை, குடும்ப வன்முறைகள், வீட்டுக்குள்ளான பெண் கொடுமைகள் போன்ற தலைப்புக்களில் எழுதுவோரெல்லாமே தெரிந்தும் தெரியாமல் போட்டுவிடுகின்ற பிள்ளையார் சுழி "தமிழீழ விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்'' என்பதுதானே!

 கட்டுப்பாடில்லாமல் விட்டால் கால்நடைகளினும் கீழாக தன்மரபுகளை சிதைக்கும் நிறமூர்த்தமொன்று எம் மரபணுக்களில் அரைக் கண்களில் தூங்கிக்கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் வரை யோக்கியர்களாக இருக்கும் அயோக்கியர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருப்பது பேருண்மை. அவ்வப்போது வெளிவரும் இந்த மிருக சிந்தனைகளை முற்றிலும் நிறுத்துவதற்கு "அவர்கள்' கண்டுபிடித்த பேருபாயம் பயம்! 

குற்றங்களுக்கான தண்டனைகளை மக்களறிய நிறைவேற்றுவதில், மீறப்படும் மனித உரிமைகளைவிட, காக்கப்படும் மனித உரிமைகள் எப்போதும் அதிகம் என்கின்ற கூற்றை வலுவாக ஆமோதித்தே  ஆக வேண்டும்.

இந்தக் கணம் மின்கம்பமொன்றில் கைகள் பிணைக்கப்பட்டு, கண்களில் துணி சுற்றியபடி, கழுத்தில் குற்ற விவரம் எழு தப்பட்ட "கார்ட்போட்'டை தாங்கிய தலை தொங்கிய உடல் ஒன்று உன் நினைவெழுந்து மறைந்தால், நீயும் தமிழனே!

சுட்டதால்தானே தெரியும் நெருப்பு, குத்தியதால்தானே தெரியும் முள்வலி. பட்டதால்தானே அதன் பெயர் "பாடு', இந்த வரிசையில் "பயம்' தானே குற்றங்களின் முதல் எதிரி! இந்த வெருட்டல், யுக்தி வேகமாகப் பலிக்கும் வகைக்குரியதொன்று. காரணங்களின் வகையறாக்களை வரிசைப்படுத்தி நீட்டி முழக்காமல், ஒற்றைச் சொல்லினால் கட்டுப்பாடுகளுக்குள் நெட்டித் தள்ளி வைத்திருக்கும் வியூகம் என்னினத்திடம் இலகுவில் எடுபடக்கூடிய ஒன்று.

ஆதிச் சைவத் தமிழர்களிடமிருந்து வந்ததும், இன்றைக்கும் இறுக்கமாக வழக்கத்திலிருப்பதுமான பழக்கமொன்றினை, பிரித்தாய்வதன் மூலம் இந்த வகை யுக்தி எத்துணை பயன்தரும் என்பதைப் பார்க்கலாம்.

நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு, தொற்று நீக்குதல், வீரியமான நுண்ணங்கிகளிடமிருந்து பரவும் வியாதிகளிலிருந்து முற்காப்புப் பெறுதல், தொற்றுநொய்க்குள்ளானவர்களை தள்ளிவைத்தல், அகச்சூழலை புறச்சூழலிலிருந்து தூயதாகப் பேணுதல் போன்ற பல ஏற்பாடுகளை ஒற்றைச் சொல்லான "துடக்கு' எனப்படும் தூய தமிழின்  "தீட்டு' என்பதினுள் அடக்கினான் பழஞ்சைவன்.

இறந்த உடலிலிருந்து, தமக்கான வாழ்சூழல் இனிக்கிடைக்காது என்ற நிவாரண நிறுத்தம் பற்றிய அறிவித்தல் கிடைத்த மறுகணமே நுண்ணங்கிகள் வெளியேறத் தொடங்கும். சாதாரண காற்றே இவற்றுக்கான பரவுகை ஊடகமாகத் தொழிற்பட போதுமானதென்பதால், மரணமடைந்தவரின் நெருங்கிய உறவினர்கள், அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர்களின் உடல்கள் குறித்த நோய்களையும் நுண்ணங்கிகளின் இடைத்தங்கல் முகாம்களாக செயற்படும் வாய்ப்புக் கள் நிச்சயமான ஊகத்திற்குரியதே.

நெருங்கிய உறவினர்களையும்,  தொடர்புடையவர்களையும், உணவு தொடர்பு கொண்டவர்களையும், முதியவர்கள் குழந்தைகள் நலிந்த உடல் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் நெருக்கமாக ஒன்றுகூடும் ஆலயங்களுக்குள் அனுமதிப்பதனால் குறித்த தொகுதியில் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாக நேரிடும், என்பதால் சாவுவீடு நிகழ்ந்து முன் முப்பது நாள்களுக்கான முற்பாதுகாப்பு முஸ்தீபுகளில் ஒன்றாக நாம் கண்டெடுத்த ஆழி முத்துக்களில் ஒன்றே இந்த "தீட்டு' எனப்படும் தனிச்சொல்லினாலான "பயம்'! 

உங்களைப் போலவே, என்னிடம் எழுந்த மஹா கேள்விகளில் ஒன்று! இறப்பு வீட்டுக்கு இந்த "போர்மியூலா' சரியானதே!, ஆனால் பிறப்பு வீட்டுக்கும் இதே சம நடைமுறை ஏன் வழக்கத்திலிருக்க வேண்டும்? இங்கே தான் தமிழனின் ""மூடிய மோதகத்தினுள் சர்க்கரைத் துவையல்'' வைப்பது போன்ற ரிவர்ஸ்கியர் அல்லது மாற்றியோசிக்கும் மண்டைக் காய்த்தனத்தை நமக்கு நாமே மெச்சிக்கொள்ள வேண்டும்.

கோயிலில் கூடும் கூட்டத்தினரிடையே வீரியம் குறைவாக இலவச விநியோகம் செய்யப்படுகின்ற நுண்கிருமிகளை, கோயிலுக்கு வந்து போகும் மெய்யடியார்கள் மூலம் நேற்றுப் பிறந்த, நோய் எதிர்க்கும் வீரி யம் குறைந்த உடற்சக்தியுடைய பச்சைக் குழந்தையிடம் மலிவு விற்பனை செய்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணமேயாகும்

"எப்பூடி!' 

தென்மராட்சியில் வீட்டுப் படலைகளில் வைத்து வாளித் தண்ணீர் தலையில் ஊற்றிய பின்பே இழவு வீட்டிலிருந்து உள்வருவார்கள். இவ்வாறாக விளக்கமுரைத்து விரிவுரைக்காமல் ஒற்றை இழைகளில்  சமூகக் கட்டுப்பாடுகளைப் போதுமான நம்பிக்கைகளோடு வேரோடி வைத்திருப்பதே எம் சமூகத்துக்கு எப் பொழுதும் பாதுகாப்பான வழி. தண்டனைகளின் வேகமும், நீதியும் குற்றச் செயல்களைக் குறைக்கும் ஊக்கிகளாகும்போதே பிறழ்வுகளற்ற கலாசாரத்தை தொடர முடியும்.

வடமராட்சியின் சக்கோட்டையில், வல்லுறவின் பின்னர் சேலையினால் கழுத்தைச் சுற்றி கொடூரக் கொலை செய்யப்பட்ட மாணவியின் இறப்பினை நிகழ்த்திய மிருகம் பிணையில் வெளியிலோ, விளக்கமறியலின் உள்ளேயோ இருப்பது மட்டும் போதுமான தண்டனை என்றால், நெடுந்தீவில் எட்டு வயதுப் பூவை கசக்கி முகர்ந்த பின் கல்லெடுத்து முகம் சிதைத்துக் கொலை செய்யும் துணிச்சல் இன்னொரு விலங்குக்கு எப்படி வந்தது? கொடூரர்களை பிணையில் வெளியே எடுக்க சட்டத்தரணிகள் எவருமே முன்வராதிருப்பது மட்டும் போதுமா, இன்றைக்கு முற்றிப்போன இந்தச் சமூகப் புற்றுநோயைக் குணப்படுத்த? 

ஒரு சமூகம் தன்னையே அறியாமல் அதன் ஆழ் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், மதிப்பீடுகளுக்கு "சமூக நனவிலி மனச் செயற்பாடுகள்' என்று பெயர். இன்றைய தமிழ்ச் சமூகத்தினது மனம், ஆள்மனமாக இப்படியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது போலும். பெண்களுக்கு எதிரான வயது வேறுபாடுகளின்றிய வன்முறைகளும், அவற்றிற்குப் போதுமான தீர்வளிக்கமுடியாததுமான எமது நம்பிக்கை மதிப்பீடுகளும், அடிமை மரபணுக்களில் அப்படியே உறையத் தொடங்கியிருக்கின்றன.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "அவை', வாய்ப்புக் கிடைக்கும் போது தன் குரூர முகத்தை காட்டிச் சிரிக்கின்றன. பிரத்தியேக வகுப்பு வாத்தி, பத்தாம் வகுப்புப் பிள்ளையை  இழுத்துக்கொண்டோடுவதும், காக்கிச் சட்டை சீருடைப் பட்டாளத்தான் பாடசாலை மாணவியை பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கு "பார்ட்டி எப்ப சேர்?'' என்று சந்தோஷம் கொண்டாடும் அதே ஊர் இளவல்களும் ,வாங்கிக்கொள்வது வேறு வேறாயினும், விற்றது "சுயமரியாதை' என்கின்ற ஒன்றைத்தானே!

"பள்ளிக்கூடம்' என்கின்ற வார்த்தையைத் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்பவர்களுள், படித்தவர்களும் இடம்பெறுகின்றார்கள் என்பது இன்றைய வட சமூகத்தின் ஆரோக்கியமிழந்து செல்லும் எதிர்காலத்துக்கான குறிகாட்டிகளே!

மோதி மிதித்து விடாமலும், முகத்தில் உமிழ்ந்து விடாமலும் பொறுமை காக்குமளவுக்கு, பொறுக்கிகள் ஒன்றும் பூஜைக்குரியவர்களில்லை! எவ்வளவு சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாத அசூசை மிகு ஆண் வர்க்கத்தினை சீர்திருத்தும் வல்லமை, சமூகக் கூச்சல்களுக்கு பயந்து ஒதுங்கிவிடாத பெண்களின் முன்வருகையிலேயே பெரிதும் தங்கியிருக்கப் போகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தும் வரை பொறுத்திருப்பதற்கு, கொள்ளை போவது பொன்னோ, மண்ணோவல்லபெண்!

"இருபது ஆண் விடுதலைப்புலிப் போராளிகளோடு, ஒரு இரவு முழுவதும் ஒரே பாசறைக் கூடாரத்தில் தங்கியிருந்தேன். ஒரு நிமிடம் கூட நான் தனித்திருப்பதாகவோ, பாதுகாப்பற்றிருப்பதாகவோ மனதளவிலேனும் உணர்த்தப்படவில்லை. எந்தவொரு கண்ணும் ஓர் நொடி கூட என்மேல் கண்ணியம் தவறிப் பட்டதாகவுமில்லை.

தன்னையும், போராளிகளையும் ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்த்து வைத்திருப்பதில் பிரபாகரனின் ஓர்மம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது''பொய்கலவாத வார்த்தைகளில் மெய் சொன்னவர், பாசறைகள் வரை பழகித் திரும்பும் பாக்கியம் வாய்ந்த இந்தியப் பெண் பத்திரிகையாளர் "அனிதா பிரதாப்'.

 என்ன செய்ய? நாம் தொலைத்துவிட்ட திரவியங்களின் பெறுமதி இன்னமும் எம் பின்னந் தலைகளில் ஓங்கியறைவது இனச்சாபமன்றி வேறென்ன? என்னினிய சனத்தின் யாதோவொரு "அழகிய தமிழ் மகன்' இதன் பிறகு நல்லூரின் வீதிகளில் நாகரிகம் கருதி ஒதுங்கி நடப்பானாகிலும் இந்தப் பந்தியின் அத்தனை வார்த்தைகளும் அடைந்து விடுகின்றன அதனதன் வெற்றியை!!


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment