ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும்.அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பதிவுகளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன்.
தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு. கடினமான அந்த விடுதலைப்பயணத்தின் பசுமைகளையும் கனத்த நினைவுகளையும்தான் இங்கு பதிய விளைகின்றேன்.
முடிவு ஏதுமின்றிப் போயிருக்கும் போராட்டம், நிரக்கதியாய் நிற்கும் தாயகம், வெறுமையாகத் தெரியும் எதிர்காலம்,என்பதை நினைத்தால் மனது நிம்மதியாக உறங்க மறுக்கின்றது. தாயகத்து நினைவுகளையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நினைவுகளின் சுழற்சி கனவுகளாக வெளிப்பட்டு தூக்கம் தொலைகின்றது.
பாடசாலை நண்பர் வட்டத்தை இடப்பெயர்வு பிரித்துவிட்டது. எனக்கு அறிமுகமான, உருவாகிய நட்பு என்பது விடுதலைப்பயணத்தில் ஏற்பட்டது மட்டும்தான். அந்த நட்பின் ஆயுளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம்,பொய்யான நட்பு என்பதல்ல. நட்பு என்றைக்கும் சாகாமல் இருக்கும். ஆனால் நண்பன் இருக்க மாட்டான். சாவுக்கு அருகில்தான் எங்கள் நட்பு கட்டியெழுப்பப்டும். நண்பர்களாக நெருங்கி, ஒவ்வொருவருடன் பழகும் போதும் யுத்தத்திற்கு சென்று மீண்டும் சந்திப்போமா? என்ற விடைதெரியாக் கேள்வி மனதின் ஓரத்தில் பதிந்துதான் இருக்கும். ஆனால், பிரிந்து பின்னர் சந்திக்கும் போது இருக்கும் அந்த சந்தோசம்! அனுபவிக்கும் போதுதான் புரியும். ஒரு நாள், தீடீரென நிரந்தரமாகவே நண்பன் பிரிந்து போகும் போது ஏற்படும் மனநிலையைச் சொல்லில் அடக்க முடியாது.
ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் ”கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க,அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்” என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு.
சில இடங்களில் திடீர் மோதல் காரணமாக வீரச்சாவுகள் ஏற்படும். அவர்களின் வித்துடல்களை கொண்டுவர முடியாமல் அந்த இடத்திலேயே விதைத்திருக்கின்றோம். அதுவரை ஒன்றாக உண்டு, உறங்கி, அருகிலேயே நின்று களமாடிய நண்பனின் உடலை புதைத்துவிட்டுத் திரும்பும்போது இருக்கும் வலியை விபரிக்கமுடியவில்லை. பயணவழியில் தவிர்க்கமுடியாத வீரமரணங்களுக்கான விதைகுழிகள் அவ்விடத்திலேயே உருவாகும். பெற்றோர்களிடம் செய்தியும் புகைப்படமும் மட்டுமே போய்ச்சேரும். அந்தப்பெற்றோர்கள் எல்லாவற்றையும் விடுதலையின் பெயரால் ஏற்றார்கள்.
தாயகத்தின் ஒவ்வொரு அடிப்பரப்பிலும் மரணித்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் இறுதி மூச்சைச் சுமந்த காற்றும், இரத்தம் சிந்திய மண்ணும் விதைக்கப்பட்ட அவர்களின் கனவு நிறைவேறும் நாளுக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை கடினங்களைச் சுமந்து, இத்தனை தியாகத்தை எதற்குச் செய்தார்கள்? ஈழ விடுதலைக்காகவும், அந்த இலட்சியத்திற்காகவும்தான்.
போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும்.
போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும்,சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.
ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை,குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.
வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த, கதையளக்கும் ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.
இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்” என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.
வாணன்
0 கருத்துரைகள் :
Post a Comment