வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்


நாம் எல்லோரும் தவறு புரிந்தவர்கள், குறைபாடுகளை உடையவர்கள், கைகளில் கறை படிந்தவர்கள் தான். எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எமது தவறுகளுக்காக உயரிய விலை செலுத்தியவர்கள் பொதுமக்களும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் இளையோருமே. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்.

13வது சட்டத் திருத்தத்தினால் தமிழர்களுக்கு பயன் ஏதுமில்லை. எனவே அதனையும் அது சார்ந்த தேர்தல்களினையும் முற்றாக நிராகரிக்கவேண்டும்.
  • மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று மாகாணத்தின் நிர்வாக ஆட்சியதிகாரத்தினை தமிழர்களின் கைகளுக்குள் கொண்டுவரவேண்டும்.
  • தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் கட்சிகள் நேரடியாக தேர்தலில் பங்குபற்றாமல் ஒருபொது வேட்பாளர் தலைமையிலான குழுவினை முன்மொழிந்து அதன் மூலம் வடக்கு மாகாணத்தின் நிர்வாக அதிகாரத்தினை கட்டுப்படுத்தவேண்டும்.
  • தற்போதைய ஈழத்தமிழ்மக்களின் அரசியல் செல்நெறியில் 13வது சட்டத் திருத்தமும் எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலும் இவ்வகையானமுன்மொழிவுகளையும் முனைப்புக்களையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளன.
  • இன்னொருபுறம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிபை அரசியற்கட்சியாக பதிவு செய்து தமிழர் உரிமைக்கான அரசியலினை முன்னெடுப்பது தொடர்பான குழுநிலைப்போராட்டம். மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளத்தின் கதையாக முடிவில்லாது தொடர்கிறது.
இவை தொடர்பாகவும் தமிழ்த்தலைமைகள் இழைத்த வரலாற்றுத் தவறுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது இக்கட்டுரை. ‘புதினப்பலகை’க்காக இக்கட்டுரையை எழுதியவர் ம.செல்வின். 

13வது திருத்தச் சட்டமும் அதன் பொருத்தப்பாடும்: 

சிறீலங்காவின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தம் மாகாண சபைகளை உருவாக்கி அதற்கான அதிகாரங்களை கையகப்படுத்துவது தொடர்பான பல விடயங்களினை குறிப்பிட்டுள்ளது. இத்திருத்தச்சட்டம் சிறீலங்காவின் ஆட்சியாளர்களின் தற்துணிவின் அடிப்படையிலோ அல்லது சிங்கள மக்களின் பெருவிருப்பினைச் சார்ந்தோ உருவாக்கப்பட்டதல்ல. 

இலங்கைத் தீவினுள் தமிழ்மக்கள் பலபத்தாண்டுகளாக முன்னெடுத்துவரும் தன்னாட்சி உரிமைக்கான வேணவாவினையும் அதுசார்ந்த போராட்டத்தினையும் திருப்திப்படுத்துவதற்காக இந்திய அதிகாரவர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியேயாகும். இதனைச் செய்வதற்காக இந்திய வல்லரசு தனது முழுமையான அரசியல் இராசதந்திர மற்றும் இராணுவ வல்லமைகளினைப் பயன்படுத்தியது.

இச்சட்டத்திருத்தத்தினால் உருவாக்கப்படக்கூடிய மாகாண சபைகள் தொடர்பாக அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் முழுமையான உடன்பாடு இருந்ததில்லை. எனினும் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது முதலமைச்சருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்குமான பெயர்ப்பட்டியலினை விடுதலைப்புலிகள் சமர்ப்பித்திருந்தனர். ஆயினும் அன்றைய அதிபராக இருந்த ஜே. ஆர். ஜேயவர்த்தனாவும் விடுதலைப்புலிகளும் தங்களது இறுக்கமான நிலை காரணமாக பரஸ்பரம் முரண்பட்டு தங்களைச் சுற்றி இந்தியாவினால் போடப்பட்ட பொறியிலிருந்து விலகிக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை வரதராசப்பெருமாள் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு [EPRLF] இந்திய அமைதிப்படை இராணுவத்தின் பின்புலத்தில் மாகாணசபைக்கான தேர்தலில் வென்று ஆட்சிஅதிகாரத்தினை பெரும் எதிர்பார்ப்புடன் கையேற்றிருந்தது.

ஒரு பிராந்திய வல்லரசின் வளங்களும் பின்புலமும் அதன் இராணுவத்தின் பக்கபலமும் இருந்தும் வரதராசப்பெருமாள் தலைமையிலான ஆட்சியினால் சிறீலங்காவின் அரசியலமைப்பில் 13வது திருத்தத்தினூடாக குறித்துச்சொல்லப்பட்ட அதிகாரங்களினை முழுமையாக கையகப்படுத்தி மாகாணத்தில் வாழும் மக்களின் நலன்களினையும் மேம்பாட்டினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த முடியவில்லை. 

இதற்கு ஒரு அமைதியான நிர்வாகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு இடையூறாக விடுதலைப்புலிகளின் போராட்ட முனைப்பு ஒரு காரணமாக கூறப்பட்டாலும், சிங்கள பௌத்த தேசியவாத கருத்தியலில் காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்த சிறீலங்காவின் பலம்பொருந்திய பணித்துறையாட்சிக் கட்டமைப்பு (Bureaucratic Structure) தனது முழுமையான வலுவினை வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்திற்கு எதிராக பிரயோகித்து அதனை முடக்கியது என்பதே உண்மையாகும். 

என்னதான் அரசியலமைப்பு ஆவணத்தில் வரையறுத்துக் கூறப்பட்டாலும் அல்லது பரஸ்பர ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டாலும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் சிதைப்பதும் இப் பணித்துறையாட்சியினரின் கரங்களிலேயே தங்கியுள்ளது.

விரைவில் வடக்குக்கான மாகாணசபை தேர்தலினை நடாத்தும்படி பலமுனைகளிலிருந்து வேண்டுகோள்கள் அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தேர்தலினை வைப்பது தொடர்பான தீர்மானம் சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபரின் விருப்பத்தினையே சார்ந்துள்ளது.

அண்மையில் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டது போன்று சிறிலங்கா அதிபரினால் வடக்கு மாகாணத்திற்கான சபையினை உருவாக்குவதற்கான பிரகடனம் வெளியிடப்படவேண்டும். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் கணம்வரைக்கும் அதற்கான சாத்தியம் எதுவும் காணப்படவில்லை. 

அதேவேளையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தக்கூடாது என புத்த பல சேனையும், காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்களினை மாகாணசபைகளின் அதிகாரத்திலிருந்து மீளப்பெற்ற பின்னரே வடக்கு மாகாணசபைக்கான தேர்தலினை நடத்தவேண்டும் என அமைச்சராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணி பிரதானி விமல் வீரவன்சாவும், முதலில் சிவில் நிர்வாகம் பின்புதான் மாகாணசபைக்கான தேர்தல் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கூறுவதும் ஒரே அடிப்படைகளைத்தான் கொண்டிருக்கின்றன. 

சமகாலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராக கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழ்மக்களின் விடுதலை அவாவினை நிறைவு செய்யமுடியாத மாகாணசபை என்ற பொறிக்குள் தமிழ்மக்கள் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது. எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலினை புறக்கணிக்கவேண்டும், வேண்டுமானால் சுயேட்சையான பொதுவேட்பாளர் அணி ஒன்றினை களத்தில் இறக்கி அவர்களினை ஆதரிக்கலாம் என்று தமது மேடைகளிலும் பேட்டிகளிலும் கருத்துருவாக்கம் செய்கின்றனர். 

அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற அங்கத்தவர்கள் குழுவை யாழ்ப்பாண சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்ததாகவும் அப்போது ஒரு இளைப்பாறிய மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் 13வது திருத்தச்சட்டத்தினால் தமிழ்மக்களுக்கு எதுவித பலனும் இல்லை. எனவே 13வது திருத்தத்திதை அடிப்படையாக கொண்ட எதனையும் தமிழ்மக்கள் மீது திணிக்கவேண்டாம் என விநயமாக கேட்டுக்கொண்டதாக தமிழ் வலைச் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 

இத்தகைய பின்னணியில் 13வது திருத்தத்தினை தமிழ்மக்கள் சிறப்பான முறையில் புரிந்து கொள்ளல் இன்றைய அவசியமாக உள்ளது.

தமிழ் அரசியற் சிந்தனையாளர்கள் உரைப்பது போன்று 13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்படும் மாகாணசபைகள் தமிழ்மக்களின் அரசியல் விருப்புகளையோ, தமிழ்மக்களின் செழுமைக்கும் இருப்புக்குமான உத்தரவாதத்தையோ வழங்கப்போவதில்லை என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

அதேபோன்று மத்திய அரசின் இறுக்கமான வளஒதுக்கீட்டு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்துக்கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்களையோ, சமூகநல திட்டங்களையோ முன்னெடுக்கவும் முடியாது. குறைந்த பட்சம் சிற்றூழியர் தர வேலைவாய்ப்புக்களினை வழங்குவதற்கும் போராடவேண்டியிருக்கும். இந்த யதார்த்தத்தினையும் மீறி மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கட்சியும் வேட்பாளர்களும் வழங்கக்கூடிய வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வார்த்தைகளே. 

இத்தகைய மாகாணசபை நிர்வாகத்தினை தாங்கள் வென்றெடுத்தால் அரசுடன் இணைத்து வடக்கு மாகாணத்தினையே வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவோம் என அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவினை செயலதிபராக கொண்ட ஈழமக்கள் சனநாயக கட்சியினர் கூறலாம். ஆனால் தற்போதுவரை ஆளுனருடன் இணைந்து வடமாகாணத்தின் நிர்வாக பொறிமுறைகள் யாவற்றினையும் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதற்கு மேலாக அக்கட்சியினரால் மேலதிகமாக ஒரு துரும்பினைக்கூட நகர்த்தமுடியவில்லை.

தங்களது கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசசபைகளில் தீர்மானங்களினை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொள்ளும் நிலப்பறிப்புக்கு அங்கீகாரம் வழங்கிவருவதே கசப்பான நடைமுறை உண்மையாகும். மாகாணசபையிலும் இது போன்ற செயற்பாடுகளினை தவிர்த்து மக்கள் நலன்சார், உரிமைசார் விடயங்களினை அவர்களால் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் அக்கட்சியினருக்கோ செயலதிபருக்கோ விருப்பம் இருந்தாலும் அவர்களால் அதனைச்செய்ய முடியாதவாறு தங்கத்திலான விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றார்கள். 

தங்களது செஞ்சோற்றுக் கடனையும் மீறி அவ்விலங்கினை உடைக்க முயற்சிப்பதனால் ஏற்படக்கூடிய இருப்புக்கான அச்சுறுத்தல்களினை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. சிங்கள தேசியவாத அரசியற் தலைமைகள் ஏனைய தேசிய இனங்களின் தலைமைகளினை இத்தகைய தங்கத்திலான விலங்குகள் பூட்டி வைத்திருக்கவே விரும்புகின்றன. 

வரதராசப்பெருமாள் தலைமையிலான மாகாண நிர்வாகத்தின் பின்பு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடக்கு கிழக்கு மாகாண சபை நேரடியாக ஆளுனரின் ஆட்சியின் கீழேயே நிர்வகிக்கப்படுகிறது. 2007 சனவரி மாதத்திலிருந்து வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்பு கிழக்கு மாகாணசபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மத்தியில் ஆளும்கட்சியின் பதாகையின் கீழ் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் உருவாகிய கிழக்கு மாகாணசபையினால் மக்களுக்கு சார்பாக எதனையும் செய்ய முடியாமற் போனது. அதற்கு காரணம் அவர்கள் ஒரு வகையான திறந்தவெளிக் கைதிகளாகவே இருந்தனர். 

2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தன்மையான அழைப்பினையும் புறந்தள்ளி ஈற்றில் முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பினை சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கோட்டைவிட்டதும் வாய்மூடி மௌனிகளானதும் செஞ்சோற்றுக் கடனாளிகளாகவும் திறந்தவெளிக் கைதிகளாகவும் அவர்கள் இருப்பதனாலாகும். 

தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த தேசிய வாதிகளினால் தொடுக்கப்பட்ட மேலாதிக்கப்போர் பல பத்தாண்டுகளைத் தாண்டியும் பலவடிவங்களில் முன்னெடுக்கப்படுகிறது. 

ஆளும் கட்சிகளும் தலைமைகளும் மாறும், அடக்கு முறைச்சட்டங்களின் வடிவங்களும், வளங்களும், நிலங்களும் அபகரிக்கப்படும் முறைமைகள் மாறும். ஆயுதங்களும், சீருடைகளும், அணுகுமுறைகளும் மாறும். ஆனால் அவர்களின் குறிக்கோள் நோக்கிய பயணம் முன்னைய தடத்திலேயே தொடர்ந்து மேலும்மேலும் வேகமாக நடைபயிலும். 

2009 மே மாதத்துடன் இருதரப்பு யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர, ஆட்சியாளர்களின் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. மாற்றாக புதிய வடிவங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தங்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய தமிழர்களின் அரசியற்பயணம் பல எழுச்சிகள், வீழ்ச்சிகள், தளர்ச்சிகள் என பல கட்டங்களாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. 

தற்போது அனைத்துலகத்தினதும், ஐ.நா.வின் மனித உரிமைச்சபையினதும், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லாதிக்க சக்திகளின் சுயநலன்சார் சதுரங்கப் போட்டிக்குள்ளும் சிக்குப்பட்டுள்ளது.

எவ்விதமான காலவரையறையோ நம்பிக்கை தரும் குறியீடுகளோ இல்லாத திசையினை நோக்கி தமிழ்மக்கள் காக்கவைக்கப்பட்டுள்ளனர்.

  • இந்தியாவின் புதுடில்லியினை தவிர வேறு வழியில்லை என நம்பும் இராஜவரோதயம் சம்பந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒரு திசையிலும்,
  • சென்னை ஊடாக டில்லியினை அசைக்கலாம் என நம்பும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இன்னொரு திசையிலும்,
  • சுதந்திர பிரகடனத்தை உலகெங்கும் அறைகூவி சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசு வேறோர் திசையிலும்,
  • ஆட்சிமாற்றத்தினூடாக நியாயம் கிடைக்கும் என உச்சாடனம் செய்யும் உலகத்தமிழர் பேரவையும், அமெரிக்காவும் இந்தியாவும் எமக்கு சார்பாக மாறும் காலம் என்றோ ஒருநாள் வரும் என கருத்துரைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வேறு திசைகளிலும்.
இவ்வாறு எண்திசைக்கோணத்தில் தமிழ்மக்களின் கவனம் சிதைக்கப்பட்டுள்ளது என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

இராணுவ தளபதியாக இருந்து ஆளுனராக உருமாற்றம் பெற்ற வடமாகாண ஆளுனரின் அதிகார எல்லை வானளாவி வளர்ந்துள்ளது. வடக்கு மாகாணசபையின் நிர்வாகிகள் யாவரும் சூழ்நிலையின் கைதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். ஆளுனரினதும் அமைச்சர்களினதும்; கைவிரல் அசைவுகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக முடமாக்கப்பட்டுள்ளனர். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் செயல்படுத்தும் ஆற்றல்களினை இழந்த மலட்டுத் தன்மையினராக, எந்த நேரத்திலும் பழிவாங்கப்படலாம் என அஞ்சி அஞ்சி வாழும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதே போன்று வடக்கின் கல்விச்சமூகமும் அமைச்சர்களுக்கும் அரச தரப்பு பிரதிநிதிகளுக்கும் ஆலவட்டம் எடுப்பதற்காக மாணவர்களினைப் பயிற்றுவிப்பதிலும் படிக்கும் நேரம் பறிபோவதனையிட்டு கேள்வியெழுப்ப முடியாமலும் இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு மாறியுள்ளனர். 

இத்தகைய பின்னணியில் இங்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன. 

· ஓன்று: முழுமையான அதிகாரங்களினைப் பிரயோகிக்கும் வலுவற்ற வடக்கு மாகாணசபையினை ஏன் தமிழ் மக்களின் நலன்சார் உரிமைசார் அரசியற் தலைமைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தங்களது வளத்தினையும் நேரத்தினையும் விரையம் செய்யவேண்டும்? 

· இரண்டு: தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதத்திலும் திருப்தி தராத 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ்மக்களும் அவர்களது அரசியற் தலைமைகளும் ஏன் தூக்கியெறிந்துவிட்டு முற்று முழுதான தன்னாட்சியுரிமையினை மட்டும் வலியுறுத்தி நிற்கக்கூடாது? 

முதலாவது வினாவுக்கான விடையினை கண்டறிவதில் எமக்கு தெளிவான வரலாற்றுப்பார்வை அவசியமாகவுள்ளது. 



இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் இன்று அடைந்துள்ள இக்கட்டான நிலைமைக்கு வெறுமனே சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு நாம் எமது தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. 

பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் மீண்டும் சுதேசிகளுக்கு கைமாறுவதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்களின் போது கண்டிய சிங்களத் தலைவர்கள் வலியுறுத்தியது போன்று தமிழ்த்தலைவர்களும் தன்னாட்சிக்கான உரிமையினை வலியுறுத்தாமல் வர்க்க நலன் சார்ந்த பெருந்தன்மையின் பால்பட்டு பெருந்தவறினை இழைத்தனர். 


தமிழ்த்தலைவர்கள் இழைத்த வரலாற்று தவறுகள் : 



1911ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடித்தொகைக்கணக்கெடுப்பு இலங்கைத் தீவில் 528,024 இலங்கைத்தமிழர்களும், 530,983 இந்திய தமிழர்களும் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றது. அதாவது இந்திய தமிழர்கள் இலங்கைத் தமிழர்களினை விட சிறிது அதிக எண்ணிக்கையினைக் கொண்டிருந்தனர்.

1946ல் பெருந்தோட்டத்துறை வாழ் தமிழர்களின் எண்ணிக்கை 784,708 ஆக மதிப்பிடப்பட்டது. 1940களில் பண்டாரநாயக்காவும் சேனநாயக்கவும் கொண்டிருந்த சிந்தனைகளும் ஆற்றிய உரைகளும்; பெருந்தோட்டத்துறையிலுள்ள இந்திய தமிழர்களின் குடித்தொகை பலத்தை ஒட்டி எழுந்த அவர்களது அச்சஉணர்வினையும் அம்மக்களினை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றுவதற்கு கொண்டிருந்த உறுதியினையும் வெளிப்படையாக காட்டியது.


சுதந்திரத்தினை தொடர்ந்து 1949ல் சிங்கள தலைவர்களும் இந்திய தலைவர்களும் இணைந்து ஆடிய கபட நாடகத்தில் ஒத்துழைத்த இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் இருந்த சி.சுந்தரலிங்கமும் சி.சிற்றம்பலமும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு [Ceylon Citizenship Act no.18of 1948] ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சுமார் 700,000 பெருந்தோட்டத்துறை வாழ் தமிழர்களினை நாடற்றவர்களாக்கியதோடு அவர்கள் அன்றைய மக்கள்பிரதிநிதிகள் சபையில் கொண்டிருந்த ஏழு அங்தத்துவத்தினையும் பல பத்தாண்டுகளுக்கு இல்லாது ஒழித்தனர். 


இச் சட்ட மூலத்திற்கு எதிராக ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் உட்பட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஏனைய அங்கத்தவர்கள் வாக்களித்தனர். தனது தவறினை உணர்ந்து அமைச்சரவைப்பதவியினை உதறித்தள்ளிய சி.சுந்தரலிங்கத்தினைத் தொடர்ந்து கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சராக ஜீ.ஜீ. பொன்னம்பலம் பொறுப்பேற்றார். 


அதே ஆண்டில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் பிரஜா உரிமைச்சட்டம் [Indian and Pakistani Residents –Citizenship- Act of 1949] என்ற சட்டத்திற்கு ஆதரவாக மீன்பிடி அமைச்சரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் வாக்களித்ததன் மூலம் பெருந்தோட்டத்துறையில் தங்களது இரத்தத்தினையும் வியர்வையினையும் சிந்தி இந்தத்தீவின் செழுமைக்கு உரமிட்ட பல இலட்சம் மலையக மக்கள் மீண்டும் தங்கள் வாக்குரிமையினைப் பெறமுடியா வண்ணம் சிங்கள தேசியவாதிகள் போட்ட இறுதி முடிச்சிற்கு துணைநின்றார். 


அன்று மெத்தப்படித்த மூன்று தமிழ் பிரதிநிதிகளும் [சி.சுந்தரலிங்கம், சி.சிற்றம்பலம், ஜீ.ஜீ. பொன்னம்பலம்] மலையக மக்களுக்கு எதிராக வரலாற்றுத் தவறினைச் செய்திருக்காவிடில் இன்று இலங்கைத்தீவில் தமிழர்கள் உறுதியாக பேரம்பேசக்கூடிய மக்கட் தொகையுடனும் அரசியற்பலத்துடனும் கூட்டாக தம்மை நிலை நிறுத்தியிருக்க முடியும்.


1976ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் [TULF] உருவாக்கத்தினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள்ஆணையினை கோரி 1977ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி களமிறங்கியது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னத்திற்கு அத்தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கும் ஆணையாக கொள்ளப்படும் என பிரகடனப்படுத்தப்பட்டது. 


இக்குறிக்கோளினை உறுதிசெய்வதற்காக பட்டி தொட்டியெங்கும் தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் முதியவர் என அனைவரும் ஆண் பெண் வேறுபாடின்றி இரவு பகலாக உழைத்து தேர்தல் முடிவுகள் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை மக்கள் ஆணையாக மாற்றினர். 


எனினும் மிகவும் வருந்தத்தக்க விடயம் யாதெனில் தனக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அத்தேர்தலில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் புதல்வர் குமார் பொன்னம்பலமும் அவரது சகாக்களும் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவரால் அத்தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது மட்டுமன்றி வட்டுக்கோட்டை தீர்மானத்தினை மக்கள் ஆணையாக மாற்றும் முயற்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய வாக்குகள் சிதறிப்போவதற்கும் காரணமானார். 


பிற்காலத்தில் அவர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு மிக்க சட்டவாதியாக தன்னை அர்ப்பணித்திருந்தாலும் விடப்பட்ட தவறு வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளது.


1977 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரை கட்சியினுள் கொண்டிருக்கக்கூடிய தலைமைத்துவ செல்வாக்கினை பலவீனப்படுத்துவதற்காக அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தினால் காசி ஆனந்தன் போட்டி வேட்பாளராக முன்மொழியப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னமும் அவருக்கு வழங்கப்பட்டது. வடக்கிலிருந்து சென்ற பெரும்பாலான அமிர்தலிங்கம் சார்பு பேச்சாளர்கள் காசி ஆனந்தனுக்காகவே பரப்புரைகளில் ஈடுபட்டனர். எனினும் செல்லையா இராசதுரை தனது முதன்மை இடத்தினை தக்கவைத்துக்கொண்டார்.


1977 நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியனுக்கு விழும் வாக்குகள் யாவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான ஆணை எனக்கூறிய அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தனது எதிராளியான செ.இராசதுரையினை வீழ்த்துவதற்காக தமிழரசுக்கட்சி சின்னத்தை பயன்படுத்தியது மற்றுமொரு வரலாற்றுத் தவறாகும். 


1981ல் சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை முறைமைகள் அர்த்தமற்றதும் போலியான அதிகாரங்களினைக்கொண்டதும் ஆகையால் அதற்கான தேர்தலில் பங்குபற்றுவது தமிழ்மக்களின் ஒருங்கிணைந்த பலத்தினைச் சிதைக்கும் என தமிழ் இளைஞர்கள் விடுத்த வேண்டுகோளினையும் புறந்தள்ளி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் குதித்தது. 


முடிவாக மாவட்ட அபிவிருத்திச் சபைத்தலைவருக்கான சிம்மாசன இருக்கையினை வடிவமைத்து தயாரித்தது மட்டுமே இறுதி விளைவாகியது. அன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கொண்டிருந்த இறுக்கமான நிலைமையும் பிற்காலத்தில் தமிழ் இளைஞர்கள் பல பிரிவுகளாக சிதறுவதற்கு ஊக்கமளித்தது. 


2010ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகளினைத் தொடர்ந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரோடு இணைந்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைபபிற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். 


தமிழர்களினைப் பெரும்பான்மையாக கொண்ட வடமாகாணத்தின் தேர்தல் தொகுதிகளில் இவ்வாறு பிரிந்து நின்று போட்டியிடுவது அதிக பாதிப்பினைத் தராது. ஆனால் மிகவும் சிறிய எண்ணிக்கையான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர்களது பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தில் இத்தகைய முயற்சிகள் மிக ஆபத்தானவை. இதனைப் புரிந்து கொள்ளும் பக்குவமற்று இராஜவரோதயம் சம்பந்தனுக்கு பாடம்படிப்பிக்கப்போகின்றோம் என்று சவால் விட்டுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் கொண்ட எதிர்அணியினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக திருகோணமலையில் நிறுத்தியமை அண்மைக்காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்ட மற்றுமொரு வரலாற்று தவறாகும். 


தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தினை வழிநடத்த முற்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் தமது தீர்க்க தரிசனமான சிந்தனைகளுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டாலும் அவ்வப்போது எடுக்கும் சில தீர்மானங்களும் மூலேபாய செயற்பாடுகளும் இலங்கைத் தீவில் தமிழ்மக்களின் அரசியல் இருப்பிற்கும் சமூக பொருளாதார வலுவூட்டலுக்கும் நிரந்தர அச்சுறுத்தலாக மாறிவிடுகிறன என்பதற்கு மேலே சுட்டிக்காட்டப்பட்டவை சில உதாரணங்களாகும்.


கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த தேசியவாதிகள் இலங்கைத்தீவினுள் தமிழ்மக்களின் இனத்துவ அடையாளத்தினையும் அரசியல் இருப்பினையும் பொருளாதார ஆளுமைகளினையும் சமூககட்டமைப்பினையும் தகர்த்தெறிவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தினை சலிப்பின்றி முன்னெடுத்து வருகின்றனர். 


இன்றைய இலங்கைத் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய எதிரி அவர்கள் கொண்டிருக்கும் சனத்தொகை வளர்ச்சி வீத தேய்வும் இளைப்பாற்று சம்பள வாய்ப்புடன் கூடிய மாதச்சம்பளத்தினை வழங்கக்கூடிய அரச உத்தியோகத்தின் மீதான மாயையும் ஆகும். இவ்விரண்டு விடயங்களும் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் எனக் குறிப்பிடும் வடக்கு கிழக்கு நிலப்பகுதியினையும் அதன் வளத்தினையும் கட்டுப்படுத்தி ஆளுமை செய்வதற்கு மிகப்பெரும் இடையூறாகும். 


எனவே தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அரசியல் விடுதலைப் போராட்டங்களினை முன்னெடுக்கும் தலைமைகள் யாவும் போராட்டத்தினை வெற்றி கொள்வதற்கும் தமிழ்மக்களின் இருப்புநிலையினை தக்கவைப்பதற்கும் இடையில் ஒரு பொருத்தமான சமநிலையினை மிகக் கவனமாக கட்டியெழுப்பி பேணவேண்டும். போராட்டத்தின் பேரால் சமூகத்தின் ஒட்டுமொத்த இருப்பினையும் அபாயத்திற்கு உள்ளாக்குவது அல்லது சமூகத்தின் நிகழ்கால இருப்பையும் நலன்களினையும் மட்டும் முன்னிறுத்தி உரிமைக்கான போராட்டத்தினை தவிர்ப்பது இரண்டுமே ஈற்றில் சமூகத்தின் அழிவுக்கே வழிகோலும். 


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பல படிமுறைகளாக வளர்ந்து விரிவுபெற்று முறைசாரா அரசாக பரிணமித்தாலும், எங்கோ ஒரிடத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மூலோபாயத்தவறு காரணமாக இன்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தினையுமே கையறு நிலைக்கு இட்டுத் தள்ளியுள்ளது. உரிய தருணத்தில் மேற்கொள்ளத்தவறிய அணுகுமுறை மாற்றம் சிங்கள பௌத்த தேசிய வாதிகளின் இனஅழிப்பு நிகழ்ச்சி நிரல் விரைவு படுத்துவதற்கான வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கியுள்ளது.


1980கள் வரை அபிவிருத்திக் கொள்கைகளாலும் குடியேற்றத்திட்டங்களாலும் நிர்வாக பொறிமுறைகளுக்கு ஊடாகவும் அடைய முடியாத தமிழின அழிப்பு இலக்கினை 1980ம் ஆண்டிற்கு பின் இராணுவ நடவடிக்கைகளாலும் பொருண்மிய தடைகளினாலும் முழுமையான போர் அழிவுக்கு ஊடாகவும் 2009 வரை முன்னெடுத்தனர். 


அவற்றிற்கும் மேலாக தப்பிப் பிழைத்திருக்கும் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பினையும் பண்பாட்டுச் செழுமையினையும் மனிதவள ஆற்றல்களினையும் பொருண்மிய மேம்பாட்டுக்கான மூலதனத்திரட்சியினையும் சிதைத்து சின்னாபின்னமாக்குவதற்காக இராணுவ கட்டளைப் பீடத்தின் கீழ் முடக்கப்பட்ட சிவில் நிர்வாக பொறிமுறையினையும் சட்டத்திற்கு புறம்பான ஆயுததாரிகள் அணியினையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். 


இத்தகைய சூழ்நிலையில் ஆகக்குறைந்த பட்சம் தமிழ் சமூகத்தின் மீதும் அவர்களது இருப்பின் மீதும் இருப்பிற்கான வளங்கள் மீதும் ஏற்படுத்தப்படும் அழிவுகளினைக் மட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மாகாணசபையின் அதிகார கட்டமைப்பினை தமிழ்மக்களின் உரிமைசார் போராட்டத்தினை முன்னெடுப்பவர்களோ அவர்கள் சார்ந்த அணியினரோ கைப்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். 


இரண்டாவது வினா: தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதத்திலும் திருப்தி தராத 13வது திருத்தச்சட்டத்தினை தமிழ்மக்களும் அவர்களது அரசியற் தலைமைகளும் ஏன் தூக்கியெறிந்துவிட்டு முற்று முழுதான தன்னாட்சியுரிமையினை மட்டும் வலியுறுத்தி நிற்கக்கூடாது? 



சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் சிங்கள பெரும்பான்மை மக்களும் தாங்களாக விரும்பி தமிழ்மக்களினதோ அல்லது ஏனைய தேசிய இனங்களினது உரிமைகளினையோ அங்கீகரித்து வழங்கப்போவதில்லை என்பது வரலாற்றுப்பாடமாகும்.

அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களும் வலுவான வெளிச்சக்திகளின் நிர்ப்பந்தங்களும்தான் அவர்களினை பணியவைக்க முடியும்.


13வது சட்டத் திருத்தம் என்பது வெறும் அதிகாரப்பரவலாக்கலுக்கான விடயம் எனக்கொண்டாலும் இதற்கும் அப்பால் அதன் பின்னணியில் மூன்று முக்கிய விடயங்கள் அமைந்துள்ளன. 


முதலாவது, இலங்கையில் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இலங்கைத்: தீவின் நீண்ட புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சனையின் மீதும் இந்திய பிராந்திய வல்லரசுக்கு இருக்கக்கூடிய தார்மீக கடப்பாட்டினை மீளவும் வலியுறுத்துவதற்கான ஆவணமாக 13வது திருத்தமும் அதனோடு இணைந்த இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்களும் அமைந்துள்ளது. எனவே மற்றுமொரு வலுவான அனைத்துலகத்தின் கடப்பாட்டுடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் வரை இந்த 13வது சட்டத் திருத்தத்தினையும் அது சார்ந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் தமிழ்மக்கள் தூக்கியெறிய முடியாது. 


இரண்டாவது, 13வது திருத்தமும் அதனோடு இணைந்ததாக சிறீலங்கா-இந்திய தலைவர்களினால் ஒப்பமிடப்பட்ட சமாதான ஒப்பந்த சரத்துக்களில் மிகத் தெளிவாக இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியமும் அதன் தொடர்பறாத நிலமும் தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இரண்டு தேசங்களின் தலைவர்களும் எழுத்து மூலமாக ஏற்று பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே 13வது திருத்தத்தினையும் சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்களினையும் தற்போதைய நிலைமையில் புறக்கணித்தல் மேலும் சிக்கலான நிலைக்கு தமிழ்மக்களினை இட்டுச்செல்லும். மாற்றுத் தெரிவுகளுக்கு ஊடாக தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை இவ் ஆவணத்தொகுதி பெயரளவிலாவது பயன்படுத்தப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகும். 


மூன்றாவது, 13வது திருத்தத்தின் கீழ் தான் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு நிர்வாக அலகாக சிறீலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் 13வது திருத்தத்தின் மேலும் ஒரு முக்கிய விடயமாகும். தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களின் தொடர்பினை உறுதிப்படுத்தக்கூடிய புவிசார் அரசியல் நிர்வாக கட்டமைப்பு உருவாகுவதற்கு இவ்விடயம் அடித்தளமாக அமையும். 


[*கட்டுரையின் இறுதியில் இந்திய-இலங்கை உடன்பாட்டின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது]


எனவே மேற்குறிப்பிட்ட மூன்று வலிதான காரணங்களுக்காக 13வது திருத்தத்தினை தொடர்ந்து வலிதான ஆவணமாக நடைமுறையில் பேணுதல் எமக்கு அவசியமாக உள்ளது. 


தமிழர் கட்சிகளின் எதிர்காலமும் அணுகுமுறை மாற்றத்திற்கான அவசியமும் : 



தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாக தமிழ்மக்களின் அரசியல் நலன்களில் அக்கறை கொண்டவர்களிடம் ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளதனை இங்கு பதிவு செய்ய வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியற்கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகளும் நம்பிக்கையீனங்களும் தொடர்ந்து காணப்படுகின்றன. இதற்கான அடிப்படைக்காரணம் தற்போதைய தலைவரான இரா.சம்பந்தனுக்கு அடுத்து தலைமைப் பதவியினை கட்டுப்படுத்துவது யார் என்கின்ற போட்டியும் தமிழ் தேசியம் தொடர்பான கற்பு நிலையில் யார் உறுதியானவர்கள் என்ற சந்தேகமும் தான்.


அண்மையில் மன்னார் ஆயர் இராயப்பு அவர்களினை சந்தித்து கலந்துரையாடிய இரா.சம்பந்தனும் மதியாபரணம் சுமந்திரனும் தெரிவித்ததாக செய்திகளில் வந்த கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவேண்டியவை. 


அவர்கள் இருவரினதும் கருத்துப்படி « தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் யாவும் வன்முறை சார்ந்த வழி முறையில் வளர்ந்தவர்கள். எனவே அவர்களினை உள்ளடக்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் நிரம்ப தடைகள் இருக்கும். சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளரிடமிருந்து கட்சியாக பதிவதற்கான அனுமதியினை பெற முடியாது ». 


இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தால் அவர்கள் வரலாற்றிலிருந்து படிப்பினைகள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். தமிழ் இளைஞர்கள் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றால் அதற்குரிய முழுமையான பொறுப்பு தளபதி அண்ணன் அமிர்தலிங்கத்திற்கும் அவர்சார்ந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அதன் மூலக்கட்சியான தமிழரசுக்கட்சிக்குமே உரியது. 


“துரோகிகள் துலைக்கப்படவேண்டும்” என வீர வசனங்களினை மேடைதோறும் பேசி தமிழ் இளைஞர்களினை உருவேற்றி சொந்த இனத்தின் குடிமக்களினையும் சகோதர இயக்க அங்கத்தவர்களினையும் ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கொலைக்கலாசாரத்தின் விளைநிலமே முன்பு குறிப்பிட்ட அரசியற்கட்சிகள் தான். 


தளபதி அமிர்தலிங்கம் கூட தனது மூத்த மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து ஒளிப்படமெடுத்து அதனை தமிழ்த் தேசிய இராணுவத்தளபதி என இந்திய அதிகாரிகளுக்கு காட்டியதாக அரசல்புரசலாக ஒரு கதை உண்டு. 


இவ்வாறிருக்க வன்முறை சார்ந்த முன்னைய இயக்க போராளிகளின் அமைப்புக்களினை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய முடியாது என்ற வாதம் ஏற்கமுடியாதது. 


கடந்த காலத்தில் இவ் அமைப்புக்கள் எல்லாம் அரசியற் கட்சிகளாக சிறீலங்காவின் தேர்தல் சட்டங்களின் கீழ் தம்மை பதிவு செய்திருந்ததும் பல தேர்தல்களில் போட்டியிட்டிருந்ததனையும் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


அதேவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள அமைப்புக்கள் தங்களது கடந்தகால செயற்பாடுகளினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி தமிழ்மக்கள் மத்தியில் எழக்கூடிய சந்தேகங்களினை நிவர்த்திசெய்ய உடனடியாக முன்வரவேண்டும். அத்துடன் மிகவும் நேர்மையாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடன் மற்றவர்களின் பங்களிப்புக்களினையும் அர்ப்பணிப்புக்களினையும் ஏற்று மதிப்பளித்து கடந்தகால தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் அப்பால் அங்கீகரிக்கும் உயர் நிலைக்கு நம் அனைவரையும் உயர்த்த வேண்டும்.


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் திட்டங்கள் நிகழ்ச்சிகளை தயாரித்தல் தீர்மானங்களினை மேற்கொள்ளல் ஆகியவவை தொடர்பில் உட்கட்சி சனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் வளர்த்தெடுக்கப்படுவதோடு ஒவ்வொருவரும் தங்கள் சிந்தனைகள், செயல்கள், தொடர்பாடல்கள், உரையாடல்கள் தொடர்பான உயர்ந்த பட்ச நம்பகத்தன்மையினை கட்சிக்கு உள்ளேயும் மக்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவேண்டும். 


உணர்ச்சி வயப்பட்ட அறிக்கைகளும் மறுப்பறிக்கைகளும் தேர்தல் வெற்றியினையும் பதவி செல்வாக்கு சார்ந்த செயற்பாடுகளையும் தவிர்ப்பது ஆரோக்கியமான கூட்டுச் செயற்பாட்டிற்கு அடித்தளமாகும். 


இறுதியாக : 


கட்டியங் கூறப்பட்டுள்ள வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது நடைபெற்ற அன்று தான் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும். எனினும் தமிழ்மக்களின் இன்றைய அரசியற்தலைவர்களிடம் மக்கள் சார்ந்த பாரிய கடமைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அரசியல் அதிகார வலுவற்ற மாகாணசபைக்கு தலைமை தாங்குவதற்கான போட்டிக்கான நேரம் இதுவல்ல. சிறீலங்காவின் நாடாளுமன்றத்திறகுள்ளும் அனைத்துலக மட்டத்திலும் தங்களது ஆற்றல்களையும் நேரத்தினையும் முழுமையாக அர்ப்பணிக்கவேண்டியுள்ளது. 


வடக்கு மாகாண நிர்வாகத்திற்கு இன்று வேண்டியது அரசியல் தலைமையல்ல. தமிழ் மக்களின் அரசியல் வேணவாவினைப் புரிந்துகொண்டு அவர்களது ஆளுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் மனப்பாங்கிற்கும் வலுவேற்றக்கூடிய தலைமையே தேவை.


தனிமனித ஆளுமையும், நிர்வாகத்திறனும், பன்மொழி ஆற்றலும், சட்டத்தின் நுணுக்கங்களினை உய்த்துணரக்கூடிய வல்லமையும், கறைபடியாத கரங்களும், தேவைப்படும் போது நெற்றிக்கண்ணைக் திறக்கக்கூடியவருமான ஒருவரே இதற்கு மிகப்பொருத்தமானவர்.


செய்திகளில் குறிப்பிடுவது போல் இளைப்பாறிய நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றவர்கள் இத் தலைமையினை ஏற்க முன்வருவார்களேயானால் அது இன்றைய நிலையில் தமிழ் சமூகத்திற்கான நல்வாய்ப்பாகவே கொள்ளப்படவேண்டும். தமிழர் உரிமைக் கட்சிகள் ஒன்றிணைந்து அவருடன் ஈடுகொடுத்து பணியாற்றக்கூடிய ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களினை தங்களது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தேடிக்கண்டறிந்து முன்மொழிய வேண்டும். 


மாகாண சபைத் தேர்தலுக்கு பொது அணியினரை சுயேட்சைக்கட்சியினராக முன்வைப்பதில் உள்ள சாதக பாதகங்களினை விரிவாக ஆராய வேண்டும்.


இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசியற் கலாசாரம் கட்சி தாவுதல், மாற்றுக்கட்சி உறுப்பினரை கடத்திச்செல்லல், பெருந்தொகைப் பணங்கொடுத்து விலைக்கு வாங்குதல், ஊழல்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டியபின்பு அவற்றைக் காட்டி அச்சுறுத்தி பணியவைத்தல் ஆகிய விடயங்களால் செழிப்பு பெற்றுள்ளது. எனவே இத்தகைய சவால்களிலிருந்து அங்கத்தவர்களினை காப்பாற்றி கட்டுக்கோப்புடன் பணியாற்றக்கூடிய பொருத்தமான அமைப்பு வடிவத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் விரைந்து தீர்மானிப்பார்கள் என நம்புவோம். 


நாம் எல்லோரும் தவறு புரிந்தவர்கள், குறைபாடுகளை உடையவர்கள், கைகளில் கறை படிந்தவர்கள் தான். எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எமது தவறுகளுக்காக உயரிய விலை செலுத்தியவர்கள் பொதுமக்களும் சிறுவர்களும் பெண்களும் முதியவர்களும் இளையோருமே. மீண்டும் மீண்டும் தவறிழைக்காமல் கூட்டாக முன்செல்வது எப்படி என்பதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கும்.
*இணைப்பாக : Indo-Sri lankan Agreement







Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment