தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் கழுத்தறுப்பவர்கள்!

தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.

ஏனெனில் தமிழ்த் தேசியம் ஒருங்கிணைந்து இருப்பதோ அன்றி ஒருங்கிணைக்கப்படுவதோ சிங்கள பேரினவாதத்திற்கு எப்போதும் ‘வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயமாகவே’ இருக்கும். தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைகளிற்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தி, இலங்கையில் தற்போது தமிழ்த் தேசியம் என ஒன்றில்லை என்று நிறுவுவதனுடாக இலங்கையை ஒற்றைக்கலப்பு தேசிய நாடாக காட்ட முற்படுகின்றது சிங்கள பௌத்த பேரினவாதம்.

இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், அவர்கள் தன்னாட்சி உரிமையுடைய தேசிய இனம் என்பதை, 2002 ம் நோர்வே நாட்டின் அனுசரணையால், இலங்கை அரசிற்கும்
விடுதலைப்புலிகளிற்கும் இடையில் இராணுவச்சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின்னர் நடைபெற்ற ஒஸ்லோ பிரகடனதத்தில் சிங்கள பேரினவாதம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போதைய ஆயுதப் போராட்ட பின்னடைவிற்குப்பின் தமிழ்த் தேசியம் என்ற ஒன்று நாட்டில் இருக்கின்றதா? என்ற வினாவையே சிங்களப் பேரினவாதம் எழுப்புகின்றது.

மேலும் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தமிழ் தேசியத்தை இல்லாதொழிற்பதற்கு அல்லது வலுவிழக்கச் செய்வதற்கு, சிங்கள பெருந்தேசியவாதத்திற்குள் தமிழ்த் தேசியவாதத்தை உள்வாங்கி பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசு தற்போது முனைப்புடன் செயற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக ராஜபக்ச அவர்கள், புலிகளை வெற்றி கொண்டதாக கூறி நடாத்திய விழாவில் “இலங்கையில் சிறுபான்மையினங்கள் என்ற ஒன்றும் கிடையாது” என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார். அதன்பின் தமிழ் தேசியத்தை சிதைக்கும் தங்களது நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாட்டினை முடுக்கிவிட்டிருந்தார். மற்றும் “தமிழ் மக்கள் இலங்கையில் எங்கும் வாழ்கின்றனர் உதாரணமாக கொழும்பில் 27 சதவீத சிங்கள மக்களே வாழ்கின்றனர் பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழ்கின்றனர்” என்று கருத்துத்தெரிவித்ததனூடாக தமிழ்த்தேசியம் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் கரைந்து, கருத்தியல் ரீதியாக உள்வாங்கப்படுவதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கச்செய்ய சிங்களம் “எம் கையை வைத்து எம் கண்களைக் குத்துவதைப்போல” சுயநல நோக்கில், வாழ்வரசியல் அடிமைகளான தமிழ்
அரசியல்வாதிகளைப் பயன்படுத்தியே தங்களது நிகழ்ச்சித்திடட்த்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு சிங்களத்தின் கால்களில் விழுந்து கிடக்கும் அல்லது விலைபோய் தமிழர் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தப்படுத்துபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று வெளியிலிருந்து தமிழ் தேசியத்தை அழிப்பவர்கள் அடுத்தது உள்ளிருந்து தமிழ் தேசியத்தை சிதைப்பவர்கள்

சுயலாபத்திற்காகவும் வாழ்வு அரசியலுக்காகவும் அடிமைத்தனமாய் விலைபோய், தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி எந்த குறிக்கோளும் இல்லாமல், தென் இலங்கை கச்சக்திகளிடம் அடிபணிந்து தேசியத்தை பலவீனப்படுத்துகின்றனர். இவர்கள் தமிழ் தேசிய அடையாளத்திற்கு வெளியே நின்று தமிழ் தேசியத்தை சிதைப்பவர்கள். இவர்களது கொள்கை கோட்பாடு எல்லாம் சிங்கள பெரும்பான்மையின் நலனுக்காக தமிழ்மக்களை ஏமாற்றி செயற்படுவதேயாகும்.

உதாரணமாக சிலகாலங்களிற்கு முன் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தலின்போது போட்டியிட்ட ஈபிடிபி, சிறிரெலோ, ஈரோஸ் போன்ற தமிழ்க்கட்சிகள் தங்களின் சுயசின்னத்திலே போட்டியிடாமல் சிங்களத்தின் வெற்றிலைச்சின்னத்திலே போட்டியிட்டு கணிசமாக தமிழ்மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த தேர்தல் வெற்றியினூடாக தமிழ்பகுதியில் சிங்களக்கட்சி வென்றதை உலகத்திற்கு காட்டி தமிழ்த் தேசியம் என்பது மாயை என சிங்களம் கூற வழிவகுத்தனர். தமிழ்த் தேசியத்தை சிங்கள பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கி இலகுவாக வலுவிழக்கச் செய்யலாம் என்ற கருத்தூண்டலுக்கு இத்தேர்தலினூடாக வழிவகுத்தனர். தஙக் ளின் கட்சித் சின்னத்திலேயே போட்டியிடமுடியாத இயலாமையில் உள்ள இவர்கள் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் கரைந்து போயுள்ளார்கள் என்பது புலனாகினறது.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் அவர்கள் “ஜனாதிபதி ராஜபக்ச அவர்களிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகவும் பதின்மூன்றாவது அரசியல் திருத்தச்சட்டம் தொடர்பில் தனக்கு எந்தவித அக்கறையுமில்லை” என தெரிவித்திருந்தார். கிழக்கின் முதலமைச்சர் என்ற வகையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கை தொடர்பான அவரது கருத்தானது தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தி தவறான கருத்துருவாக்கத்திற்குமே வழிவகுத்தது.

மற்றும் புதுமாத்தளனில் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட சிங்களப்படைகளின் வெற்றி நினைவுத்தூபி தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணா அவர்கள் இலங்கையில் நடைபெற்ற இனவிடுதலைப் போராட்டத்தை “பிரிவினைக்கான பயங்கரவாத ஆயுதப்போராட்டம்” எனக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

மேற்குறிப்பிட்டது போன்று, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சர்வதேச அளவில் அறியப்பட்ட குறிப்பிட்ட சிலர், தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய போராட்டத்தை பலவீனப்படுத்துகின்றனர். சிங்களத்தின் அரசியல் அடையாளத்திற்குள், தமிழராக இருந்து தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் செயல்களைச் செய்கின்றனர். தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக, தென் இலங்கை சிங்கள அரசியல் சக்திகளின் அடையாளங்களுக்குள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழர்களாக தமிழ்மக்களை சிங்களத் தேசியத்தின் காலடியில் சிக்கவைக்கின்றனர். இவர்களை போன்றவர்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்தைப் பலவீனப்படுத்தி தமிழ்த் தேசியத்தை வெளியிலிருந்து கழுத்தறுகின்றனர்.

2000 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அரசியல் ரீதியாக தமிழ்மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதே தமிழ் தேசியப் போராட்டத்தை பலப்படுத்தியும், வலுப்படுத்தியும் நிற்கும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி தமிழ்தேசிய உணர்வாளர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, தமிழ்தேசியம் ஒன்றுபடுவதும் அவசியம் என்று உணர்ந்த பல தமிழ்த் தேசியக்கட்சிகளின் ஒருங்கிணைந்த வடிவமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகும். தமிழ் தேசியக்கருத்துக்களினூடாக தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணைந்து 2001 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2004 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிராகரிப்பிலும் தங்களின் ஐனநாயக ரீதியான ஒருங்கிணைந்த கருத்தை வெளிப்படுத்தினர். இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ்த் தேசியத்தின் ஐக்கியத்தை தெளிவாக பறைசாற்றி நின்றதற்கு சான்றாகும்.

புலிகளின் பின்னடைவிற்கு முந்தைய காலம் வரை இயல்பாகவே மாற்றுக்கருத்துகளின்றி தமிழ்த்தேசியம் ஒருமுகப்பட்டிருந்ததற்கு ஆயுதப்போராட்டம் காத்திரமான பங்கை வகித்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்கு பின் தமிழ் தேசியக் கருத்தை அரசியல் ரீதியாக பலப்படுத்த வைக்கவேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தார்மீகக்கடமையாகின்றது.

தமிழ்த் தேசியத்தை அழிக்க நினைக்கும் சிங்களத்தின் நகர்வுகளை தடுத்து, தமிழ்மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு மிக்க பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செயற்படவேண்டும். என தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் ஆயுதப்போராட்ட ரீதியாக தமிமீழ விடுதலைப்புலிகளும் அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் தேசியத்தை பறைசாற்றி பலப்படுத்தி நின்ற பிரதான அடையாளங்கள். ஆயுதப் போராட்டபின்னடைவிற்கு பின் தமிழ்த்தேசியத்தை பாதுகாத்து செயற்படவேண்ய தார்மீக கடமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு செல்கின்றது.

சமீபத்தைய நகர்வுகளை பார்க்கும் போது கூட்டமைப்பின் சில எம்.பிகள் பொறுப்பின்றி, பொறுப்புணர்வுமின்றி, அவர்களின் தார்மீக கூட்டுப்பொறுப்பையும் மறந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டுப்பொறுப்பு தீர்மானத்திற்கு மாறாக கருத்துவெளியிடுவதும் செயற்படுவதும் மிகுந்த எரிச்சலையும், வேதனையையும் தருகின்ற செயல்களாகவே தமிழ்மக்கள் பார்க்கின்றனர். தமிழ்த் தேசிய கருத்துவட்டத்திற்குள் அடையாளப்படுத்தப்பட்ட சிலரின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்குள் உள்ளிருந்து பலவீனப்படுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியுளள்து.

குறிப்பாக ராஜபக்ச அவர்கள், தமிழர் தாயக கோட்பாட்டை, சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்தினூடாகப் பிரித்தது மட்டுமன்றி கிழக்கில் விரைவாக தனது கட்சியின் சின்னத்தின் கீழ் ஒரு மாகாண ஆட்சியை ஏற்படுத்தி வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஒரு பிளவு நிலையையும் தேசியக்கருத்தில் பலவீனத்தையும் ஏற்படுத்தியவர். வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படக்கூடிய வாய்ப்பும் ஆதரவும் இருந்தும் அதை நிறைவேற்ற மறுத்து, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசியத்தை சிதைக்க முனைப்புடன் செயற்பட்டுவருகின்றார். வன்னியில் நடந்த கொடும் யுத்தத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன் பல தமிழ் இளைஞர்களை கைது செய்து இனசசு த்திகரிப்பு செய்த இரத்தக்கறையுடன் இருக்கின்றார்.

இவருடைய அரசியல் நகர்வைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம்பெறும் தமிழ் கட்சிகளை பிரித்து, பலவீனப்படுத்தி சிங்களத் தேசியத்திற்குள் உள்வாங்க முனைகின்றார். அத்துடன் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தித் தமிழ்மக்களிடமிருக்கும் கூட்டமைப்பின் ஆதரவை வலுவிழக்க செய்து தமிழ்த்தேசியத்தை இலங்கைத்தீவிற்குள் நீர்த்துப்போன கோட்பாடாக காட்டமுனைகின்றார். தமிழ் மக்களின் இரத்தத்தில் குளித்திருக்கும் அவரை பிறந்த நாள் வாழ்த்துக்கூறியும், கட்டியணைத்தும், அவருக்கு சார்பான கருத்துக்களைக்கூறியும் ராஜபக்ச அவர்களிற்கு சாமரம் வீசி, தங்களின் சுயநல அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பிகளான திரு.சிவநாதன் கிசோர், திரு.சிறிக்காந்தா போன்றவர்கள் முனைவது தமிழ்தேசியத்திற்குள் இருந்து கழுத்தறுக்கும் செயற்பாடேயன்றி வேறொன்றுமில்லை.

அத்துடன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். இத்தீர்மானத்திற்கு எதிராக தனது கூட்டுப்பொறுப்பை மறந்து கூட்டமைப்பு எம்.பி திரு.சிவாஜிலிஙகம் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்ததானது ஒருவகையில் தமிழ்த் தேசியத்திற்குள்ளிருந்து கழுத்தறுக்கும் செயற்பாட்டின் வடிவமே.

தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டமானது புலிகளின் பின்புல பாதுகாப்பற்ற ஒரு முக்கிய காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால், தமிழ்த் தேசியத்தை அழித்து அரசியல் விடுதலைக் கோரிக்கையை நீர்த்துபோகப்பண்ணும் சிங்களத்தின் காய்களை சாணக்கியமாக எதிர்கொண்டு வெல்ல வேண்டிய முழுப்பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்டமையே சார்ந்து நிற்கின்றது.

தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்தது காலத்திற்கு பொருத்தமான வரவேற்கத்தக்க முடிவாகும். ஆனால் அடுத்தகட்டமாக எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில்

தமிழ்மக்களை கொன்றொழித்து தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் ராஜபக்ச அவர்களை ஆதரிக்கப் போகின்றார்களா? அன்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும் முடிவால் ராஜபக்சவின் வெற்றியை பிராகாசமாக்கும் பின்னணிக் காரணியாக இருக்கப் போகின்றார்களா?

தமிழ்மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு கொள்கையளவில் கருத்துத் தெரிவிப்பவர் என்ற வகையில், தென் இலங்கையின் பலமற்ற இடதுசாரி அரசியல் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ணா அவர்களிற்கு வாக்களிப்பதனால் சுயநிர்ணய கோரிக்கையை வலுப்படுத்தும் என்று வாக்களிக்கக் கோருவதனுடாக மீண்டும் ராஜபக்ச அவர்களின் வெற்றியை பிரகாசமாக்கப்போகின்றர்களா? என்பதே கூட்டமைப்பின் முன்னிருக்கும் முக்கிய கேள்விகள்.எது எப்படியான முடிவாக இருந்தாலும் தமிழர்களின் எதிர்காலத்தை, அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களை சிதைத்த, மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் வெற்றி பெற நேரடியாகவோ! மறைமுகமாகவோ! தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானம் அமைந்தால், அத்தீர்மானம் தமிழ் மக்களிற்கு வரலாற்றில் ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அரசியல் கறையாகவே பார்க்கப்படும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றி தமிழ்மக்களை தேசியத்தின் பால் ஒருங்கிணைக்கும் ஆற்றலுள்ளது. அவர்களிடமே தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்தை அரசியல் ரீதியான சிதைவிலிருந்து மீட்டு வழிநடத்தும் தன்மையுள்ளது. சிங்கள பேரினவாதிகளும் தமிழ்த் தேசியத்தை தென்இலங்கைசார் தமிழ் விரோத சக்திகளைப் பயன்படுத்தி சிதைக்கவும் தமிழ் தேசியத்தை பின்பற்றி நிற்பவர்களை ஆசை வார்த்தைகளை கூறி, சலுகைகளை காட்டி தேசியத்தை விட்டு
பிரித்தெடுத்து சிதைக்கவும் திட்டமிட்டு செயற்படுகின்றது. இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கான யுத்தகாலம் ஏனெனில் “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்”.

எனவே தமிழினத்தின் இறையாண்மையை பாதுகாத்து, சிங்களப்போரினவாதிகளின் சவால்களை சாணக்கியமாக எதிர்கொண்டு, இந்த சவால்களை ஒற்றுமையாக இருநது முறியடித்து வெல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் உள்ள தலையாய வரலாற்றுக்கடமையாகும். இதை உணர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும் என தமிழ்மக்கள எதிர்பார்க்கின்றனர்.
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment