"டெசோ மாநாட்டு தீர்மானங்களை பரிசீலித்து வருகிறோம்": மத்திய அரசு அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு

"டெசோ மாநாட்டால் இந்தியாவின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் வேறு வழியின்றி மாநாட்டிற்கு கைகொடுக்க விரும்புகிறது என்றே தோன்றுகிறது" அதை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்துகிறது காங்கிரஸ் கட்சி என்பது இரு முக்கியத் தலைவர்களின் பேட்டியில் எதிரொலிக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில் தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி என்பதை உணர்த்தும் விதத்தில் அந்த பேட்டிகள் அமைந்திருக்கின்றன. 

டெசோ மாநாட்டிற்கு முன்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதை இந்தியா ஆதரித்தபோதே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஏற்படும் தாக்கங்களுக்கு பதில் சொல்ல முனைகிறது என்ற தோற்றம் உருவானது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெசோ மாநாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று முதலில் தடைபோட்டு, பிறகு விலக்கிக் கொண்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் பிரதிபலிப்பே. ஆனால் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில நடைமுறைகளை தி.மு.க. தரப்பு ஆரம்பகட்டத்தில் கடைப்பிடிக்காமல் போனதும் இந்த குழப்பத்திற்கு காரணம் என்பது 


வேறுகதை. இந்நிலையில் டெசோ மாநாடு நடைபெறும் போதே, தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரும், மத்திய அமைச்சராகவும் இருக்கும் ஜி.கே.வாசன் "டெசோ மாநாட்டை ஆதரிக்கிறோம்" என்ற ரீதியில் கருத்துச் சொன்னார். டெசோ மாநாட்டில் தங்களையும் வைத்துக் கொண்டு தனி ஈழம் அல்லது சர்ச்சைக்குரிய தீர்மானங்களை டெசோ அமைப்பாளர்கள் நிறைவேற்றி விட்டால் சிக்கலாகிவிடும் என்று கருதியது காங்கிரஸ் கட்சி. அதனால்தான் தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் டெசோ மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆனால் அந்த மாநாடு உருவாக்கிய அழுத்தத்திலிருந்து தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை தமிழக காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது. அதனால்தான் மாநாடு முடிந்த பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், "இலங்கை தமிழர்கள் நலன் மற்றும் தமிழர் பகுதிகளில் இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். 

டெசோ மாநாட்டில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் மாநாட்டிற்கு வரவிடாமல் இலங்கை எம்.பி.க்களை தடுத்த இலங்கை அரசை கண்டித்து ஒரு தீர்மானம். மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு கண்டனம் என்று இரு தீர்மானங்கள் உள்ளன. மீதியுள்ள 12 தீர்மானங்களில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் போனால், மீதியுள்ள 11 தீர்மானங்கள் இலங்கைத் தமிழர் நலனில் போடப்பட்டவைதான். இந்த கோணத்தில் பார்த்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், "டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவது, அங்குள்ள ராணுவத்தை திரும்பப் பெறுவது போன்ற தீர்மானங்களில் எங்களுக்கு உடன்பாடு உண்டு" என்று ஒரு பேட்டியில் அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கருத்தை காங்கிரஸின் அதிகார பூர்வமான கருத்தாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஞானதேசிகன் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருப்பவர். இந்த அடிப்படையில் பார்த்தால், டெசோ மாநாட்டில் போடப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இது கட்சியின் முடிவு. சரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (மத்திய அரசு) இந்த டெசோ தீர்மானங்கள் குறித்து என்ன நினைக்கிறது? ஞானதேசிகன் கருத்துத் தெரிவிப்பதற்கு முதல் நாள் பிரதமர் அலுவலகத்துடன் இருக்கும் மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, "தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய அரசுக்கு வந்து உள்ளது. இந்த தீர்மானங்கள் பற்றி பரிசீலித்து வருகிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்திருக்கிறார். 


இப்படி பரபரப்பான வேளையில் நிருபர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் "டெசோ மாநாடு முடிந்திருக்கிறது. உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?" என்று கேட்டதற்கு, "தீர்மானங்களை எல்லாம் பிரதமருக்கும், அடுத்தபடியாக தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும் அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். "இந்தியாவிற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை யாரும் சொல்லக்கூடாது என்பதற்காக முதலில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், அதில் எந்த நடவடிக்கையும் இல்லையென்றால் பிறகு ஐ.நா. மன்றத்திற்கும் தீர்மானங்களை அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால் இந்தியாவே முன்னின்று இந்த தீர்மானங்களை ஐ.நா.விடம் கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்போம்" என்கிறார் மூத்த தி.மு.க. தலைவர் ஒருவர். ஆகவே, டெசோ மாநாட்டிற்கு பிறகு அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவது தொடர்பாக தி.மு.க. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்என்றே தெரிகிறது. 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதுள்ள நிலைவரப்படி அ.தி.மு.க. தரப்பு காங்கிரஸை கூட்டணிக்கா நாடுவது போல் தெரியவில்லை. அப்படியே காங்கிரஸ் கூட்டணிக்கு அ.தி.மு.க. தயாராகும் சூழ்நிலை வந்தாலும், காங்கிரஸ் கட்சி சென்ற தேர்தலில் போட்டியிட்ட 16 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே. இந்த பின்னணியில் தி.மு.க. அணியிலேயே தொடர்ந்தால், உரிய சீட்டுக்களையாவது பெறலாம் என்ற முடிவிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி வந்திருக்கலாம். அதற்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. கொடுக்கும் நியாயமான குரல்களுக்கு ஒத்துழைப்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கும் சரியான அணுமுறை என்றே காங்கிரஸ் தலைவர்கள் எண்ணியிருக்கக்கூடும். இந்த நடவடிக்கைகள் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி விரோதிக் கட்சியல்ல என்ற இமேஜை தமிழகத்தில் வலுப்படுத்த விரும்புகிறது அக்கட்சி தலைமை. அதனால்தான் டெசோ மாநாடு தீர்மானங்களை மத்திய அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சர் ஒருவரே அறிவித்திருக்கிறார். 

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக இந்த அதிரடி மாற்றம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "இதை தடுப்பதற்கு மீனவ பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, பிரதமரை சந்திப்பேன்" என்று அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் வித்தியாசமான அணுகுமுறை! குறிப்பாக வருகின்ற நவம்பர் மாதம் ஐ.நா.வில் இதே இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த "வியத்தகு" மாற்றம், இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவே செய்யும்.

தமிழகத்திலிருந்து எம்.காசிநாதன் இன்போ தமிழ் குழுமம்  
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment