வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான சர்ச்சை!!!

இலங்கையின் தமிழருக்கு சிங்கள பேரினவாதிகளால் ஏற்படுத்துகின்ற நெருக்கு வாரங்களின் இரணங்கள் ஆறுவதற்கு முன்னர், அல்லது அதுபற்றி மீள் நினைவுக்குட்படுத்தப்பட முன்னர், பல சர்ச்சைகளை சிங்களம் உண்டாக்கிவிட்டு தனது காரியங்களை சாதித்துக்கொள்ளும் சாதுரியத்தை குறுகிய காலமாக கையாண்டு வருவதை மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது சுய சிந்தனை கொண்ட தமிழ்மக்களின் கடமையாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவையடுத்து, புலம்பெயர் நாடுகளில் அதன் பாதிப்பானது,

* புதிய தலைமைக்கான முன்னெடுப்பு

* நாடுகடந்த தமிழீழம்

*தமிழர் தாயகத்தை நிர்மாணிப்பதற்கான சர்வதேசத்தை நோக்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள்.

*வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான சர்வதேச வாக்கெடுப்பு.

மேற்கூறிய காரணிகள் இலங்கை அரசுக்கு ஒரு புதிய வடிவத்திலான போராட்டமாக அமையலாயிற்று. இப்போராட்டங்களை மழுங்கடிக்கப்படவேண்டிய தேவை அவசரமாகவும், அவசியமாகவும் இலங்கையரசுக்கு தோன்றியமையால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை இந்தியா கோரியபோதிலும் அதனை வழங்குவதை தாமதமாக்கி தமிழ்மக்கள் மத்தியிலே ஒரு சர்ச்சை நிலையை தோற்றுவித்தது. இதன்மூலம் தலைவர் பிரபாகரன் இறந்ததாக கூறப்படும் உடலத்தை அடையாளம் காண்பதில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. இதுவானது இலங்கை அரசுக்கு ஒரு இனிப்பான நிகழ்வு.

இச்சர்ச்சையானது தொடர்ந்துகொண்டு இருக்கையில் சிங்கள அரசு அமைதி காத்து தமிழ் தேசியத்துக் கெதிரான ஒருவித வெற்றியை தனதாக்கி வந்தது. அதாவது, புலம்பெயர் மக்களின் கூர்மைப்படுத்தப்பட்ட தாயக உணர்வை திசை திருப்புவதாக அமைந்தது. அதனை அடுத்தாற்போல், இந்தியா வேகப்படுத்திக்கொண்டிருந்த தலைவர் பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை கையளிக்க தீர்மானித்த கையோடு, ஜனாதிபதித் தேர்தலையும் இலங்கையரசு தேதி குறித்து அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக,

*மஹிந்த சரத் முரண்பாடுகள்

*சிவாஜிலிங்கத்தின் ஜனாதிபதிதேர்தல் வேட்புமனுத்தாக்கல்

*கிழக்கு மாகான முஸ்லிம் தலைவர்களின் தமிழருக்கெதிரான அறிக்கைகள்

*பிள்ளையான் கருணா முறுகல்

*தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான மௌனம்

மேற்கூறியவை, பெருமளவில் புலம்பெயர் நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தி, அம்மக்களிடையே இருந்த தமிழ் தேசிய உணர்வு மெது மெதுவாக கரைந்து போகவேண்டுமென இலங்கை அரசு எதிர்நோக்கி இன்றுவரை காத்து நிற்கிறது. மேலும் மேலும் இதனை இலங்கை அரசு பூதாகரமாக்கி இலங்கை தமிழ் மக்கள் அடங்கலாக புலம்பெயர் மக்கள் உட்பட அனைவரின் புலன்களையும் திசைமாற்றுவதற்காக தமிழ்மக்கள் மத்தியிலே அங்கிடு தத்திகளை' தெரிந்தெடுத்து 'தன்கையாலே தன் கண்ணை குத்துவதற்கான' ஏற்பாடுகளை செய்து வருகின்றது.இந்த இலங்கை அரசின் கபடத்தனமான பிறிதொரு பணியின் மருதொரு படிதான்,

தமிழ்மக்களிடையே வட்டுக்கோட்டை தீர்மானத்தை பற்றிய விமர்சனங்கள் ஆகும்.

1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில், தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்யப்பட்ட தீர்மானங்களானது வெறுமனே எழுந்தவாரியாக தீர்மானிக்கப்பட்டதல்ல. காலம் காலமாக சிங்களத்தலைமைகளின் ஏமாற்று வித்தைகளிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டவை ஆகும். குறிபபிற்காக சில ஏமாற்றுவித்தைகள்,

*1921 ம் ஆண்டு எழுத்து வடிவில் இலங்கை தேசிய காங்கிரசால் வழங்கிய சில முக்கிய தீர்மானங்கள் பின்பு மறுத்தமை.(இதனை கொழும்பு பிரகடனம் என்று அழைக்கப்படுகின்றது)

*1944 ம் ஆண்டில் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரர் J.R. ஜெயவர்த்தன தமிழ் மொழியைப்பற்றி கிஞ்சித்தும் நோக்கம் கொள்ளாமல் சிங்கள மொழி மட்டும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தியமை.

*1946 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானங்களிலும் கூட மேற்கூறிய தீர்மானங்களையே அமுல்ப்படுத்தியமை.

*1956 ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்த்தத்தை எதிர்த்து ஐ. தே. கட்சியின் J.R. ஜெயவர்த்தன கண்டிக்கு பாத யாத்திரை சென்றமை.

*1956 ம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் நடைமுறைப்படுத்தல்.

*1958 ம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம்.

*1960௦ ம் ஆண்டு மறுக்கப்பட்ட தமிழர் உரிமைக்காக சத்தியாக்கிரக போராட்டம் ஏற்படுத்தி அது தோல்வியில் முடிந்தமை.

*1965 ம் ஆண்டு செய்யப்பட்ட டட்லி - செல்வா ஒப்பந்தம் நடைமுறைபடுத்த முடியாமை முறிந்தமை.

*1974 ம் ஆண்டு தை 10௦ ம் திகதி நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் சிங்கள இராணுவத்தால் 9 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையும் அது சார்பாக அப்போது ஆட்சியிலிருந்த (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா உரிய நடவடிக்கை எடுக்காமையும்.

இவை போன்ற ஏராளமான, தமிழ்மக்களிற்கு எதிரான முரண்பாடுகளை காலம் காலமாக தோற்றுவித்த சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடே அந்த வட்டுக்கோட்டை தீர்மானமாகும். இதுவே தமிழ்மக்களுக்கான இறுதி தீர்மானம் அல்ல. ஆனால் இதனை அடிப்படையாக கொண்டு தான் அதற்கு பிற்பாடான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ந்தன என்பது உண்மையாகும். அதாவது, வட்டுக்கோட்டை தீர்மானமானது என்றுமே ஒரு வழிகாட்டிவிளக்கென்று கூறலாம். அதனை புறம் தள்ளி வைத்து தீர்வுக்கான வழியை காணமுடியாது. இதானதிளிருந்து பெற்ற பரிணாம வளர்ச்சியானது உச்சமாக சென்று விரிவடைந்து இன்று சர்வதேச அங்கீகாரம் வரை வந்திருக்கின்றது. இந்த நிலைக்கு கொண்டுவந்த பெருமை தமிழீழ விடுதளைப்புளிகை தவிர வேறு ஒருவரும் உரிமை கொள்ள முடியாது.

ஆகவே, வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய சர்ச்சை அவசியமற்றது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்பதும் இரண்டாம் பட்சமாக இருக்கலாம். வட்டுக்கோட்டை தீர்மானமானது கொண்டுவந்து நிறுத்தியுள்ள இடம் விடுதலைப்புலிகளின் காலமெனலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் நிறுத்தியுள்ள இடம்( தற்போதய காலம்) சர்வதேச மட்டமாகும். தற்போதைய தமிழ்மக்களின் பங்கானது சர்வதேச மட்டத்திற்கூடாக உரிமை பெறுவதற்கான போராட்டமென்பதே. இதன் தீர்வுக்கான பொறிமுறை பற்றி சிந்திப்பதே சுயநிர்ணயத்தை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழரின் கடப்பாடாகும். இதனை விடுத்து கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் பற்றிய அனாவசிய சர்ச்சைக்குள் மூழ்குவோமானால் தமிழ்மக்களின் அனைத்து உரிமைகளும் தொலைந்துவிடும். இதுவே சிங்களத்திற்கு மிக உச்சமான மகிழ்வாக இருக்கும். எனவே விடுதலைப்புலிகள் விட்ட இடத்திலிருந்து எமது உரிமைக்கான போராட்டத்தை தொடங்குவதோடு அதற்க்கு கைவிளக்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென தமிழ்மக்கள் உறுதி பூண வேண்டும்.

இந்த உறுதியானது காலத்திற்கு காலம் தமிழ்மக்களிடையே விரிசல்களை உண்டாக்க முனையும் இலங்கை அரசுக்கும், இலங்கை அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் 'தமிழ் கூலிப்படை ஏஜெண்டுகளுக்கும்' தலைஎழுப்ப முடியாத 'செம' அடியாக அமையும்.

மல்லிகையூரான்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment