1990 ம் ஆண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பகாலகட்டம். தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் சண்டைகள் பரவலாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்மாவட்டம் கோட்டையைச் சுற்றி தளபதி பிரிகேடியர் பானு அண்ணை தலைமையில் உருவாக்கப்பட்ட இறுக்கமான முற்றுகையைத் தகர்க்க முடியாமல் சிறிலங்காப்படை திணறிக்கொண்டிருந்தது. முற்றுகையை உடைக்கச் சிறிலங்கா தனது முப்படைகளின் முழுப்பலத்தையும் பிரயோகித்தது. நூற்றியேழு நாட்கள் கடுமையாகப் போரிட்ட சிறிலங்கா இராணுவம் இறுதியில் இரவோடிரவாக யாழ்; கோட்டையைக் கைவிட்டு ஒடிவிட்டது.
யாழ்க்கோட்டையின் பின்னடைவை ஈடு செய்வதற்காக, ஒரு மாதத்திற்குள்ளாகவே பலாலி இராணுவத்தளத்தில் இருந்து பாரிய நகர்வைச் செய்தது சிங்கள இராணுவம்.
தாக்குதலணிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும் காலநிலையும் எதிரியின் படைபலமும் சிறிலங்காப்படைக்கு வெற்றியையே தேடிக்கொடுத்துக்கொண்டிருந்தன. ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்ட நிலைகளில் இருந்து பின்வாங்கிய எமதணிகள், புதிய நிலைகளை அமைத்து பாதுகாப்பு வேலியை ஏற்படுத்தியிருந்தன.
அது மழைகாலம். தொடர்ச்சியாகக் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் பகுதியில், வெற்றிலைத்தோட்டங்கள் அமைந்திருக்கும் பக்கமாக நிலையமைத்து இருந்தோம். சிரமமான வேலையாகவே அது அமைந்தது. மழைக்கு நடுவே பாதுகாப்பகழிகளை வெட்டுவது கடினமாக இருந்தாலும் புதிய நிலைகளை அமைத்து, தடுப்புச் சமருக்குத் தயாராகியிருந்தோம்.
உடனடியாகப் பாதுகாப்பு நிலைகளை அமைக்க வேண்டியிருந்ததால் பதுங்குகுழிகளை அமைப்பதற்கான மரக்குற்றிகள் தொடக்கம் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பதுங்கு அகழிகளை அமைக்கவேண்டியிருந்தது. அநேகமான நேரங்களில் பதுங்கு அகழிகள் தண்ணீராலேயே நிரம்பியிருக்கும், செம்மண் சேறு, அவதானமாகச் செல்லாவிட்டால் வழுக்கி விழவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல் ஆயுதமும் சேறாகி விடும். இராணுவத்தின் செல்லடிச்சத்தம் கேட்கும் போது பதுங்கு குழிக்குள் தான் பாய்ந்து காப்பெடுப்போம்.
ஆங்காங்கு கிடைத்த தகரம், கிடுகு, சீற்களைப் பயன்படுத்தி சிறிய கொட்டில்களை அமைத்து குந்தியிருந்தபடியேதான் நித்திரை கொள்ளுவோம். அரை அடிக்குக் கிடங்கு வெட்டிப் பொலித்தீன் பைகளைப் போட்டு அதன்மேல் தான் படுக்கவேண்டும். அப்போது உடல் சூட்டிற்கு உடைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காயத்தொடங்கும். உடைகள் காய்ந்து உடலில் இருந்து சிறிது சிறிதாகக் குளிர் நீங்கத் தொடங்க, கொஞ்சம் நிம்மதியாக அயரலாம் என்று நினைத்து சரியும்போது எதிரி எறிகணை ஏவும் சத்தம் கேட்கும். சென்றிக்கு (காவல்கடமை) நிற்பவன் ஓடிவந்து, ‘செல்லடிச்சிட்டான் எல்லாரும் பங்கருக்கு வாங்கோ’ என தட்டியெழுப்ப, எங்கு விழுந்து வெடிக்குமோ என்று தெரியாத செல்லுக்காக மீண்டும் தண்ணி பங்கருக்குள் குதித்து நனைந்து எழுவோம். இப்படியேதான் அந்த நாட்களின் கடுமைகளை விடுதலைக்காகத் தாங்கிக் கொண்டனர் போராளிகள்.
இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம் என நினைக்கின்றேன். வழமையாக அதிகாலை 4.30 மணிக்கு எல்லோரும் தயார் நிலையில் இருப்போம் (Alert position). ஏனெனில் இராணுவம் அதிகாலையில் நகர்ந்து சண்டையை ஆரம்பிப்பது வழமை. அதனால் எல்லோரும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
அது மாரிகாலம், அதிகாலையில் மிதமான குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது. காவல் நிலைகளில் இருப்பவர்கள் சிலவேளை அயர்ந்து தூங்கி விடுவார்கள். ஏனெனில் பகல் வேளைகளில் தூங்க முடியாது. அணியில் ஆட்கள் குறைவு, இரவுக்காவல்கடமை, கடுமையான வேலை என ஓய்விற்கோ உறக்கத்திற்கோ நேரம் இருக்காது. அதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே அடிக்கடி ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று, முழித்திருக்கிறார்களா? அவதானமாக இருக்கின்றார்களா? எனப் பார்ப்பது வழமை.
அன்றைக்கு, இவ்வாறு சென்ற போது ஒரு நிலையில் இருந்த ஒரு போராளி, அவர் தென்தமிழீழத்தைச் சேர்ந்தவர்;, நிலையெடுத்திருந்தபடியே அயர்வில் நித்திரையாகிவிட்டார். அவரை எழுப்பிவிட்டு, அந்த நிலையில் நான் நின்று கொண்டு அவரை ரோந்து சென்று வருமாறு கூறினேன். கொஞ்சம் நடந்தால் நித்திரை தூக்கம் இல்லாமல் போகும் என்பதால் அவரை சுற்றிப்பார்த்து வருமாறு சொல்ல, அவரும் சென்றுவிட்டார்.
கனநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. என்ன நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட, அவர் சென்ற பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது ’எனக்கு ஒன்னாதுடா, என்னை தூக்குங்கடா’ என மெலிதாக ஒரு சத்தம் கேட்டது. வெடிச்சத்தமோ அன்றி செல் சத்தமோ கேட்கவில்லை. யாருடைய குரல்? என்ன நடந்திருக்கும்? என்ற யோசனையோடு அந்தக்குரல் வந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்னாதுடா (என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை) என்ற அந்தக்குரல் அவருடையதுதான் எனப் புரிந்தபோது, பல கேள்விகள் அந்தக் கணத்தில் மனதில் உதித்தாலும், எதுக்கும் தயாராக சத்தம் வந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்லச் சென்றேன்.
சத்தம் மூவிங் பங்கருக்குள் இருந்து வந்தது. அந்த இடத்திற்கு போய் பார்த்தபோது மூவிங் பங்கருக்குள் விழுந்து இறுகுப்பட்டுப்போய் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். ”மூவிங் பங்கரின் அருகால் நித்திரைத்தூக்கத்துடன் நடந்து வந்தனான் அப்போது சறுக்கி பங்கறுக்குள் நிலைகுப்பற விழுந்துவிட்டேன்”; என்றார். பங்கரின் இருபக்கமும் ஈரமாக இருந்தது. அவரும் உடல் பருமனானவர். விழுந்த போது கை கால்களும் சுயமாக எழும்ப முடியாதபடி அச்சேற்றுக்குள் அகப்பட்டுவிட்டன. மேலும் அந்த நிலையில் இருந்து எதிரியின் நிலை மிகவும் அண்மையாக இருந்தது. இராணுவம் கதைப்பது கூடக் கேட்கும். எனவே அவர் பலமாகச் சத்தம் போட்டு உதவிக்கு கூப்பிட முடியாததால் அப்படியே இருந்தவாறு மெல்லிய சத்தத்தில் முனங்கிக் கொண்டிருந்தார். இப்படித்தான் அந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
(அந்த தாக்குதலுக்குப் பின்னர், நாங்கள் பிரிந்து விட்டோம். அந்த நண்பனைக் காணும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள் பத்திரிகையில் அவனுடைய படம் இருந்தது. பூநகரி தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்த அவனுக்கு வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். ஒரு கணம் மௌனமாக அஞ்சலி செய்து விட்டு, அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.)
பலாலி இராணுவமுகாம் விஸ்தரிப்பை இராணுவம் செய்துவிட்டது. தளபதி பானு அண்ணை அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு நிலைகளை அமைத்துத் தடுப்புச் சமருக்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். பலாலிப்பகுதியில் இருந்து, இராணுவம் மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றி விடக்கூடாது என்ற தலைவரின் பணிப்பிற்கமைய பலாலிப்பகுதியிலேயே தங்கி நின்று சகல வேலைகளையும் ஒழுங்குபடுத்தினார்.
அதேவேளை சிங்கள இராணுவமும் தங்களது நிலைகளை அமைத்து பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் திடீர்த்தாக்குதல் ஒன்றை மாவிட்டபுரம் பகுதியில் மூன்று முனைகளிலும் நடாத்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
02
பலாலி இராணுவ முகாமிலிருந்து முன்னேறிய இராணுவம் மாவிட்டபுரம், கட்டுவன் உள்ளடங்கலான பகுதிகளைக் கைப்பற்றி நிலை கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கோயிலுக்கு வலது பக்கமாக புகையிரதப்பாதை அமைந்திருக்கின்றது. கோயிலை அண்மித்த பகுதியில் இருந்து புகையிரதப்பாதை வரை அமைந்திருந்த தொடர் காவலரண் மீது, மூன்று இடங்களில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து, அக்காவலரணைத் தாக்கியழிக்கும் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. காவலரணைத் தாக்கியழித்து இராணுவத்திற்கு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்குவதுதான் இத்தாக்குதலின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
விடுதலைப்புலிகளின் இராணுவ உத்திகள் வளரத்தொடங்கிய ஆரம்ப காலமது. அப்போதைய காலகட்டத்தில், எதிரியின் காவலரணுக்கு அண்மையாக நகரக்கூடிய தூரம் வரை நகர்ந்து, கடுமையான தாக்குதலை மேற்கொண்டு காவலரண்களைச் சிதைத்து, எதிரிக்கு இழப்பைக் கொடுத்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதுதான் தந்திரோபாயமாக இருந்தது.
நாங்கள் நின்ற பிரதேசத்தில் ஒரு தாக்குதல் முனை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தாக்குதல் பிரதேசமானது ஒரு சிறிய பாதையையும், பாதைக்கு வலதுபக்கம் தோட்டக்காணியையும், இடதுபக்கம் வீடுகளையும் கொண்டமைந்திருந்தது. வீட்டுக்காணிக்குள் தென்னை, பலா, மாமரம், கிழுவை வேலிகள், வாழைமரங்கள், வீடுகளின் முற்றத்தில் பூமரங்கள், குறோட்டன்கள், வீடுகளுக்கிடையிலான குச்சொழுங்கைகள் போன்ற பௌதீக அமைப்பை கொண்ட, தாக்குதலுக்கு உவப்பான சூழலைக் கொண்டிருந்தது. இந்த மறைப்பைப் பயன்படுத்திதான் தாக்குதலணிகள் தாக்க வேண்டிய காவலரணின் எல்லை வரை நகர்ந்து தாக்குதலைத் தொடர வேண்டும். அதன்படி, திட்டம் தீட்டப்பட்டு, தாக்குதல் அணிகள் தயார்படுத்தப்பட்டன.
மேஐர் சஞ்சிகா, கப்டன் அருந்ததி ஆகியோரைக் கொண்ட மகளிர் அணி உட்பட, கப்டன் முகுந்தன் தலைமையிலான தாக்குதல் அணி தாக்குதல் நகர்வுக்கு தயார் நிலையில் இருந்தது. தாக்குதல் திட்டத்தின் படி மற்ற முனைகளில் தாக்குதல் ஆரம்பிக்கப்படும்போது. எமது முனையில் பசீலன் மோட்டார் தாக்குதல் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து அணிகள் தாக்குதலைத் தொடங்கும்.
பசீலன் மோட்டரும் தாக்குதலன்று மாலையிலேயே காவலரணின் முன் இருந்த வீட்டிற்குள் காவலரணை நோக்கி நேரடிச்சூடு(Direct fire) வழங்கக்கூடிய வகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்தது. அத்தாக்குதல் அணிக்கு மேலதிக உதவி அணியாக செயற்படும் பொறுப்பு அங்கு லைனில் நின்ற அணிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
தாக்குதலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்க அணிகள் நகரத் தொடங்கி விட்டன. காவலரண் பகுதில் மயான அமைதி. இராணுவம் காவலரணில் டோச் அடிக்கும் வெளிச்சம் இடையிடையே தெரிந்து கொண்டிருந்தது.
அணிகள் எதிரியின் நிலைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. சிறிது நேரத்தின் பின் “அற்வான்ஸ் மூவ்” என்ற சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பசீலன் மோட்டாரின் சத்தம் அந்தப்பகுதியை அதிரவைத்ததுடன் சண்டை ஆரம்பமாகிவிட்டது.
துப்பாக்கிகள் அனல் கக்கிக் கொண்டிருந்தன. எதிரியும் தனது எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தினான். அணிகள் நகர்ந்த பிரதேசத்தில் புகைமூட்டம், துப்பாக்கிகளில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் மட்டுமே மின்னிக் கொண்டிருந்தது. வெடிச்சத்தங்களால் அந்தப்பகுதி அதிர்ந்துகொண்டிருந்தது. எதிரி ஏவிய பரா வெளிச்சம் இடையிடையெ அப்பிரதேசத்தில் வெளிச்சத்தைக் கொடுத்தாலும். அணிகள் நகர்ந்த பகுதியானது மரங்களால் மூடப்பட்டிருந்ததால் அது தாக்குதலணிகளிற்கு பாதமாக இருக்கவில்லை.
“மூவ்,மூவ்” என போராளிகள் சத்தமிட்டவாறு தீவிரமாகத் தாக்குதலை முன்னெடுத்தனர். ஒரு பக்கத்தால் மேஐர் சஞ்சிகா தலைமையிலும் மறுமுனையில் முகுந்தன் தலைமையிலும் அணிகள் தீவிரமாக தாக்குதலை முன்னெடுத்தவாறு நகர்ந்து கொண்டிருந்தன. எதிரியும் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டதில் அணிகள் இழப்புக்களைச் சந்திக்கத்தொடங்கின. இதனால், மேலதிக அணிகள் களத்தில் இறக்கப்பட்டன.
தாக்குதல் பிரதேசத்திற்கு உள் நுழைந்து சென்றபோது ஒரே புகைமண்டலமும் துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் வெளிச்சங்களும் மட்டுமே தெரிந்தது. சண்டையிட்டுக்கொண்டிருந்த பகுதி ஒரு வீட்டின் முன்பக்கம். அங்கு மாமரங்களும் தென்னைமரங்களும் வாழைமரங்கள், ஆங்காங்கு நின்றன. வீட்டின் முன்பக்க வேலி ஓரம் எதிரியின் காவலரண் இருந்தது. வேலிக்கு இடது பக்கமாக இருந்த ஒழுங்கைக்குள்ளால் ஒரு அணி நகர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
“காவலரணுக்காக அடித்த பசீலன் செல் காவலரணுக்குப் படாமல் பக்கவாட்டில் முன்னுக்கு இருந்த தென்னையில் பட்டு, காவலரண் தாக்குதலுக்குள்ளாகதால் கள நிலமை எதிரிக்கு சாதகமாகப் போய்க்கொண்டிருக்கின்றது” என்றனர்.
ஏற்கனவே தாக்குதலைத் தொடுத்த அணிகள் எவ்விடம் வரை நகர்ந்துள்ளார்கள் என்பதை ஊகிக்க முடியாததால், குறோள்(தவண்டு) இழுத்துக் கொண்டு இராணுவத்தின் காவலரணை நோக்கி நகர்ந்து சென்று தாக்குதலை ஆரம்பித்தோம்.
எதிரி தயார்ப்படுவதற்கான நேரம் கிடைத்துவிட்டதாலோ என்னவோ அவனது தாக்குதல் இன்னும் மூர்க்கமடையத் தொடங்கியது. எதிரி தனது காவலரணுக்கு முன் பகுதிக்குள் கைக்குண்டுகளைச் சரமாரியாக வீசிக்கொண்டிருந்தான். எதிரியின் துப்பாக்கிச் சன்னம் பட்டு மாமரத்து இலைகளும் மரக்கிளைகளும் கொட்டுப்பட்டுக்கொண்டிருந்தன. தலைக்கு மேலால் ரவைகள் கூவிக்கொண்டு சென்றன. அந்தளவிற்கு கடுமையான தாக்குதலை எதிரி மேற்கொண்டு கொண்டிருந்தான்.
அங்கு காயப்பட்ட சிறு காயமடைந்தவர்கள் காயங்களை ‘பீல் கொம்பிறசரால்’ கட்டி விட்டு காயத்துடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கடுமையான காயக்காரரை இழுத்து அவ்விடத்தில் இருந்த மரத்தின் மறைவில் கிடத்தி விட்டு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது தாக்குதலணி.
உடனடி வேலையாக அங்கு காயப்பட்ட, வீரச்சாவடைந்தவர்களை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. காப்புச்சூடுகளைத் தீவிரப்படுத்தி விட்டு, காயப்பட்ட போராளிகளில் தவண்டு போகக்கூடியவர்களிடம் பின்னால் போகுமாறு கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களில் சிலர் தங்களால் இயலும் வரை சண்டையிடுகின்றோம் என்ற முடிவில் உறுதியாக நின்று போரிட்டனர். சிலரை வற்புறுத்திப் பின்னுக்கு அனுப்பிவிட்டு, முடியாதவர்களை இருவர் இருவராக தவண்டு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. தலைக்கு மேலே துப்பாக்கிச் சன்னங்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. சுpறிதாகத் தலையைத் தூக்கி எழும்பினாலும் காயப்பட அல்லது வீரச்சாவடைய வேண்டி வரும். எதிரி அந்தளவிற்கு கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.
அந்த இருட்டில், எதிரியின் கடுமையான தாக்குதலுக்கு நடுவே, தாக்குதலைக் கட்டுப்படுத்தி, அதில் இருந்த போராளிகளை வெளியில் எடுப்பது என்பது கடுமையானதாகவே இருந்தது. சில போராளிகள் காயப்பட்டு அரை மயக்கத்தில் இருந்தனர். காயப்பட்டு அல்லது வீரச்சாவடைந்திருக்கும் ஒருவரையும் எதிரியிடம் விட்டு விடக்கூடாது என்ற ஆதங்கம். எதிரியின் கடுமையான தாக்குதலை வலுவிழக்கச் செய்யாமல் ஒன்றும் செய்யமுடியாது என்ற இக்கட்டு நிலை. மேலும் எதிரியை அழிக்கவேண்டும் என்ற நோக்கம். எல்லாச் சவால்களுக்கும் மத்தியில் தாக்குதலணிகள் தங்களது மூர்க்கமான தாக்குதலை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.
இராணுவம் பொயின்ரிலிருந்து சுடும் வெளிச்சத்தை இலக்காக வைத்து தாக்குதலை தொடுத்த வண்ணம் தவண்டு தவண்டு சுட்டுக் கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இடையில் ஒரு சிறு குறுக்குவேலி குறுக்கிட்டது. அவ்வேலி முள்ளுக் கம்பியாலானது. கடக்க வேண்டும். இடது பக்கத்தில் இருந்தவர்கள் அவ்வேலிக்கரையில் இருந்து சுட்டுக்கொண்டிருக்க, வேலியின் மேல்பக்கம் இருந்த இடைவெளிக்குள்ளால் எழும்பிப்பாய்ந்து கடந்து மறுபக்கம் விழுந்தேன்.
கைகுறுகுறுத்தது மாதிரி இருந்தது. கையைத் தடவிப்பார்த்தேன். இரத்தம் வந்துகொண்டிருந்தது. காயப்பட்டு விட்டேன். கோள்சரில் இருந்த பில்கொம்பிறசரை காயப்பட்ட இடத்தின் மீது அழுத்திப் பிடித்துக் கொண்டேன். கை பலவீனப்பட்டுக் கொண்டு போனது. மறுவளமாகத் திரும்பி, காயப்பட்டதைச் சொன்னேன்.
அதில் இருந்தவர்கள் அப்படியே இருக்குமாறு கூறிவிட்டு வேலிக்கம்பியை ரைபிள் பட்டால் குத்தி, மரத்தில் அடித்திருந்த கம்பியாணியை பிய்த்து எடுத்தனர். வேலிக்கம்பி இழகியது. கம்பியை தூக்கிப் பிடித்துக் கொள்ள, அதில் இருந்த ஒருவரிடம் ரைபிளை கொடுத்து விட்டு தவண்டு வேலிக்கு மறுபுறம் வந்தேன்.
தொடர்ந்து சண்டையிட முடியாத நிலை, இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. பீல் கொம்பிறசர்களை காயத்தை சுற்றி கட்டிவிட்டு, தவண்டு பின்னிக்கிருந்த வீட்டடிக்கு வந்தேன். அங்கு களமருந்துவப்போராளிகள் காயத்திற்கு கட்டுப்போட்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தினார்கள்.
சண்டை தொடர்ந்த வண்ணமிருந்தது. வேறும் சில போராளிகளும் காயப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் எமது இழப்புகள் கூடத்தொடங்கியதும் பாதுகாப்புத்தாக்குதலை மேற்கொண்டு அணிகள் பின்வாங்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது.
அணிகள் பின்வாங்கத் தொடங்கின. காயக்காரரைத் தூக்கிச் செல்பவர்களின் துணையுடன் தற்காலிக மருத்துவமனைக்கு வந்து பின்னர் சிகிச்சைக்காக வந்து விட்டேன்.
வரும்போது “புகையிரதப்பாதை வழியாகச் சென்ற மற்றைய அணி காவலரணின் பக்கவாட்டிற்கு சைலன்றாக நகர்ந்து சென்று திடீர்த்தாக்குதலைத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த இராணுவம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததுடன் நிலைகளை விட்டுவிட்டு மீதமிருந்தோர் தப்பியோடி விட்டனர். இதில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பல இராணுவத்தளபாடங்களும் கைப்பற்றப்பட்டன” என்று ஒரு போராளி சொன்னார்.
இந்த தாக்குதலில் பல போராளிகளை இழந்தோம். மேஐர் சஞ்சிகா, கப்டன் அருந்ததி ஆகியோரும் இந்தச்சண்டையிலேயே வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.
நினைவழியாத்தடங்கள் - அறிமுகம்
நினைவழியாத்தடங்கள் - அறிமுகம்
வாணன்
0 கருத்துரைகள் :
Post a Comment